மலர்மன்னன்
“பிறர் கட்டுரைகளுக்கு மறுமொழியாக உனது கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய். ஏனெனில் காலப் போக்கில் பிறர் கட்டுரைகளுக்கு அடியில் மற்றவர்களின் மறுமொழிகளுக்கு இடையே உனது மறுமொழிகள் புதைந்து மறைந்துபோய்விடுகின்றன. மேலும் உனது பல கருத்துகள் மறுமொழி வடிவில் அமைவதால் கவனத்திற்கு வராமலும் போய்விடுகிறது. வந்தாலும் சேகரித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை” என்று சில நண்பர்கள் எழுதுகிறார்கள். யோசிக்கும் வேளையில் அவர்கள் சொல்வது சரியாகவே படுகிறது.
திண்ணை இணைய இதழின் அக்டோபர் 2, 2011 தேதியிட்ட
பிரதியில் டாக்டர் காலித் சோஹைல் என்பவர் முகமதியத் திலிருந்து வெளியேறி அதற்கு விளக்கமும் அளிக்கும் கலந்துரையாடல் கட்டுரை வடிவில் வெளியானது. ‘இஸ்லாமா அல்லது மதச் சார்பற்ற மனித நேயமா’ என்று அதற்கு வெகு பொருத்தமாகத் தலைப்பும் இடப்பட்டிருந்தது. ஏனெனில் டாக்டர் சோஹைல் மிகத் தெளிவாகத் தன்னிலை விளக்கம் அளிக்கையில் தாம் முகமதியத்தைத் துறந்தமைக்கான காரணங்களை அடுக்குகிறார். உரையடலில் அவரது கவனம் தாம் அனுசரித்து வந்த முகமதிய மதத்தின் மீதே குவி மையம் கொண்டிருந்தது. மதம் என்று அவர் பேசும்போது அவரது நினைப்பு தாம் சார்ந்திருந்த மதத்தைப் பற்றிய பிரக்ஞையிலேயே இருந்திருப்பதும் இயல்பே. அந்த அவதானிப்பில் இஸ்லாமல்ல, மதச் சார்பற்ற மனித நேயமே வேண்டுவது என்கிற சரியான முடிவுக்கு அவர் வருகிறார்.
ஆனால் இக்கட்டுரைக்கு மறுமொழி அளித்த சில வாசக நண்பர்கள் டாக்டர் சோஹைல் பொதுவாக மதம் என்று சொல்லும்போது அதில் ஹிந்து மதமும் சேர்த்தி என்று கருத்துத் தெரிவித்தார்கள். இதையொட்டி நானும் சில கருத்துகளை மறுமொழிகளாக வைத்தேன். இதற்கு எதிர்வினையாக மறுமொழி வேண்டாம், தனிக் கட்டுரை, தனிக் கட்டுரைதான் வேண்டும் என்று மின்னஞ்சல்களும் தொலைபேசி வழி ஆணைகளும் வரத் தொடங்கிவிட்டன.
முதலில் டாக்டர் சோஹைலின் பின்னணியைப் பார்ப்போம்.
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் 1947-ல் முஸ்லிம் லீக், இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற இரு அரசியல் கட்சிகளின் பதவிப் பேராசையின் விளைவாகப் பிளக்கப்பட்டு, ரத்தக் களறியில் ஒரு செயற்கை தேசமாக உருவான பாகிஸ்தானில் பிறந்தவர், சோஹைல்.
முக்கியமாகச் சுற்றுச் சூழலின் தாக்கமே மனித மனத்தில் கருத்தாக்கங்கள் முளைவிடுவதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது.
பாகிஸ்தானில் ஹிந்து தேசத்தையும் ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் துவேஷிப்பது ஒரு பாடத் திட்டமாக ஆரம்பப் பாடசாலையிலிருந்தே அனுசரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில்தான் சோஹைல் வளர்ந்து, கல்வி கற்று, இறைச் சக்தி மிகுந்த கருணையுடன் வழங்கியுள்ள சுய சிந்தனையைப் பயன்படுத்தி முகமதியத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் என்கிற பிரக்ஞையுடன் அவரது கருத்துகளைக் கவனிக்க வேண்டும்.
டாக்டர் சோஹைல் மதத்தைப் பற்றிப் பேசுகிறபொழுது அவரது கவனத்தில் அவருக்கு நன்கு பரிச்சயமான மத்தியக் கிழக்கு ஆசிய வறண்ட பாலை நிலங்களில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களே இருந்திருக்கின்றன. அவரது தர்க்க விசாரத்தில் மதம் என்கிற அம்சம் இடம் பெறுகிறபோது, இயல்பாகவே ஆபிரகாமிய மதங்களே அவரது சிந்தனைப் போக்கை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதற்கு இணங்க மிகச் சரியாகவே அவர் மதங்கள் மனித நேயத்தை வளர்க்க உதவாது, மனிதர்களைப் பிரித்துவைப்பதே அவை செய்கிற வேலை என்கிறார்.
ஹிந்து தர்மத்தின் மறைகள், உபநிடதங்கள், ஹிந்துஸ்தானத்தில் படைக்கப்பட்ட சமயம் சார்ந்த திரு மந்திரம் போன்ற தத்துவங்களை டாக்டர் சோஹைல் ஆழந்து படித்திருப்பார் என்று கருத இடமில்லை. புனித ஹிந்துஸ்தானத்து மண்ணில் தோன்றிய சமண, பவுத்த, சீக்கிய சமயக் கோட்பாடுகளையும் அவர் படித்திருப்பதாகத் தெரியவில்லை. இவற்றைப் பற்றி அவர் அறிந்திருக்கும் பட்சத்தில் மதம் என்று பொதுப்படையாகப் பேசும்போது அவற்றை விலக்கிவிட்டு ஆபிரகாமிய மதங்கள் என்று அடையாளப் படுத்தியே பேசியிருப்பார் என்று கொள்ளலாம்.
பூமியும் பூமியில் உள்ள சகலமும் மனிதனாகப் பிறந்த தனக்காகப் பிறந்தவை என்கிற சுய நலக் கோட்பாட்டை மனித வர்க்கத்தின் அடிமனத்தில் வேரூன்றச் செய்பவை ஆபிரகாமிய மதங்கள். அடிப்படையிலிருந்தே இவ்வாறான மனநிலை யிலேயே வளர்ந்தமையால்தான் மேற்கத்திய மனப்பான்மையும், அறிவியல் உள்ளிட்ட பல துறைகளும் சுற்றுப் புறச் சூழலையோ பிற ஜீவராசிகளையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனித வர்க்கத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்க நேரிட்டிருக்கிறது. எண்ணிறந்த உயிரினங்கள் இன்று இல்லாமலே போவதும், பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருப்பதும், இயற்கை வளங்கள் மள மள வெனக் குறைவதும், நீரும் காற்றும் வெளியும் மாசு படுவதும், யார் பெரியவர் என்கிற போட்டா போட்டிகளும் பலப் பரீட்சைகளும், இதனால்தான் நிகழ்கின்றன. பூமியில் தனக்கே சகல அதிகாரமும் என்று மனித வர்க்கம் மமதை கொள்ளப் பழக்கியவை ஆபிரகாமிய மதங்கள். எல்லாவற்றையும் உனக்காகவே படைத்தேன், எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துப் பல்கிப் பெருகுவாயாக என இறைவன் ஆதி மனிதனுக்குச் சொன்னதாக அவை பிரகடனம் செய்கின்றன.
ஹிந்து சமயக் கோட்பாடு இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு நீண்ட, எண்ணிறந்த சேதன, அசேதனப் பொருள்களின் சங்கிலி வளையத்தில் மனித வர்க்கம் ஒரு கண்ணியே என்று சொல்லித் தருகிறது. இந்த ஒரு கண்ணி ஏறுமாறாகப் போனாலும் அது மற்ற எல்லாக் கண்ணிகளையும் பாதிக்கவே செய்யும் என்கிறது.
இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் புழங்கும் மேஜை, நாற்காலி, கட்டில் முதலான சகலத்துக்குள்ளும் மிகவும் நுட்பமாகவும் மந்த நிகையிலும் ஆன்மா உறைந்திருக்கிறது என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வார். இதேபோல் பாறைகள் உள்ளிட்ட அசேதனப் படைப்புகளிலும் ஆன்மா உறைந்து ஆழ்ந்த மவுனம் சாதிக்கிறது. மலைகள், நதிகள், தாவரங்கள், பிராணிகள் என சகலத்திலும் ஆன்மா ஒவ்வொரு படிநிலையில் குடிகொண்டுள்ளது. எனவேதான் ஹிந்து சமயம் மலைகள், காடுகள், நதிகள் மரம் செடி கொடிகள் மிருகங்கள் எல்லாவற்றையும் இறைச் சக்தியாகவே காணச் சொல்கிறது. இந்த பூமியில் உள்ள சகல அம்சங்களுடனும் ஒருங்கிணைந்து ஒத்துப் போகுமாறு ஹிந்து சமயம் மனித வர்க்கத்துக்கு அறிவுறுத்துகிறது. ஹிந்து சமயக் கோட்பாடுகள் பூமியின் பாரம் கூடுதலாகக் கூடாது, அதனால் கேடு விளையும் என்று சொல்லும் போது, குறிப்பாக மனித வர்க்கத்தையே சுட்டுகின்றன. பூமியின் பாரத்தைக் குறைக்க மனித வர்க்கத்தில் கணிசமான அளவுக்கு அழிவு விளைய வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் பூமிக்கோ அதில் உள்ள பிறவற்றுக்கோ ஏதேனும் சேதாரம் விளையுமானால் அதற்கு மனித வர்க்கமே காரணமாக இருக்கும் என்று ஹிந்து சமயம் உணர்ந்துள்ளது. ஹிந்து சமயப் புராணங்களயும் இதிஹாசங்களையும் ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை இலை மறை காய்களாக ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ளலாம். இவற்றை வக்கிர புத்தியின்றி வாசிக்கப் பழகவேண்டும்.
ஹிந்து சமயம் இவ்வாறாக மனித நேயத்திற்கும் ஒரு படி மேலே சென்று, ‘அதென்ன படைப்புகளில் மனிதன் மட்டும் உயர்த்தி? அசைவன, அசையாதன, உயிர்த்துடிப்புள்ளவை, இல்லாதவை போலத் தோன்றுபவை சகலத்தினுள்ளும் ஆன்மா ஒவ்வொரு தரப்படி விழிப்பு நிலையிலும், அரைத் தூக்கமாகவும் ஆழ்ந்த உறக்கமாகவும் மறைந்து கிடக்கிறது. இவை இல்லாமல் நீ இல்லை. ஆகையால் ஆன்ம நேயம் செய்’ என்கிறது.
உண்மையில் அஹிம்சை என்பதாக ஒன்று இல்லை. குறைந்த பட்ச ஹிம்சைதான் உண்டு. உயிர்த்திருத்தலுக்கான சாத்தியக் கூறே ஹிம்சித்தல் மூலம் பெறப்படுவதுதான். எந்தவொரு நிகழ்விலும் ஹிம்சையின் பங்கு இருந்துகொண்டுதான் உள்ளது. அதுவே மூலாதாராமாகக் கூட இருக்கிறது. வலியில்லாமல் பிறவியில்லை, வலியில்லாமல் மரணமும் இல்லை. குழந்தை பிறக்கும்போது தானும் வலியை அனுபவித்து, தாய்க்கும் வலியை உண்டு பண்ணுவது இயற்கை நியதி. செயற்கை முறைகளில் இதை மீற முடியலாம், ஆனால் நியதியை மாற்றவியலாது. அவ்வாறு மீறுகையில் பின்விளைவுகளை அனுபவிக்கவும் நேரிடும். பின் விளைவின்றி இயற்கை நியதியை மீறுதல் சாத்தியமில்லை.
உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாக உள்ள உணவை உண்பதே ஹிம்சையின் அடிப்படையில் நிகழ்வதுதான். சுவாசித்தலும்கூட ஹிம்சையின்றி சாத்தியமில்லை. ஆகையால் எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த அளவு ஹிம்சையைப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்குப் பயன்படுத்திக்கொள்வதே ஆன்ம நேயம். மிருகங்களின் இறைச்சிக்குப் பதிலாக தாவரங்களை உண்ணுதலுக்கு இதுதான் காரணம். தாவரங்களுக்கு வலியை உணரும் மூளையோ வலியை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகளோ இல்லை. எனவே ஒரு தாவரம் ஹிம்சைக் குள்ளாகிற போது எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாவதோடு அதன் இயக்கம் முற்றுப் பெற்றுவிடுகிறது. எனவேதான் தவிர்க்க இயலாத நிலையில் மிகக் குறந்த பட்ச ஹிம்சையைச் செய்து தாவரங்களை உணவாகக் கொள்ளும் வழக்கம் பழக்கப்படுத்தப் பட்டது. இது நிச்சயமாக சமணக் கோட்பாட்டின் தாக்கம்தான் ஆனால் இதற்கான மூல வேர்களை ஹிந்து சமயத் தத்துவங்களில் காண முடியும்.
சக மனிதரை மட்டுமின்றி சகல ஜீவராசிகளையும், உயிரில்லாதவைபோலத் தோன்றும் அனைத்தையுங்கூட
நேசிக்குமாறு ஹிந்து சமயம் கற்றுக் கொடுப்பதாக இருந்தால் விலங்குகளை வெட்டி எறியும் யாக குண்டங்கள் எப்படி வந்தன என்கிற கேள்வி இயல்பாகவே பலருக்கும் எழுவதைத் தவிர்க்க வியலாது.
ஒரே சொல் பல பொருள்களைக் குறிக்கும் நிலை எல்லா மொழிகளிலும் உண்டு. ஸமஸ்க்ருதத்தில் இது கொஞ்சம் அதிகம்.
மஹிஷி என்றால் அது பட்டத்து ராணியைக் குறிக்கலாம், எருமையையும் குறிப்பிடலாம். ஸர்ப்ப என்றால் பாம்பு என்று அர்த்தம் சொன்னால் அதற்கு சீக்கிரம் என்றும் ஒரு பொருள் உண்டு என்று பண்டிதர் சொல்வார். அச்வ என்றால் குதிரை மட்டுந்தான் என்று எண்ண வேண்டாம். ஏழு என்ற இலக்கத்தையும் அது குறிக்கும். அநாமிகா என்றால் பெண் என்றும் மோதிர விரல் என்றும் இரு அர்த்தங்கள் சொல்லலாம். இப்படி இன்னும் பல சொற்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆக, வேள்வி நியமங்களை விமர்சிக்க முனைந்தால் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்கிற கதையைத்தான் சொல்ல வேண்டும். ஆரிய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி இதுபற்றி நிறையவே எழுதி யுள்ளார். அவர் இயற்றிய ஸத்யார்த்தப் பிரகாசன் படிக்கப்பட வேண்டிய படைப்பு.
மேலும் ஹிந்து சமயம் பன்முகப் பண்புகளின் சங்கமமாக இருக்கிறது. எனவே அதில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. வனவாசிகளின் உணவுப் பழக்கத்தில் இறைச்சி தவிர்க்க முடியாததாகிறது. கடலோர வாசிகளுக்கு மீனும் மேலும் பல நீர் வாழ் பிராணிகளும் உணவாகின்றன. நம்முடையது தொன்மையான பழங்குடியாதலால் இவ்வாறான பழக்கங்கள் நம்மிடையே நீடிக்கின்றன.
பயன்பாட்டுக்குரிய எதையும் நன்றியறிதலாக முதலில் இறைச் சக்திக்குப் படைக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் கோயிலில் பலி பீடத்தை நிறுவி விட்டது. உள்ளே நுழையுமுன் உன் ஆணவத்தையும் அகந்தையையும் சுய நலன்களையும் பலியிட்டுவிட்டு சரணாகதியாக உள்ளே வா என்று சொல்வதற்கு அடையாளமாகத்தான் பலி பீடம் உள்ளது. ஆனால் அப்பாவி விலங்குகளைப் பலியிட்டு ரத்தம் குடிப்பதும் வழக்கமாகிப் போனது. இறைச்சி உண்ணும் பழக்கம் எப்படியும் நீடிக்கவே செய்யும். ஆகவே கிடா வெட்டிப் பொங்கலிட்டுத்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றிருந்தால் விவேகம் வரும் வரை அதுவும் நீடிப்பதில் முரண் இல்லை. ஈவிரக்கமின்றித் துன்புறுத்துதலும் குருர இச்சையுடன் வேதனைப் படுத்தி மகிழ்தலும் தகாது என்று உணர்த்தவே ஆன்ம நேயம் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், ஹிந்துஸ்தானம் இடைவிடாமல் அந்நிய சக்திகளின் படையெடுப்புகளுக்கு ஆளாகிக்கொண்டே வந்துள்ளது. இப்படி வெளியிலிருந்து ஆக்கிரமித்த அந்நிய சக்திகள் மூர்க்க குணம் வாய்ந்த மத்திய ஆசிய இனக் குழுக்களாகவும் தர்ம நியாயம் அறியாத முரட்டு மேற்கு ஆசிய இனக் குழுக்களாகவுமே அமைந்துவிட்டன. கடல் மார்க்கமாய் மேற்குக் கரை சேர்ந்தவையும் அவ்வாறே இருந்தன. அவற்றில் சில அந்நிய கலாசாரங்களை ஹிந்து சமூகம், கவனியுங்கள், சமயம் அல்ல, சமூகம் சிறுகச் சிறுக உள்வாங்கிக்கொண்டது. இதன் காரணமாக வும் பல்வேறு அந்நிய சம்பிரதாயங்கள் சமயத்தின் பேரால் சமூக நடைமுறைகளில் வலிந்து திணிக்கப்பட்டுவிட்டன.
ஹிந்து சமயம் பிரபஞ்சம் முழுவதையுமே ஒன்றெனக் கொள்கிறது. எல்லாமே பிரபஞ்சத்தின் கூறுகளாக, அவை எவ்வளவு நுண்ணியவையாக இருந்தாலும் பிரபஞ்சத்தின் உறுப்புகளாகக் காண்கிறது. இந்த மனப் போக்கிலேயே வாழ்ந்து பழகிய முந்தைய ஹிந்துக்கள் தேசபக்திக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டனர். இதன் விளவாகவே ஹிந்து சமூகம் அடிமைப்பட்டுப் போனது.
தர்மம் இன்னதென்று அறியாதோரிடம் நம் முன்னோர் தர்மப்படி நடந்ததும் அந்நிய கலாசாரங்கள் இங்கு ஊடுருவியதற்கு ஒரு காரணம். பாரதிக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் ஊழியம் செய்த பாக்கியவான் வ. ராமஸ்வாமி என்கிற வ. ரா. இதைப்பற்றி ‘நம் முன்னோர்’ என்ற கட்டுரையில் எழுதுகையில், ‘டில்லியில் அரசாண்ட ப்ருத்வி ராஜருடைய வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆறு தடவை அவர் முகமது கோரி என்பவனை தானேச்வரம் என்ற க்ஷேத்தித்தில் தோற்கடித்தார். போர்க் களத்தில் ஆறு தடவையும் ப்ருத்வி ராஜர் கோரிக்கு அபயங் கொடுத்து ஊருக்கு அனுப்பினார். முடிவு என்ன? ஏழாம் தடவை கோரி தானேச்வரத்தில் சந்தித்து சண்டை செய்து அவரைக் கொன்றுவிட்டான். ப்ருத்வி ராஜர் காண்பித்த கருணை சிறிய தவறாகும். அது எவ்வளவு ப்ரம்மாண்டமான குற்றமாக ஆகிவிட்டது என்பதைச் சரித்திரம் ருசுப்படுத்திவிட்டது’ என்று குறிப்பிடுகிறார்.
நாம் இன்று அடிமைகளாக இருப்பது நம் முன்னோர்களின் தவறுகளினால் என்பதில் சந்தேகமேயில்லை என்று அவர் எழுதுகிறார். ‘நம்முடைய முன்னோர் காண்பித்த மதியீனத்தை மனச்சாட்சி லவலேசமும் இல்லாத அந்நியர்கள் தங்களுக்குச் சாதகமாக உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்’ என்று வ. ரா. மேலும் ஞாபகப்படுத்துகிறார். எந்த அந்நியரும் அவர்களின் சொந்த புஜ பல பராக்கிரமத்தால் நம்மை அடிமை கொள்ள வில்லை. எமது முன்னோர் செய்த பிழைகளால்தான் அந்நிய சக்திகள் ஹிந்துஸ்தானத்திற்குள் நுழைந்தன என்று அந்த முன்னோரின் வழித் தோன்றல் என்ற உரிமையுடன் வ.ரா. குற்றம் சாட்டுகிறார். இதை இன்றைய தலைமுறையினரான நமக்குத் தரப்பட்டுள்ள சூசகமான முன்னெச்சரிக்கை என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்குப் பின்னால் வரப் போகும் சந்ததிகள் நம்மையும் இப்படிக் குற்றம் சாட்டுவதற்கு நாம் இடமளிக்கப் போகிறோமா?
ஆன்ம நேயம் என்பது எத்தகைய முறைகேட்டையும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டிருப்பதல்ல. சாத்விகம் என்பதும் கோழைத்தனமாக இருப்பதல்ல. பகைவனுக்கு அருளுதல் என்பது அவனுக்கு வெற்றிபெற வாய்ப்பளிப்பதல்ல. மாறாக துவேஷமோ வெறுப்போ இன்றி ஒரு கடமையாக அவனை சம்ஹரிப்பதாகும். ஆன்ம நேயத்துக்கு அது முரண் அல்ல. பெரும்பாலானோர் நலன் கருதி களை எடுப்பதும், கிருமிகளையும் பூச்சிகளையும் அழிப்பதும் ஆன்ம நேயத்துக்கு முரண் அல்ல. உன்னால் தீமையே விளைகிறது, ஆகையால வேறு வழியின்றி உன்னை அழிக்கிறேன் என்கிற மனோபாவத் துடன் அவ்வாறான செயல்களில் இறங்க வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள சடங்காச்சாரங்களை எல்லாம் சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு ஹிந்து சமய அடிப்படைக் கோட்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் மனித நேயத்தையும் கடந்து ஆன்ம நேயத்தை வளர்த்துக் கொள்ளும் பக்குவம் தானே வரும்.
இன்றைய நிலவரங்களை வைத்து ஹிந்து சமயக் கோட்பாடு களை முரண்பாடுகளின் மொத்தக் கலவை என்கிற முடிவுக்கு வந்துவிடுவது சரியாகாது. என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத இரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம். காலப் போக்கில் ஒட்டிக் கொள்ளும் கசடுகளை யெல்லாம் அகற்றி ஹிந்து சமயம் தொடர்ந்து முன்போல பிரகாசித்துக்கொண்டிருக்க முயற்சி எடுத்தால் போதும். அசலான ஹிந்து சமயக் கோட்பாடுகள் இன்றைய தேதியிலும் மனித வர்க்கம் முழுமைக்கும் பயன் படுவதாகவும் நல்ல புத்திமதி சொல்வதாகவும் இருக்கும்.
- நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.
- உறவுகள்
- இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை
- மகிழ்ச்சியைத் தேடி…
- வாழ்க்கை எதார்த்தம்
- மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்
- மனித நேயர்
- சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்
- காலமாகாத கனவுகள்
- வேறு தளத்தில் என் நாடகம்
- சயனம்
- மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு
- உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
- வாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10
- மேலும் மேலும் நசுங்குது சொம்பு!
- நன்றி மறவா..!
- திறவுக்கோல்
- வியாபாரி
- ஷாம்பூ
- அவரோகணம்
- ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்
- கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை
- (79) – நினைவுகளின் சுவட்டில்
- நாயுடு மெஸ்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 19
- துளிப்பாக்கள் (ஹைக்கூ)
- கொக்கும் மீனும்..
- சாமியாரும் ஆயிரங்களும்
- Strangers on a Car
- சிற்சில
- காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை
- நிலாவும் குதிரையும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
- யார் குதிரை?
- இரு கவிதைகள்
- கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
- கையாளுமை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48
- பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
- முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
- பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?