எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா

This entry is part 19 of 44 in the series 16 அக்டோபர் 2011

அக்டோபர் 1968ல், கவிஞர் சி.மணியின் ‘நடை’ முதல் இதழில் கண்ணன் என்பவர்
‘அகவன் மகளும் அகவும் மயிலும்’ என்றொரு கட்டுரை எழுதி இருந்தார். கவிஞர்
சுரதாவின் ‘தேன்மழை’ என்னும் கவிதைத் தொகுப்பில் ‘மயில்’ என்னும் கவிதையின்
முதல் வரியான, ‘அகவும் மயிலே! அகவும் மயிலே!’ என்பதை குறுந்தொகையில்
வரும் ஒளவையாரின் கவிதையின் முதல் வரியான’அகவன் மகளே! அகவன் மகளே!’
என்பதுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை அது. அதில் ஒளவையின்
கவிதையால் தூண்டுதல் பெற்ற சுரதாவின் கவிதை அந்தத் தரத்தை எடடியிருக்கிறதா
எனபதுதான் விமர்சனத்தின் மையம்.

அப்போது நான் சென்னை சென்றிருந்தேன். வழக்கம்போல இலக்கிய அன்பர்
ஒய்ஆர்.கே சர்மா அவர்களைச் சந்தித்து, இருவருமாய் வாலாஜா சாலை வழியாக
திருவல்லிக்கேணியில் இருந்த கவிஞர் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்று
கொண்டிருந்தோம். அப்போது எதிரே அதே சாலையில் – ஜிப்பாவுடனும் தோளில்
சால்வையுடனும் வந்து கொண்டிருந்த ஒருவரைக் காடடி, “அதோ சுரதா வருகிறார்.
வாருங்கள் அறிமுகப்படுத்துகிறேன்” என்று அழைத்தார். நாங்கள் சாலையில் இறங்கி
அவரைச் சந்தித்தோம். சர்மாவை முன்பே அறிந்திருந்த சுரதா எங்களது வணக்கத்துக்குப்
பதில் வணக்கம் செய்து விட்டு “என்ன செயதி?” என்றார். சர்மா என்னை அறிமுகம்
செய்து வைத்தார். சுரதா தலையை மட்டும் அசைத்தாரே தவிர என்னை அதிகம் கண்டு
கொள்ளவில்லை. சர்மா ‘நடை’யில் வந்துள்ள அவரைப் பற்றிய விமர்சனத்தைச்
சொன்னார். “என்ன எழுதியிருக்கான்?” என்றார் ஒருமையில். ‘அமுதும் தேனும் எதற்கு?’,
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பன போன்ற அற்புதமான பாடல்களை
எழுதியவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த எனக்கு, சற்று அதிர்ச்சியாக இருந்தது.
சர்மா அவரிடம் மேற்கொண்டு பேசியதில் எனக்கு சுவாரஸ்யம் ஏற்படவில்லை.
சுரதாவிடம் விடை பெற்றுக் கொஞ்ச தூரம் நடந்ததும், “என்ன இப்படி ஒருமையில்
பேசுகிறார்?” என்றேன். “அவர் அப்படித்தான்! அதையெல்லாம் பொருட்டுத்த வேண்டாம்”
என்றார் சர்மா

பிறகு 18 ஆண்டுகளுக்குப் பின், மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ்
மகாநாட்டின் போது, மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மகாநாட்டுக்கு
கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியரும் ஒரு தமிழாசிரியரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அதன்படி விருத்தாசலம மாவட்டத்தின் பிரதிநிதியாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குரிச்சி மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்
‘கவிஞர் செ.வ’என்று அறியப்பட்டிருந்த புலவர் செ.வரதராசன் அவர்களை மாநாட்டில்
சந்தித்தேன். அவர் ஒத்த இலக்கிய ரசனை காரணமாக என்னோடு நீண்ட நாட்களாக
நட்புக் கொண்டவர்; கவிஞர் சுரதாவின் அன்பர். அன்று மாலை, தான் கவிஞர் சுரதாவை
அவர் தங்கி இருக்கும் விடுதியில் சந்திக்க இருப்பதாகவும் என்னையும் அழைத்துப்
போய் அறிமுகப்படுத்துவதாகவும் அழைத்தார். சுரதா அவர்களைப் பல ஆண்டுகளுக்கு
முனபே சந்தித்திருந்ததையும் அப்போது அவர் என்னைக் கவனிக்கவில்லை என்றும்
சொல்லி, அன்றிரவு அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அதன்படி அன்றிரவு 8 மணியளவில் இருவரும் சுரதா அவர்கள் தங்கி இருந்த
விடுதிக்குச் சென்றோம். அவரது அறைக்குள் நுழையுமுன் செ.வ அவர்கள்என்னிடம்,
“கவிஞரைப் பார்க்கும்போது அவரது நூல் ஒன்றை வாங்கினால் மகிழ்ச்சி அடைவார்”
என்றார். எனக்கு அதில் விருப்பமில்லை என்பதை என் முகமாற்றத்திலிருந்து உணர்ந்து,
“உங்களுக்கும் சேர்த்து நானே தந்து விடுகிறேன். நீங்கள் அவரிடமிருந்து புத்தகத்தை
மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்” என்றார்.

உள்ளே நுழைந்து வணக்கம் தெரிவித்த பின், கவிஞரிடம் என்னைப் பற்றிச் சொல்லி
அறிமுகப்படுத்தினார் செ.வ. என்னை முன்பே பார்தத நினைவு அவரிடம் இருப்பதாகத்
தெரியவில்லை. நானும் அது பற்றிச் சொல்லவில்லை. எடுத்தவுடனேயே, “நீங்க என்ன
ஜாதி?” என்று கேட்டார் சுரதா. எனக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது. அதிருப்தியுடன்
செ.வ வைப் பார்த்தேன். ஜாதியைச் சொல்வதில் எனக்குக் கூச்சம் ஏதும் இல்லை
என்றாலும் அந்தக் கேள்வி, சாதிமறுப்புச் சிந்தனையாளர் புரட்சிக்கவிஞரின் தாசனான
(‘சுப்புரத்தினதாசனா’ன) சுரதாவிடமிருந்து வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை.
செ.வ என் தயக்கத்தை உணர்ந்து எனக்குப் பதிலாக அவரே பதில் சொன்னார். அத்தோடு
விடவில்லை கவிஞர்! “அங்க எட்மாஸ்டர் ஒருத்தன் – செவிடன் – உடையான் ஒருத்தன்
இல்லே…..?” என்று ஒருமையிலும் நாகரீகமற்றும் கேட்டார். எனக்கு எரிச்சல் ஏற்பட்டது.
அவர் விசாரித்தவர் என் சக தலைமை ஆசிரியர்; சற்று செவிப்புலன் குறையுளவர்.
ஜாதியைக் குறிப்பிட்டதுடன் ஒருவரது ஊனத்தைச் சொல்லிக் கேட்பது அநாகரீகத்தின்
உச்சம் என்று பட்டது. இதற்கும் செ.வ வே பதில் சொன்னார். அதற்கு மேல் அங்கு
இருக்க எனக்கு விருப்பமில்லை. எழுந்து போக முயற்சித்தேன். ஆனால் செ.வ என்
கையைத் தொட்டு, கண்களால் பொறுத்துக் கொள்ள ஜாடை காட்டினார். ஆனால் கவிஞர்
என் முக மாற்றம், அதில் தென்பட்ட அதிருப்தி எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மேற்கொண்டு அவர் செ.வ வுடன் பேசிய எதையும் நான் கவனிக்கவில்லை. பின்னர்
அவரிடம் எனக்கும் என்று சொல்லிப் பணம் கொடுத்த இரண்டு புத்தகங்களை வாங்கிக்
கொண்டு விடை பெற்றார் செ.வ..வெளியே வந்ததும் அவரது பண்பாடற்ற பேச்சு பற்றிய
என் அதிருப்தியை செ.வ விடம் தெரிவித்தேன். “அவர் அப்படித்தான். அதைப்பொருட்படுத்த
வேண்டாம். எல்லா மேதைகளிடமும் இப்படி ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே
செய்கிறது” என்று சர்மாவைப் போலவே சொல்லி என்னைச் சமாதானபடுத்தினார்.

அடுத்த சந்திப்பு பிறகு சில ஆண்டுகள கழித்து கள்ளகுறிச்சியில கவிஞர் ஆராவமுதன்
அவர்களது பாராட்டு விழாவில் நடந்தது. அவ்விழாவிற்குத் தலைமை தாங்க வந்திருந்தார்
சுரதா. விழா தொடங்கு முன்னரே வந்து மேடையின் எதிரே அமர்ந்திருந்தவரின் அருகில்,
ஆராவமுதன் என்னை வரவேற்று அமரச் செய்து அவருக்கு என்னை அறிமுகம் செய்தார்.
இப்போதும் கவிஞருக்கு என்னை முன்பே பார்த்த ஞாபகம் இல்லை போலும்! தலை
அசைப்பு மட்டுமே செய்தார். உடனே தன் கைப்பையைத் திறந்து ஒரு ரசீது புத்தகத்தை
எடுத்து அதில் ஏதோ எழுதிக் கிழித்து என்னிடம் கொடுத்தார் – விசிட்டிங் கார்டைக்
கொடுப்பது போல. அந்த ரசீதைப் பார்த்தேன். அது அவரது மணிவிழாவிற்கான நன்கொடைக்
கானது. என் பெயர் கூட அதில் இல்லை. தொகை மட்டும் ரூ.25 என்று எழுதப் பட்டிருந்தது.
‘இது என்ன நாகரீகம்’ என்பது போல நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அதற்குள் அவர் வேறு
யாருக்கோ ரசீது எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதும் பேசாமல் எரிச்சலோடு ரசீதைக்
கையில் வைத்தபடி இருந்தேன். அரைமணி சென்ற பிறகு அவரை மேடைக்கு அழைத்தார்கள்.
அவர் என் பக்கம் திரும்பி கை நீட்டினார். நான் ரசீதை அவரிடம் திருப்பி நீட்டினேன். அதை
எதிர் பார்க்காத அவர் “பணம்?” என்றார். “எனக்கு வேண்டாம். நான் கேட்கலியே?” என்றேன் –
அவர் மீது எனக்கிருந்த எல்லா எரிச்சல்களுக்கும் பழிவாங்குகிற மாதிரி! எதுவும் பேசாமல்
கோபத்துடன் ரசீதைப் பிடுங்கிக் கொண்டு மேடைக்குப் போனார். பெயர் போடாததால்
அந்த ரசீதை இன்னொருவருக்குக் கொடுத்து விடலாம்! பிறகுதான் கேள்விப்பட்டேன் –
அது அவரது ஆத்மார்த்த சீடர்கள் நிரம்பிய ஊர். அவரது இத்தகைய செயல்கள் எல்லாம்
அவர்களுக்குத் திருவிளையாடல்கள் போல – யாரும் அச்செயல்களுக்கு முகம் சுளிப்பதிலை
என்று.

அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நேர்ந்ததுண்டு.
ஆனால் மறுபடியும் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன். 0

Series Navigationஇதற்கு அப்புறம்விடுவிப்பு..:-
author

வே.சபாநாயகம்

Similar Posts

3 Comments

  1. Avatar
    penamanoharan says:

    சுரதாவுக்கு இப்படி ஒரு முகம் இருப்பது இப்போது தான் தெரிகிறது.ஒரு சக எழுத்தாளரை/தமிழாசிரியரை/தமிழார்வலரை அவர் இன்னும் கொஞ்சம் கண்ணியத்துடன் நடத்தி இருக்கலாம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

  2. Avatar
    Durugathaan says:

    சுரதா குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் திம்மலை நடேசனார் என்று நினைக்கிறேன். மிகக் சிறந்த தலைமை ஆசிரியர்.

  3. Avatar
    Ramesh Kalyan says:

    இதை வித்யா கர்வம் என்பதா? ஆனால் அது கூட அறிவு சார்ந்த விஷயமாக இருக்குமே ஒழிய தனி நபர் சார்ந்ததாக இருக்க முடியாது. அமுதை பொழியும் நிலவே பாட்டின் பிராபல்யத்திற்கு பதிலாக இயற்றப்பட்டது அவருடைய அமுதும் தேனும் பாட்டு என்று நினைவு. இத்தகைய ஆரோக்யமான கர்வம் நமக்கும் நற்றமிழுக்கும் நல்லது.

    இதில் வரும் ஆராவமுது பற்றி சொன்னீர்கள். அவருடைய கவியரங்கம் ஒன்றில் நான் கலந்து கொண்டேன். பள்ளிப்ப் படிப்பு முடிந்து கல்லூரிக் காலத்தில். வெற்றிலையில் சின்வந்த வாயும் சிரிப்பும் அவர் முகத்தின் அலங்கார அடையாளங்கள். அவர் மங்கலம் பேட்டை பள்ளியில் என்று நினைக்கிறேன் – கவியரங்க தலைமை கவிதையை மேடையிலேயே எழுதி வாசித்தார். அதில் மாவிலைத் தோரணங்களை “கிளிகளதன் சிறகசைப்பாய் கவின் பச்சைத் தோரணங்கள்” (இந்த வரி சற்று முன்பின் மாறி இருக்கலாம்) என்று சொன்னது இன்னும் ‘பசுமையாக’ நினைவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *