மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன!
தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” என்ற பதில் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்;பினாள்! பிடரியில்லாச் சிங்கம் போல் தடந்தோள் இளைஞனொருவன் நிற்கக் கண்டாள்! முதிர்கதிர் தாங்கிய நெற்பயிராய் நாணிய அவள், “ஏன் இயலாது?” என்று குழலிசை மிழற்றினாள்.
“உன் முகமே ஒரு மலர்த் தோட்டம்! பற்பல மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன! இத்தனை மலர்களும் அந்தச் சூரிய காந்தியிடம் இல்லையே!” என்று கம்பீரமாய் கர்ஜித்தான் காளை. நாணிச் சிவந்தாள் நங்கை!
அவள் ஓர் அதிசய அழகி!
அவன் ஓர் அற்புதக் கவிஞன்!
அதிசய அழகும் அற்புதக் கவித்துவமும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? ‘விழியசைக்க நேரமில்லை – வீண்தானே அந்த நேரம்!” என்று இமையாத கண்ணினனாய், இனிப்பான நெஞ்சினனாய் அந்தப் பொற்சிலையின் அழகை அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் கவிஞன். இன்பமழையில் நனைந்து நனைந்து திளைத்துக் கொண்டிருந்தாள் ஏந்திழை.
பிறகு…! பிறகென்ன! அவன் அவளைப் பிரியவில்லை! அவள் அவனைப் பிரியவில்லை!
அவன் அவளைக் கவிதையாக்கினான்! அவள் அவன் கவிதைக்குக் கருப்பொருளானாள்!
அவன் அவளைக் கற்சிலைபோல் நிற்கச் சொல்லி அழகு பார்த்தான். நிலத்தில் பதிந்திருந்த நித்திலப் பாதத்தை நகர்த்தச் சொல்லி அழகு பார்த்தான்! கணுக்கால் தழுவி நின்ற மணி குலுங்கும் சிலம்பதனை அசைக்கச் சொல்லி அழகு பார்த்தான்! முன்னே நடந்து வந்து, முழங்குகிற இடை தன்னை நெளிக்கச் சொல்லி அழகு பார்த்தான்! பின்னே அமர்ந்திருந்து, யாழ் நகர்ந்து போவதுபோல் நடக்கச் சொல்லி அழகு பார்த்தான்! சித்திரக் கரங்கள் தன்னை முத்திரைகள் பலகோடி பொழியச் சொல்லி அழகு பார்த்தான்! கற்கண்டு உருவெடுத்த பொற்குன்றுத் தோள்கள் தம்மை உயர்த்தச் சொல்லி அழகு பார்த்தான்! நுங்குக் குளிர்ச்சி பொங்கும் சங்குக் கழுத்தினை வளைக்கச் சொல்லி அழகு பார்த்தான்! மொட்டவிழித்து மலர் குலுங்கும் சிட்டுச் சிமிழ் முகத்தைச் சிரிக்கச் சொல்லி அழகு பார்த்தான்! முழங்கால்வரை தொங்கும் மழை மேகக் கூந்தல் தன்னைப் பரப்பச் சொல்லி அழகு பார்த்தான்!
ஆம்! அந்த இளங்கவிஞன் பார்த்தான், பார்த்தான், பார்த்ததையே திரும்பத் திரும்பப் பார்த்தான்.
பார்த்துவிட்டு என்ன செய்தான்? மழை பொழிந்தான்! கவிதை மழை பொழிந்தான்! ஒரு நாள் பொழிந்து விட்டு மறுநாள் நின்று போகும் சாதாரண மழையாக அது இல்லை. அது அடைமழையாகப் பொழிந்து கொண்டிருந்தது! கவிதை ஆறாகக் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது! அமரகாவியங்கள் பிறந்து கொண்டே இருந்தன! நாடே மகிழ்ந்தது! மக்களெல்லாம் மகிழ்ச்சியெனும் கடலில் திளைத்து ‘கவிதை மன்னன் இவன்’ என்று புகழாரம் சூட்டினார்கள். மேன்மேலும் கவிதை பெற ஆர்வமதைக் காட்டினார்கள்.
நம்பிக்கோ மகிழ்ச்சி! நங்கைக்கோ பெருமை! வல்லி ஒரு நாள் வாய் திறந்து யாழ் வாசித்தாள்!
“ஆருயிர் போன்றவரே! பொற்கவிதை உங்களுக்கு எவ்விதமாய் முகிழ்க்கிறது?”
யாழிசை கேட்ட நம்பி உதட்டுத் தாழ் திறந்து பதில் சொன்னான்! “அமுதாக வந்தவளே! உன்னுடைய அழகு உருவம் என்னுணர்வு எழுப்புகிறது! உணர்வெழுப்பும் மோகமெனும் மேகந்தான் கவிதை மழை பொழிகிறது! இந்த அழகுருவம் உள்ள மட்டும் கவிதை மழை பொழிந்து கொண்டேயிருக்கும்!”
நம்பியின் பதில் கேட்டு நங்கை ஏனோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். அப்படிச் சிந்தனையில் ஆழ்ந்தவள் அடுத்த நாள் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள். மீளாத நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்! ஆம்! ஆயிழை நஞ்குண்டு மாய்ந்துவிட்டாள்.
கவிஞன் துடித்தான்! கண்ணீர் வடித்தான்! முடிவில் காரிகை விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தான்!
“அமுதாக வந்தவளே!” என்று கனிவாக அழைத்தவரே! உமதுள்ளத்தில் உரு நிறுத்தி உயிர் பிரிந்து செல்லுகின்றேன்! ஏனென்று கேட்பீர்! வயதானால் என்னுடைய அழகுருவம் வாடிப் போகும். அப்போது உம்முடைய கவிதை மழை நின்று போகும்! ஆனால் இப்போது? என்னுடைய அழகு உமது உள்ளக் கோயிலில் நிலைத்திருக்கும். அதனால் காருள்ளவரை நிலைத்திருக்கும் கவிதைகளை உலகில் நீருள்ளவரை பொழிந்து கொண்டே இருப்பீர்! காதலரே! கவிதை மழை பொழியட்டும்! உலக மக்கள் உள்ளமெலாம் வழியட்டும்!”
—
- தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11
- தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)
- பேக்குப் பையன்
- ஒருகோப்பைத்தேநீர்
- மீண்டும் ஒரு முறை
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்
- எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு
- புரட்டாசிக் காட்சிகள்
- இதுவும் அதுவும் உதுவும்
- அலைகளாய் உடையும் கனவுகள்
- வீடு
- அதில்.
- இங்கே..
- குடை ரிப்பேரும் அரசியல் கைதும்
- (80) – நினைவுகளின் சுவட்டில்
- படங்கள்
- இதற்கு அப்புறம்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா
- விடுவிப்பு..:-
- கிளம்பவேண்டிய நேரம்.:
- சேமிப்பு
- அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
- சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்
- சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்
- முடிவுகளின் முன்பான நொடிகளில்…
- கவிதை
- மழைப்பாடல்
- இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !
- மண் சமைத்தல்
- ஈடுசெய் பிழை
- ஜென் ஒரு புரிதல் பகுதி – 15
- கோ. கண்ணன் கவிதைகள்.
- ஏன் பிரிந்தாள்?
- ஆசை
- திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
- ஒரு உண்ணாவிரத மேடையில்
- ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- சலனக் குறிப்புகள்
- பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
- முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்