ஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்

This entry is part 11 of 37 in the series 23 அக்டோபர் 2011

அலுவலகத்தில் நல்ல பேர் வாங்க என்ன செய்ய வேண்டும்? இது அனைவரும் அறிய விரும்பும் விஷயம் தான். இதனை மையமாக வைத்து ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. புத்தகத்தின் பெயர் : “ஆபிஸ் கைடு ” கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

“நரகத்துக்கான எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்க கூடியது ஒரு நிறுவனம். ஆயினும் அதை சொர்க்கமாக மாற்றி கொள்வது கடினம் இல்லை; அதை சொல்லி குடுப்பதே புத்தகத்தின் வேலை” என்று முதல் அத்தியாயத்தில் பில்ட் அப் பயங்கரமாக தான் உள்ளது. அதை புத்தகம் பூர்த்தி செய்ததா என்றால் ஓரளவுக்கு மட்டுமே என்று தான் சொல்லவேண்டும்.
நூல் ஆசிரியர் சாது ஸ்ரீராம் டால்மியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 40 வயது இளைஞர். கம்பனி நிர்வாகம், மனித வள மேலாண்மை முதலிய விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவரின் மற்றொரு பிரபல புத்தகம் ” பெரிய பிரச்சனை.. சின்ன தீர்வு”
ஆபிஸ் கைடு நூல் பதினைந்து அத்தியாயங்கள் கொண்டது. அநேகமாய் ஒவ்வொன்றிலும் ஓரிரு கதைகள் சொல்லப்பட நடுவில் சில கருத்துகளும் சொல்ல படுகின்றன. (ஆம் கதைகளுக்கு இடையே கொஞ்சமாய் கருத்துகள் !!) அதிலும் போக போக நிறைய விலங்குகள் கதைகளாக வாசிக்க, வாசிக்க, நாம் படிப்பது பஞ்ச தந்திர கதை புத்தகமோ என்கிற ஐயம் வந்து விடுகிறது. கதைகள் சற்று குறைவாய் உபயோகித்திருக்கலாம் என்பதோடு, அவை நமக்கு நெருக்கமாக நிஜ வாழ்க்கைக்கு அருகாமையில் இருந்திருக்கலாம் !!
இந்த நூல் பெருமளவு ஒரு மானேஜருக்கு அறிவுரை சொல்கிற விதமாகவே உள்ளது. மானேஜர் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு தகவல் சற்று குறைவே. ஒவ்வொரு மானேஜரும் தன்னிடம் வேலை பார்ப்போரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என இவ்வாறு சொல்கிறார்:
1. தன்னிடம் பேசும்போது அளவுக்கு மீறி பேசக்கூடாது. தேவையானவை மட்டுமே பேச வேண்டும்
2. நேரடியாக கேட்காத பட்சத்தில் ஆலோசனைகள் சொல்லக்கூடாது
3. செய்வது சாதாரணமான விஷயமாக இருந்தாலும் தன்னிடம் அனுமதி பெற்றபிறகே செய்யவேண்டும்
4. தன்னிடம் பேசிய விஷயங்களை வெளியில் சொல்ல கூடாது
5. தான் எடுக்கும் முடிவுகளை, தன்னிடம் வேலை செய்வோர் பின்பற்ற வேண்டும்
போலவே நல்ல ஒரு மேனஜர் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆங்காங்கு சொல்லப்பட்டவையில் சில:
1. நிறுவனம் நம்முடையது என்கிற எண்ணத்தை ஊழியர் மனத்தில் ஆழமாக விதைக்க வேண்டும்.
2. ஒவ்வொருவர் பணியும் நிறுவனத்துக்கு முக்கியம் என்கிற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.
3. எல்லா பணிகளையும் தானே இழுத்து போட்டு செய்ய கூடாது. சரியான விஷயங்களை பிறருக்கு delegate செய்ய வேண்டும்.
4. சரியான முறையில் communicate செய்ய வேண்டும். பல நேரம் கீழே வேலை செய்வோர் சரியாக ஒரு வேலை செய்யாததன் காரணம் மேனஜர் சரியாக தகவல் சொல்லாதது தான்.
5. ஊழியர்களை நல்ல முறையில் பாராட்ட வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். சில புதிய முயற்சிகள் செய்து தோற்றால் கூட அவர்களை பாராட்டுவது அவசியம்
6. அலுவலகத்தில் மாறுதல்கள் நிகழும் போது எதனால் அது நிகழ்கிறது என தெளிவாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
எந்தெந்த விஷயங்களை பிறருக்கு delegate செய்யலாம் என்பது குறித்து ஒரு அத்தியாயம் பேசுகிறது. மற்றொரு அத்தியாயம் பணி உயர்வு குறித்து ..விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பிறிதோர் அத்தியாயம். ..
இப்படி நல்லதொரு concept இருந்தாலும் தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமாயின் “திரைக்கதை” சரியில்லாமல் புத்தகம் திண்டாடுகிறது.
“எதற்கு முக்கியத்துவம் தருகிறோமோ அது வளருகிறது” என்கிற ஒரு பெரிய விஷயத்தை போகிற போக்கில் இரண்டு கதைகளுக்கு நடுவே ஒரு வரியாக சொல்லி செல்கிறார். உண்மையில் இந்த புத்தகத்துக்கும் அது பொருந்துகிறது. நூல் ஆசிரியர் முக்கியத்துவம் தந்தது கதைகளுக்கா, கருத்துகளுக்கா என்றால் கதைகளுக்கே என்று சொல்ல வேண்டியுள்ளது.
அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து ஒரு நூல் என்கிற கான்செப்ட் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனாலும் சாது ஸ்ரீராம் , ” உங்க கிட்டயிருந்து நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் !”
நூலின் பெயர்: : “ஆபிஸ் கைடு”
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
விலை: ரூ. 60

Series Navigationஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….சொல்லி விடாதீர்கள்
author

மோகன் குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *