ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)

This entry is part 18 of 37 in the series 23 அக்டோபர் 2011

பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சிற்பி.

பிற்காலத்தில் தேடலை நோக்கிய பயணத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் அபரிதமான ஒலிச்சேர்க்கை நெருடலாகிப் போனது. அப்போது வானம்பாடிக் கவிஞர்களும் எங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை. எனினும் சிற்பி என்ற கிராமத்து நதி விளை நிலங்களை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டதும் எண்ணற்ற கிளைநதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான ஜீவநதியாக வற்றாத நீருடன் இலக்கிய உலகில் வளம் சேர்த்துக்கொண்டிருப்பதும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருமைச் சேர்க்கும் உன்னதச் சரித்திரம்.

அண்மையில் சிற்பியின் பவளவிழா (ஜூலை 2011) மிகச்சிறப்பாக கோவையில் கொண்டாடப்பட்டிருக்கிறது. விழாவை ஒட்டி நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கவிஞர் சிற்பி பவளவிழா மலர், கவிஞர் சிற்பி பவளவிழா நிகழ்வுகள் பதிவுகள், சிற்பி அகமும் புறமும், சிற்பியின் நெஞ்சம் என்று மிக நேர்த்தியான புத்தகவடிவில். புத்தகங்களைப் புரட்டியுவுடன் கவிஞர் சிற்பி மீது ஏற்கனவே இருந்த பிரமிப்பு இரட்டிப்பானது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிஞர் சிற்பின் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என்றோ கவிஞர் சிற்பியுடன் எனக்கு இலக்கிய வட்டத்தில் தொடர்புகள் இருக்கிறது என்றோ சொல்லிக்கொள்ளும் படி எதுவுமில்லை. 2006ல் என் கவிதை தொகுப்பு நூல் ‘நிழல்களைத் தேடி’ சிற்பி கவிதைச் சிறப்பு பரிசு பெற்றது. அப்போது விருதை நேரில் சென்று வாங்கும்படியாக எனக்கு வேண்டிய நண்பர்கள் அறிவுரை சொன்னார்கள். நானும் என் வருகையை கவிஞர் சிற்பியுடன் தொலைபேசியில் உறுதி செய்தேன்.

விருது வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றதும் சிற்பியுடன் சேர்ந்து சிற்பியின் குடும்பத்தாரின் விருந்தோம்பலும் வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் இனிய அனுபவமாக அமைந்தது. அதன்பின் சிற்பியின் அந்தப் பிரமாண்டம் மேற்கொண்டு சிற்பியுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு தடையாக இருந்ததோ என்று இப்போதும் நினைக்கிறேன்.! சிற்பியை அன்னாந்துப் பார்த்து அதிசயிக்கும் ஒரு குழந்தையாக மட்டுமே … இப்போதும் நான்…

மகாகவி பாரதிக்கு கிடைக்காத வாய்ப்பும் வசதியும் சிற்பிக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். வானம்பாடிக் கவிஞர்களின் கனவுகளை எட்டிப்பிடித்த நட்சத்திரம் சிற்பி. இதெல்லாம் அடையவும் அடைந்ததை தக்கவைத்துக்கொள்வதும் சமூக சூழலில் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அரிதினும் அரிதான அந்த வானத்தை வசப்படுத்திய ஆற்றல் இந்த வானம்பாடியின் வெற்றியின் ரகசியமா? சாதிக்க முடியாத அனைத்தையும் சாதித்துக் காட்டும் வல்லமை சிற்பிக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?

சிற்பியைப் பற்றிய சிலரின் பதிவுகள் இக்கேள்விகளுக்கான பதில்களாய் அமைந்திருக்கின்றன.

கோவையில் நான் மிகவும் மதிக்கும் இரு எழுத்தாளர்களின் சிற்பி குறித்து சில உண்மை சம்பவங்களை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

கோவை ஞானி:
——————
மார்க்சியவாதியான எழுத்தாளர் ஞானி தனக்கும் சிற்பிக்குமான கருத்து வேறுபாடுகளைப் பற்றிய பதிவில்

‘கவிஞர் சிற்பி அவர்களும் கவிதைக்கும் கவித்துவத்திற்கும் முதன்மை தரும் நோக்கில் மார்க்சியத்தை ஓரத்திற்கு ஒதுக்கியதோடு மார்க்சியப்பார்வையிலிருந்து கவித்துவத்தை மேலெடுக்க முடியாது என்பது போல கருதினார் ‘ என்கிறார். சிற்பியின் கருத்து சரிதான் என்பதை (அறிந்தோ/அறியாமலோ?) அய்யா ஞானி அவர்களின் அடுத்த வரிகள் உறுதி செய்கின்றன.

“வானம்பாடி இயக்கக் காலத்தில் கவிஞர் சிற்பி அவர்கள் எழுதிய கவிதைகளைவிட வானம்பாடி இயக்கச் செயல்பாடு நின்ற பிறகு சூரியநிழல் தொடங்கி கிராமத்து நதி முதலிய தொகுப்பில் உள்ள கவிதைகளை அவர் இயற்றிய காலத்தில் அவரது கவித்துவ ஆற்றல் சிறப்பாகவும் மேலோங்கியும் வெளிப்பட்டதை என்னால் உணர முடிந்தது. தமிழ்ச் சூழலில் மார்க்சியமும் இருத்தலியலும் எங்கோ ஓரிடத்தில் இணைந்தன் விளைவாக பிரபஞ்ச இயக்கம் தொடங்கி மனித வாழ்வியல் பற்றித் தீவிரமான கேள்விகள் நமக்குள் எழுந்தன என்பதையே இதற்குக் காரணமாகக் கூறமுடியும். இவ்வகைக் கவிதைகள் கவிதைக்குத் தேவையான அழகியல் என்பதையும் கடந்து மெய்யியல் தளத்தை உள்வாங்குவதன் விளைவாக கவிஞர்களுக்குள் கவித்துவம் உச்சம் பெறுகிறது” என்கிறார்.

இக்கருத்து மார்க்சியவாதிகளுக்கு மட்டுமானதல்ல. இயக்கம் சார்ந்த இசம் சார்ந்த தளத்தில் இயங்கும் அனைத்துப் படைப்பாளருக்குள்ளும் நிகழும் ஒரு மாற்றம் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ப்வர்களும் அதை நோக்கிய தங்கள் அடுத்தக் கட்ட பயணத்தைத் தேடும் படைப்பாளர்களின் தேடல் உன்னதமான படைப்புகளுக்கான முகவரிகளாக மாறுகின்றன.

மனிதர்களைக் கையாளுவது என்பது ஒரு கடினமான செயல். அதற்கான பயிற்சி வகுப்புகள் நான் வேலைப்பார்த்த பன்னாட்டு வங்கியில் எங்களுக்கு அடிக்கடி நடத்தப்படும். அவர்கள் சொல்லும் ஒரு கருத்து ‘வின் வின் பாலிஸி’ WIN WIN POLICY யாருக்கும் ஏமாற்றமோ தோல்வியோ கிடையாது இந்த ஆட்டத்தில் என்பது தான் மிகவும் முக்கியம். இலக்கிய வட்டத்தில் இந்த சூத்திரத்தை காண்பது மிகவும் அரிது. ஆனால் சிற்பி இந்த சூத்திரத்தின் சூத்திரதாரியாக இருக்கிறார் என்பதை பலரின் பதிவுகள் நமக்கு உணார்த்துகின்றன.

எழுத்தாளர் ஞானி அவர்கள் சொல்வது போல “எத்தனையோ தளங்களில் சிற்பி தொடர்ந்து இயங்கியிருக்கிறார். எந்த ஒரு கருத்தரங்கிலும் சிற்பியின் நீண்ட அழகிய இனிய உரை அனைவரது மரியாதைக்கும் உரியதாகவே இருக்கும். இதனால் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் ஆய்வுநிறுவனங்களும் சிற்பியை விரும்பி அழைக்கின்றன. சிற்பி தமிழ்ச்சமூகத்தின் அனைத்துவகை மனிதர்களோடும் பெரியவர்களோடும் நெருக்கமான உறவு கொண்டிருக்கிறார். சைவமதத் துறவியரும் அவரை மதிக்கின்றனர். முதலாளிகளோடும் அவருக்கு முரண்பாடு இல்லை. மார்க்கியக் கட்சியனரும் அவ்ரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிற்பி அவர்களோடு சில காரணங்களுக்காக நான் மாறுபட்ட போதிலும் கோவை வட்டாரத்தில் எந்த ஒரு தமிழயக்கத்தையும் மையத்தில் சிற்பி இல்லாமல் நடத்த இயலாது” என்ற பதிவு இக்கருத்தை உறுதி செய்கிறது.

நாஞ்சில் நாடன்:
——————-

இன்னொரு முக்கியமான பதிவாக நாஞ்சில் நாடன் அவர்களின் கருத்து. தமிழ் இலக்கிய வட்டத்தில் நடக்கும் குடுமிப்பிடி சண்டைகள், டாஸ்மார்க் கடையிலிருந்து நேரடியாக விழா மேடைக்கு வந்து சண்டை போடத் தயாராக இருப்பவர்கள், குழுச்சண்டைகள், வாக்குவாதங்கள், இலக்கிய விமர்சனங்கள் தனிமனித வாழ்க்கையின் அவதூறுகளாக மாறும் அவலம்…. இத்தியாதி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் சின்னதாக ஓர் அற்ப சந்தோஷம் ஏற்படும். அம்மாதிரியான சூழலிலிருந்து ஒதுங்கி ஒதுக்கப்பட்டு வாழும் வாழ்க்கை.

இச்சூழலில் வாழும் சிற்பியின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாக ‘சிறியன சிந்தியாதான்” என்பதை விளக்க வரும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் எழுதுகிறார்…”சாகித்திய அகாதமியின் தமிழ்ப்பிரிவின் செயல்பாடுகளை என்னைவிடக் கடுமையாக விமர்சனம் செய்த இன்னொரு படைப்பாளி தமிழில் இல்லை. சுந்தரரமாசாமி மறைவுக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த முதல் இரங்கல் கூட்டம் கோவை விஜயா பதிப்பகம் நடத்தியது. அன்று சிற்பியுடன் நானும் மேடையில் இருந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அன்று நான் கரை கடந்து பேசினேன். சிற்பி காயப்படும்படியாகவும் என்னுடைய ஆதங்கம், சுந்தரராமசாமிக்கு சாகித்திய அகதெமி விருது வழங்கப்படவில்லை என்பது.
அது போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கோவையில் ஆ.மாதவனுக்கு விருதளித்தபோது நான் பேசியதும் தொடர்ந்து எனக்கு விருது அறிவிக்கப்பட்ட பின்பு நான் பேசிய மேடைகளும், அளித்த செவ்விகளும் என் இயல்புப்படிக் காட்டமானவை. சிற்பி ஒரு முறைக்கூட என்னிடம் முகம் கறுத்துப் பேசியதில்லை, எது குறித்தும்.
மேலும் எனக்கு வலிக்காமல் அடிக்கவும் தெரியாது. நண்பர் வேனிலிடம், சிற்பின் எதிர்வினை, “நாஞ்சில் அப்படித்தானயா பேசுவாரு… அப்படிப் பேசலேன்னா
அது நாஞ்சில் இல்லே..!”

சிற்பி…. உங்களைச் சுற்றி இருக்கும் பால்வீதியின் ரகசியம் இப்போது புரிகிறது
எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக…!

சூரியநிழல்:
————–

சிற்பி உங்கள் கவிதைகளில் சூரியநிழல் என்னை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

உங்கள் சூரியநிழல் கவிதையில்..

“யாருடைய
நிழல் நான் ?
அப்பா.. தாத்தா
என் முப்பாட்டனார்/
எண்ணத் தொலையாத
என் மூதாதையரின்
முனை முறியாச் சங்கிலி?

யாருடைய நிழல் நான்?
என் கிராமத்து புழுதி?
ஏகாந்தத் தவமிருக்கும்
ஒற்றைப் பூவரசு?
தலை தெறிக்க ஓடி
நுரை கக்கும் ஆறு?
சில் வண்டு ரீங்கரிக்கும்
மகாவிருட்ச வனங்கள்?
காடுகளின் சங்கீதமான
அருவிகள்?

யாருடைய நிழல் நான்?

உங்கள் கவிதை வெளிவந்தது 90களில் நான் வாசித்தது 95களில்.
என் கவிதை நிழல்களைத் தேடி (2006) தொகுப்பில் 10 கவிதைகள்
சூரிய நிழலின் தொடர்ச்சியாகவே என்னையும் அறியாமல்
எழுதப்பட்டிருந்ததும் அந்தப் புத்தகத்திற்கே சிற்பியின் பரிசு
கிடைத்ததும் ரொம்பவும் தற்செயலாக நடந்ததை என்னவென்று
சொல்லட்டும்?!

என் கவிதையிலிருந்து சில வரிகள்:

என்னுடன் பிறந்ததா என் நிழல்?
என் தாயின் கருவறையில்
என்னைத் தாங்கியிருந்த
பனிக்குடமா என் நிழல்?
…..

நிழல்
என் சாயலில்லாத என் நிழல்
நிழல்
எனக்குச் சொந்தமில்லாத என் நிழல்

நிஜமிலலாமல் வாழ்ந்துவிட முடிகிறது
நிழலில்லாமல் வாழ்வது மட்டும்
நிழல்களுக்கும் சாத்தியமில்லை.
நிஜங்கள் களைத்துக் கண்மூடித் தூங்கும்
நிழல்கள் எப்போதும் விழித்தே இருக்கும்
நிஜங்களைக் காக்கும் காவலனாய்
நிஜங்களுடன் வாழ்க்கை நடத்தும் காதலனாய்.
….

நிஜங்களுக்குத்தான்
ஆடைகள், அணிகள், அலங்காரங்கள்
நிழல் எப்போதும் உண்மையாய்
அலங்காரமில்லாமல்
நிர்வாணமாய்க் கடைசிவரை
நிஜங்களின் இருத்தலை
நிச்சயப்படுத்திக்கொண்டு…

என்று காலமெல்லாம் நிழலை ரசிக்கவும் நிழலுடன் வாழவும்
நிழலுடன் நிழல் யுத்தம் நடத்தவும் எனக்கும் வழிகாட்டிய
உங்கள் சூரியநிழலுக்கு நன்றியுடன்…….

புதியமாதவி,
மும்பை.

Series Navigationஃப்ரெஷ்கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *