நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா

This entry is part 34 of 37 in the series 23 அக்டோபர் 2011

பொதுவாகவே இப்படிப் பட்ட தலைப்புடன் எழுதப் படும் கட்டுரைகள், “உங்கள் கணக்கு ஹாக் செய்யப் படலாம்!”, “பெண்களே! உங்கள் விவரங்களை கொடுக்காதீர்கள்”, என்பன போன்ற எச்சரிக்கைகளோடு வெளியாகும். அக்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும். ஆனால், இந்த சமூக இணைப்புத் தளங்களின் முக்கிய தொல்லைகளும், நன்மைகளும், பொதுவான ஆபத்துக்களைத் தாண்டி ஆராய்ந்தால் தான் புரியும். அதைப் பற்றி எவரும் எழுதுவதில்லை என்று கூற முடியாது. எழுதுவோரின் எண்ணிக்கை குறைவு. அவர்களின் இடுவை பிரபலம் அடைவதும் கடினம். பல வருடங்களாக இத்தளங்களை உபயோகித்துக் கொண்டிருப்போருக்கும், புதிதாக இணைந்திருப்போருக்கும் இக்கட்டுரை முக்கிய ஆலோசனைகளை அளிக்கவுள்ளது. முதலில் நன்மைகளைப் பார்ப்போம்:
௧. ஃபேஸ் புக் பெரும்பாலும் தெரிந்த நண்பர்களுக்காக உருவாக்கப் பட்ட ஒரு இணைய தளம்.ஆனால், நண்பர்களைத் தேடுவோர், கலைத் துறையினர், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுநல விரும்பிகள் மற்றும் பலர், தங்களுக்கு வரும் கோரிக்கைகள், முன்பின் தெரியாதவரிடமிருந்து வந்தாலும் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொள்வதுண்டு.
ட்விட்டர்,ஃபேஸ் புக் போல் அல்லாமல் பாதுகாப்புகளை குறைத்து, பிரபலங்களையும் சாமானியர்களையும் ரொம்பவே நெருக்கமாக்கியுள்ளது. இது ஒரு வகையில் நண்மையில் முடிகிறது. நாம் கண்டு வியந்த பிரபலங்களின் வாழ்க்கையோடும், எண்ணங்களோடும் ஒரு நொடிப் பொழுதில் இணைய முடிகிறது. அவர்கள் விருப்பப்பட்டால் உரையாடவும் முடிகிறது. எழுத்து, கலை ஆகிய துறைகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரம் என்றே கூறலாம். படைப்புக்களையும், குறும்படங்களையும் எளிதில் பிறரின் பார்வைக்கு எடுத்துச் செல்லக் கூடிய வசதி இந்த இணையங்களின் மூலமாக கிடைக்கிறது. நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், விளையாடுவதற்கும் மட்டும் பயன்படாமல், ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் ஆற்றல் இந்த இணைய தளங்களுக்கு இருக்கிறது.
௨. ஃபேஸ் புக்-ல் பிரபலாமான ஒரு வசதி, ‘குரூப்’-ல் இணைவது; இணைப்பது. இந்த வசதி, நம் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினால் மிகையல்ல! எனக்குத் தெரிந்த இயக்கங்களில் ஒரு சிலவற்றின் பெயரையும், அதில் உள்ள மக்கள் தொகையையும் குறிப்பிடுகிறேன்.
1. உலகத் தமிழர் இணைய இணைப்பு (23682) 2.சோசியலிசம் (24000) 3. சோசியலிசம் வேலைக்கு ஆகாது (27000) 4. கம்மியுனிசம் (24385). இந்த இயக்கங்கள், அன்றாடம் தங்கள் குழுமத்தின் கொள்கை சார்பான செய்திகளை பகிர்ந்து கொள்வதிலும், போராட்டங்களில் பங்கு கொள்ள ஆர்வம் உள்ளவர்களைத் தேடுவதிலும், இயக்க முன்னேற்றத்திற்காக பண உதவி தேடுவதிலும் அக்கறை செலுத்தி, முன்பு இருந்ததை விட வேகமாக பலம் பெறுகின்றன. திரை நடிகர்களின் நற்பணி இயக்கங்களும் இணையதளத்தின் மூலமாக பல நல்ல காரியங்களை செய்து வருகின்றன.
௩. ட்விட்டர்-ஐ எடுத்துக் கொண்டால், பத்திரிக்கைகளை படிப்பது, செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது, முக்கிய விவகாரங்களைப் பற்றிய மற்றவர்களின் கருத்தை பிரபலமானவர்கள் பகிர்ந்து கொள்ள, அதை படித்து-பார்த்து தெளிவு பெறுவது, அரசை எதிர்த்தோ/ஆதரித்தோ நடக்கும் போராட்டங்களைப் பற்றியும், விபத்துக்கள்-பயங்கரவாத சீரழிவுகள் நேர்ந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களைப் பற்றியும் அறிந்து கொள்வது போன்ற எண்ணற்ற வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன. சுருங்கச் சொன்னால், இவ்விரண்டு இணையதளங்களும் அறிவு விருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் நூறு சதவீதம் தகுதியான, சுலபமான வழிகள்!
௪. சர்வதேச படங்களையும், புத்தகங்களையும் பற்றிய பல க்ரூப்கள் இந்த இணைய தளத்தினுள் அடக்கம். படிக்க சோம்பேறித்தனம் படுவோர், நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் படங்களின் மூலமாக ஆஸ்கர் ஷிண்ட்லர் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்! இப்படிப் பட்ட ஒருவர் நம் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கவில்லையே என்று ஏக்கமும் பட முடியும்! இதைத் தவிர, பொழுதுபோக்கு, பழைய நண்பர்களுடன் தொடர்பு, போன்ற நன்மைகள் எல்லாம் எல்லோரும் அறிந்ததே.
இணைய தளத்தை வெறுப்பவர்கள், பெரும்பாலும் சொல்லும் காரணம், நண்மைகளை விட தீமையே அதிகம் என்பது தான்.என்னுடைய கருத்து, இணையத்தை வெறுக்க இக்காரணம் உபயோகப் படாமல், விழிப்புணர்வோடு நண்மையை மட்டும் வடிகட்ட வழிகாட்டுவதற்கு உபயோகப் பட்டால் நல்லது. இக்கால இளைஞர்களை காம வெறியர்களாய் நினைத்துக் கொண்டு இத்தகைய தளங்களில் இணைய விடாமல் தடுக்கும் பெற்றோர்கள் சற்று யோசிக்கலாம். ஆபாசம், இணையம் முழுவதும் பரவிக் கிடக்கிறது என்ற குற்றச் சாட்டு முற்றிலும் உண்மை. இதை தடுக்க, இணையத்தை உபயோகிக்க விடாமல் தடுக்கும் வழி தவறானது!
ஆபாசம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதையும், அறிவுக் களஞ்சியத்தை தேடும் எண்ண உத்வேகத்தை பெறுவது தான் வாழ்க்கை என்று அவர்களின் மனதில் பதிய வைத்து,அறிவாளிகளை உருவாக்குவது தான் சாரியான வழி! அப்படி உத்வேகம் கொண்ட இளைஞர் பட்டாளம் இணைய சமூக இணைப்பு தளங்களில் பெரும்பாலும் உலாவருகிறது என்ற உண்மையை அறிந்ததால் தான், அண்ணா ஹஜாரே கூட இத்தளங்களில் இணைய முடிவெடுத்துள்ளார். இதைப் பற்றிய அறிவு பெற்றோருக்கு இல்லை என்பதோடு, இன்னமும் இளைஞர்களே உணரவில்லை என்பது தான் கவலை அளிக்கும் விடயம். இத்தளங்கள், ஏற்கனவே அதிகம் கிடைக்கும் பொழுதுபோக்கை வேறு வழியில் கொடுக்கத் தான் உபயோகப் படுகின்றன என்று படித்தவர்கள் கூட நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சரி! துடிக்கும் இள ரத்தங்களுக்கு காத்துக் கிடக்கும் அபாயங்கள் என்ன என்ற கேள்விக்கான விடைகளைப் பார்ப்போம்:
௧. ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டரின் மூலமாக சமூகப் பிரச்சனைகளை தீர்க்க தங்கள் பங்கை அளிக்கத் துடிக்கும் பலர் புழங்குவது உண்மை தான் என்றாலும், பெரும்பாண்மை எப்போதும் போல ‘இன்ப வேட்டை’-க்காகவே சுற்றித் தெரிகிறது. இந்த இன்ப வேட்டைக்காரர்கள், தங்கள் நண்பர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக அறிவார்ந்த மக்களின் செய்கைகளை எள்ளி நகையாடி, அதன் மூலமாக மகிழ்ச்சிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. “இது என்ன பெரிய விஷயமா? அவர்களின் கிண்டலை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்?” என்ற கேள்வி எழலாம். இங்கு தான் ஆராய்ச்சி தேவைப் படுகிறது. மக்களின் பழக்கங்களில் உள்ள பரிணாமங்களை உற்று நோக்கினால், இந்த விவகாரத்தின் உண்மையான முகம் விளங்கும்.
முன்பெல்லாம் எதிர்கட்சியினர் என்றால் கொள்கையில் மட்டும் தான் சண்டை பிடித்துக் கொள்வார்கள். இப்போது ‘அவன்..இவன்..குடிகாரன்..” போன்ற வார்த்தைகள் மிக சகஜம்! இது சகஜாம் ஆனதற்கு மூலக் காரணமே, மனிதாபிமான அடிப்படையில் மற்றவரை மதிக்கும் பண்பு மக்களிடம் குறைத்து வருவது தான். இன்றைய இளைய தலைமுறை, “முட்டாள் என்று ஒருவரை முடிவுகட்டிவிட்டால், அவரை ஈனச் சொல் கொண்டு திட்டலாம்; தவறில்லை. வேண்டுமென்றால், அவர் சொந்த வாழ்க்கையையும் இழுக்கலாம்” என்ற கொள்கையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இது இணையத்தின் மூலமாக சர்வ சாதாரணம் ஆகிவிட்டது! இது, பிற்காலத்தில் ஒரு தனி மனிதரின் (மக்களால் தவறாக நினைக்கப் பட்ட) சாதனையை தெளிவற்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் கொண்டது.
விளங்கச் சொல்ல வேண்டுமானால், இன்று தவறான கண்ணோட்டத்தோடு ஒருவர் செய்த செயலை விமர்சிக்கும் ஒருவர், தன்னுடைய வட்டத்தில் உள்ள அறிவிலிகளை இந்த ஊடகத்தின் மூலமாக சுலபமாக மூளைச் சலவை செய்ய முடியும். ஒருவரின் அரசியல், சமூக, ஒழுக்கச் சார்பு நிலையையே மாற்றி அமைக்க வல்லது இந்த அபாயம்! நம் நாட்டின் எதிர்காலம் நேருக்களையும், காந்திகளையும், அப்துல் கலாம்களையும் காண வேண்டுமானால், இந்த பழக்கம் நெறிப்படுத்தப் படவேண்டியது அவசியம்.
௨. மெய்யைக் காட்டிலும் உணர்ச்சிகளும், அனுபவங்களும் மக்களை அதிகம் பாதித்துவிடும் என்பது வரலாறு கண்ட உண்மை. முன் பின் தெரியாத ஒருவரின் உணர்ச்சிகளையும், கசப்பான அனுபவங்களையும் எளிதில் பார்க்க இடம் அளிக்கும் ஒரு ஊடகமாக இவ்விரண்டு தளங்களும் செயல்பட வாய்ப்புண்டு. இன்று வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப வசதிகள் கொண்டு ஒருவரை நிஜச் சாமியார் என்றோ,போலி சாமியார் என்றோ தலைகீழாக மாற்றி, மக்களை நம்ப வைக்க முடியும்.
இத்தகைய நேரத்தில், ஒரு மனிதர் சமூகப் பிரச்சனைகளைப் பற்றி தனக்கென்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள தயாராகும் போது பிறருடைய போலி உணர்சிகளும், உண்மை அனுபவம் என்று புனையப் பட்ட கதைகளை, அவர் நிலைப் பாட்டை மாற்றியமைக்கலாம். தவறான பாதையை அவர் தேர்ந்தெடுக்க நம்பகத் தன்மை கொண்ட பொய்கள் இவ்வூடகங்கள் மூலமாக பரப்பப் படலாம்! இன்றைய இளைஞர்கள் கல்லூரியை விட்டு வெளியேறிய உடனே, “இதோடு படிப்பு முடிந்துவிட்டது” என்ற முடிவை எடுத்து விடுவதால், சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளைப் பற்றியோ, தனக்குத் தெரியாமலே தன்னைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சியைப் பற்றியோ, ஒருவன் அறிந்து கொள்ள அவன் நண்பர்கள் வட்டமே உதவுகிறது. இந்நிலையில், தவறான அறிவை அந்த நபர் பெறுவதற்கு இந்த ஊடகம் பெரிய துவாரத்தை உருவாக்கியுள்ளது! ௩. “தவறு செய்வது மனித குணம். ஆனால், தெரிந்த பின் திருந்துவதே அறிஞர் குணம்!”, இது தொன்று தொட்டு வழங்கி வரும் அறிவுரை. இதை, “தவறு செய்வது மனித குணம். எவரும் வருந்த வேண்டாம்!” என்று திரிக்க முன்பு சில வருடங்கள் பிடித்தது. இப்போது, பல தரப் பட்ட மக்களின் வாழ்க்கையை ஒரே இடத்தில் காண முடிகிறது. இந்த திறந்த நிலை, மக்களின் சரியான பக்கத்தை காண்பிப்பதோடு, தவறான பக்கத்தை அதிகம் வெளிச்சம் போடுகிறது. இதனால், எல்லோரும் கெட்டவர்கள் என்ற தவறான முடிவுக்கு ஒருவர் வருவதற்கு சில காலம் தான் பிடிக்கும். தவறை நினைத்து ஒரு மனிதன் வருந்தாமல், எல்லோரைப் போலத் தான் நானும் என்று முடிவு கட்ட அதிகம் வாய்ப்பளிக்கும் இடமாகவும் இத்தளங்கள் உதவலாம். ௪. ஒரு படைப்பாளிக்கு இந்த சமூக இணைப்புத் தளங்கள் வரம் போன்றது என்று கூறினேன். அதே படைப்பாளியை இத்தளங்கள் சர்ச்சைக்குரியவராக மாற்றிவிடுவதும் நடக்கிறது. ஒருவர், தன் மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், அதற்கு பெரிய மனதிடம் வேண்டும். அப்படிப் பட்டவர்கள் உண்மையே பேசியிருந்தாலும், அவரை திமிர்பிடித்தவர் என்று சித்தரித்து, சமூகத்தின் மாற்றத்திற்கு அவர் ஆற்றிய தொண்டை மறந்துவிட்டு, துரோகம் செய்யத் தயாராய் இருக்கிறது இச்சமூக இணைப்பு வசதி. உண்மையை உண்மையாகவே எடுத்துரைக்கும் துணிவு கொண்டவர்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள் என்ற முடிவுக்கு இச்சமூகம் வந்துவிட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து தான் பாருங்களேன்!
இதை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால், நேரம் வீணாவது, அதிக நேர கணினி உபயோகிப்பால் மன அழுத்தம் ஏற்படுதல், கண்கள் பாதிப்படைதல், அதிகமான நெருக்கத்தால் இணைத்திருந்த நட்புறவு பிரிந்து போகுதல்,தவறான வழியில் பணமும் உழைப்பும் வீணாதல் போன்ற பல தீமைகளும் நிகழ வாய்ப்புள்ளது.
இப்பதிவு படிப்பவர்களுக்கு, குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காக எழுதப் பட்டதைப் போல தென்படலாம். அவர்களுக்கு ஒரு விவரத்தை சொல்ல நினைக்கிறேன். “ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ள, அச்சமூகத்தின் சமகால இலக்கியமும், கலையும் தெரிந்தால் போதும்” என்பார்கள். அதாவது ஒரு மனிதர் மனதளவில் மாற்றம் காண மிகப் பெரிய தவறுகளை அவர் வாழும் சமூகம் அரங்கேற்றத் தேவையில்லை. ‘சிறியது’, ‘குறைந்த தாக்கம் ஏற்படுத்தவல்லது’ என்ற பின்னிணைப்புடன் ஒதுக்கப் படும் பல சமூகப் பிரச்சனைகள், பிற்காலத்தில் ‘பெரிய’, ‘சரிசெய்ய முடியாத’ தவறுகளாக மாறிவிடுவது வரலாற்றில் சகஜமாக நடக்கும் ஒன்று. ஆக, இந்த தீமைகள் பூதக் கண்ணாடியை வைத்து கண்டுபிடித்ததைப் போன்று தெரிந்தாலும், கூடிய விரைவில் வெறும் கண்களுக்கே புலப்படும்படி பெரிய தவறுகளாக மாற வாய்ப்புண்டு என்பது என் கணிப்பு. இதை மனிதில் கொண்டு, சில ஆலோசனைகளை ஏற்று நண்மையை மட்டும் பெறுவதில் அக்கறை காட்டினால் நல்லது. இக்கட்டுரை விடுத்துள்ள எச்சரிக்கைகள்:
௧. எந்த ஒரு சமூகப் பிரச்சனையைப் பற்றியும் சரிவர ஆலோசிக்காமல் கருத்தை தெரிவிக்கவோ/பெறவோ மாட்டேன் என்று சூளுரைத்துக் கொள்ளுங்கள்.
௨. உண்மை எப்போதும் பொய் உரைக்காது என்பதை புரிந்து கொண்டு, ஆவணங்களைத் தேடுங்கள். அடுத்தவர் கூறும் கதைகளை, பொய் என்று முடிவுசெய்ய காரணமே இல்லை என்றாலும், அவற்றை ஆவணமாகக் கருதி முடிவுகளை எடுக்காதீர்கள்.
௩. உங்கள் கருத்துக்களை சுற்றி உள்ள பலர் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். தெரிந்தோ, தெரியாமலோ, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவும், எதிர்க்கவும் பலர் தயாராக உள்ளனர். இதனால், பிறருடன் பகிரும் செய்திகள் பயனுள்ளதாகவும், சரியாகவும் இருப்பது மிக முக்கியம்.
௪.ஒரு சமூகம் என்பது, எண்ணற்ற மனிதர்கள் வாழும் பெரும் பகுதியை குறித்தது மாறி, இன்று ஒரு கணினியின் திரையளவாக சுருங்கிப் பரிணமித்துள்ளது. இந்த பரிணாமம் நிகழ்ந்திருப்பதை உணர்வதும், அதற்கு ஏற்றாற்போல் நம்மை தயார் செய்து கொள்வதும், நம் வாழ்க்கை நம்மிடம் எதிர்நோக்கும் தகுதிகள்! அதனால், நீங்கள் ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற இணைய சமூகங்களில் ஒரு அங்கமாய் இருந்தால் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டு நன்மையைப் மட்டும் முழுமையாய்ப் பெறுங்கள்.

kannanwriter.blogspot.com

Series Navigationதிருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Thenammai says:

    எந்த ஒரு சமூகப் பிரச்சனையைப் பற்றியும் சரிவர ஆலோசிக்காமல் கருத்தை தெரிவிக்கவோ/பெறவோ மாட்டேன் என்று சூளுரைத்துக் கொள்ளுங்கள்// பிரமாதமா சொன்னீங்க..

    உங்கள் கருத்துக்களை சுற்றி உள்ள பலர் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். தெரிந்தோ, தெரியாமலோ, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவும், எதிர்க்கவும் பலர் தயாராக உள்ளனர். இதனால், பிறருடன் பகிரும் செய்திகள் பயனுள்ளதாகவும், சரியாகவும் இருப்பது மிக முக்கியம்/// இதையும் ஏற்றுக் கொள்கிறேன். உண்மைதான்..:)

  2. Avatar
    காவ்யா says:

    What abt internet fora, chat rooms, blogs and internet magazines like Thinnai, Keetru, Kalachuvadu, Tamilhindu.com ?

    Twitter and FB have only a few sentences to read. But other internet media I have mentioned, have long discussions. Most of them are run with an agenda to brainwash for e.g Tamilhindu.com and other anti establishments fora like Kalachuvadu.

    In FB, there is another dimension of love and romance. Recently many instances have come to notice of both sexes falling prey to the tricksters.

    I have come to know abt some romances ending in marriages where the winner is the girl and the loser is the boy. Boys are on the prowl seeking girls. Knowing their desire, some girls pick them up for chat and such girls are pushed to do that as they stand no chance of arranged marriages due to the inability of parents to choose a groom or pay heft dowry. The girls if they come to know the boy is a good catch, and can be married easily w/o money, use their guiles to lure them.

    But the girls’ ventures end in marriage. If the same s done by boys, it ends in romance and sex, and, in some cases, murders after sex. Recent Munaar murder is alleged to be originated in FB contacts.

    Kannan stops at political issues only. Perhaps he wants to focus on them.

    This new-fangled social gatherings in FB, Twitter, and other internet fora – have many dimensions when we talk only abt their negative capabilities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *