மூன்று தேங்காய்கள்

This entry is part 44 of 53 in the series 6 நவம்பர் 2011

சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு அவனிடம் இருந்தது. அவன் மனைவி அமிர்தம் விருந்தினர் யார் வந்தாலும், வீட்டில் உள்ளதை இன்முகத்தோடு முதலில் அவர்களுக்குக் கொடுத்து, மிஞ்சியதை உண்ணும் பழக்கமுள்ளவள். இவ்விதம் இவர்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு நாள் வீதி வழியே முனிவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் வணங்கிய திருமேனி, தன் வீட்டிற்கு வந்து உணவு கொள்ள வேண்டும் என்று வேண்டினான். முனிவரும் மகிழ்ச்சியுடன் திருமேனியின் வீட்டிற்கு வந்து உணவு உண்டார். அமிர்தம் முகம் கோணாமல் மிகவும் கவனமாய் உணவு பரிமாறியது முனிவருக்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அதனால் முனிவர் தன் தோளில் தொங்கவிட்டிருந்த ஒரு பையில் இருந்து மூன்று தேங்காய்களை எடுத்துத் திருமேனியிடம் கொடுத்தார்.

“அப்பனே! இந்தத் தேங்காய்கள் சாதாரணமானவையல்ல! நீ எந்தப் பொருள் வேண்டும் என்று நினைத்து இவற்றை உடைக்கிறாயோ, அந்தப் பொருள் உனக்குக் கிடைக்கும்;. ஆனால், ஒவ்வொரு தேங்காயை உடைக்கும்போதும் ஏதாவது ஒரு வகைப் பொருளைத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். பல வகையான பொருள்களை நினைத்துக் கொண்டு உடைத்தால் பலிதமாகாது!” என்று தேங்காய்கள் பற்றிய மகத்துவத்தை விளக்கிவிட்டு முனிவர் போய்விட்டார்.

திருமேனி நீராடி, பூசையும் நிகழ்த்திய பிறகு, தன் மனைவியை நோக்கி, “நீ விரும்பும் பொருளைச் சொல். அதை நினைத்துக் கொண்டு முதல் தேங்காயை உடைக்கிறேன்” என்றான். அதற்கு அமிர்தம், “உங்கள் விருப்பமே என் விருப்பம்” என்றாள்.

எனவே, திருமேனி, ‘ஒரு மாளிகை வேண்டும்” என்று மனத்தில் எண்ணியவனாய், முதல் தேங்காயை உடைத்தான். உடனே அந்தக் குடிசை வீடு, பெரிய மாளிகையாய் மாறிவிட்டது. ‘பொன்னாபரணங்கள் வேண்டும்’ என்று மனத்திற்குள் எண்ணியவனாய், இரண்டாவது தேங்காயை உடைத்தான். உடனே அவன்முன் மூன்று பெட்டிகள் நிறையப் பொன்னாபரணங்கள் தோன்றின. ‘பட்டாடைகள் வேண்டும்’ என்று மனத்திற்குள் நினைத்தவனாய் மூன்றாவது தேங்காயை உடைத்தான். உடனே மூன்று பெட்டிகள் நிறைய தினுசு தினுசாய் பட்டாடைகள் தோன்றின. எல்லாவற்றையும் பார்த்த திருமேனியும் அமிர்தமும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாய், தான தருமங்கள் செய்து இனிய வாழ்க்கையை மேற்க்கொண்டார்கள்.

திருமேனியின் வீட்டுக்கு எதிரில் பக்கிரி என்பவன் தன் மனைவி பாக்கியம் என்பவளுடன் வாழ்ந்து வந்தான். அவன் எச்சிற் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டான். மனைவி பாக்கியம் அவனை விடக் கைகாரி. கழுவிய கையால் கூட காக்காய் ஓட்ட மாட்டாள். இவர்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்குப் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு வருவார்களே தவிர, யாருக்கும் இதுவரை விருந்து வைத்ததே இல்லை. இவ்விதமான சுயநல வாழ்க்கை இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
எதிரில் இருந்த குடிசை மாளிகையானதைக் கண்ட பாக்கியம், தன் கணவன் பக்கிரியிடம், திருமேனியைச் சந்தித்து அவன் பணக்காரன் ஆன இரகசியத்தைக் கேட்டு வரும்படி நச்சரித்துக் கொண்டே இருந்தாள். பக்கிரியும் ஒரு நாள் திருமேனியைச் சந்தித்து விவரம் கேட்க, திருமேனியும் முனிவர் வந்தது முதல் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். இதைக் கேட்ட பக்கிரி தன் வீட்டுக்குத் திரும்பி, மனைவியிடம் விளக்கவே, உடனே போய் முனிவரைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படித் தன் கணவனை விரட்டினாள் பாக்கியம்.

வீட்டுக்கு வெளியில் வந்த பக்கிரி ஆச்சரியத்தால் கண்களை மலர்த்திப் பார்த்தான். தொலைவில் முனிவர் வந்து கொண்டிருந்தார். அவரை எதிர்கொண்டழைத்த பக்கிரி தன் வீட்டிற்கு வந்து உணவு உண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முனிவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து உணவு உண்டார். அரை அரைக் கரண்டியாக பாக்கியம் அமுது படைத்தது முனிவருக்கு எரிச்சல் மூட்டிய போதிலும், அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உண்டு முடித்ததும் பாக்கியம் முனிவரைப் பார்த்து, “சாமி! எதிர் வீட்டுத் திருமேனிக்குக் கொடுத்தது போல் எங்களுக்கும் மூன்று தேங்காய்கள் கொடுக்க வேண்டும்” என்று வேண்டவே, முனிவரும் தன் தோளில் தொங்கப் போட்டிருந்த பையிலிருந்து மூன்று தேங்காய்களை எடுத்துக் கொடுத்து, உடைக்கும் போது ஒரே ஒரு வகைப் பொருளை நினைத்தால்தான் பலிதமாகும் என்ற விவரத்தையும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.

முனிவர் போனதுதான் தாமதம்! “சேலையாக வர வேண்டு;ம் என்று நினைத்துக் கொண்டு முதல் தேங்காயை உடையுங்கள்” என்று குதிக்க ஆரம்பித்துவிட்டாள் பாக்கியம்.

பக்கிரியும் விட்டபாடில்லை. “அது என்ன சேலையாக வேண்டும் என்கிறது! வேட்டியாக வேண்டும் என்றால் என்ன?” என்றான்.

“இல்லை, சேலை தான் வேண்டும்” என்றாள் பாக்கியம்.

“இல்லை, வேட்டி தான் வேண்டும்” என்றான் பக்கிரி.

“இல்லை, சேலை தான்” – இது பாக்கியம்.

“இல்லை, வேட்டி தான்” – இது பக்கிரி.

“சேலை தான்” – பாக்கியம்.

“வேட்டி தான்” – பக்கிரி.

இந்தச் சண்டையில் எரிச்சல் தாங்க முடியாத பக்கிரி கடைசியில் “எந்த மயிராவது வரட்டும்” என்று முதல் தேங்காயை உடைத்தான்.
அவ்வளவு தான்!

கூந்தலில் எத்தனை வகை! கார்மேகம் போல் கருத்த கூந்தல்! வெண்பஞ்சு போல் நரைத்த கூந்தல்! சுருட்டைக் கூந்தல்! செம்பட்டைக் கூந்தல்! எங்கே பார்த்தாலும் கூந்தலின் வண்ணக் கோலம்! சுவரில் பல தினுசுகளில் கூந்தல் கற்றைகள் தொங்கின! கூரையில், விட்டத்தில், தூணில், ஜன்னலில், கதவில்.. இது மட்டுந்தானா.. பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் மூக்கில், உதட்டில், கன்னத்தில், நெற்றியில், கழுத்தில்.. உடம்பெல்லாம் கூந்தற் கற்றைகள்! பார்க்கவே பயங்கரமாயிருந்தது.
“ஓ” என்று அலறிய பாக்கியம், “முதலில் இதையெல்லாம் போகச் செய்யுங்கள்” என்று கணவனைப் பார்த்து ஓலமிட்டாள்.

உடனே பக்கிரி “எல்லா மயிரும் போகட்டும்” என்றவனாய் இரண்டாவது தேங்காயை உடைத்தான்.

அவ்வளவு தான்!

அங்கிங்கெனாதபடி எங்கும் தொங்கிக் கொண்டிருந்த கூந்தற் கற்றைகள் மாயமாய் மறைந்து போயின.

இது என்ன வினோதம்!

பக்கிரியின் தலையில் முடியினைக் காணோம்.

பாக்கியத்தின் தலையிலும் கூந்தலைக் காணோம்.

இரண்டு பேரும் மொட்டைத் தலையாக நின்றார்கள்.

தன் தலையைத் தொட்டுப் பார்த்த பாக்கியம், “ஐயோ!.. புருஷன் இருக்கும்போதே என் தலை மொட்டையாவதா?.. ஏன் குண்டுக் கல்லாட்டம் நிற்கிறீர்கள்! எனக்கு முதலில் கூந்தலை வரச் செய்யுங்கள்!” என்று ‘லபோ லபோ’ என்று கதறினாள்.

உடனே பக்கிரி, “எங்கள் தலைமயிர் மட்டும் வரட்டும்!” என்று மூன்றாவது தேங்காயை உடைத்தான்.

முன்பு போல பக்கிரியின் தலையிலும் பாக்கியத்தின் தலையிலும் முடி வந்தது.

ஆனால், தங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்வதிலேயே மூன்று தேங்காயும் தீர்ந்துவிட்டது என்று அப்போதுதான் பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் புரிந்தது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!” என்று தலை தலையாக அடித்துக் கொண்டார்கள். என்ன அடித்துக் கொண்டு என்ன பயன்?

திருமேனிக்கும் அமிர்தத்துக்கும்; அவர்களின் நல்ல உள்ளம் போல் உயர் வாழ்வு கிட்டியது. பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் அவர்களின் வறிய உள்ளம் போல், வாழ்விலும் வறுமையே மிஞ்சியது.

Series Navigationநன்றி சொல்லும் நேரம்…பெருநதிப் பயணம்
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *