ஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்

author
2
0 minutes, 13 seconds Read
This entry is part 40 of 41 in the series 13 நவம்பர் 2011

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=50402191

உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்

திருமதி சுசீலா மிஷ்ரா

(படே குலாம் அலிகான் அவர்கள் மறைந்ததும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய கட்டுரை)

இசையாகவே வாழ்ந்து, இசையாலேயே இயங்கி இசையோடு தன்னுடைய இருப்பையும் உணர்ந்துகொண்ட மனிதர் நாதப்பிரம்மத்திலும் இணைந்துவிட்டார். கயல் -ஆக இருந்தாலும், சபையில் பாடும் பாடலாக இருந்தாலும், தும்ரியிலிருந்து எழும் காதல் கீதமாக இருந்தாலும், தெய்வீக உணர்வோடு பொங்கும் பஜனாக இருந்தாலும், உஸ்தாத் படே குலாம் அலி கான் தன்னுடைய இருதயத்தையும் ஆன்மாவையும் அந்தப் பாடலில் இணைத்து நம்மையும் அத்தோடு இணைக்கும் வல்லமை படைத்தவர். குரலைப் பேணுவதும், குரல் வளமையும் குரலை பண்படுத்துவதும் இசையின் உணர்வு வெள்ளத்தில் எவ்வளவு முக்கியம் என்பதனை இன்றைய இசைஞர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் அவர் புரியவைத்ததே, இந்துஸ்தானி இசைக்கு அவரது மிக மிக முக்கியமான பங்களிப்பு எனலாம்.

நம்மிடையே ஏராளமான இசைஞர்கள் துல்லியமாக பாடக்கூடியவர்களாக கேட்பவரின் அறிவை ஆச்சரியப்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வெகு சிலரே படே குலாம் அலி கான் போல கேட்பவரின் இதயத்தைத் தொடுபவர்களாக இருக்கிறார்கள். வேறெந்த பாரம்பரிய இசைஞரும் இசைஞர்களிடமிருந்தும் இசை ரசிகர்களிடமிருந்தும் இது போன்ற நாடு தழுவிய பாராட்டுக்களைப் பெற்றதில்லை. அவரது குரல் அவர் சொல்படிக் கேட்கும் அளவு வளைந்து செல்லக்கூடியதாகவும், எதிர்பார்க்க முடியாத ஸ்வர கூட்டுக்களையும், தான்-களின் நம்பமுடியாத வேகவும், அதே நேரத்தில் கேட்கும் மக்களை தன்னுடைய உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்டுவிப்பவராகவும் இருந்திருக்கிறார். இந்தக் குணங்கள் அவர் மேல் பலர் பொறாமை கொள்ளத் தூண்டியிருப்பதில் ஆச்சரியமென்ன ?

பாரம்பரிய சங்கீதம் தட்டையானதாகவும், வரண்டதாகவும் இருக்கிறது என்று பாரம்பரிய இசையைக் குறைகூறுபவர்களின் வாயை, தன்னுடைய வளமையான குரலாலும், தன்னுடைய வளம் பொருந்திய இசைப் பாணியாலும் அடைத்திருக்கிறார். அவரது இசைப் பிரபலமும், புகழும், அவரை பாரம்பரிய இசையின் சக்கரவர்த்தி என்றே அழைக்க வைத்திருக்கிறது.

படே குலாம் அலி கான் அவர்களது கச்சேரிகளில் பலவற்றை நான் சென்று அனுபவித்திருக்கிறேன். ஒரு ரசத்திலாவது தனது உயிரை செலுத்தி, தன் இசை மூலம் அதற்கு உயிரூட்டாமல் இருப்பதை நான் கண்டதில்லை. என்ன ஒரு ஆழ்ந்த விருப்பு! அவர், ‘காளி கட்டா கிர் ஆயீ சஜனி ‘ பாடும்போது கேட்பவர்கள், காதலியைப் பிரிந்த பிரிவாற்றாமையில், இடி ஓசையையும், மின்னல் ஒளியையும் பார்க்கமுடியும். மஹாதேவ் மஹேஷ்வர் பஜனையிலும், அவருக்கு மிகவும் பிடித்த பஜனையான ‘ஹரி ஓத் தத்சத் ‘ பஜனையிலும் அவர் தனது இருதயத்தையும் ஆன்மாவையும் இழைத்து பாடுவதைக் கேட்கமுடியும். ‘நைனா மோரே தரஸ் ரஹே ‘ என்று படே குலாம் அலி தன் தும்ரியில் காதல் கொண்டவளைக் கண் கொள்ள வேண்டும் என்று இரைஞ்சும் போது அந்த ஏக்கம் நம்மையும் பற்றிக்கொள்கிறது. கிருஷ்ணன் கோபிகையை கிண்டல் செய்யும்போது கோபிகை குறை கூறும் விளையாடுத்தனமான காதல் உணர்வையும் படே குலாம் அலி வெளிக்காட்டுகிறார்.

தும்ரியிலும் உணர்வு மயமான இசையிலும் படே குலாம் அலி உண்மையிலேயே பாரம்பரிய இசைஅரசர் என்றே கூறலாம். ‘பலர் பாரம்பரிய இசையில் உணர்வு வெளிப்படுத்தும் சக்தி இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நம் இசைவாணர்கள் இலக்கணச்சுத்தமாகப் பாட வேண்டும் என்று பாடுவதே காரணம். ஆனால் நம் இசைக்கு உணர்வே ஆன்மா. சொல்லப்போனால் நம் இசையில் மிகவும் நுண்ணிய உணர்வு வேறுபாடுகளைக் கூட காட்டும் சக்தி இருக்கிறது ‘ என்று படே குலாம் அலி சொல்வார். அவரது கருத்தை படே குலாம் அலி தன்னுடைய இசை மூலம் நிரூபித்தும் காட்டினார். இலக்கணச்சுத்தமாகப் பாடும் திறமையும், அதே நேரத்தில் உணர்வு பொங்கும் இசையும் முரண்பாடின்றி கலந்து வெளிப்பட்ட இசை அவருடையது. ‘பாடுபவரின் இதயத்திலிருந்து பாட்டைக் கேட்பவரின் இதயங்களுக்கு ‘ என்ற சொல் அவரது இசைக்கு உண்மையாகப் பொருந்தும்.

லாகூரில் 1901இல் கான் சாஹேப் அலி பக்ஸ் அவர்களுக்கு மகனாகப் பிறந்த படே குலாம் அலி கானின் பிறவி ஞானம் மிக மிக ஆரம்ப வயதிலேயே தெரியவந்துவிட்டது. தன்னுடைய குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசிய படே குலாம் அலி கான், ‘நான் எந்த வயதில் 12 ஸ்வரங்களைத் தேர்ந்தேன் என்று எனக்குத் தெரியாது. மூன்று அல்லது நான்கு வயதில் நான் பேச ஆரம்பித்தேன். அப்போதே எனக்கு 12 ஸ்வரங்களைப் பற்றித் தெரிந்திருந்தது. நான் தாய்மொழியைக் கற்கும் குழந்தை போல சர்கம்-களைக் கற்க ஆரம்பித்தேன் ‘. அலி பக்ஸ் அவர்கள் தன் குழந்தையின் பிறவி ஞானத்தை உணர்ந்து ஏழு வயதில், பாட்டியாலா நகரத்து கான் சாஹேப் காலே கான் அவர்களிடம் அடுத்த பத்தாண்டுகள் இசை கற்க அனுப்பி வைத்தார். கான் சாஹேப் அவர்களின் மறைவுக்குப் பிறகு தன்னுடைய தகப்பனாரிடமே இசை கற்க ஆரம்பித்தார் படே குலாம் அலி கான்.

காலே கான் மறைவின் போது, ஒரு இசைவாணர் காலே கானின் மறைவினால் இசையும் செத்துவிட்டது என்று குறிப்பிட்டது கேட்டு, இளம் குலாம் அலிக்கு கோபம் வந்துவிட்டது. அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, இசை பயின்றார். ‘அடுத்த ஐந்து வருடங்களுக்கு இசை மட்டுமே என் ஒரே வாழ்வாக ஆனது. இரவும் பகலும், தூக்கமின்றியும் நான் இசையை பயிற்சி செய்தேன். என்னுடைய சந்தோஷமும் துக்கமும் ஒரே குறியிலிருந்தே தோன்றின. அது இசையே ‘ என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு மாபெரும் இசை வாணருக்கான அனைத்து குணாம்சங்களும் அவரிடம் இருந்தன. இசை கற்பதின் நீண்ட பாரம்பரியம். புத்திக்கூர்மை, கடுமையான பயிற்சி, மிக உயர்ந்த கலை உணர்வு ஆகியவை. அவர் ‘ஸ்வரத்தின் தூய்மையே எனக்கு மிகவும் உயரிய விஷயம் ‘ என்று அவர் கூறுவார். ஆஷிக் அலி அவர்களின் (தான்ரஸ் கான் அவர்களின் கரானாவைச் சார்ந்தவர்) தாலிம்- ஐ பெற்றுக்கொண்ட பெருமையும் குலாம் அலிக்கு உண்டு. பாபா ஸிந்தி கான் அவர்களிடமிருந்தும் அவர் தாலிம் பெற்றார். உஸ்தாத் வாஹித் கான் அவர்களின் இசைப் பாணியின் நிழலை முக்கியமாக காயல் ஆலாபனையில் பலர் குலாம் அலியில் பார்க்கிறார்கள்.

படே குலாம் அலி கான் ஒரு நீண்ட புகழ்பெற்ற இசைப் பாரம்பரியத்தில் வந்தாலும், வரண்ட பாட்டியாலா கரானாவில் இருந்த சில கொச்சைகளையும் கூர்முனைகளையும் சீர்படுத்தி அதற்கு ஒளிவீசும் ரசவாதம் பூசி பிரகாசிக்க வைத்தார். படே குலாம் அலி கான் நூறு சிஷ்யர்களை விட்டுச் சென்றிருந்தாலும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் விட்டுச் சென்றிருக்கிறார். தெற்கில் அவர் புகழடைந்தது போல வேறெந்த வடக்கத்திய இசைவாணரும் அங்கு புகழடைந்ததில்லை.

பாரம்பரிய தூய்மை பேசுபவர்கள் எவ்வளவு நேரம் ஒரு ராகம் பாடப்படுகிறது என்பதை வைத்து அளப்பதில் படே குலாம் அலி அவர்களுக்கு மதிப்பில்லை. லட்சக்கணக்கில் கூடியிருப்பவர்களின் இதயத்தை தொடவேண்டும் என்பதே அவரது முக்கியக் குறிக்கோள். ‘ஒரு ராகத்தை மணிக்கணக்கில் நீட்டிக்கொண்டிருப்பதில் என்ன உபயோகம் ? திருப்பித்திருப்பி பாடவேண்டி வந்துவிடும் ‘ என்றார்.

உண்மையான கலைஞராக இருந்த படே குலாம் அலி அரசியல் மற்றும் மதமாச்சர்யங்களில் அக்கறை காட்டவில்லை. அவரைப் பொறுத்தமட்டில் மனித இனத்தில் இரண்டே பிரிவுதான் உண்டு. இசை விரும்பிகள், இசையைப் பற்றி அக்கறைப் படாதவர்கள். ‘எனக்குத் தெரிந்தது ஒன்றுதான். அது இசை. மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வமில்லை. நான் கடவுளுக்கும் இசைக்கும் தாழ்மையான பக்தன் ‘ என்றார்.

பம்பாய், டில்லி கல்கத்தா ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அவரது வீடுகளிலெல்லாம் எப்போதும் அவரது இசையின் ரசிகர்களின் கூட்டம் ஏராளம் இருக்கும். தான் பேசிக்கொண்டிருப்பதை விளக்குவதற்காக, ஒவ்வொரு சில நிமிஷங்களுக்கெல்லாம் அவர் திடாரென்று பாட ஆரம்பித்துவிடுவார். கிராமப் பாடல்கள், நாட்டுப்புற இசையே நமது பாரம்பரிய இசையாக வளர்ந்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அவர், ஒரு கிராமத்தான் போல பாடிவிட்டு, அதன் ஹிந்துஸ்தானி பாணிப் பாடலையும் பாடிக்காட்டுவார். அதனால் அவரைச் சுற்றி எப்போதும் அவரது இசை ரசிகர்கள் இருந்ததில் ஆச்சரியமில்லை.

பம்பாயில் அவரது கடைசி காலத்தில் (ஹைதராபாத்துக்கு அவர் சென்று அங்கு இறுதி இதய அடைப்புக்கு முன்னர்) தெற்கிலிருந்து அவரது ரசிகர் வந்திருந்தார். அதுவும் பம்பாயில் அவரைப் பார்த்துவிட்டு அடுத்த விமானம் பிடித்து கல்கத்தாவுக்குச் செல்லவேண்டும். அவ்வளவு அவசரத்தில் வந்திருந்தாலும், படே குலாம் அலிகான் இவரைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டு, அவருக்கு டா மற்றும் இனிப்புகள் கொடுக்காமல், இன்னும் உயரிய விருந்தைப் படைக்க விரும்பினார். ‘என்னுடைய ஸ்வரமண்டலை எடுத்துவா ‘ என்று தன் மகன் முனாவரிடம் கூறினார். ‘என் விருந்தினருக்காக கொஞ்ச நேரம் பாடுகிறேன் ‘ என்றார். ‘இந்த மாபெரும் இசை வாணரின் அடக்கத்தையும் அவரது இசையில் மூழ்கிய குணத்தையும் யாரால் தாண்ட முடியும் ? ‘ என்று ஆச்சரியப்பட்டார் அந்த விருந்தினர்.

பொதுமக்களின் விருப்பமான பாடகராக மட்டுமல்லாமல், படே குலாம் அலி கான் இசைவாணர்களுக்கெல்லாம் இசைவாணராகவும் இருந்தார். இந்தியாவின் பல பிரபலமான இசைவாணர்கள் இரங்கல் செய்தி அனுப்பினார்கள். பேகம் அக்தர் தன்னுடைய செய்தியில், ‘ எளிமையும் உயர்வும் ஒரே இடத்தில் காண்பது அபூர்வம். அவரது இசையை முதன்முதலில் கேட்டபோது முதன் முதலில் உண்மையான இசையை கேட்பதுபோல உணர்ந்தேன். என்னுடைய பெருமை மிகு விருந்தினராக கல்கத்தாவில் பல மாதங்கள் இருந்தார். தினம் முழுவதும் பாடிக்கொண்டிருப்பார். உண்மையைச் சொல்லப்போனால், அவரது வாழ்க்கையின் ஒரே ஆர்வம் இசையே. துன்பக் காலங்களில் இசையிடமிருந்தே தன் ஆறுதலைப் பெற்றார். சந்தோஷத்தில் இசையிடமே கொண்டாடினார். அபூர்வமான இசைக்கலைஞர் ‘ என்றார்.

ஏராளமான கயல் மற்றும் தும்ரிகளை தன்னுடைய புனைப்பெயரான ஸப்ரங் என்ற பெயரில் எழுதிச் சென்றிருக்கிறார். ஸப்ரங் அவர்களுக்கு வாழ்வில் இருந்த ஒரே காதல் இசையே. இன்று அந்த காதல் நாதப்பிரம்மத்தில் இணைந்திருக்கிறது. இசை மூலம் எல்லையற்ற பேரின்பத்தை அடைந்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த பஜன் ‘ஹரி ஓம் தத்சத் ‘. அன்றும் இன்றும் எப்போதும்.

Series Navigationஇதுதான் உலகமெனதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    களிமிகு கணபதி says:

    இப்படிப்பட்ட இஸ்லாமியர்களை மதிக்கத் தவறுவதுதான், சமூகத்தின் முன்னோடிகளாக முன்னிறுத்தாததுதான் இந்துக்கள் செய்யும் மாபெரும் தவறு.

    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *