காலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்

This entry is part 29 of 37 in the series 27 நவம்பர் 2011

எனக்கு தமிழ் நாவல்களே அதிக அறிமுகம். அதற்காக சோமர்செட் மாமையும் அயன் ராண்டையும் படிப்பவனல்ல நான். இன்·பாக்ட் அயன்ராண்டை என்னால் நூறு பக்கங்கள் கூட தள்ள முடியவில்லை. நமக்கு ஏற்றதெல்லாம் லை ·பிக்ஷன். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், அலிஸ்டர் மெக்லீன், சிட்னி ஷெல்டன், ஜெ·ப்ரீ ஆர்ச்சர் இப்படி.
ஏதோ ஒரு கொல்கத்தா புத்தகச்சந்தையில் எனக்குப் பிடித்த ஜெ·ப்ரீ ஆர்ச்சரின் ‘ஒன்லி டைம் வில் டெல் ‘ முதல் பாகத்தை வாங்கி வந்தாள் என் மகள். கூடவே அவள் படிப்பதற்கு ஒரு லைட் ரீடிங் நாவல்.. ‘ எ தவுஸண்ட் ஸ்பெளெண்டிட் சன்ஸ் ‘
இரண்டு நாட்களில் ஜெ·ப்ரியை முடித்து விட்டேன் ஏதோ பரிட்சைக்கு படிப்பது போல.. உண்மையாகவே பரிட்சைக்குக்கூட அப்படியெல்லாம் படித்தவனில்லை நான். வாசிக்கிற பைத்தியம் மீண்டும் ( பணியிலிருந்தபோது அதுவும் கல்யாணம் குழந்தை குட்டி என்று ஆன பிறகு அது வெகுவாக குறைந்து போயிருந்தது ) பிடித்து விட்டதால் வேறு ஏதாவது கிடைக்குமா என்று மனம் ஆலாய்ப் பறந்தது.
படித்துப் பார்ப்போம்.. பிடிக்கவில்லையென்றால் ஒதுக்கி விடுவோம் என்ற எண்ணத்தில் தான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன்.
எ தவுஸண்ட் ஸ்பெளெண்டிட் சன்ஸ் – காலெட் ஹொசைனி.
காபூல்காரன்.. அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு காபூலைப் பற்றி எழுதுகிறான், முத்துலிங்கம் இலங்கையைப் பற்றி எழுதுவது போல.. எண்ணம் இப்படி ஓடியது.
ஹராமி என்கிற வார்த்தைப் பிரயோகத்தை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். என் உறவினர்களே என் சின்ன வயதில் அதைப் பயன்படுத்தியதை கேட்டிருக்கிறேன். அது ஏதோ கெட்ட வார்த்தை என்ற அளவில்தான் என் அறிவு இருந்தது. இதை தாயே தன் மகளை விளிக்க பயன்படுத்துவது எனக்குப் புதிதாக இருந்தது. கதையே அந்த வார்த்தையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. பாஸ்ட்டர்ட் என்கிற சொல்லின் காபூல் ஈக்வெலண்ட். ஓ என்றது மனம்.
ஹொசைனி இரண்டு பெண்களைப் பற்றி கதையைப் பின்னுகிறார். அதிலும் ஒருவளுக்கு இன்னொருவளை விட பாதி வயது.. கிட்டத்தட்ட ஒரு தாயின் வயது. இருவருக்கும் ஒரே கணவன், அதிலும் முதல் பெண்ணை விட முப்பது வயது பெரியவன். இரண்டாமவளின் வயது வித்தியாசத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய சட்டங்கள், பிரபுத்துவ வாழ்வு, மூன்று நான்கு மனைவிகள், அவர்களின் பிள்ளைகள், வேலைக்காரியுடன் உறவு, அதில் பிறந்த பெண்ணின் வாழ்வு, அதன் அவலம் என்று சக்கையாக அலசுகிறார் ஹொசைனி.
ரஷீத், மரியம், லைலா, தாரீக் என இந்த நான்கு பேரைச் சுற்றியே கதை. ஆனால் நாம் அறியாத காபூலின் அவலங்கள் அப்படியே கண் முன் கொண்டு வருகிறார். கதை முடிவில் ரஷீத் மரியத்தால் கொல்லட்ப்பட்டு பழியை ஏற்றுக் கொண்டு லைலாவை தாரிக்குடன் புது வாழ்வுக்கு பெஷாவருக்கு அனுப்பும்வரை புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை.
நாவல் முடிவில் லைலா மீண்டும் ஆ·ப்கானிஸ்தான் வருகிறாள். தாரிக்கையும் குழந்தைகளையும் ஹோட்டலில் விட்டுவிட்டு தனியாக மரியம் வாழ்ந்த ஊரை நோக்கிப் போகிறாள். எல்லாம் போய் விட்டது. யாரும் இல்லை. முல்லா ·பைசுல்லாவைத் தேடுகிறாள். அவர்தானே மரியத்திற்க்கு குரானின் பாடல்களை பயிற்றுவித்தவர். ஆனால் அவரில்லை. அவரது மகன் ஹம்ஸா இருக்கிறார். அவருக்கும் வயதாகிவிட்டது.
கதை கேட்டபின் ஹம்ஸா லைலாவை மரியம் வாழ்ந்த குடிசைக்கு அழைத்து போகிறான். சிதிலமடைந்து இருக்கிறது அது. ஆனால் லைலாவுக்கு அதெல்லாம் தெரியவில்லை. தரையைத் தடவிப் பார்க்கிறாள். சுவற்றில் அவளுக்கு மரியத்தின் நெருக்கம் கிடைக்கிறது. போகும்போது ஹம்ஸா அவள் கையில் ஒரு கடித உறையைத் தருகிறார்.
‘ இது மரியத்திற்கு அவளுடைய அப்பா ஜலில் எழுதியது. என் தந்தை சாகும்போது என்னிடம் தந்து அவளிடம் சேர்ப்பிக்கச் சொன்னார். இதை உங்களிடம் தருவதில் எனக்கு குற்ற உணர்ச்சி ஏதுமில்லை. அதோடு இதுவும் கூட ‘
முட்டை வடிவிலான சாக்லேட் பெட்டி போல் இருக்கிறது அது. அதற்கு ஒரு சாவியும் கூட.
ஹோட்டல் அறையில் லைலா பெட்டியைத் திறக்கிறாள். அமெரிக்கன் டாலர்களாக நிறைய பணம். மரியத்தின் தந்தை வழிச் சொத்து. மரியம் என்ன செய்திருப்பாள் இதை வைத்து?
லைலா மகள் படித்த அனாதை ஆசிரமம் இன்று எல்லா வசதிகளோடும் இருக்கிறது. லைலா காபூலில் வசிக்கிறாள். தினமும் ஆசிரம நிர்வாகத்தில் ஈடுபடுகிறாள். அவள் குழந்தைகள் ஆசிரமக் குழந்தைகளோடு விளையாடுவதைக் கண்டு அவளது இதழில் புன்னகை பூக்கிறது. மரியம் சந்தோஷப்படுவாள் என்று நினைத்துக் கொள்கிறாள்.
இரண்டாவது நாவலைப் படித்த எனக்கு முதல் நாவலைப் படிக்க ஆசை.
‘ எப்போது கொல்கத்தா போகப்போகிறாய்.. எனக்கு கைட் ரன்னர் வேண்டும்.’
‘ இப்பொதில்லை ‘ சப்பென்றாகிவிட்டது எனக்கு. விடாப்பிடியாக மாம்பலம் போய் பிளாட்பாரக்கடையில் தேடி வாங்கி வந்தவுடன் தான் நிம்மதியாயிற்று.
கைட் ரன்னர் இரண்டு பையன்களைப் பற்றிய கதை.. இன்னமும் முடிக்கவில்லை. முடித்தவுடன் எழுதுகிறேன்.

Series Navigationநானும் வல்லிக்கண்ணனும்மனக் குப்பை
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    பிரதேசம், மொழி, இனம் எனும் எல்லைக்கோடுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் “பெண்”ணின் துயரங்கள் பொதுமையானவையே என்பதை வலியோடு உணரச் செய்கின்றது, மேற்படி ரசனைக் குறிப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *