பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை

This entry is part 23 of 39 in the series 4 டிசம்பர் 2011

குருவிக்கும் யானைக்கும் சண்டை

 

டர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. ஒருநாள் மதம் பிடித்த காட்டானை ஒன்று வெய்யில் தாள முடியாமல் நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் ஒதுங்கியது. மதம் பிடித்துக் கண்மூடிப்போன அந்த யானை, குருவிக் குடும்பம் இருக்கும் மரக்கிளையை துதிக்கை நுனியால் இழுத்து ஒடித்தது. கிளை ஒடிந்து குருவி வைத்திருந்த முட்டைகள் எல்லாம் கீழே விழுந்து உடைந்துபோயின. ஆண் குருவியும் பெண் குருவியும் மட்டும் எப்படியோ சாகாமல் தப்பித்துக் கொண்டன. அவற்றிற்கு ஆயுள் கொஞ்சம் பாக்கி இருக்க வேண்டும்.

 

தன் குஞ்சுகள் செத்ததைக் கண்டு பெண் குருவி துக்கித்துக் கதறியது. இந்தக் கதறலைக் கேட்டு அதன் நெருங்கிய சிநேகிதியான மரங்கொத்தி வந்து, அவள் துக்கத்தைக் கண்டு தானும் துக்கித்தபடி, ”தோழீ! அழுது என்ன பிரயோஜனம்?

 

காணாமற் போனதையும், செத்துப் போனதையும், காலங்கடந்து போனதையும் நினைத்து அறிவாளிகள் துயரப்படுவதில்லை. அறிவாளி களுக்கும் மூடர்களுக்கும் இதுதான் வித்தியாசம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். உலகில் எந்த ஜீவனுக்கும் துயரப்பட வேண்டியதில்லை. அவற்றை எண்ணித் துயரப்படுகிற மூடன்தான் துக்கத்தோடு துக்கம் சேர்க்கிறான். அதனால் அவன் கஷ்டங்கள்தான் இரு மடங்காகப் பெருகுகின்றன.

 

சுற்றத்தார் விடுகிற கண்ணீர் பித்ருக்களுக்குத்தான் இன்னல் விளைக்கிறது. ஆகையால் அழக்கூடாது. சக்திக்குத் தக்கபடி ஈமச் சடங்குகள் செய்ய வேண்டும்

 

என்று சொல்லியது.

 

”நீ சொல்வது சரிதான். இருந்தாலும் அந்தக் கெட்ட யானை மதம் பிடித்துப்போய் என் குஞ்சுகளை ஏன் நாசம் செய்ய வேண்டும்? நீ என் சிநேகிதி என்றால் அந்தப் பெரிய யானையைக் கொல்வதற்கு ஒரு உபாயம் கண்டுபிடி. அதன்படி செய்து குஞ்சுகள் இறந்த துக்கத்தை நான் சகித்துக் கொள்கிறேன்.

 

ஆபத்துக் காலத்தில் ஒருவன் உதவுகிறான். கஷ்ட காலத்தை இன்னொருவன் எள்ளி நகையாடுகிறான். இருவருக்கும் தக்க மரியாதை  செய்தால் மறுபடியும் மனிதன் பிறக்கிறான்.

 

என்றது பெண்குருவி.

 

”நீ சொல்வது உண்மையே. ஒரு பழமொழி கூறுகிறபடி,

 

உன்னிடம் பணமுள்ள வரையில் உலகில் எல்லோரும் நண்பர்களே; ஆனால்  அவர்கள் எல்லாம் உண்மையான நண்பர்களில்லை. வேறு ஜாதியில் பிறந்தவனானாலும் யார் ஆபத்தில் உதவுகிறோனோ அவனே உண்மையான நண்பன். ஆபத்தில் உதவுகிறவன் நண்பன்; அன்னமளிப்பவன் தந்தை; நம்பிக்கையானவன் தோழன்; திருப்தி செய்பவள் மனைவி.

 

என் புத்தி சாதுரியத்தைப் பார். வீணாரவன் என்ற சிறு ஈ என் நண்பன். அதை அழைத்து வருகிறேன். அது இந்த துராத்மாவான துஷ்ட யானையைக் கொல்லும்” என்றது மரங்கொத்தி.

 

பிறகு பெண் குருவியை அழைத்துக்கொண்டு போய் மரங்கொத்தி சிறிய ஈயைப் பார்த்து, அதனிடம் ”தோழீ! இது என் சிநேகிதி. ஒரு கெட்ட யானை இதன் முட்டைகளை நாசமாக்கிய துக்கத்தோடிருக்கிறாள். அந்த யானையைக் கொல்ல நான் ஒரு உபாயம் செய்திருக்கிறேன். அதற்கு நீ உதவி செய்ய வேண்டும்” என்றது.

 

”சிநேகிதியே! அதற்கு ஆட்சேபனை என்ன? மேகதூதன் என்ற தவளை என் பிரிய நண்பன். அதையும் அழைத்து வைத்து விரும்பியபடி செய்வோம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

அன்பும், அறவாழ்வும், சாஸ்திர ஞானமும், குணமும் அறிவும் படைத்த அறிஞர்கள் போடும் திட்டங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.

 

என்றது ஈ.

 

பிறகு மூன்றும் தவளையிடம் சென்று விஷயத்தைத் தெரிவித்தன. அதைக்கேட்ட தவளை, ”பெரியோர்களின் கோபத்தின் முன் அந்த யானை எம்மாத்திரம்? ஈயே, நீ போய் அந்த யானையின் காதில் ரீங்காரம் செய்.ங உன் ரீங்காரத்தைக் கேட்கும் சுகத்தில் அது கண்களை மூடிக்கொள்ளும். அப்போது மரங்கொத்தி போய் அதன் கண்களைத் தன் அலகினால் கொத்தட்டும். ஒரு பள்ளத்தின் அருகில் நான் உட்கார்ந்து கத்துகிறேன். அந்தச் சப்தம் கேட்டு, அங்கே குளம் குட்டை இருக்கிறது என்று நினைத்து தாகவிடாய் தீர்க்க யானை வந்து அந்தப் பள்ளத்தில் விழுந்து சாகும்” என்றது.

 

திட்டமிட்டபடியே செய்தன. சிறிய ஈயின் பாட்டின் சுகத்தில் மதயானை கண்களை மூடியது. மரங்கொத்தி அதன் கண்களைப் பிடுங்கியது. நடுப்பகலில் தாகம் தணிக்க வேண்டி அந்த யானை இங்கும் அங்கும் சுற்றித் திரிந்து, தவளையின் சத்தத்தைத் தொடர்ந்து வந்து பெரிய பள்ளத்தில் விழுந்து செத்தது.

 

அதனால்தான் ‘மரங்கொத்தியும், குருவியும்…’ என்றெல்லாம் சொன்னேன்” என்றது பெண் குருவி.

 

அதற்கு ஆண் குருவி, ”நீ சொல்கிற மாதிரியே செய்வோம். சிநேகிதர்களைக் கூட்டி வந்து சமுத்திரத்தை வற்றவைக்கிறேன்” என்றது. இந்தத் தீர்மானத்தின்படியே எல்லா குருவிகளையும் அழைத்துத் தன் குஞ்சுகள் பறிபோன துக்கத்தைத் தெரிவித்தது. அதன் துயரத்தை நீக்குவதற்காக அவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து தங்கள் இறக்கைகளால் சமுத்திரத்தை அடிக்க ஆரம்பித்தன.

 

அப்போது அவற்றில் ஒரு குருவி, ‘இப்படிச் செய்தால் நம் விருப்பம் நிறைவேறாது. மண்ணும் புழுதியும் கொட்டி சமுத்திரத்தை நிரப்பிவிடலாம், வாருங்கள்” என்றது. இதைக் கேட்டவுடனே எல்லா குருவிகளும் தங்கள் அலகுகள் கொண்ட மட்டும் மண் எடுத்து வந்து போட்டு சமுத்திரத்தை நிரப்ப ஆரம்பித்தன.

 

அப்போது இன்னொரு குருவி, ”என்ன செய்தாலும் சரி, இந்தப் பெரிய சமுத்திரத்துடன் நாம் சண்டை போட முடியாது. நான் ஒரு தகுந்த யோசனை சொல்கிறேன். ஆலமரத்தடியில் ஒரு கிழட்டு வாத்து இருக்கிறது. அது சமயோசிதமான யுக்தி சொல்லும். அதனிடம் போய்க் கேட்போம், வாருங்கள்.

 

யாருக்கு அனுபவமதிகமோ அவனே கிழவன்; கிழவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். காட்டில் பிடிபட்ட வாத்துக்கூட்டம் கிழவாத்தின் பேச்சைக் கேட்டதினால் விடுதலை பெற்றன.

 

என்று ஒரு பழமொழி இருக்கிறது” என்றது. ”அது எப்படி?” என்று மற்றவை கேட்கவே, அந்தப் பறவை சொல்ல ஆரம்பித்தது.

Series Navigationஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமாகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *