பஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து

This entry is part 17 of 48 in the series 11 டிசம்பர் 2011

புத்திகூர்மையுள்ள கிழவாத்து

 

ரு காட்டுக்குப் பக்கத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் பல பெரிய கிளைகள் உண்டு. அங்கு ஒரு வாத்துக் கூட்டம் இருந்து வந்தது. அந்த மரத்தடியில் கோசாம்பி என்றொரு கொடி படர்ந்தது. அதைக் கண்ட கிழவாத்து, ”இந்தக் கொடி ஆலமரத்தைப் பற்றிக்கொண்டு ஏறினால் நமக்குக் கெடுதிதான் உண்டாகும். கொடியைப் பிடித்துக் கொண்டு ஒருவேளை யாராவது மரத்தில் ஏறி நம்மைக் கொல்லலாம். சுலபமாகப் பிடுங்கி யெறிகிற மாதிரி சிறியதாக இருக்கும்போதே, நாம் இந்தக் கொடியைப் பிடுங்கி யெறிந்து விட வேண்டும் என்று சொல்லிற்று.

 

ஆனால் கிழவாத்தின் பேச்சை மற்றவை லட்சியம் செய்யவில்லை. கொடியைப் பிடுங்கி எறியவில்லை. எனவே நாளடைவில் அந்தக் கொடி வளர்ந்து மரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறிப் படர்ந்தது.

 

ஒருநாள் வாத்துக்கள் இரைதேட வெளியே போயிருந்த சமயம். அப்போது ஒரு வேடன் கொடியைப் பிடித்து மரத்தின்மேல் ஏறி, வாத்துக்கள் தங்கும் இடத்தில் கண்ணி வைத்து விட்டுத் தன் இருப்பிடத்துக்குப் போய் விட்டான். சாப்பாடு விளையாட்டு எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வாத்துக்கள் இரவில் திரும்பி வந்தன. மரக்கிளைகளில் தங்கப் போய் கண்ணியில் சிக்கிக் கொண்டன. அப்போது கிழவாத்து, ”நமக்கு ஆபத்து வந்து விட்டது, எல்லோரும் கண்ணியில் அகப்பட்டுக் கொண்டு கஷ்டப் படுகிறோம். முன்பு நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. கஷ்டத்தை நீங்களே வரவழைத்துக்கொண்டீர்கள். இனி எல்லோரும் செத்த மாதிரிதான்” என்றது.

 

இதைக் கேட்டதும் மற்ற வாத்துக்கள், ”பெரியவரே! சிக்கிக் கொண்டோம் இனி என்ன செய்யலாம், சொல்லுங்கள்” என்று கேட்டன.

 

”என் பேச்சைக் கேட்பதானால் சொல்கிறேன். வேடன் வரும்போது நீங்கள் எல்லோரும் செத்துப்போன மாதிரி நடிக்க வேண்டும். வேடனும் ‘இவை செத்துவிட்டன’ என்று எண்ணிக் கொள்வான். எல்லோரையும் பிடித்துத் தரைமீது போடுவான். பிறகு அவன் மரத்தை விட்டு இறங்கி வருவதற்குள் கீழே கிடக்கிற எல்லோரும் ஒரே சமயத்தில் குபீலென்று மேலே பறந்து போய் விடவேண்டும்” என்றது கிழட்டு வாத்து.

 

பொழுது விடிந்தவுடன் வேடன் வந்தான். அவன் வருவதைப் பார்த்ததும் எல்லா வாத்துக்களும் செத்து விட்டதுபோலக் கிடந்தன. அவனும் அப்படியே நம்பி விட்டான். அவற்றைக் கண்ணியிருந்து எடுத்து ஒவ்வொன்றாகத் தரைமேல் எறிந்தான். பிறகு அவன் கீழே இறங்கிவர முயற்சிப்பதைப் பார்த்ததும், அந்த வாத்துக்கள் எல்லாம் கிழவாத்து சொன்ன புத்திமதியின்படி ஒரே சமயத்தில் மேலே பறந்து சென்று விட்டன.

 

அதனால்தான் ‘யாருக்கு அனுபவம் அதிகமோ… என்றெல்லாம் சொல்கிறேன்’ என்றது அந்தப் பறவை.

 

கதை சொல்லி முடிந்ததும் பறவைகள் எல்லாம் கிழவாத்திடம் போய் முட்டைகள் திருட்டுப்போன துக்கச் செய்தியைத் தெரிவித்தன. அதைக்கேட்ட கிழவாத்து, ”எல்லாப் பறவைகளுக்கும் கருடனே ராஜா. எனவே தகுந்த உபாயம் இதுதான்: நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏககாலத்தில் அழுது ஆரவாரம் செய்து கருடனை பயமுறுத்துங்கள். அந்த ரோதனையைக் கேட்டு நம் துக்கத்தைக் கருடன் போக்கிவிடுவான்” என்று சொல்லிற்-று.

 

இதற்கிணங்க, அவை எல்லாம் கருடன் இருக்கும் இடத்துக்குப் போயின. அப்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சண்டை நடக்க இருந்த சமயம். கருடனை மகாவிஷ்ணு அழைத்திருந்தார். அந்த நேரத்தில்தான் பறவைகள் எல்லாம் தங்கள் எஜமானரான பக்ஷ¢ராஜனிடம் வந்து சேர்ந்தன. முட்டைகளை சமுத்திரம் திருடி பிரிவாற்றாமைத் துயரத்தை உண்டாக்கியதை அவை தெரிவித்துக் கொண்டன. மேலும், ”பிரபுவே, நீங்கள் எங்கள் ராஜாவாக விளங்கி வருகிறீர்கள். நாங்களோ, எங்கள் அலகு கொள்ளும் அளவுக்கு இரை தேடி சாப்பிட்டுப் பிழைத்து வருகிறோம். அநத அகம்பாவம் பிடித்த சமுத்திரம் எங்கள் குஞ்சுகளை எடுத்துக்கொண்டு போய்விட்டது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஏழைகள் எப்போதும் மறைவாகவே தங்கள் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும். துர்ப்பலமான இரை தின்னும் செம்மறியாட்டைச் சிங்கம் கொன்று விட்டது,

 

என்றன. ”அது எப்படி?” என்று கருடன் கேட்கவே, கிழட்டு வாத்து சொல்லத் தொடங்கியது:

 

சிங்கமும் செம்மறியாடும்

 

ரு காட்டில் செம்மறியாடு ஒன்று தன் தந்தையை விட்டுப் பிரிந்து தனியே இருந்து வந்தது. அதன் ரோமம் அடர்த்தியாயிருந்தது; கொம்புகள் வலுவுள்ளதாயிருந்தன; தேகம் திடமாயிருந்தது. காட்டில் அது சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

 

ஒரு நாள் சிங்கம் ஒன்று எல்லா மிருகங்களும் புடைசூழச் சுற்றி வருகிற நேரத்தில் செம்மறியாட்டைப் பார்த்துவிட்டது. இப்படிப்பட்ட மிருகத்தை அதுவரை சிங்கம் பார்த்ததே கிடையாது. அடர்த்தியான ரோமத்தால், மூடப்பட்டு உடம்பே கண்ணுக்குத் தெரியாதபடி உப்பிப் போயிருந்த அந்தச் செம்மறியாட்டைக் கண்டதும் சிங்கத்துக்குப் பயமும், மனக்கலக்கமும் உண்டாயிற்று. ”கட்டாயம் இது என்னஆவிட பலசாலியாக இருக்கும்போல் தோன்றுகிறது. அதனால்தான் பயமில்லாமல் இப்படிக் காட்டில் திரிகிறது” என்று எண்ணிக் கொண்டது. மெள்ள மெள்ளப் பின் வாங்கி திரும்பிப் போய்விட்டது.

 

பிறகு மற்றொரு நாள் செம்மறியாடு காட்டுத் தரையில் புல் மேய்வதைச் சிங்கம் பார்த்துவிட்டது. உடனே, ”இது என்ன, புல் மேய்ந்து கொண்டிருக்கிறதே! அப்படியானால் கட்டாயம் இரைக்குத் தகுந்த பலம்தான் அதற்கு இருக்கும்” என்று எண்ணி, சிங்கம் அதன்மீது திடீரென்று பாய்ந்து அதைக் கொன்றுவிட்டது.

 

அதனால்தான் ‘ஏழைகள் மறைவாகவே…’ என்ற செய்யுளைச் சொன்னேன் என்றது கிழட்டு வாத்து.

 

இப்படிப் பறவைகளும் கருடனும் பேசிக்கொண்டிருக்கும்போது, மகாவிஷ்ணு அனுப்பிய தூதன் வந்தான். கருடனிடம், ”கருடனே! அமராவதிக்குப் போவதற்காக நீ சீக்கிரம் வர வேண்டும் என்று மகா விஷ்ணு கட்டளையிடுகிறார்” என்று தூதன் சொன்னான்.

 

கருடன் கர்வத்தோடு, ”தூதனே! நானோ ஒரு அற்ப வேலைக்காரன். என்னால் அவருக்கு ஆகவேண்டியதென்ன இருக்கிறது?” என்று பதிலளித்தான்.

”கருடனே! கடவுள் உன்னிடம் எப்போதாவது கோபமாகப் பேசியதுண்டா? ஏன் இப்படி அவரிடம் கர்வம் காட்டுகிறாய்?” என்றான் தூதன்.

 

”பகவானுக்கு இருப்பிடமாயிருக்கும் சமுத்திரம் என் வேலைக்காரனாகிய நீர்க்குருவியின் முட்டைகளைத் திருடிச் சென்றுவிட்டது. அதைத் தண்டிக்காமற் போனால் நான் பகவானின் வேலைக்காரனில்லை. நீ போய் இதை அவரிடம் தெரிவி” என்றான் கருடன்.

 

தூதன் போய்ச் சொன்னதிலிருந்து கருடன் விளையாட்டாகக் கோபங் கொண்டிருக்கிறான் என்று மகாவிஷ்ணு தெரிந்து கொண்டார். சிந்திதுதுப் பார்த்தார்; ”ஆஹா, கருடனுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டிருக்கிறது. நாமே நேரில் சென்று, அவனைச் சமாதானப்படுத்தி சகல மரியாதைகளுடன் அழைத்து வருவோம். ஏனென்றால்,

 

நல்ல குலத்தில் பிறந்து திறமையும் விசுவாசமும் உள்ள வேலைக் காரனை அவமானப் படுத்தக்கூடாது. உன் சொந்த நன்மையை நீ விரும்புகிறாயானால் அவனை எப்பொழுதும் சொந்தப் பிள்ளை போல் பார்த்துக்கொள்!

 

என்றொரு பழமொழி கூறுகிறது. மேலும்,

 

எஜமானனுக்குச் சந்தோஷ மேற்பட்டால் வேலையாளிடம் தனது திருப்தியைத்தான் பதிலுக்குக் காட்டுகிறான். ஆனால் வேலையாள் சந்தோஷமடைந்தால், தனது உயிரையே பிரதியாகத் தருகிறான்.

 

இவ்வாறு மகாவிஷ்ணு தீர்மானித்துவிட்டு அவசரமாகக் கருடனைப் பார்க்கப் போனார். எஜமானரே தன் வீட்டுக்கு வந்திருப்பதைக் கண்டதும் கருடன் நமஸ்கரித்தான், மரியாதையோடு தலை வணங்கினான். நிலத்தை நோக்கியபடியே, ”பிரபுவே, நீங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் சமுத்திரத்துக்கு வந்துள்ள திமிரைப் பாருங்கள். என் வேலைக்காரனின் முட்டைகளைத்  திருடி என்னை அவமானப்படுத்தியிருக்கிறது. தங்களிடம் இருக்கிற மரியதையால் தாமதித்தேன். இல்லாவிட்டால் அதை இன்றைக்கே வெறும் பூமியாக மாற்றி விட்டிருப்பேன்.

 

ஜனங்களிடையே இளக்காரமும், எஜமானன் மனத்துக்குத் துன்பமும் உண்டாகும் வேலையை உண்மை வேலைக்காரன் உயிர் போனாலும் செய்ய மாட்டான்.

 

என்றொரு பழமொழி கூறுகிறதல்லவா?” என்றான் கருடன்.

 

இதைக் கேட்டதும், விஷ்ணு, ”கருடனே, நீ சொல்வது உண்மை. ஏனென்றால்:

 

குரூரனும் துஷ்டனுமான வேலைக்காரனை நீக்காவிட்டால் அவன் செய்கிற காரியங்களுக்கு எஜமானன் தான் கஷ்டப்பட வேண்டும்.

 

ஆகையால் நீ வா. சமுத்திரத்திடமிருந்து முட்டைகளைத் திரும்பப் பெற்று நீர்க்குருவியைச் சந்தோஷப்படுத்திவிட்டு, தெய்வகாரியமாக அமராவதிக்குப் போகலாம்” என்று சொன்னார்.

 

‘      ‘அப்படியே ஆகட்டும்” என்று கருடன் ஒப்புக் கொண்டான். பிறகு சமுத்திரத்தைக் கண்டித்துவிட்டு, மகாவிஷ்ணு அக்னி அஸ்திரத்தை வில்லில் தொடுத்து, ”துஷ்டனே, இந்தப் பறவையின் முட்டைகளைத் திருப்பிக்கொடு, இல்லாவிட்டால் உன்னை நீரில்லாத பூமியாக ஆக்கிவிடுவேன்” என்று சொன்னார்.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும் சமுத்திரத்தின் பரிவாரங்கள் எல்லாம் பயந்து நடுங்கிப் போய்விட்டன. சமுத்திரம் நடுங்கியபடியே முட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து பகவானின் கட்டளைப்படி நீர்க்குருவியிடம் திருப்பிக் கொடுத்தது.

 

அதனால்தான் ‘சத்ருக்களின் பலத்தையறியாமல் சண்டைக்குப் போகிறவன்… அவமானமடைகிறான்’ என்று சொன்னேன்” என்று தமனகன் சொல்லிற்று.

 

அதன் உட்கருத்தைச் சஞ்சீவகன் புரிந்து கொண்டது. தமனகனைப் பார்த்து, ”நண்பனே, நீ சொல், சிங்கம் சண்டைபோடும் விதம் என்ன?” என்று கேட்டது.

 

”முன்பெல்லாம் சிங்கம் சோர்ந்துபோய் கல்மீது உட்கார்ந்து கொண்டிருக்கும். இன்றைய தினமோ, போய்க் காண்பதற்கு முன்பே தன் வாலைக் கால்களிடையே இழுத்து விட்டுக்கொண்டு, நான்கு பாதங்களையும் ஒன்றாய்ச் சேர்த்து வைத்து, காதுகளைக் கூராக்கி நிமிர்த்தி நீ வருவதைத் தூரத்திலேயே கவனித்தபடி நின்று கொண்டிருக்கும். அதிலிருந்து உன்மேல் பகைக் கொண்டிருக்கிறது என்று நீ தெரிந்துகொள்ளலாம்” என்றது தமனகன்.

 

பிறகு தமனகன் கரடகனிடம் போயிற்று.

 

”என்ன செய்தாய் நீ?” என்று கரடகன் கேட்டது.

 

”இருவரையும் பிரித்துச் சண்டை மூட்டி விட்டேன்” என்றது தமனகன்.

 

”உண்மையாகவா?”

 

”விளைவுகளிலிருந்து அதைத் தெரிந்து கொள்வாய், பார்” என்றது தமனகன்.

”அதில் ஆச்சரியம் என்ன?

 

நன்றாய்த் தோற்றுவித்த பிளவு திடச் சித்தமுள்ளவர்களையும் கலக்கிவிடுகிறது. திரும்பத் திரும்ப வெள்ளம் பாய்ந்து மோதினால் மலை, கற்பாறைகளும் பிளந்து விடுகின்றன அல்லவா?

 

என்றொரு பழமொழி சொல்லுகிறது” என்றது கரடகன்.

 

”பிளவு உண்டு பண்ணி விட்டு மனிதன் தன் சுயநலத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால்,

 

ராஜநீதி பூராவும் படித்துவிட்டு அதில் உள்ள தத்துவங்களை அறிந்து கொண்டபிறகும் ஒருவன் தன் சுயநலனைச் சாதித்துக் கொள்ள முடியாவிட்டால் அவன் சிரமப்பட்டுக் கற்றறிந்த அந்தச் சாஸ்திரம் எதற்குப் பிரயோஜனம்?

 

என்றது தமனகன்.

 

”உண்மையாகப் பார்த்தால், சுயநலன்கள் என்று ஒன்று கிடையாது. ஏனென்றால், கிருமிகளும், சாம்பலும், தூசும் படிந்த இந்த தேகம் அருவருப்புத் தருகிறது.

 

ஆகவே, பிறரைத் துன்புறுத்தி இதைப் பேணுவது என்ன நியாயம்?”என்றது கரடகன்.

 

”சும்மா இரு. மந்திரிப் பதவியின் அடிப்படை ஆதாரங்கள் ஒன்றும் உனக்குத் தெரியாது. ராஜநீதியின் பல சாதுரியங்களும் உனக்குத் தெரியாது.

 

தயை தாட்சண்யம் இல்லாமல், மனத்தை இரும்பாக்கி விடு. பேச்சைக் கரும்பாக்கிவிடு. தீமைசெய்தவர்களைத் துளிக்கூடத் தயக்கமில்லாமல் கொன்றுவிடு!

 

என்று ஒரு செய்யுள் இருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் கேள்,  சஞ்சீவகன் கொல்லப்பட்டால் நமக்குத்தான் இரையாகும். ஏனெனில்,

 

பிறருக்குத் தீங்கிழைத்துத் தன் சுயநலத்தைப் பேண விரும்பும் அறிவாளி. காட்டில் சதுரகன் என்ற நரி செய்த மாதிரி, தன் சூழ்ச்சியை வெளியிடக் கூடாது.

 

என்றது தமனகன், ”அது எப்படி?” என்று கரடகன் கேட்க, தமனகன் சொல்லத் தொடங்கியது:

 

Series Navigationமழையின் முகம்முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *