பார்வையின் மறுபக்கம்….!

This entry is part 37 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஒருபக்கத்தில்..!
கம்பன் பயிரிட்ட தமிழ்…
காளிதாசன் நிறைத்த தமிழ்..
பாரதியார் வளர்த்த தமிழ்..
கண்ணதாசன் நீந்திய தமிழ்…
எதிலும் தமிழே சுதந்திரமாய்..!

கவிக்கெனவே .. உதித்திட்டாயோ பாரதி…!
எட்டயபுரத்தின் கதாநாயகன் நீ…!
அகத்தியரும் ஔவையாரும் அருணகிரிநாதரும்..
முத்தமிழும் ஊட்டி வளர்த்ததனால்…
மீசைவைத்த சூரியனாக வளர்ந்தனையோ..!!!

வீரகவி வளர்த்த தமிழ்பயிர்களில்
பதர்களாய் அந்நியமொழி பிரவேசம்…
தமிழை உறிஞ்சி அழிக்குமோ..?
பைந்தமிழின் கழுத்து நெறிகிறதோ..?
பதறுவதைப் பார்த்தனையோ பாரதி..?

வேரோடு அறுத்தெறியத் தமிழ்நெஞ்சங்கள்..
நாடுதே…தேடுதே…மீண்டுமுனை..!
பாரினில்…தமிழ்வளர்த்த செம்மல்..!
வைரத்தை வைரம்கொண்டு வகுப்பதுபோல்..
மொழியால் மொழியைக் காப்போம்..!

கருகிடுவேனோ…பைந்தமிழ் தவிக்கிறதிங்கே..!
சந்தனத்தில் சேறு கலக்குமுன் …
கன்னித்தமிழைக் காத்திடுவோம் இறங்கிவா..!
தமிழ்க்கடலுள்… இன்றோ… சுதந்திரதாகம்…!
மீன்களுக்கேனோ…அந்நியமொழியில் தீரா..மோகம்..!

மறுபக்கத்தில்….!

தரணியின் மூத்தமொழியாம் தமிழ்மொழியில்..
பனையோலையும்…எழுத்தாணியும் கோடுகளும்தானே..
விஞ்ஞானத்தால் வளர்ச்சிபெற்று உயர்ந்துநின்றது..
கல்வெட்டுக்களே கைகளுக்குள் கணினியாயின…
மாற்றங்கள் மனிதருக்கு ஏற்றங்களன்றோ..!

யாதும் ஊரே யாவரும் கேளீர்…
உலகமெங்கும் தமிழர்களின் சுவடும் உண்டு..
அங்கெல்லாம் தமிழ்மொழியின் பிரவேசமுண்டு..
கன்னித்தமிழில் அயல்மொழியின் சிநேகங்கள்
ஸ்ருங்காரமாய் ஒன்றோடொன்று கைகுலுக்க..!

வட்டெழுத்துக்கள் உருமாறி நிலைபெற்றதுபோல்…
வட்டாரமொழியும் ஒலிமாரி சபையேறிடும்..!
குழப்பங்கள் தவிர்த்து வரவேற்ப்போம்..
மொழிகளுக்குள் ஏற்றத்தாழ்வு எங்குள்ளது..?
வேற்றுமைகள் ஒன்றாகி ஒற்றுமையாய்..!

பழையன கழிதலும் புதியன புகுதலும்…நன்றே..!
உலகமொழியோடு தமிழும் வீரத்தோடு கைகுலுக்க..
பைந்தமிழ் நாளையும் தழைத்தோங்கும்..!
அன்னியமானாலும் நம்முள் அன்னியோன்யமாய்..!
வேர்களறிவதில்லை பழத்தின் சுவை இன்னதென்று…!

தரணியெங்கும் தமிழர்கள் சிதறி வாழ்ந்திருந்தாலும்…
பனிநாட்டில் கம்பளிக்குள் ஒடுங்கியிருந்தாலும்…
மறக்குமோ…சிதறுமோ….தமிழ்மணம்…!
சான்றுகள் ஆயிரங்களாக உள்ளதிங்கே…
இணையத்தில் சாட்சிகளாய் உலவுவதை..!

தமிழ் எங்கு பயணித்தாலும் தள்ளாடாது..
என்றும் தாழ்வதில்லை தரம் வீழ்வதில்லை…
தமிழ்க்கடலுள் வலம்புரிசங்கு போலவே ..!
தமிழுக்கும் என்றென்றும் உயர்ந்தநிலை…!
பைந்தமிழில் எங்குள்ளது பார்த்தீனியம்..?!

பாரதி இன்று நீர் இருந்திருக்க வேண்டும்…!
தமிழ்மரம் கிளைபடர்ந்த நிலைகண்டு ….
“தமிழ்மாதாக்கி ஜெய்போலோ ” எனவோ..
கொள்ளுப் பேத்தியுடன் பனிப்பிரதேசத்தில்…
“ஹாப்பிபர்த்டே,,,பாடிக்கொண்டோ…”களித்திருப்பாய்..!

================================================
ஜெயஸ்ரீ ஷங்கர்.

Series Navigationஅழிவும் உருவாக்கமும்மழையும்..மனிதனும்..
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *