கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘

This entry is part 7 of 39 in the series 18 டிசம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்காக எடுக்கப்பட்ட படம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் கற்பனை, கருப்பு வெள்ளை, கலர் என்று பயணிக்கிறது படம்.
அறியப்பட்ட நடிகர்கள் வெகு சிலரே. எல்லாம் புதுமுகங்கள். ஆனாலும் யாரும் அப்படித் தோன்றவில்லை என்பது பலம்.
தொலைக்காட்சிக்கான படம் போல சில காமிரா கோணங்கள் மட்டுமே. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் இந்தச் சிக்கலைச் சந்திக்கின்றன. தவிர்க்க முடியாதது.
கதாநாயகன், மற்றும் இயக்குனரே தயாரிப்பாளர்கள், முதன்மை நடிகர்கள். கதாநாயகி இல்லை. டூயட் கிடையாது.
இவ்வளவு இருந்தும் படம் நிறைவைத் தராதது ஏன்?
சமகாலத்தில் இரும்பு உருக்கு ஆலையை நடத்தும் மந்திரி, 59 நாட்களாகப் போராடும் தொழிலாளர்கள், அவர்களது சங்கத் தலைமையாட்கள், சங்கத்தலைவனின் மனைவி, மகன், மகள் என ஆரம்பிக்கிறது கதை. 60 நாட்கள் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் எனும் விதி முதலாளியை இயங்க வைக்கிறது. தலைமை வகிக்கும் போராட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டு உருக்கு உலையில் தள்ளப்பட்டு கொல்லப் படுகிறார்கள். மகன் போராளிகளைத் தேடி புறப்படுகிறான். இங்கிருந்து, வெண்மணியில் 44 விவசாயக்குடும்பங்கள், ஒரு படி நெல் அதிகமாகக் கேட்டதற்காக உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம், பின்நோக்குக் காட்சிகளில், கருப்பு வெள்ளையில்.
போராளிகளின் தலைவன் பெயர் கிருபாகரன். பிரபாகரனை ஒட்டி அமைந்துள்ள பெயர் தற்செயலல்ல. வெண்மணி கிராமத்து இளைஞன் எனும் ஒரே காரணத்திற்காக சேர்த்துக் கொள்ளப்படும் கிருபாகரன் எப்படி தலைவனாகிறான் என்று இன்னொரு பின்கதை. வனக்காவல் படையினரைப் போல பச்சை உடை, தாடி, சேகுவாரோ போல தொப்பி, இலங்கைப் போராளிகள் போல பயிற்சி என எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்கிறது படம்.
விவசாயிகளை அடிமையாக வைத்திருக்கும் பண்ணையார் கொல்லப்படுகிறான். எப்படி? நான்கைந்து போராளிகள் சேர்ந்து ஆயுதங்களால் குத்தி.. அப்படியும் நிராயுதபாணியாக இருக்கும் பண்ணையார், அவர்களை தன் பலம் மட்டுமே துணை கொண்டு அடித்து துவம்சம் செய்கிறான். ‘ பத்து லட்சம் பேர் ஒருத்தனை சாகடிச்சா அதுக்கு பேர் வீரம் இல்லை துரோகம் ‘ என்கிற ஏழாம் அறிவு வசனத்தை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொண்டால், நாலைந்து பேர் ஒருவனை ஆயுதம் கொண்டு சாகடித்தால் அதற்குப் பெயர் போராளித்தனமா?
பல கேள்விகள். முன்னெச்சரிக்கைக்காரனாக காட்டப்படும் பண்ணையார் ஏன் தனியாக வந்தான். நான்கு இளைஞர்கள் வயதான அவனை ஆயுதங்கள் இல்லாமல் வீழ்த்த முடியாதா? போராளிகளுக்கு புத்திசாலித்தனமே இல்லையா? இதுவே கிளைமாக்ஸ் வரை தொடருகிறதே? ரசிகனுக்கு சலிப்பு ஏற்படாதா?
படத்தின் கூட்டல் குறிகள் ( அதாவது ப்ளஸ் ): சில அருமையான இயற்கைக் காட்சிகள்,பச்சை பசேலென காடுகள் ( மருந்துக்கு ஒரு மிருகம் கூட வரவில்லை, பாம்பு, பல்லிகூட காணோம் } மறந்து போய்விட்ட பரிசல் பயணம், தடதடவைக்கிற இசை, சரியான உச்சரிப்பில் தமிழ் வசனங்கள்.
கழித்தல் குறிகள்: நிறைவில்லாத திரைக்கதை, எதைச் சொல்லப்போகிறோம் என்பதில் இயக்குனருக்கு இருக்கும் குழப்பம், படம் தடை செய்யப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் ஒரு சொதப்பலான முடிவு { அன்னா ஹசாரேவைக் காட்டி, கார்ல் மார்க்ஸ் சொன்ன மாற்றம் இனி வன்முறை இல்லை அஹிம்சைதான் என்று பல்டி அடிப்பது }, கேலிக்கூத்தாக ஆக்கப் பட்ட போலீஸ் தேடுதல் { இத்தனைக்கும் இண்டர்போல் வரை தேடப்படும் சர்வதேசத் தீவிர வாதி கிருபாகரன் எனச் சொல்லப்படுகிறது } இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நமக்குத் தோன்றுகிறது.. கிருபாகரன் சொல்கிறான்: ‘ என்னை கையில் விலங்கிட்டு தூக்கு மேடைக்குக் கொண்டு செல்லும்போது எம்மக்கள் கண்ணுக்குத் தெரியாத விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்களே.. எனக்காவது என் கையிலிருக்கும் விலங்கு கண்ணுக்குத் தெரிகிறதே என்று புன்னகை பூப்பேன் ‘ இது வீர வசனமா என்பது கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வி..
படத்தை அப்படியே முடித்திருக்கலாம், விலங்கிடப்பட்ட கிருபாகரனின் புன்னகையோடு.
நேற்று போரூரில் காலை முதல் மாலை வரை மின்நிறுத்தம். ஜெனரேட்டரில் தான் ஓட்டினார்கள் படத்தை. இருபது லிட்டர் டீசல் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய், நாற்பது ரூபாய் டிக்கெட்டில் படம் பார்த்தவர்கள் பத்து பேர்.. அவர்களும் வெளியே போய் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் ஆண்டிக்ளைமாக்ஸ்.
0

Series Navigation“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *