சுஜாதா

This entry is part 10 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆங்கில நாவல்களில் காணக்கிடைக்கும் மெலிதான செக்ஸ் எனக்குப் பிடிக்கும். தமிழில் நான் படித்தவரை அது அறவே இல்லை என்று எனக்கொரு கருத்து இருந்தது. அதை மாற்றியவை சுஜாதாவின் கதைகள். அதற்கு முன்னாலெல்லாம் பி.டி.சாமி வர்ணனைகளில் ‘ அவளது மேலுதட்டில் லேசாக ரோமம் பூத்திருந்தது‘ என்ற அளவ்¢லேயே பெண்கள் இடம் பெற்றார்கள். சாண்டில்யன் கொஞ்சம் போல
‘ வழுவழுப்பான வெண்ணைப் பிரதேசம் ‘ என்பார். இதற்கே குமுதம் அவரைச் சுவீகரித்தது. புஷ்பா தங்கதுரை { ஆன்மீகத்துக்கு வேணுகோபாலன் } ‘ அவளது மார்புப்பகுதி மேலெழும்பி இறங்கியது ‘ என்பார். சுஜாதாதான் ‘தாவணியை பூணூல் மாதிரி போடாதே ‘ என்று ஆரம்பித்தார். மீதி வாசகனின் கற்பனைக்கு.
குமுதம் வாசகனான நான் சாண்டில்யனையும் பு.த.வையும் அப்படித்தான் அறிய நேர்ந்தேன். அந்த வழியில் சுஜாதா.. ஆரம்பத்தில் அவ்வளவாக சிலாகிக்க வில்லை. நைலான் கயிறு ஜேம்ஸ் ஹேட்லி சேஸைத் தமிழ்ப் படுத்தியது போல் இருந்தது. இது ஒரிஜினல் இல்லை என்றே எண்ணினேன். அனிதா இளம் மனைவி கொஞ்சம் சுவாரஸ்யம் தந்தது. ஆனால் முழுமையான ஈடுபாடு வரவில்லை. சிறுகதைகள் எழுத வல்லவரை நாவல் எழுதப் பணித்தால் இழுவை தான். அதுவும் தொடர் முடிவில் ஒவ்வொரு வாரமும் ஒரு முடிச்சு அல்லது அதிர்வு இருக்க வேண்டும். எழுத்தாளனுக்கு பெரிய சங்கடம் அது. அவன் எண்ண ஓட்டம் அந்த முடிச்சு அல்லது திருப்பம் தொட்டே பயணிக்கும். அப்படி எழுத மறுக்கும் பிரபல எழுத்தாளனை தவிர்க்க முடியாவிட்டால் குமுதம் தானே வரிகளை வெட்டி பாதியில் நிறுத்தி விடும். அடுத்த வாரம் விற்க வேண்டுமே? ‘ காலிங் பெல் ஒலித்தது.. அவன்.. ‘( தொடரும்) என்று முடியும் வாரத் தொடர் அடுத்த வாரம் ‘ போய்க் கதவைத் திறந்தான் ‘ என்று ஆரம்பிக்கும். சுஜாதாவாலும் இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
ஆனால் அவரது சிறுகதைகள் சுவாரஸ்யமானவை. அதிலும் ‘ இரண்டு கடிதங்கள் ‘, குருபிரசாத்தின் கடைசி தினம், நகரம், திமிலா.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். என்ன அவைகள் படிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் முடித்தவுடன் காணாமல் போய்விடுகிறது. ஓ ஹென்றி, கொஞ்சம் கானன் டாயில், பெர்ரி மேஸன், அகாதா கிரிஸ்டி என்று அவியலாகத் தருவார். பல விருந்துகளில் அவியல் முழுவதுமாக சுவைக்கப்படுவதில்லை என்பது எனது அனுபவ வெளிப்பாடு. ஒன்று தயிர் { மையக்கரு} புளித்திருக்கும், அல்லது நமக்கு பிடிக்காத காய்கறிகள் {வர்ணணைகள், பாத்திரங்கள்} இருக்கும். வேன்டியதை எடுத்துக் கொண்டு விட்டு விட வேண்டியது தான்.
ஏறக்குறைய பிக்கினி ரேஞ்சில், மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தார். உள்ளே இருப்பது நிஜமா என்று துருவும் பார்வையாளனின் மன ஓட்டத்திற்கு தீனி போடுவது போன்றது இது. அரசு தரும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போலத் தான்.. இட் வில் கன்சீல் தி வைட்டல் திங்க்ஸ்.. ஆனால் ஜனரஞ்சக எழுத்தாளர், எழுத்துலகின் சூப்பர் ஸ்டார், ‘ கனவுத் தொழிற்சாலை ‘க்கு ஆ.விகடனில் அண்ணாசாலையில் பேனரே வைத்தார்கள். நோக்கங்கள் வேறாக இருந்தாலும் மக்கள் கவனத்தைத் திருப்ப பாபா மோதிரம் வரவழைப்பது போல, கழைக்கூத்தாடி வேலையை எழுத்தில் செய்தது அவரது ஸர்வைவல் டெக்னிக்.
‘ அவர் உயரம் அதுவல்ல.. கணையாழியின் கடைசி பக்கங்கள் படி ‘ மீண்டும் இலக்கியச் சகோதரன் உதவிக்கு வந்தான். பழைய கணையாழ்¢ இதழ்களையும் தந்தான். பழுப்பேறிய, பாக்கெட் நாவலை விட கொஞ்சம் பெரியதாய் இருந்தன அந்த இதழ்கள். உள்ளே கனமான இலக்கியம். இப்போது நீர்த்து நெடியடிக்கிறது. கடைசி பக்கங்களில் தான் அவரது உலகளாவிய அறிவும் தெளிவும் வெளிப்பட்டது என்பேன்.
அப்புறம் விஞ்ஞான ரீதியான கேள்வி பதில்கள், அதிலும் ரத்தினச் சுருக்கமான பதில்கள், மெலிதான நகைச்சுவை. ஆழ்வார் பாசுரங்கள், அதன் விளக்கங்கள் என்று திசை மாறிப் போனார். திரும்பவும் இழுத்து வந்து கணேஷ் வசந்த் எழுதச் சொன்னார்கள். பாவம் அவருக்கே அதில் பிடிப்பில்லை.
சுஜாதாவின் தாக்கம் எனக்கும் இருந்தது. சொல்வதைச் சுருங்கச் சொல் என்பதான பாணி எனக்குப் பிடித்திருந்தது. { ‘ .. லாம்.. ‘ } சிற்றிதழ்கள் பால் அவருக்குள்ள ஆர்வம் எனக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியது. கவிதைகளின் பால் அவருக்கு ஈர்ப்பு இருந்தது. அது இன்னமும் என்னை வேகப்படுத்தியது. •பிலிம் சேம்பர் விழாவில் எழுதி வைத்து படித்தார். ‘ ஜல்லியடிப்பது ‘ என்ற அவரது பிரபலமான வாசகத்திற்கு பார்வையாளர்கள் கைத்தட்டினார்கள். கூட்டம் முடிந்து அவர் மெதுவாக வெளியேறும்போது முண்டி அடித்துக் கொண்டு மேடையேறினேன். அவர் தோளைத் தொட்டு சிறகு இதழ் ஒன்றை கொடுத்தேன். கையில் இருந்த காகிதங்களுக்கு நடுவில் பத்திரமாக வைத்துக் கொண்டார். ‘ படிக்கிறேன் ‘ என்றார். வழக்கமாக ‘ பார்க்கிறேன் ‘ என்று தான் சொல்வார்கள். இதென்ன நடிகை கவர்ச்சிப்படமா என்று நினைத்துக் கொள்வேன். சுஜாதா படிக்கிறேன் என்றார். செய்வார் என்கிற நம்பிக்கை துளிர்விட்டது.
ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் ‘ பல சிற்றிதழ்கள் எனக்கு வருகின்றன..நானும் விடாமல் படிக்கிறேன். அதில் நம்பிக்கை தரும் இதழ்கள் ‘ என்கிற பட்டியலில் ‘சிறகு’ இருந்தது. இதழ் ஜென்ம சாபல்யம் அடைந்தது.
எல்லா எழுத்தாளர்களைப்போலவே சுஜாதாவுக்கு நிஜ சுஜாதாவிடமிருந்து ஆதரவு இல்லை என்பது நான் அறிந்த ஒரு செய்தி. மேட்டூர் அணைக்கட்டில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொறியாளர் என்கிற முறையிலும் பிரபல எழுத்தாளர் என்கிற முறையிலும் சுஜாதாவிற்கு அழைப்பு போனது. அவர் அப்போது பெங்களூரில் இருந்தார். மரியாதை நிமித்தம் விழா ஏற்பாட்டாளர்கள் அவர் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். பேசியது அவரது மனைவி. விவரம் சொல்லி கிளம்பி விட்டாரா என விசாரித்திருக்கிறார்கள். என்ன நிகழ்வு என்று அறிந்து கொண்ட அவர் சொன்னாராம் ‘ அவர் வந்து என்ன ஒரு குடம் தண்ணி ஊற்றப் போகிறாரா?’
சுஜாதா என்கிற ரங்கராஜன் நல்ல உயரம். அவரை நான் பார்த்த போதெல்லாம் அவர் கூன் போட்டே நடந்து கொண்டிருந்தார். நடுவயதிலேயே அவரை சர்க்கரை நோய் தாக்கி விட்டது. அதில் அவர் பெரும் சிரமம் அடைந்தார்.
அவரது மாமா விஜயம் நாடகத்தை குறும்படமாக தயாரித்து குறுந்தகடாக வெளியிட்ட நிகழ்வுக்கு நான் போயிருந்தேன். வெளியிட்டவர் என் உறவினர் என்பதால் முதல் வரிசையில் எனக்கு இடம். வந்திருந்தவர்களுக்கு குலோப்ஜாமூன் இரண்டு, ஜீராவுடன் தந்திருந்தார்கள். காரத்திற்கு மைசூர் போண்டா, தேங்காய் சட்னி.. இரண்டும் சுஜாதாவிற்கு தடா.

இலக்கிய உலகில் சுஜாதாவின் வாரிசு யார்?
சுஜாதாவே ஒருமுறை சொல்லியிருக்கிறார் இருவரைப் பற்றி.
ஒருவர் இரா.முருகன். சுஜாதா மறைவுக்குப் பின் கமலஹாசன் சுஜாதா மீதிருந்த மரியாதையாலும் அன்பாலும் முருகனை என்னைப்போல் ஒருவன் படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அவர் பைனரி போன்ற அடிப்படை கணித/ கணினி சொற்களைப் பயன்படுத்தி ரசிகனுக்கு அந்நியமாகிவிட்டார்.
இன்னொருவர் ரஞ்சன். அவர் யாரென்றே தெரியவில்லை. இதுவரை என் கண்ணில் படவில்லை. அவர் படைப்புகளும் தான்.
வா.மு. கோமு ஒரு முறை எனக்கு எழுதிய கடிதத்தில் : ‘நீங்கள் சுஜாதாவின் பயிற்சி பட்டறை எதிலாவது கலந்து கொண்டீர்களா?’ என்று கேட்டிருந்தார். சுஜாதாவும் என் எழுத்துப் பயிருக்கு நீர் வார்த்திருக்கலாம் சிறிதளவேனும்.

Series Navigationதிண்ணையில் கண்ணம்மா பாட்டிஇராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *