Posted in

திண்ணையில் கண்ணம்மா பாட்டி

This entry is part 9 of 39 in the series 18 டிசம்பர் 2011

நள்ளிரவில்
நனைந்திருந்த நிலையத்தில்
நின்றது பேரூந்து

முன்னிரவின் மழை
மிச்சமிருந்தது
மசாலாப் பால் கடையின்
மக்கிப்போன கூரையில்

மஞ்சள் தூக்கலாக யிருந்த
மசாலாப் பாலில்
மடிந்த ஈசல்
பாலை
மேலும்
அசைவமாக்கியிருந்தது

எடை குறைந்த
பயணப் பொதியோடு
ஈரத்தில் நடந்து
என்
வீடிருந்த சந்தின்
முச்சந்தியை அடையவும்

காணும் தூரத்தில்
என் வீட்டுக்கு எதிர் வீட்டில்
மேடையிட்டத் திண்ணையில்
கண்ணம்மா பாட்டி
உட்கார்ந்திருந்தது

கண்ணம்மா பாட்டி
கதை சொல்லாது
காதைக் கிள்ளாது
பாதையில் செல்வோரை
வதைக்கவும் செய்யாது

சுருங்கிய தோலுக்குள்
ஒடுங்கிய உடலும்
சுருக்குப் பைக்குள்
சுண்ணாம்பும் புகையிலையும்
இடது கையில்
குச்சி யொன்றும்
எப்போதும் வைத்திருக்கும்

பல்லாங்குழியோ பரமபதமோ
பாட்டியோடு விளையாடினால்
தோற்றாலும்கூட
இழந்தை வடையோ
இஞ்சி மரபாவோ தரும்

முடிந்து வைத்த காசவிழ்த்து
முறுக்கு திண்ணச் சொல்லும்

கண்ணம்மா பாட்டி
இல்லாத திண்ணையை
நான் கண்டதே யில்லை
எனினும்
இத்தனை இரவிலுமா
இப்படித் தனித்திருக்கும்?!

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

பின் படலின் கொக்கி நீக்கி
கொல்லைப்புற வழியில்
சென்று உறங்கிப் போனேன்.

மூன்று மாதங்கள் கழித்து
வந்திருந்த என்னை
மறுநாள் காலை
எழுப்பிய உம்மா
வழக்கம்போல
இறந்து போனவர்கள்
இருந்த வீடுகளுக்கு அழைத்துப் போயிற்று

இரண்டாவது வீடாக
எதிர் வீட்டுக்குச் செல்ல
இறந்தது யாரென கேட்க
உம்மா சொன்னது
கடந்த சனி யன்று
கண்ணம்மா பாட்டி யென்று!

Series Navigationசெல்வ ( ஹானஸ்டு ) ராகவன்சுஜாதா

5 thoughts on “திண்ணையில் கண்ணம்மா பாட்டி

  1. இறந்து போன பாட்டிகளை நினைவூட்டி கண்களைப் பணிக்கச் செய்த கவியண்ணாவுக்கு நன்றிகள்.

  2. அடுத்த நாள் காய்ச்சல் ஏதும் வராத வரைக்கும் நல்லது இல்லைனா அந்த காய்ச்சலுக்கும் ஒரு ஆர்டிகள் போடவேண்டி வந்திருக்கும்

  3. கவிதையில் கதை சொல்லியிருக்கும் நண்பனே என் கோரிக்கைப்படி கவிதையாய் கதை சொல்லப் போவது எப்போது?
    பாலகுமாரன் கூட கவிதையிலிருந்து கதைக்கு வந்தவர் தான்.

  4. எதிர்வீட்டுத் திண்ணையிலிருந்த கண்ணம்மா பாட்டியை நம் திண்ணையில் வாழவைத்திருக்கிறீர்கள், சபீர்.

Leave a Reply to SOMASUNDARAM Cancel reply

Your email address will not be published. Required fields are marked *