நினைவுகளின் சுவட்டில் (83)

This entry is part 2 of 29 in the series 25 டிசம்பர் 2011

Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை.  The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா அல்லது சற்றுப் பின்னரா என்று.  பின்னர் என்றாலும் ஓரு வருடத்துக்குள்ளாக  இருக்கவேண்டும். ஸ்டாலின் இறந்தது 1953-ல். ஸ்டாலினின் புகழ் பாடப்படுவது நின்றது செர்ஜி க்ருஷ்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் காங்கிரஸ் கூட்டத்தில் தான். அப்போதிருந்து ஸ்டாலினிஸத்தை மறுப்பதும், ஸ்டாலினை அவர் நின்றுகொண்டிருந்த பீடத்திலிருந்து அகற்றும் காரியங்கள் தொடங்கிவிட்டன். ஸ்டாலின் இறந்ததும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே ரஷ்யாவின் ரகசிய போலீஸ் படைகளைத் தன்  அதிகாரத்தில் வைத்திருந்த லாவ்ரெண்டி பெரியா (இவர் ஸ்டாலினைப் போல ஜியார்ஜியா வைச் சேர்ந்தவர்) கொல்லப் பட்டார். அவரை ஒழித்துக்கட்டுவது தான் தம் முதல் காரியமாக, ஸ்டாலினின் அடுத்தபடியிலிருந்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதைச் சொன்னதும் செர்ஜி க்ருஷ்சேவ் தான். க்ருஷ்சேவ் லாவ்ரெண்டி பெரியாவைப் பற்றி அப்போது சொன்ன கதை மிக சுவாரஸ்யமானது. சோஷலிஸ்ட் பாட்டாளி வர்க்க சொர்க்கத்தின் அதிகார மையத்தில் நடக்கும் விசித்திரங்கள் யாரும் கற்பனை கூட செய்ய முடியாதது. ஆனால் இதெல்லாம் பின்னால் வெளிவந்து நான் படித்தவை. ஆனால் இப்போது Life  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைத் தொடரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அத்தொடர் கட்டுரை ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் பொதுச் செயலாளர் தான். அரசாங்கத்தில் எந்தப் பதவியும், தலைவரோ, பிரதம மந்திரியோ, வகிக்காதவர். இருப்பினும் முழு அதிகாரமும் அவர் கையில். இது பற்றி க்ருஷேவ் சொல்லியிருக்கிறார். மந்திரி சபையின் கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கும். ஒரு மூலையில் சற்றுத் தள்ளி ஸ்டாலின் தன் பைப்பை வைத்துப் புகைத்துக்கொண்டிருப்பார். அவர் ஏதும் பேசமாட்டார். மந்திரிகள் தம் சர்ச்சைகளை முடித்துக்கொண்டு கடைசியில் “தோழர் ஸ்டாலினின் கருத்து என்ன என்று கேட்கலாமே” என்பாராம். ஸ்டாலினும் தன் கருத்தைச் சொல்வார். அது தான் அரசின் முடிவாகும். இதெல்லாம் பின்னர் நடக்க இருப்பவை. ஆனால், லெனின் காலத்தில், நடப்பு சற்று வேறுபட்டது. யதேச்சாதிகாரத்தின் விதை அப்போதே விதைக்கப்பட்டுவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் யதேச்சாதிகாரம் என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது.
லெனினின்  அத்யந்த விசுவாசியாக லெனினாலாயே அவருடைய அந்திம காலம் வரை கருதப்பட்டவர். ஸ்டாலின். அதன் காரணத்தாலேயே, லெனின் தனக்கு உதவியாக இருக்கட்டும் என ஸ்டாலினை கட்சியின்  பொதுச் செயலாளராக ஆக்கினார். ஆரம்பத்தில் லெனினின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவராக இருந்தவர் லெனின் செயலற்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்த போது, தன்னை பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்து லெனினை மீறி செயல்படத் தொடங்கினார். இதனால் வெறுப்புற்ற லெனின் தன் உயில் என்று  (Last Testament and Will) ஒன்றை எழுதி அதை ட்ராட்ஸ்கிக்கு அனுப்பினார். அதில் ஸ்டாலின் பொதுச் செயலாளராக நீடிப்பது சரியல்ல. அவர் தோழர்களை மதிப்பதில்லை. தன்னிச்சையாகவும் கொடுங்கோலராகவும் அவர் நடந்து கொள்கிறார். அவருக்கு பதிலாக ட்ராட்ஸ்கியை நியமிக்க வேண்டும்” என்று அதில் சொல்லியிருந்தார்.  இது லெனினின் அலுவலகத்தில் வேலை செய்து வந்த ஸ்டாலினின் மனைவுக்குத் தெரிந்து அதை அவர் ஸ்டாலினுக்குச் சொல்ல, ஸ்டாலின் அந்தக் கடிதம் வெளிவராது பார்த்துக்கொண்டார். கட்சியின் செயற்குழுவில் தன் ஆதரவாளர்களைக் கொண்டு  நிரப்பினார்.  ஸ்டாலின் பொதுச் செயலாளரானது 1922-ல். அதை அடுத்து லெனின் 1924-ல் மரணமடைந்தார்.
அதன் பிறகு ஸ்டாலினைக் கேள்வி கேட்பாரில்லை. எதிர்ப்பாரும் இல்லை.
இவையெல்லாம் அக்கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டவை அல்ல. அக்கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டவையும், ஸ்டாலி8ன் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும். எப்படி அனேகமாக கிட்டத்தட்ட அதே சாமர்த்தியங்களும், அதிகார வெறியும், தன் முனைப்பும் இங்கும் செயல்பட்டிருக்கின்றன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த வியப்பையும், பின்னர் கட்டுரையில் சொல்லப்பட்ட சதி வழக்கு விவரங்களுக்கு முன்னுரையாகவும் இருக்கட்டும் என்றே இவற்றை எழுதத் தோன்றியது எனக்கு.
The Great Purges என அறியப்பட்ட சதி வழக்குகள் இரண்டு தவணைகளில் நடந்தன. ஒன்று 1936 –லும் பின்னர் 1938=லும். இரண்டுமே ஸ்டாலின் தன் அதிகாரத்துக்கும் பதவிக்கும் போட்டியாகக் கூடும் என்று சந்தேகப்பட்ட தலைவர்களை எல்லாம் ஏதோ ரஷ்ய நாட்டுக்கு எதிராக, புரட்சிக்கு எதிராக ஜெர்மன் அரசுக்கு உளவாளிகளாக,, கொலைக்கு உடன் போகிய சதிகாரர்களாக் குற்றம் சாட்டி மரணதண்டனைக்கு இரையாக்கினார். தன்னிலும் மிக பிராபல்யம் பெற்றவராகவும், நல்ல பேச்சாளராகவும், கட்சியில் தன்னை விட அதிகம் செல்வாக்கு நிறைந்தவராகவும் இருந்த செர்ஜி கிரோவ் என்ற பொலிட்ப்யூரோ உறுப்பினரை, பீட்டர்ஸ்பர்க் கட்சித் தலைவரை கொலை செய்ய சதி செய்தார்
இதற்கு ஆரம்ப ஆயத்தமாக, NKVD என்னும் ரஷ்ய போலீஸ்/உளவு ஸ்தாபனத்தின் தலைவராக இருந்தவரை நீக்கி யகோடா என்பவரை நியமித்தார். யகோடாவும் தலைவர் ஆணைப்படி செர்ஜி கிரோவை தீர்த்துக் கட்டினார். இது நடந்தது 1934-ல்.  பின்னர் அந்த கொலைக்கு காரணமானவர்கள் என்று, அது காறும் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருந்து, பொலிட்பூரோவில் அவருக்கு உறுதுணையாக இருந்த ஸினோவீவ், காமெனேவ் புகாரின், போன்ற இன்னும் மற்றவர்களையெல்லாம் கிரோவின் கொலைக்குக் காரணமானவர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் குற்றம் சாட்டி அவர்களையும் தீர்த்துக் கட்டினார். இவர்கள் எல்லாம் லெனின் காலத்திலிருந்து தனக்கு போட்டியாக இருந்தவரும் புரட்சி வெற்றிபெற பெரும் காரணமாக இருந்தவருமான ட்ராட்ஸ்கியோடு பெரும் பகை இருந்தது ஸ்டாலினுக்கு. இவரக்ள் எல்லாம் ஆஸ்லோவில் அப்பொது இருந்த ட்ராட்ஸ்கியின் உத்தரவுப்படி செயல்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தனர். ஸினோவீவும், காமெனேவும் கிரோவைக் கொலை செய்ய தாம் சதி செய்ததாக ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் கொடுத்தால் பொலிட் ப்யூரோவில் தங்களுக்கு மன்னிப்பும் மரணதண்டணையிலிருந்து விடுதலையும் பெற்றுத் தரவேண்டும் என ஸ்டாலின் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.
லைஃப் பத்திரிக்கையில் இப்பகுதி விவரிக்கப் படும் இடத்தில் ஒரு கார்ட்டூனும் பக்கத்தில் அச்சிட்டிருந்தது. அதில் ஸ்டாலின் அவர்களிடம் சொல்கிறார், “உங்களுக்கு என்ன லீக் ஆஃப் நேஷன்ஸ் சொன்னால் தான் நம்புவீர்களோ?”
இன்னொரு இடத்தில் ப்யாடோகோவ் என்பவர் வாக்கு மூலம் கொடுக்கிறார்; தாம் விமானத்தில் ஆஸ்லோ சென்று ட்ராட்ஸ்கியைச் சந்தித்து அவர் ஆணையைப் பெற்றதாகச் சொல்கிறார். அப்போது அங்கு எந்த ஹோட்டலில் அந்த சந்திப்பு நடந்தது என்கிற விவரமும் தருகிறார் அந்த ப்யாடகோவ். ஆனால் அப்படி ஒரு ஹோட்டலே ஆஸ்லோவில் இல்லையென்றும் அந்த நாளன்று ஆஸ்லோவுக்கு விமானம் ஏதும் செல்லவில்லை என்றும் விவரங்கள் வெளியாகின்றன.
இந்த விவரங்கள் அச்சிட்ட பக்கத்தில் இன்னுமொரு கார்ட்டூன். ஸ்டாலின் யகோடாவை நோக்கி. “உனக்கு வேறு ஒரு தேதியோ, வேறு ஒரு ஹோட்டல் பேரோ சொல்ல கிடைக்கவில்லையா என்ன? ” என்று. சீறுகிறார். யகோடா தான் இந்த வாக்கு மூலங்களைத் தயாரித்த NKVD யின் தலைமை அதிகாரி.
இந்த மாதிரி சதிகளைத் திட்டமிடுவதிலும், பொய் வாக்குமூலங்களை பலப்ரயோகத்தில் பெறுவதிலும் கடைசியில் மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் ஒவ்வொரு சம்யத்திலும் தனக்கு உதவியாக இருந்த என்.கே.வி.டி தலைமை அதிகாரிகள். தன்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்து சதிக்கு துணைபோன பொலிட்ப்யூரோ உறுப்பினர்கள் எல்லோரையும் அடுத்த சதி வழக்கில் சிக்க வைக்க திட்டம் தீட்டப்படும். கிரோவை ஒழிக்க, ஸினோவீவ், காமெனேவ், யெகோடா பயன்பட்டது போல, நீதிபதியாக இருந்த வொரோஷிலோவ் பயன்பட்டார். பின்னர் யெகோடாவை ஒழிக்க என்.கே.வி..டி. தலைமைக்கு யெஸோவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.  இப்படி ஒரு கூட்டத்தை ஒழித்துக்கட்ட பயன்பட்டவர்கள் எல்லாம் இரண்டு வருடங்கள் கழித்து இன்னொரு கூட்டத்தின் உதவியுடன் ஒழிக்கப்பட்டனர். கடைசியாக மிஞ்சியது, ககனோவிச், மொலொடோவ், வொரொஷிலோவ், லாவ்ரெண்டி பெரியா போன்றோர்கள்..
இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, நேரடியாக அரசைச் சார்ந்தவர்களும் கட்சித் தலைவர்களையும் தான். ஒரு சிலரே என் நினைவில் இருப்பவர்கள். ஆனால், இந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள் என்று அந்த பட்டியல் மிக நீளும்.
இது வரை தான், இந்த 1936 – 38 சதி வழக்குகள் பற்றித் தான் லைஃப் பத்திரிகையின் கட்டுரைத் தொடர் விவரித்திருந்தது
ஸ்டாலின் இறந்தது 1953-ல். அந்த சமயத்தில் இன்னொரு சதி வழக்குத் தொடருக்கு அவர் தயாராகியிருந்தார். ஒரு யூத டாக்டர் கூட்டம் அவரைக் கொல்ல சதி செய்தது என்ற குற்றச் சாட்டுக்கான தயாரிப்புகள் நடந்தன. யூத டாக்டர்கள் சிலரும் அப்போது கைதாகியிருந்தனர் என்று பத்திரிகைச் செய்திகள் படித்த நினைவு எனக்கு. இவை ஸ்டாலினின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த செய்திகள்..
அந்த சமயத்தில், ஸ்டாலினைச் சுற்றியிருந்த, அடுத்த படி நிலைத் தலைவர்கள், முன்னர் ஸ்டாலினின் சதி வழக்குகளில் அவருக்குத் துணையாக இருந்த மொலொடோவ், ககனோவிச், வொரோஷிலோவ், லாவ்ரெண்டி பெரியா, மாத்திரமல்ல, க்ருஷ்சேவ்,, ஸ்டாலினால் 19-ம் காங்கிரஸின் தலைமை உரையை வாசிக்க அனுமதிக்கப்பட்ட, (அது, தனக்குப் பின் சோவியத் ரஷ்யாவின் தலைமை அவருக்கு என்று அடையாளம் காட்டும் காரியம் இது) மலெங்கோவ் மிகோயான், எல்லாருமே அடுத்து சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டுச் சாகடிக்கப்படும் முறை தங்களது என்று பயந்து கொண்டிருந்தார்கள்.
ஸ்டாலின் இறந்த செய்தியை அவரது மெய்காப்பாளர் சொல்ல அவரது அறையை நெருங்கியது நடந்த நாடகக் காட்சிகளைப் பற்றியும் செய்திகள் வந்தன. அதை க்ருஷ்சேவே சொல்லியிருக்கிறார் தன் 20- காங்கிரஸ் உரையில். ஸ்டாலினின் மரணத்தை அடுத்து ஒரு சில நாட்களுக்குள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொன்றது உள்துறை, உளவு, போலீஸ் துறைகளைத் தன் கைக்குள் வைத்திருந்த லாவ்ரெண்டி பெரியாவைத் தான். இல்லையெனில் பெரியா தங்கள் எல்லோரையும் தீர்த்துக்கட்டி விடுவார் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.
சட்சித் தலைமை க்ருஷ்சேவிடம் போயிற்று. சோவியத் குடியரசின் தலைவராக புல்கானின், அரசுத் தலைமையாக மெலெங்கோவ், ராணுவத் தலைமையாக மார்ஷல் ஷுகோவ், மிகோயான், ஒரு கூட்டுத் தலைமை பதிவியிலிருந்த போதிலும், க்ருஷ்சேவைத் தவிர மற்ற எல்லோரும் ஒவ்வொருவராக கழற்றி வீசப்பட்டனர். எல்லோருக்கும் எங்கெங்கோ மூலையில் சின்ன உத்யோகம் அளிக்கப்பட்டது. சின்ன உத்யோகம் என்[பது, நம்ம பிரதம மந்திரி மன் மோகன் சிங்கைத் தூக்கி ஏதாவது ஒரு சின்ன ஊர் பாங்கின் காஷியராக மாற்று வது போல. இந்த மாற்றம் மிகப் பெரிய புரட்சிகர மாற்றம். இவர்கள் யாருக்கும் எதிராக எந்த சதி வழக்கும் தொடரப்பட வில்லை. யாரும் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழக்கவில்லை.
Live பத்திரிகை, வெளியிட்ட ஸ்டாலினைப் பற்றியும், சோவியத் ரஷ்யாவில் நிலவும் அடக்குமுறை பற்றியும், சுதந்திரமற்ற வாழ்வு பற்றியும் செய்திகள் உலகில் வெளிவந்துகொண்டு தான் இருந்தன. இது பற்றி ஐரோப்பிய, அமெரிக்க எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா பற்றியும், கம்யூனிஸ கட்சி பற்றியும் கற்பனையான சொர்க்க உலக கனவுகளை வளர்த்துக்கொண்டவர்கள் பின்னர் உண்மை நிலையின் கொடுமைகளைப் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று அந்த சமயத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. ரிச்சர்ட் ரைட், ஆண்ட்ரி ரீட், இக்னேஷியோ சிலோன், ஸ்டீஃபன் ஸ்பெண்டர், அவ்வளவு தான் எனக்குப் பெயர்கள் நினைவில் இருக்கின்றன. இன்னும் சிலர் உண்டு. அவர்கள் எழுதிய The God That Failed என்ற புத்தகமும் அப்போது படிக்கக் கிடைத்தது.
ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக, இவையெல்லாம் முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர், சோவியத் ரஷ்யாவும், மற்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதே பாட்டைத் தான் பாடியது. ஆனால், க்ருஷ்சேவின் 20.வது காங்கிரஸின் உரைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவையெல்லாம் உண்மைதான் எனத் தெளிவாகியது. கடைசியில் எது அமெரிக்க முதலாளித்வத்தின் பொய்பிரசாரம் என்று சொல்லப்பட்டதோ அந்த லைஃப் பத்திரிகை தான் உண்மையைச் சொன்னது என்று நிரூபணமாகியது.

நம்மூர் சிதம்பர ரகுநாதன், தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்த ஒரு பத்திரிகையில். “இதெல்லாம் எங்களுக்கு அப்போதே தெரியவந்தது தான். க்ருஷ்சேவ் சொல்லித் தான் தெரிந்தது என்று இல்லை. ஆனால், பாட்டாளி வர்க்கம் ஒரு அரசை நிர்மாணிக்கும் ப்ணியில் இருக்கும் போது இவையெல்லாம் நடக்கும் தான். அதைப் பெரிது படுத்துவது சரியல்ல என்று நாங்கள் இருந்தோம்” என்று பதில் அளித்திருந்தார். இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொன்னது இந்தக் கருத்தை முடிந்த அளவில் அவர்கள் மொழியில் நான் சொல்கிறேன்.
அந்த சமயத்தில் புர்லாவில் இருந்த சினிமா கொட்டகையில் Fall of Berlin என்று ஒரு ரஷ்ய படம் வந்தது. அதில் இரண்டாம் உலக்ப் போரில் ஸ்டாலினின் ராணுவத் திறமையால் எப்படி ரஷ்யா வெற்றி கொண்டது என்பதைச் சொல்லும் முழு நீள செய்திப் படம். குண்டுகள் இரண்டு பக்கங்களிலிருந்து குறுக்கே பாயும் விஸ் விஸ் என்று கிரீச்சிட்டுக்கொண்டு,. ஸ்டாலின் தன் காரில் அக்குண்டு வீச்சுக்களிடையே மிக அமைதியாக பயணித்துக்கொண்டிருப்பார் யுத்த களத்தில். ரூஸ்வெல்ட்டும், சர்ச்சிலும் அதில் கோமாளிகளாகவே சித்திரிக்கப்பட்டிருப்பார்கள்

இவையெல்லாம் இங்கு விரிவாகச் சொல்லக் காரணம், ஒன்று இவை என் வளர்ச்சியின் ஆரம்பப் படிகள்.  இரண்டு, இந்த வரலாற்றைப் படிப்பவர்கள் இந்த நாடகம் தமிழ் நாட்டிலும் சற்று மாறுதலோடு, ஆனால் அதே சாமர்த்தியம் உத்வேகம், முடிவுகளோடு மேடையேறி உள்ளதையும் உணரமுடியும்..

Series Navigationமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதைபழமொழிகளில் பல்- சொல்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *