மலையென்றால் அது ஒன்றும் பெரிய மலையல்ல. ஒரு குன்றுதான். அதன் பின்புறம் ஒரு பெரிய தண்ணீர் டேங்க் உண்டு. ரயில்வே க்வார்டர்ஸ் முழுவதற்கும் குடிதண்ணீர் சப்ளை இதிலிருந்துதான். மலைக்குன்றின் முன்புறம் மேலே வழக்கம்போல முருகனும் கீழே பொன்னேஸ்வரி அம்மனும் அருள்பாலித்துக்கொண்டிருப்பார்கள். ஆஸ்திகப் பெருமக்களுக்கு தெய்வீகமாகவும் இளைஞர்களுக்கு ‘லவ்’கீகமாகவும் சிறுவர்களுக்கு விளையாடவும், வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு முடிவாகவும் அந்தக் கோவிலும் டேங்கும் திகழ்ந்துகொண்டிருந்தன. கிறிஸ்தவர்களுக்கு மூன்று அழகிய தேவாலயங்கள் ஊரின் நடுவிலும், மேற்கிலும் மற்றும் வடக்குக் கோடியிலும் வழிபாட்டுக்கென இருந்தன. பிரிட்டிஷ் நேர்த்தியைச் சொல்லும் சர்ச்களின் பிரம்மாண்டம் மலைக்கவைக்கும். உயர்ந்து எழும்பிய சுவர்களில் பதித்த பல வண்ணக் கண்ணாடிகளில் தெறிக்கும் நிறப்பிரிகை செய்யும் ஜாலமும் முள்கிரீடம் தரித்து ரத்தம் சொட்டச் சிலுவையில் தொங்கும் யேசுவின் முகமும் இரு வேறு திசைகளில் மனதை இழுக்கும். ரயில்வே காலனியின் பனிதோய்ந்த டிசம்பர் மாதத்திய வருடத்தின் கடைசி நாட்கள் மார்கழி பஜனையிலும் கிறிஸ்துமஸ் கேரலிலும் மேலும் சில்லிட்டுக்கொண்டிருக்கும்.
ராபர்ட்டும், ப்ரிட்டோவும் எங்கள் ஏரியாவின் குறும்புக்காரர்கள். டிசம்பர் மாதத்து ஓர் இரவில் , “இந்தாடா வெண்ணை ” என்று முட்டையின் ஏதோ ஒரு கருவை என்னை ஏமாற்றிச் சாப்பிடச் செய்து என்னை ஒருவாரம் விடாமல் வாந்தியெடுக்கச் செய்த அவர்கள்தான் எங்கள் ஏரியாவில் அந்தந்த ஸீஸனுக்கான விளையாட்டுக்களைத் துவக்கி வைக்கும் தேவ தூதர்கள். பம்பரமோ, கிட்டுப்புள்ளோ, கோலிக்குண்டோ, பட்டமோ அவர்கள்தான் முதலில் ஸீஸனை அறிவிப்பார்கள். அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸுக்கான ஏற்பாடுகள் மிகவும் விஸ்தாரமாக டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்தே ஆரம்பித்துவிடும். பெத்லஹமின் மாட்டுத் தொழுவம் டாம்பீக எழிலுடன் உருப்பெற்றிருக்க, நக்ஷத்திர மினுக்கல்களுக்கு நடுவே சமனசுகள் இறக்கை அசையாமல் அந்தரத்திலிருந்து குழந்தை யேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்கள் வீட்டுக் கூடத்தில். வாசலில் கொய்யாமரக்கிளையிலொன்றும், மாமரக் கிளையிலொன்றுமாக இரண்டு பெரிய ஸ்டார்கள் நூறு வாட்ஸ் வெளிச்சத்தில் நீலத்திலும் சிவப்பிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். நானும் என் தம்பியும் தினமும் அவர்கள் வீட்டிற்குக் குழந்தை ஏசுவையும் பெத்லஹேமையும் பார்க்கப் போய்விடுவோம். நாங்கள் அங்கிருக்கும்போது எப்போதாவது, சரசரக்கும் பாவாடையோடும் ஒரு இனம் புரியாத வாசனையோடும் ராபர்ட்டின் அக்கா கேரலின் தோன்றி மறைவாள். இறக்கை இல்லாத சமனசு வந்துபோனதுபோல் இருக்கும். ராபர்ட்டின் அம்மா மணிக்கொரு தடவை ஏசுவிடம் முறையிட ஏதோ வைத்திருப்பவர்போல அடிக்கடி சிலுவை நாயகன் முன் மண்டியிட்டுக் கண்களை இறுக்க மூடிப் பரலோகத்திலிருக்கும் பரமபிதாவையும், கன்னி மரியாளையும் மனமார அழைத்து அப்போதைய ப்ரார்த்தனையை மூச்சுவிடாமல் பத்து நிமிடத்தில் சொல்லிமுடித்து எழுந்து சமையலறைப் பக்கம் போவார். ஆனால், ராபர்ட்டின் அப்பாவோ யேசுவை அதிகம் தொந்தரவு செய்யாதவராய் இருந்தார். ரொம்ப ஒல்லியாய் ஆறு அடி உயரத்தில், மரங்களின் எந்தக் காயையும் எதன் உதவியும் இன்றிக் கையாலேயே பறித்துக்கொடுப்பவராய் இருந்தார். இரவு எட்டு மணிக்குச் சாப்பாட்டுக்குமுன் குடும்பத்திலிருக்கும் அனைவரும் செய்யும் ப்ரேயரில் மாத்திரம் இவரும் கலந்துகொள்வார். மண்டியிட்டிருக்கும் எல்லோருடைய கண்களும் மனதினுள் வந்துவிட்ட ஏசுபிரான் கண்கள் வழித் தப்பிவிடக்கூடாது என்பதுபோலக் கண்கள் அநியாயத்திற்கு இறுகி இருக்க, தலைகள் யூனிஃபர்மாகச் சற்றே இடதுபக்கம் சாய்ந்திருக்க, ஏற்ற இறக்கமே இல்லாது பாடின தேவ கீதங்கள் ஒன்றிரண்டிற்குப்பின், ராபர்ட்டின் அம்மாவுடைய துக்கம் கலந்த அழுகுரல் மட்டும் கொஞ்சம் பெரிதாகக் கேட்க, சில நிமிடங்களில் ப்ரேயர் முடிந்துவிட வெளியேவரும் அனைவரின் முகங்களும் துக்கத்தின் சாயல் கொஞ்சம்கூட இன்றிச் சந்தோஷமாகத்தான் தெரியும். நானும், தம்பியும் சிலசமயம் அக்காவும்கூட கலந்துகொண்ட ப்ரேயர்களில் அக்கா, ” மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன் ” ” அன்னை மேரி உன்னையன்றி ஆறுதலை யார் தருவார் ” போன்ற பாடல்களைப் பாடினதை ராபர்ட்டின் அம்மா வெகுவாகப் பாராட்டினதில் உற்சாகமாகி நானும் ” எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே ” என்ற பாட்டைப் பாடினேன். என் தம்பி அவனும் ஒரு பாட்டைப் பாடியே ஆவேன் என்று அடம்பிடித்து ஞான ஒளி படத்தில் ” அம்மாக் கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என்மேல் ஆசை இல்லையோ ” என்ற பாட்டைக் கிறிஸ்தவ கீதம் என்று எண்ணிப் பாட ஆரம்பித்தவுடன் அந்த இடமே பரபரப்பாகி, ராபர்ட்டின் அப்பா என் தம்பியைக் கொத்தாகக் க்ரேன் தூக்குவதுபோல் தூக்கி வீட்டுக்கு வெளியில் கொண்டுவந்துவிட்டார். அவனைப் பாடவிடாததில் இரவெல்லாம் அழுது சமாதானமே ஆகாது ஒருவழியாய்த் தூங்கிப்போனாலும், அதன்பிறகு விடாப்பிடியாக ராபர்ட் வீட்டைக் கடந்து போகும்போதெல்லாம் அந்தப் பாட்டையே பாடிக்கொண்டிருந்தான். நானும் ப்ரேயரில் கலந்துகொண்ட இரவுகளில், ” சாப்பிட வர்றியாடா” ? என்று அவர்கள் கேட்கும்போதெல்லாம், ராபர்ட் கொடுத்த ” வெண்ணை” ஞாபகம் வர தலையை வேண்டாமென்று ஆட்டிவிட்டு ஓட்டமாய் ஓடி வந்துவிடுவேன். ஆனால் வீட்டிலும் சாப்பிடுவதற்குப் பயந்த நாட்களும் ஏற்பட்டுவிட்டது.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு ராயர் குடும்பம் புதிதாய்க் குடிவந்து இருந்தது. ரெண்டே ரூம்கள் இருக்கும் அந்த வீட்டில் ரெண்டு பசங்களும், ரெண்டு பெண்களும் ரெண்டு மாமிகளும் என எல்லாம் ரெண்டு ரெண்டாய் இருக்க, மாமா மாத்திரம் எல்லோர் அளவும் சேர்ந்த ஒன்றாய் இருந்தார். ஒர்க் ஷாப்பில் ஸ்டெனோவாய் இருந்ததில் அவரே சுருக்கெழுத்துப்போல் உயரத்தில் சுருங்கித்தான் இருந்தார். பி. ஆர். ராகவேந்திர ராவ் என்ற பெயரைக்கூட பி. ஆர்.ஆர். ராவ் என்று தொழில் தர்மத்திற்கேற்றவாறு சுருக்கி வைத்திருந்தார். சற்றே கன பாடியாதலால் கொஞ்சம் மெதுவாய் நடப்பார். நடந்துவருவது, கேஸ் சிலிண்டரை மாயக்கை ஒன்று உருட்டிக்கொண்டு வருவதுபோல் இருக்கும். மாமிகள் ரெண்டும் ஆரம்பமும் முடிவும் எங்கே என்று கண்டுபிடிக்க முடியாதவாறு கொச கொசவென மடிசார் கட்டிக்கொண்டு ” காயரே, பூயரே ” என்று மராத்தியில் வீட்டை நிறைத்து உறுமிக்கொண்டிருப்பார்கள். பெரிய பெண், ச்சைனீஸ் இன்வேஷனின்போது பிறந்ததாலோ என்னவோ மூக்குச் சப்பையாய் இருக்க இன்னொரு பெண் லக்ஷணமாய் இருக்கும். பெரிய பையன் மாதவன், என்னைவிட ரெண்டு வயது மூத்தவன். சின்னவன் ரங்கேஷ் என்னைவிட ரெண்டு வயது இளையவன். எல்லோரும் டவுனுக்குப் போய்ப் படித்துவந்தார்கள்.அந்த மாமி சும்மா எப்போதாவது எங்களை வெளியில் பார்த்தால், மராத்தி கலந்த சிரிப்பு சிரித்து விட்டுப்போவதோடு மட்டும்தான் எங்கள் வீட்டோடு அவர்கள் தொடர்பு இருந்தது. ஆனால். அந்த வருடம் என் அக்கா ஜெயா செய்த அடத்தினால் நவராத்திரிக்குக் கொலு வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளோனோம். படுக்க, படிக்க என்று சற்றே சுதந்திரமாய் இருப்பதற்காக இருந்த ஒரே ரூமும் கொலு வைத்து நிறைந்ததில் நாங்களெல்லாம் கொலுப்படிக்குக் கீழேயும் , இரும்பு பீரோவிற்கு மேலேயும் என பத்து நாட்கள் படுத்துக்கொள்ள வேண்டியிருந்ததில் வீடே “அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்” ஆகிப்போனது. பொன்னேஸ்வரி அம்மன் சன்னதிக்கு வரும் கும்பலைவிட எங்கள் வீட்டிற்கு நிறைய பேர் வரவேண்டும் என்ற ஜெயா ப்ரயத்தனப்பட்டதில், ராயர் வீட்டுப் பெண்கள் தப்பிக்கமுடியாமல் எங்கள் வீடுகளுக்கிடையேயான “வாஹா பார்டர்” திறக்கப்பட்டது. முதல் நாளிலிருந்து ஆரம்பித்த சுண்டல் பரிமாற்றம் பின் நாட்களில் பெரிய ” பார்ட்டர் ” வர்த்தகம்போல் பெருகிப்போனதில் ரொம்ப அடிபட்டது நானும் என் தம்பி ராஜாவும்தான். “மாமி, இன்னக்கி ராகி உப்புமா பண்ணினேன், எப்படி இருக்குன்னு பாருங்கோ” என்று அவர்கள் கொடுத்ததெல்லாம் வாயில் வைக்க வழங்கவில்லை. உப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல், ஸ்வீட் என்றால் திதிப்பும் இல்லாமல் எதெதையோ பண்ணிக்கொடுத்து எங்கள் மீது என்ன காரணத்தாலோ ஒரு பெரிய ” க்யூசைன் வார் ” நடத்திக்கொண்டிருந்தாள் அந்த மாமி. அவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது வந்தால் நாங்கள் சாப்பிட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தம்வேறு இருந்தது. சாப்பிடாமல், பிச்சைக்காரனுக்குப் போடலாம் என்றால், எல்லாப் பிச்சைக்காரர்களும் எங்கள் வீட்டில் பிச்சை வாங்கிக் கொண்டபின்தான் ( போடாவிட்டால், அவர்கள் பேச்சை வாங்கிக்கொள்ளவேண்டும்) பக்கத்து வீட்டிற்குப் போய் வாங்கிக்கொள்வது என்ற ராபர்ட் க்ளைவ் காலத்து ஒழுங்கு வைத்திருந்தார்கள். அதனால், அந்த மாமி கொடுத்திருந்த ராகி உப்புமாவை எந்த பைராகிக்காவது போட்டுவிட்டால், அவன் அடுத்த வீட்டிற்குப் போய் முதல்வேலையாகப் பிச்சைப் பாத்திரத்தில் இருக்கும் அந்த வீட்டினுடைய ராகி உப்புமா அவர்கள் சாப்பிடும் முன்னரே இவன் பாத்திரத்திற்கு வந்துவிட்டதைப் போட்டுக்கொடுத்துவிடுவான். ஆகையால், பிச்சைக்காரர்களுக்கு அதைப் போடமுடியாது. “அப்படிப்போடுவது மரியாதையாகவும் இருக்காது ” என்று நான் ஒருமுறை சொன்னது, அந்த வீட்டின் இரண்டாவது பெண் அதைக்கொண்டுவந்து கொடுத்ததால்தான் என்று என் தம்பி ராஜாவிற்கு ஒரு சந்தேகம் இருந்தது. சரி பிச்சைக்காரர்கள் வேண்டாம் என்று எல்லவற்றையும் சுருட்டி ” பேசும்படம் ” கமல்மாதிரி பேக்பண்ணி எடுத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளிப்போய் எங்காவது தள்ளிவிடலாம் என்று போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருக்கும் சின்னப் பையன் ” அண்ணா, நானும் வர்ரேன் ” என்று கிளம்பிவிடுவான். உண்மையிலேயே எங்களால் மெல்லவும் முடியவில்லை: முழுங்கவும் முடியவில்லை. மேலும், பக்கத்துவீட்டு மாமியோ நாளாக நாளாக, புதுசு புதுசாக ரிசர்ச் பண்ணிப் பலகாரங்களைத் தயார் பண்ன ஆரம்பித்துவிட்டாள். எள், கொள் என்று அதிகம் புழக்கத்தில் இல்லாத தானியங்களை வைத்து அவள் செய்த பலகாரங்களின் வகை முறை மாத்திரம் தெரிந்திருந்தால் , விஜய் டி.வி.யில் இப்போது நான் தான் ‘கிச்சன் கில்லாடி’யாய் இருந்திருப்பேன். ஊரெல்லாம் பொறுக்கிவிட்டு, ராத்திரி நான் தான் லேட்டாகச் சாப்பிட வந்துகொண்டிருந்ததால், எனக்கே மாமியின் பரிசு அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. மாமியோ, ஆரம்ப நாட்களைப் போலின்றி எங்களின் அபிப்பிராயங்களெல்லாம் கேட்காது, செல்ஃப் செர்டிஃபிகேஷன் செய்துகொண்டு, ” இன்னிக்குப் பண்ணினது ரொம்ப நன்னா அமஞ்சிருக்கு ” என்று தன் கிச்சன் க்ரியேட்டிவிட்டிகளை எங்கள் வீட்டில் ‘ டம்ப் ‘ செய்ய ஆரம்பித்துவிட்டாள். நல்ல வேளை, என் அக்கா ஜெயாவின் பிறவிக்குணமான, ” யாராயிருந்தாலும் மூன்றே மாதத்தில் சண்டை ” என்ற அருமருந்து கொஞ்சம் லேட்டாக ஆறு மாதத்தில் வேலை செய்ய, ஏதோ ஒரு அற்ப ஹேர்ப்பின் விவகாரத்தில் பண்ட வரத்து நின்று போனது.
ராயர் குடும்பமோ, ரயில்வே காலனியின் கலாச்சாரத்துடன் ‘அலைன்’ ஆகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் இருவீடுகளின் பெண்கள் போட்டுக்கொண்ட சண்டை ஒன்றும் பசங்களைப் பாதிக்கவில்லை. என்னோடு, ராயர் வீட்டுப் பெரிய பையன் மாதவனும் அடிக்கடி ராபர்ட் வீட்டிற்கு வந்துபோவான். மாதவன் செயிண்ட் ஜோஸஃப்’ஸ் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்ததால் அவனை ராபர்ட் வீட்டிலிருந்த பெரியவர்களுக்குப் பிடித்துப்போயிருந்தது. அவனும் ஸ்கூலில் சொல்லிக்கொடுத்த பைபிளிலிருந்து சரளமாக தேவ வாக்கியங்களை எடுத்துச் சொல்வதில் அவர்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ராபர்ட்டிற்கும், ப்ரிட்டோவிற்கும் ஏன், அவர்களின் அக்காவிற்கே சரியாகத் தெரியாத கிறிஸ்தவ ஸ்தோத்திரங்களை மாதவன் சொல்வதில் புளகாங்கிதமடைந்த ராபர்ட்டின் அம்மா அந்த வருடத்துக் கிறிஸ்துமஸுக்கு மாதவனுக்கும் புது ட்ரெஸ் வாங்கித்தரலாமா என யோசித்துக்கொண்டிருந்தாள். இது ஏனோ ராபர்ட்டின் அக்கா கேரலினுக்குப் பிடிக்காமல் போனது. எப்போதும் மாதவனோடு ஒப்பிட்டுத் தங்களைக் குறை கூறும் வழக்கும் அம்மாவிடம் இப்போதெல்லாம் அதிகமாகிக் கொண்டுவருவது குறித்து அவளுக்கு எரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. இதில் புது ட்ரெஸ் வாங்கித்தருவதென்பது ஒத்துக்கொள்ளமுடியாத விஷயமாகவும் அது வீரமாமுனிவர் காலத்திலிருந்து தங்கள் குல வழக்கத்தில் இல்லாததெனவும் அவளுக்குப்பட்டதால், தன் எதிர்ப்பை எப்படிக் காட்டுவது என்பது குறித்தே அவள் சிந்தனை இருந்தது. ராபர்ட்டிடமும் அவள் இதைப் பற்றிப் பேசினாள். அவனுக்கும் பிரிட்டோவிற்கும் இதைப் பற்றி அபிப்பிராயம் ஒன்றும் இல்லாவிடினும், அக்கா சொல்வதைக் கேட்டுக்கொண்டார்கள்.
அந்த வருடக் கிறிஸ்துமஸிற்கு பத்தே நாட்கள் இருக்கும்போதுதான் அங்கு விதி விளையாடிவிட்டது. பத்து நாட்களுக்கு முன் நடந்து முடிந்திருந்த அரையாண்டுத் தேர்வின் திருத்திய பேப்பர்களை எல்லா வாத்தியார்களும் ஒரே நாளில் சொல்லிவைத்தாற்போலக் கொண்டுவந்து எங்களுக்குப் பீதியைக் கிளப்பினார்கள். நான் மயிரிழையில் ஃபெயிலில் இருந்து தப்பிவிட, ராபர்ட் எல்லா பேப்பர்களிலும் ஒற்றை இலக்க மதிப்பெண்ணே வாங்கியிருந்தான். எங்கள் சரித்திர ஆசிரியர் செபஸ்டியன், பியானோ வாசிப்பதில் விற்பன்னர். சர்ச்சின் எல்லா சர்வீஸ்களிலும் அவர் வாத்தியம் வாசிப்பது பிரசித்தம். பியானோவின் சங்கீதப் பற்களை மெல்லத் தடவி மனதில் எழும் அரூப நாதத்தைத் தேவனின் பரிசானத் தன் நீண்ட மென் விரல்களின் மூலம் அந்த வாத்தியத்தின் மன எழுச்சியாக வழியச் செய்யும் ரசவாதம், கேட்கும் எல்லோரையும் காலத்தில் கரைத்துவிடும். அலை அலையாய் எழும் இசை, கன்னி மரியாளின் அணைப்பில் கண்மலர் மூடித் தூங்கிக்கொண்டிருக்கும் தெய்வக்குழந்தையின் பின் நாளின் தியாகத்திற்கு இப்போதே சோகம் கலந்த நன்றியைப் பரிசளித்துக்கொண்டிருப்பதாகத்தான் எங்கள் தமிழாசிரியர் சாலமன் தன்ராஜ் ( தனராசு என்றுதான் அவர் எழுதுவார் ) அந்த நாளில் ஹிந்துவில் செபஸ்டியன் வாத்தியாரைப் பற்றி எழுதியிருந்தார். அவரின் சங்கீதம் சரித்திரப் பிரசித்தி பெற்ற அளவுக்கு தேவன் அவரது சரித்திர வகுப்பை எங்கள் காதுகளுக்கு சங்கீதம் ஆக்காமல் விட்டுவிட்டார். ராபர்ட் போகும் அதே சர்ச்சில் கடவுள் ஊழியம் செய்யும் அவரின் க்ளாசில் இந்த வருடம் ஒரு நாள் அட்டூழியம் செய்துகொண்டிருந்த ராபர்ட்டிடம் ” எங்கடே சரித்திரப் புஸ்தகம் ” ? என்று கேட்டு அவன் பையில் புத்தகங்களைத் தடவிக் கொண்டிருந்தபோது ” என்னடே புஸ்தகம் கேட்டா ஆர்மோனியம் வாசிக்கே”? என்று பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டார். நிலைகுலைந்துபோன ராபர்ட் அந்தக் கணத்திலிருந்து செபஸ்டியன் வாத்தியாரைப் பழிவாங்கும் தருணத்தை எதிர் நோக்கிச் சிகண்டி போலக் காத்திருந்தான்.
கிறிஸ்துமஸுக்கு ஐந்து நாட்களே இருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, ராபர்ட்டின் வீட்டில் சர்ச்சின் ஃபாதரும், ராபர்ட்டின் ஃபாதரும், செபஸ்டியன் சாரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது, ராபர்ட்டின் மோசமான மதிப்பெண்கள் குறித்து அசந்தர்ப்பமாய் செபஸ்டியன் சார் சொல்லிவிட , கிறிஸ்துமஸ் கழிந்தபின் ப்ராக்ரெஸ் ரிபோர்ட்டைக் காண்பித்து அம்மாவிடம் அடியையும் அப்பாவிடம் கையெழுத்தையும் வாங்கிக்கொள்ளலாம் என்றிருந்த ராபர்ட்டிற்கு செபஸ்டியன் சார் செய்தது பேரிடியாய்ப் போயிற்று. இதை எல்லாம் அறியாத என் தம்பி சர்ச் ஃபாதரை உற்று நோக்கி, அவரின் வெள்ளை அங்கி மறைக்காத கால் பகுதியில் பேண்ட் தெரிவதைப் பார்த்து, ” டேய், ஃபாதர் பேண்டும் போட்டுருக்காருடா” என்று அவர் இந்து சாமியார் போலல்லாது இருந்தது குறித்து ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தான். இதையெல்லாம் கவனிக்காத ராபர்ட்டின் உள்ளம் கோபத்தில் பொங்கிக்கொண்டிருந்தது. செபஸ்டியன் வாத்தியார், அவனின் இந்த வருடக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் கெடுத்துவிட்டதற்குப் பழிவாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், சர சரவென்று மாமரத்தின் மேலேறி அவர் அவன் வீட்டிலிருந்து வெளியேவரும்போதுக் குறிவைத்து அவர் தலையில் கல்லால் அடித்துவிட்டு யாருக்கும் தெரியாது என நினைத்து மறைந்துகொண்டான். நடு மண்டையில் கல்லால் அடிவாங்கிய செபஸ்டியன் சார், ” ஏசுவே!” என அலறி மயங்கிவிழுந்தார். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தபோது அப்போது அந்தப் பக்கம் வந்த மாதவன்தான் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து ,அவர் தலையில் பட்டிருந்த காயத்தைத் திலிருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தத்தைத் துடைத்து அவருக்குக் குடிக்க ஏதாவது கொடுக்கும்படி ராபர்ட்டின் அம்மாவிடம் கேட்டபோதுதான் எல்லோருக்கும் அவன் துரிதமாகச் செய்துவிட்டிருந்த முதலுதவி புரிந்தது. பின் அவன் வேஷ்டியைக் கிழித்தே அவரின் மண்டையில் ஒரு கட்டையும் போட்டு, ” ஏசுவின் ரத்தம் ஜெயம் ” என்று தனக்குத் தெரிந்த தேவ வசனத்தைச் சொன்னபோது செபஸ்டியன் சாரே கண்கலங்கி அவனைக் கட்டிகொண்டு உச்சி மோந்தார். மாமரத்தின் மேலிருந்த ராபர்ட்டால் வெகு நேரம் அங்கிருக்க முடியவில்லை. பெரிய பெரிய கட்டெறும்புகள் அவனைக் கடிக்க ஆரம்பிக்க அவன் எல்லோரும் பார்க்கவே மரத்திலிருந்து இறங்கும்படி ஆயிற்று. அவனை ஒன்றும் செய்யவேண்டாமென செபஸ்டியன் சார் சொல்லிச் சென்றிருந்தாலும், அவன் அம்மா மாங்குச்சியாலேயே அவனை விளாசி விட்டாள். அவள் அடித்ததை எல்லாம்விட ” மாதவனின் மூத்திரத்தைக் குடி ” என்று சொன்னதுதான் அவனுக்கு மிகவும் வலித்திருக்க வேண்டும் என அவன் அக்கா கேரலின் பின் நாளில் சொல்லிகொண்டிருந்தாள். அன்று எட்டு மணிக்கு நடந்த குடும்பப் ப்ரேயரில் விசும்பி விசும்பி ராபர்ட் அழுதுகொண்டிருக்க, அவன் அம்மா தேவனிடம் ராபர்ட் புரிந்த மாபாவத்துக்கு மனமுருகி மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்ததில் ப்ரேயர் முடியஅரைமணி நேரம் அதிகமாயிற்று. அன்று ராபர்ட்டிற்கு இரவு சாப்பாடு இல்லை என்று அவன் அம்மா சொல்லிவிட்டாள். அன்றிரவு ராபர்ட் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். போனவன் இன்றுவரை எங்கிருக்கிறானென்று தெரியவில்லை, என்ன ஆனானென்றும் தெரியவில்லை.
ராபர்ட் காணாமல் போன சில மாதங்களில் அவன் அம்மா நிறையவே மாறிப்போனாள். முழுக்கை வைத்த ஜாக்கெட்டை ஆண்கள் ‘இன்’ செய்துகொள்வதுபோல் போட்டுக்கொண்டு, வெய்யில் இல்லாத நாட்களிலும் குடைபிடித்துக்கொண்டு அடிக்கடி வெளியே போய்வந்துகொண்டிருந்தாள். மணப்பாரைப் பக்கம் உள்ள கிராமத்திற்குச் சென்று சுகாதாரம் மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஊழியம் செய்து வருவதாய் ராபர்ட்டின் அப்பா பக்கத்து வீட்டம்மாவிடம் இரண்டு அடி குனிந்து சொன்னது ஒன்றும் எனக்கு அப்போது புரியவில்லை. ராபர்ட் வீட்டு மாமரத்தில் காய்க்க ஆரம்பித்திருந்து கனிந்த பழங்கள் மிகவும் புளிப்பாய் இருந்தது. மாதவன் காலேஜ் போக வேண்டிய வருடத்தில் ராயர் குடும்பம் ஸ்ரீரங்கம் கீழ உத்தர வீதியிலிருந்த அவர்களின் மாமா வீட்டிற்கு வந்துவிட்டது. ராபர்ட்டின் அக்கா கேரலினும் கன்யாஸ்த்ரீயாகிவிட இறக்கை அசைக்காத சமனசுகளும் நடுங்கும் நட்சத்திரங்களும் உற்று நோக்கும் மாட்டுத் தொழுவத்தில் வைக்கோற் புல்லில் படுத்திருக்கும் கிறிஸ்து ராஜா அப்படியே ராபர்ட் மாதிரியே இருப்பதாக கேரலின் அமைத்திருந்த இந்த வருடக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் போய்வந்த என் அக்கா சொன்னாள்.
- மலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை
- நினைவுகளின் சுவட்டில் (83)
- பழமொழிகளில் பல்- சொல்
- ப்ளாட் துளசி – 2
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 24
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)
- பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி
- வருங்காலம்
- விளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்
- கல்லா … மண்ணா
- முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்
- ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)
- கடைச்சொல்
- எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!
- அட்டாவதானி
- அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்
- கிறிஸ்துமஸ் பரிசு!
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3
- சுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘
- நானும் பி.லெனினும்
- ராபர்ட்டின் கிறிஸ்துமஸ்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’
- அழுகிணிராசாவும் புளுகிணிமந்திரியும்
- எங்கே இறைமை ?
- அரங்காடல்
- எப்படி இருக்கும்?
- சூபி கவிதை மொழி