பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்

This entry is part 37 of 40 in the series 8 ஜனவரி 2012

முட்டாளுக்குச் செய்த உபதேசம்

 

ரு காட்டுப்பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அவை குளிர் காலத்தில் அசாத்தியக் குளிரால் வாடிக்கொண்டிருந்தன. இரவில் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்டன.. ‘அது நெருப்புத்தான்’ என்று அவை எண்ணி அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, காய்ந்த புல்லையும் இலைகளையும் போட்டு அதை மூடிவிட்டன. பிறகு தங்கள் கைகளையும், வயிற்றையும், மார்பையும், விலாப்புறத்தையும் அதன்முன் நீட்டிக் காட்டிச் சொறிந்துகொண்டபடியே மானசீகமான உஷ்ணத்தை அனுபவித்து இன்படைந்தன. அவற்றில் ஒரு குரங்கு குளரில் ரொம்பவும் வாடியதால் அதிலேயே கவனம் பூராவும் செலுத்தி அதை அடிக்கடி ‘பூ பூ’ வென்று ஊதிற்று.

 

அப்போதுதான் சூசீமுகன் என்ற பறவை மரத்திலிருந்து இறங்கி வந்தது. அதற்கு நாசகாலம் நெருங்கிவிட்டது போலிருக்கிறது. அந்தக் குரங்கைப் பார்த்து, ‘’நண்பனே, வீணாக ஏன் கஷ்டப்படுகிறாய்? அது நெருப்பல்ல; மின்மினிப் பூச்சிதான்’’ என்று சொல்லிற்று. அதன் வார்த்தையைக் கேட்காமல் குரங்கு மீண்டும் ஊதிற்று. பறவை பல தடவை தடுக்க முயற்சித்தும் ஊதுவதைக் குரங்கு நிறுத்தவில்லை. விஷயத்தை நீட்டுவானேன்? அந்தப் பறவை குரங்கின் காதருகில் வந்து உரத்த குரலில் மீண்டும் கத்தியது. குரங்கு உடனே அதைப் பிடித்து ஒரு கல்லின்மேல் ஓங்கி அறைந்தது. முகம், கண், தலை, கழுத்து எல்லாம் நசுங்கிப்போய் அந்தப் பறவை செத்தது.

 

அதனால்தான் ‘வளையாத மரத்தை வளைக்கவும், கல்லை உடைக்கவும் கத்தியால் முடியாது…’ என்ற செய்யுளைச் சொன்னேன்.

 

மேலும்,

 

யோக்கியதையில்லாதவனுக்குக் கல்வி போதிப்பதில் என்ன லாபம்? மூடிய குடத்தில் வைத்த விளக்கு வீட்டு இருட்டைப் போக்குமா?

நிச்சயமாய் நீ ஒரு நீசப்பிறதிதான். ‘அபஜாதன்’ என்கிற வகையைச் சேர்ந்தவன். எப்படி என்று கேள்:

 

புத்திரர்கள் நான்கு வகைப்பட்டவர்கள் என்று சாஸ்திரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஜாதன், அனுஜாதன், அபிஜாதன், அபஜாதன் என்று நான்கு வகை.

 

தாய்போல் குணமுள்ளவன் ஜாதன்; தந்தைபோல் குணமுள்ளவன் அனுஜாதன்; நல்ல குணமுள்ளவன் அபிஜாதன்; கீழோனுக்கும் கீழானவனே அபஜாதன்.

 

குடும்பத்தை உயர்ந்த நிலைக்ககக் கொண்டு வருவதற்கு மிகுந்த புத்தி கூர்மையோ, செல்வமோ, செல்வாக்கோ பெற்றவன்தான் தாய்க்கு உண்மையான பிள்ளையாகிறான்.

 

என்கிற சொல் ரொம்பவும் சரி. மேலும்,

 

கண்ணுக்கு அழகாயிருப்பவனைக் காண்பது சுலபமே; அறிவுள்ள மனிதனைக் காண்பதுதான் துர்லபம்.

 

தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்கிற இருவர்களின் ஞாபகம் வருகிறது. பிள்ளையின் மிதமிஞ்சிய புத்தியால் தகப்பன் புகையால் மூச்சடைதது இறந்தான்.

 

என்கிற கதை சரியான கதை.’’ என்றது கரடகன்.

 

‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்கவே, கரடகன் சொல்லத தொடங்கியது:

 

தர்மபுத்தியும் துஷ்டபுத்தியும்

 

ரு நகரத்தில் தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் இரண்டு வியாபாரிகளின் புத்திரர்கள். பணம் திரட்டுவதற்காக அவர்களிருவரும் வெகு தொலைவிலுள்ள வேறொரு நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக யாரோ ஒரு சந்நியாசி ஆயிரம் தங்க நாணயங்களோடு முன்பு  புதைத்து வைத்திருந்த ஒரு குடத்தை எடுத்துத் தர்மபுத்திக்குத் தந்தான். தர்மபுத்தி துஷ்டபுத்தியோடிருந்து யோசித்து, ‘நாம் பாக்கியசாலிகள்தான். இனிமேல் ஊருக்குத் திரும்பிப் போகலாம்’ என்று தீர்மானித்தான். இருவரும் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.

 

சொந்த ஊருக்கு அருகே வரும்போது தர்மபுத்தி, துஷ்டபுத்தியைப் பார்த்து, ‘’நண்பனே, இதில் பாதி உனக்குத்தான் சொந்தம். அதைப் பெற்றுக் கொள். அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய் சிநேகிதர்கள், சிநேகிதர்கள் அல்லாதவர்கள் மத்தியிலே இருந்து நல்ல பெயர் எடுத்து விளங்கலாம்’’ என்று கூறினான்.

 

ஆனால் துஷ்டபுத்தி சுயநலத்தை மட்டும் பாராட்டுகிற கெட்ட எண்ணத்துடன், ‘’நண்பனே, இந்தப் பணத்தைப் பொதுவில் வைத்திருக்கும் வரை நமது நட்பு மாறாமலே இருந்துவரும். ஆகவே தலா நூறு நாணயங்கள் எடுத்துக்கொண்டு மிச்சத்தைப் பூமியில் புஆத்துவிட்டு வீட்டுக்குப் போவோம். அதன் குறைவு நிறைவுகள் நமது நன்னடத்தையைச் சோதித்துக் காட்டிவிடும்’’ என்று சொன்னான். சுபாவமாகவே நல்ல புத்தியுள்ள தர்மபுத்தி, அவன் பேச்சில் மறைந்திருந்த கெட்ட எண்ணத்தைத் தெரிந்துகொள்ளாமல், அதற்கு ஒப்புக் கொண்டான். கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு மிச்சத்தைப் பூமியில் ஜாக்கிரதையாகப் புதைத்துவிட்டு இருவரும் நகரத்துக்குள் புகுந்தனர்.

 

துஷ்டபுத்தி கெட்டவழியில் புத்தியைச் செலுத்தினான். அவன் விதியும் அப்படியிருந்தது. அதனால் கொஞ்சகாலத்திலேயே பணம் பூராவையும் விரயம் செய்துவிட்டான். மறுபடியும் அவனும் தர்ம புத்தியும் போய் தலா நூறு நாணயங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினார்கள். ஆனால் அதையும் ஒரு வருஷம் ஆவதற்குள் அவன் செலவழித்து விட்டான்.

 

துஷ்டபுத்திக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அவனோடு போய் மறுபடியும் தலா நூறு நாணயங்கள் என்று பங்கு பிரித்துக் கொண்டால் மிஞ்சியிருக்கப் போவது நானூறு நாணயந்தானே! திருடுவதென்றால் பிறகு திருடிப் பிரயோஜனமில்லை. இப்போதே ஆறுநூறு நாணயங்களையும் திருடி விடலாமே!’ என்று நினைத்தான். தனியேபோய் மிச்சப் பணத்தைத் திருடிக்கொண்டு தரையைச் சமன் செய்துவிட்டுத் திரும்பினான்.

 

ஒரு மாதம் கழிந்தவுடன், தானே தர்மபுத்தியிடம் போய், ‘’நண்பனே, மிச்சப் பணத்தையும் சமமாகப் பிரித்துக்கொள்ளலாம், வா’’ என்று சொல்லி, தர்மபுத்தியோடு போய் பூமியைத் தோண்டித் தொடங்கினான். தோண்டிப் பார்த்தபோது பணமில்லாமலிருப்பதைக் கண்டனர். உடனே துஷ்டபுத்தி ஆத்திரத்தோடு அந்தக் காலிக்குடத்தைத் தன் தலையில் இடித்துக்கொண்டு ‘’எங்கே அந்தப் பணம்? தர்மபுத்தி, நீதான் அதைக் கட்டாயம் திருடியிருக்க வேண்டும். எனக்குச் சேரவேண்டிய பாதியைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் புகார் செய்வேன்’’ என்று சொன்னான்.

 

அதற்குத் தர்மபுத்தி, ‘’நீசனே, மூடு வாயை! நான் தர்மபுத்தி. இப்படிப்பட்ட திருட்டுக் காரியத்தை நான் செய்யமாட்டேன்.

 

பிறர் மனைவியைத் தாய்போலும், பிறர் சொத்தை மண்போலும், எல்லா உயிர்களையும் தன்னைப்போலும், தர்மபுத்தியுள்ளவர்கள் பாவிக்கின்றனர்.

 

என்கிற செய்யுள் நீ அறிந்ததுதான்’’ என்றான்.

 

இருவரும் விவாதித்துக் கொண்டே நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். பணம் திருட்டுப்போன விஷயத்தைச் சொன்னார்கள் அதைக் கேட்டு நீதி வழங்கும் அதிகாரிகள் அவர்களுக்கு ஒரு தெய்வப்பரீட்சை வைக்கக் கட்டளையிட்டனர்.

 

அப்போது துஷ்டபுத்தி, ‘’என்ன கஷ்டம்! நீங்கள் நியாயம் சரியாக வழங்க வில்லை.

 

ஒரு  வழக்கில் எழுத்து மூலமாக பத்திரமே சிறந்த சாட்சியம்; அடுத்த படியாக கண்ணால் கண்ட சாட்சியமும் காதால் கேட்ட சாட்சியமும்  சிறந்தவை. அவை இல்லாமற் போனால்தான் தெய்வப் பரீட்சை வைக்கத்தகும் என்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது.

 

ஆகவே, இந்த வழக்கில் எனக்கு வனதேவதையை சாட்சி, எங்கள் இருவரில் யார் நியாயஸ்தன், யார் நியாயஸ்தன் இல்லை என்று அதுவே உங்களுக்குச் சொல்லும்’’ என்றான்.

 

அதைக் கேட்ட அதிகாரிகள், ‘’நீ சொல்வது சரிதான்.

 

நீசனாயிருந்தபோதிலும் ஒரு வழக்கில் ஒருவன் சாட்சி கொண்டு வந்தால் அவனுக்குத் தெய்வப்பரீட்சை வைக்கக்கூடாது. வனதேவதையே சாட்சியாக வருகிறது என்றால் பிறகு கேட்கவும் வேண்டுமா?

 

என்று இன்னொரு நீதி சாஸ்திர வாக்கும் இருக்கிறது. எனவே எங்களுக்கும் இந்த வழக்கில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. நாளைக் காலை நீங்கள் இருவரும் எங்களோடு அந்தக் காட்டுக்கு வரவேண்டும்’’ என்றனர். அதன்பிறகு அவ்விருவரிடமும் ஜாமீன் பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

 

துஷ்டபுத்தி வீட்டுக்குப் போனதும் தன் தந்தையிடம், ‘’அப்பா! அந்த நாணங்கள் என் வசம்தான் இருக்கின்றன. உங்களிடமிருந்து ஒரு வார்த்தை வேண்டும். நாமிருவரும் இன்றிரவே யாருக்கும் தெரியாமல் பணம் தோண்டி யெடுத்த இடத்துக்குப் போவோம். அதன் பக்கத்திலுள்ள ஒரு மரப் பொந்தில் உங்களை உட்கார வைக்கிறேன். காலையில் நீங்கள் அதிகாரிகளிடம் சாட்சியம் சொல்ல வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டான்.

 

இப்படிப் பிள்ளை சொன்னதும், ‘’மகனே, இருவருமே நாசமாகி விடுவோம். இது ஒரு உபாயமே இல்லை.

 

உபாயத்தைத் தேடும் விவேகி அதிலுள்ள அபாயத்தையும் பார்க்க வேண்டும். முட்டாள் நாரையின் குஞ்சுகளைக் கீரிப்பிள்ளை தின்றதைப் பார்!

 

என்கிற கதையில் நல்ல நீதி இருக்கிறது’’ என்றான் தந்தை.

 

‘’அது எப்படி?’’ என்று துஷ்டபுத்தி கேட்க, தந்தை சொல்லத் தொடங்கினான்:

Series Navigationகவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழாமுன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *