பூபாளம்

This entry is part 34 of 40 in the series 8 ஜனவரி 2012

செங்காளி
பொழுது புலரும் நேரத்தில் ஒரு சிற்றூரில் எழும் ஓசைகளெல்லாம்
ஒன்றாய்ச்  சேர்ந்து எப்படி பூபாளம் என்னும் பண்ணில்  பாடுவதைப்போல்
இருக்கின்றது  என்பதைச் சொல்லும் பாடல்கள்
—————————————————————————————————–
 
பொழுதும் புள்ளினமும்
கொக்கரக் கோவெனக் கோழிகள் கூவிட
காக்கைகள் ஒருசில காவெனக் கரைந்திட
குருவிகள் கூட்டம் கீச்செனக் கத்திட
இருள்தான்  மெதுவாய் இளகிடும் நேரம்
வெள்ளி முளைக்குமிவ்  விடியற் காலையில்
மெல்லென  கிராமம் முழித்திடும் வேளையில்
பண்ணை வீட்டில் பட்டியில் தொட்டியில்
என்னதான்  நடக்குதென எட்டிப் பார்ப்போம்
அவளும் குடும்பமும்
கிழவன் எழுமுன் கிழத்தி எழுந்து
நழுவின சேலையை நன்றாய்க் கட்டி
அவிழ்ந்த கூந்தலை அள்ளி   முடிந்து
தொழுதபின்  கண்களில் தாலியை ஒற்றி
வெளியே வந்து வாசலைப் பெருக்கி
வாளியில் சாணியை விரைவாய்க் கரைத்ததை
அள்ளித் தெளித்து  அழகாய் நடுவில்
புள்ளி வைத்தொருப் புதுக்கோலம் போட்டு
குளிர்தான் எனினும் குளித்து முடித்து
தளிர்போல் நெற்றியில் திருநீர் இட்டபின்
தூங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பி
பாங்குடன் முகத்தைப்  பரிவுடன் துடைக்க
குழந்தைதான் அமர்ந்து குறைந்த ஒளியில்
அழகிய குறளோடு ஆத்திச் சூடியும்
a for ant b for bat என
உரத்த  குரலில் ஒழுங்காய்ப் படித்திட
தொட்டில் நனைந்ததால்  தூக்கம் கலைந்து
மொட்டு போன்ற  மூக்கில் முனகி
மழலை மொழியில்   உம்உம்  உம்மென
அழுதிடும் குழவியை ஆட்டி அடக்கிட
பசுவும் கன்றும்
கன்றும் பசியால் கறவைப் பசுவை
அன்பு வழிந்திட  ம்மாவென் றழைத்திட
சேயின் குரல்தான் செவியில் விழுந்திட
தாயின் மடிதான் தானாய்ச் சுரந்திட
பசுவைக் கறக்கப் பாவையும் வந்ததன்
சிசுவின் கயிற்றைச் சட்டென  அவிழ்த்திட  
வாலைத் தூக்கி வடிவுடன் குதித்தது
பாலைக் குடிக்க பசுவிடம் பாய்ந்து
முன்னங் கால்களால் மண்டி இட்டு
முன்னும் பின்னும் மடியைத் தள்ளி
சப்பு சப்பெனச் சப்பிக் காம்பை
அப்படிக் குடிக்கும் அதில்வரும் அமிழ்தை
கன்றைச் சிறிதே குடிக்க விட்டு
பின்புறம் அதனைப்  பிடித்துக் கட்டி
தண்ணீர்  தெளித்துத்  தாயின்  மடியை
நன்றாய்க் கழுவி நீர்தான் வடிந்தபின்
விரைத்த காம்புகள் வலிக்கா திருக்க
விரலால்  கொஞ்சம் வெண்ணையைத் தடவி
சர்ர்ர்  புர்ர்ர்  சர்ர்ர்  புர்ரென
கறந்தபின்  பாலைக்  கலையம் தனிலே
மீண்டும் பாலை முழுதாய்க் குடித்திட
கன்றைக் கட்டிய கயிற்றை அவிழ்த்திட
பறந்தது போவதைப் பார்த்துச் சிரித்து
விரைந்திடு வாளவள் வீட்டிற் குள்ளே
எலியும் பூனையும் 
எலியைப் பிடிப்பதில் ஏமாந்த தினால்
வலியுடன்  மனந்தான்  வாடின பூனை  
பாலுடன் அவளைப் பார்த்த உடனே
வாலை நிமிர்த்தி வளைந்து நெளிந்தவள்
கால்களைச்  சுற்றிக் கத்திடும் மியாவென
பாலை அதுதான்  பருகிட ஊற்றிட
கிண்ணம் நிறைந்த கறந்த பாலைக்
கண்களை மூடிக்  குடித்தபின் பூனை
முன்னங் கால்களால்  மூக்கையும் வாயையும்
நன்றாய்த் துடைத்தபின் நழுவிடும் வெளியே
எருமையும் அவளும்
என்னைக் கறந்திட ஏன்வர வில்லை
என்பது போல எருமையும் கத்திட
கருமையும்  பொறுமையும் நிறைந்த எருமையை
திரும்பவும் வந்தவள் கறந்து செல்வாள்
மாடும் அவனும்
எழுந்த கணவன் எருதுகள் இருக்கும்
தொழுவம் சென்று தூய்மைப் படுத்த
மாடுகளை  அவிழ்த்து  மறுபுறம்  கட்டி
போடுவான் தட்டைப் போரில் உருவி
வாளியில் புண்ணாக்கை  வகையாய்க் கரைத்து
தாளியில் ஊற்றுவான் தவிட்டைச் சேர்த்து
தட்டுக் கூடையில்  திரட்டிய சாணியைக்
கொட்டுவான் சென்று குப்பைக்  குழியில்
கணவனும்  காஃபியும்
தொழுவம் துடைத்து திரும்பிய கணவன்
கழனிக்குப் போகுமுன்  குடிக்க நன்றாய்
கறந்த பாலைக் காய்ச்சி எடுத்து
குறைவாய் நீரைக் கொதிக்க வைத்து
கருப்பட்டி போட்டு காஃபியைக் கலந்து
முறுவல் ததும்பும் முகத்துடன் கொடுத்தபின்
தயிரும் மத்தும்
கட்டித் தயிரைக் கடைந்து எடுத்திட
சட்டியில் மத்தைச் சரியாய் நிறுத்தி
சரக்கு சரக்கென சுழற்றிச் சிலுப்புவாள்
பிரிந்த  வெண்ணை பனிபோல்  மிதந்திட
கோழியும் குஞ்சும்
கோழியை  அடைத்த கூடையைத்  திறந்திட
கோழியும் வெளிவரும் குஞ்சுகள் தொடர
கொக்கொக் கொக்கென கத்திய படியே
பக்குவமாய் குஞ்சுகள் பழகிக் கொள்ள
மண்ணைக் கிளரும் முறையைக் காட்டிடும்
தின்றிட அவைகள் தீனியைத் தேடி
மாடும்  சலங்கையும்
நாய்கள் முன்னால் நுகர்ந்து ஓடிட
தாய்போல் காக்கும் தோட்டம் நோக்கி
கொம்பில் சலங்கைகள் கொஞ்சிக் குலுங்கிட
வம்புகள் இன்றி விரைந்திடும் மாடுகள்
இவைகளின் பின்னால் அவனும் வருவான்
எவையெவை செய்யணும் என்றே எண்ணி
கப்பும் கறையும் கரைந்திடப்  பற்களை
வேப்பங் குச்சியால் விளக்கிக் கொண்டே
பாட்டியும் கொல்லமும்
உழைத்து களைத்து உலர்ந்த உடம்புடன்
பழைய நிகழ்வுகள்  பலதும் திரும்பிட
கால்களை நீட்டி கூடத்தில் அமர்ந்து
சுகமாய் இருக்க சுவற்றில் சாய்ந்து
சுருங்கிய மருங்குலில் சொருகி இருந்த
சுருக்குப் பையின் சுருக்கைத் தளர்த்தி
பொக்கை வாய்க்குள் பதமாய் அடக்கிட
பாக்குடன் வெற்றிலை பார்த்து எடுத்ததன்
நரம்பையும் காம்பையும் நகத்தால் கிள்ளி
நிறம்தர சுண்ணம் நன்றாய்த் தடவி
கொட்டுவாள் இவற்றைக்  கொல்லத்தில் இட்டு
டொக்கு டொக்கு டொக்கெனப் பாட்டி
பாட்டனும் தோட்டமும்
தலையில் துண்டு தோளில் போர்வை
இடையில் வேட்டி அடியில் கோவணம்
வாயில் சுருட்டுடன் வயலை நோக்கி
கையில் தடியுடன் கவனமாய்ப் பாட்டன்
நரம்புகள் தளர்ந்ததால் நடப்பார் மெதுவாய்
சரக்கு சரக்கென செருப்புகள் தேய்ந்திட
நரியும் நாயும்
தோட்டம் சேர்ந்தபின் திறப்பான் முதலில்  
ஆட்டுப் பட்டியின் அடைப்புப் படலை
பட்டியில்  இருந்த ஆடுகள் குட்டிகள்
படலைத் திறந்தபின் ம்ம்பே ம்பேயெனப்
புலம்பி எழுந்து புழுக்கையைப் போட்டு
தலைவனைத்  தொடர்ந்திடும் தழையிலைத்  தின்றிட
காட்டில் திரியும் குள்ள நரிதான்
ஆட்டு மந்தைகள்  அஞ்சிடக் கத்திட
நரியின் ஊளையை நாய்கள் கேட்டு
பரிபோல் விரைந்திடும்  பலமாய்க் குரைத்து
ஏற்றமும் தெம்மாங்கும்
கிழக்கு எழுமுன் கிணற்றடி சேர்ந்தவன்
பழகின மாடுகளைப் பிணைத்து நுகத்தில்
வடத்தைப்  பறியில் வலுவாய்க் கோத்து
குடத்தின் வாலைக் கயிற்றில் இணைத்தபின்
முன்னும் பின்னும் மாடுகள் நகர்ந்து
தண்ணீர்க் குடம்போல் தோன்றும பறியை
கடக்கு முடக்கென கபிலைச் சுழல
வடத்தின் வழியாய் வலித்து இழுக்க
நிறைந்த பறியும்  நீருடன் மேலே
விரைந்து வந்திடும் வாலை மடக்கி
மடக்கின வாலை முன்னே இழுத்திட
கொடகொட கொடவெனக்  கொட்டிடும்  தண்ணீர்
கொட்டிய  தண்ணீர் தொட்டியை நிறைத்து
தொட்டியில் இருந்து திறந்த வழியில்
வரப்பை ஒட்டிய வாய்க்கால் வழியாய்
விரைந்தே சென்று வயலை அடையும்
விடியும் வரையிலும் விடாமல் தொடருமிக்
கடின உழைப்பின் கனத்தைக் குறைத்திட
ஏற்றம் இறைக்கும் எருதுகள் கேட்டு
தேற்றம் பெறவே தெம்மாங்குப்  பாடுவான்

உலக்கையும் அவளும்
வலக்கை இடக்கை வகையாய் மாற்றி
உலக்கையை நன்றாய் உயர்த்தி தாழ்த்தி 
கும்மு கும்மு கும்மெனச் செக்கில்
கம்பை இடிபபாள் கருத்துடன் அவள்தான்
செக்கும் மாடும்
குறுக்குப்  பலகையைக்  குடத்தில் கோத்து
மறுபுறம் பலகையை மாடுகள்  இழுத்திட
கிரீச் கிரீச் கிரீச் கிரீச்சென
மரக்குடமும் பலகையும் மோதி  ஒலிக்க
பலகையும் உலக்கையும் பொருந்தி இருந்து
பலகைச்  சுழன்றிட  உலக்கையும் சுழல
குடமும் உலக்கையும் இடையில் சிக்கிய
கடலை பருப்பைக் கசக்கிப் பிழிந்திட
குடத்தில் மிதந்திடும் கசிந்த எண்ணெய்
திடமாய்ப்  புண்ணாக்கும்  திரண்டு  வந்திடும்
சைக்கிளும் மணியும்
கறந்த பாலைக் கணக்கிட்டு  வாங்கிட
விரைந்தே வருவார் வர்த்தகர் சிலர்தான்
கிணிங் கிணிங் கிணிங் கிணிங்கென
சைக்கிள் மணிதான் சத்தம் போட்டிட
வண்டியும் அவனும்
அறுத்த காய்களை அடைத்த மூட்டையை
பொருத்தமாய் வண்டியில் பார்த்து அடுக்கி
சடுதியில் அவைகளைச் சந்தையில் விற்க
கடகடவென ஓட்டுவான் கட்டை வண்டியை
துணியும் கல்லும்
வெள்ளாவி தனிலே  வேக வைத்தபின்
வெள்ளையாய்த் துணிகளை வெளுத்து எடுத்திட
தொப்பு தொப்பு தொப்பெனக் கல்லில்
தப்பித் தப்பித் துவைப்பான் ஒருவன்
இப்படி,
எத்தனை வித்தகர் எத்தனைக் கருவிகள்
எத்தனை அசைவுகள் எத்தனை ஒலிகள்
எல்லாம் சேர்ந்து எழுப்பிடும் நாதம்
சொல்லில் அடங்கா சுகமான சங்கீதம்
அம்மனை எழுப்பும் ஆலைய மணியுடன்
நம்பிக்கை யுடனொரு  நாளைத் தொடங்க
எளிய உயிர்கள்  எழுப்பிடும் இவ்விசை
எளிமையே  எனினும் எவ்வளவு இனிமை
Series Navigationஅழகின் சிரிப்புLearn Hindu Vedic Astrology
author

செங்காளி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *