அழகின் சிரிப்பு

author
0 minutes, 11 seconds Read
This entry is part 33 of 40 in the series 8 ஜனவரி 2012

 கே.எஸ்.சுதாகர்

ஷோபனா நிலைக்கண்ணாடி முன் நிற்கின்றாள். தன் ஆடைகளை சரி செய்தவாறே அழகு பார்க்கின்றாள். பிறை நிலவிற்குள் செந்நிறப்பொட்டு. முகமெங்கும் மெல்லிதாக அரும்பி நின்று மினுப்புக் காட்டும் வியர்வைத் துளிகள். லிப்ஸ் ஸ்டிக்கில் கூரிய செவ்வாய். நீலநிற சுடிதாரில் அழகாய்த்தான் தெரிந்தாள். சரி! பார்த்தது போதும் என்று தனக்குள் எண்ணியவாறே பின்னால் திரும்புகின்றாள்.

“எப்படிடா செல்லம்! நான் வடிவா இருக்கிறேனா?”

பதில் இல்லை.

ஆடைகளைக் களைந்துவிட்டு அடுத்த உடுப்பை மாட்டுகின்றாள். எல்லாம் புத்தம் புதிதான பளிச்சென்ற விலையுயர்ந்த ஆடைகள்.
“இப்ப எப்படி இருக்கிறேனாம். இது போன தீபாவளிக்கு என்ரை தம்பி சுவிசிலை இருந்து அனுப்பினது!”

அதற்கும் பதில் இல்லை.

ஒரு மழலைச் சிரிப்பு வருகிறது. திரும்பிப் பார்க்கின்றாள். தொட்டிலிற்க்குள் இருந்த குழந்தை பால் போத்திலுடன் விளையாடிக் கொண்டிருக்கிற்து. வெளியே ஜன்னலை எட்டிப் பார்க்கின்றாள். வீட்டின் பின்புறம் அவளது மூன்று வயதுப் பெண் – இவளைப் போலவே – ஒரு ‘பாபி டோலுடன்’ தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
“பானு! ஓடி வா.. ஓடி வா.. அம்மாவுக்கு இந்த உடுப்பு வடிவா? பாத்துச் சொல்லு!”

அந்தப்பெண் வாயில் விரலை வைத்து சிந்தித்தபடியே அம்மாவைப் பார்க்கின்றாள்.
“பாபி டோல் போல கிடக்கு” என்கின்றாள். பின்னர் அம்மாவின் முகம் கறுத்தது கண்டு, “எனக்குச் சொல்லத் தெரியல்ல” என்கின்றாள். குழந்தையின் வெளிப்படையான உண்மை ஷோபனாவைச் சுடுகிறது. இவ்வளவு நேரம் கஸ்டப்பட்டுப் போட்டதற்கு நல்லாயிருக்குதென்று சொல்லக்கூடாதா? குழந்தைக்கு என்ன தெரியும்?

இவர் வரட்டும். இவர்தான் என்னை அடிக்கடி ‘வடிவா இருக்கின்றேன்’ என்று சொல்கின்றவர். வந்து சொல்லட்டும் உடுப்பு எப்படி இருக்குதென்று!

‘எத்தனை உடுப்புகள் வைத்திருக்கின்றேன். அம்மா அப்பா தந்தது; அக்கா வாங்கித் தந்தது; மாமா தந்தது; இவற்றைவிட ‘இவர்’ வாங்கித் தந்தது. இவற்றையெல்லாம் அணிந்து கொண்டு போவதற்கு ஒரு இடமோ விழாவோ அல்லது ஒரு இனசனமோ இங்கு இல்லையே! அயலவர்கள்கூட ஒருபோதும் எங்களை தமது வீட்டுக் கொண்டாட்டங்களுக்கு கூப்பிடுவதில்லை. அவரவர்களுக்கு நிறையவே உறவினர்கள், நண்பர்கள். தொலை தூரத்தில், கண்காணாத தேசத்தில் தொழிலுக்கான வயிற்றுப் பிழைப்பில் காலம் கரைகிறது. வயது போகிறது. முதுமை வருகிறது’ அவளுக்குக் கவலை வருகிறது. ஏக்கம் வருகிறது. இண்டைக்கு ‘இவர்’ என்னை வெளியே கூட்டிக் கொண்டு போவதாகச் சொன்னவர். வெளியே என்றால் கடைக்குத்தான். சிலவேளை ‘றெஸ்ரோரண்டும்’ போகலாம். பிள்ளைகளுக்கும் சந்தோசமாக இருக்கும். ஆனால் இன்னமும் காணவில்லையே!

அவர்கள் ‘ஸ்கிப்ரன்'(Skipton) என்ற சிறுநகரத்தில் இருக்கின்றார்கள். ‘ஸ்கிப்ரன்’ ஐக்கிய இராட்சியக் குடியரசில்(UK) வடக்கு யோர்சியாவில்(North Yorkshire) உள்ள ‘கிராவன்'(Craven) மாவட்டத்தில் உள்ளது. ஷோபனாவின் கணவனுக்கு அங்குதான் வேலை.

திரும்பவும் உடுப்புகளை மாட்டுகின்றாள். களைகின்றாள். முகத்துக்கு அலங்காரம் செய்கின்றாள். அழிக்கின்றாள். கண்ணாடிக்கு முன் நின்று மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைந்து அசைந்து பார்க்கின்றாள். மேலுதடையும் கீழுதடையும் உள் இழுத்து – பின் மின்னல் வெட்டுவது போல் உதடுகளைச் சுழித்து. கண்ணாடிக்குள் தெரிந்த அவள் முகம் ‘ஸ்மைல் பிளீஸ்’ என்கிறது. அந்த பிம்பத்திற்காக ‘ஒரு ஸ்மைல்’. தானே தனக்குள் ரசிக்கின்றாள். புன்முறுவல் செய்கின்றாள். மீண்டும் மீண்டும் தனக்குள் சிரிக்கின்றாள். விலையுயர்ந்த ஆடைகளுடன், புன்முறுவல் ஆத்மார்த்தமாக பெருமிதம் கொள்கிறது. இத்தோடு பத்தாவது தடவைக்கு மேல் ஆடை அலங்காரம் செய்தாயிற்று. இவருக்கு வேலை. படு ‘பிஷி’. எத்தனை மணிக்கு வருவாரோ?

வெளியே இருள் கவிகிறது. குழந்தைகளுக்கு சாப்பாடு குடுத்து உறங்க வைத்து விட்டாள். கடைசியாகப் போட்டுப் பார்த்து ‘இதுதான் பேரழகு’ என முடிவு செய்த உடுப்புடன் ‘செற்றி’க்குள் கணவனின் வரவைப் பார்த்தபடி காத்திருக்கின்றாள்.

உறங்கிவிட்டாள். இரவு எட்டு மணி. வெளியே கடும் மழை. அற நனைந்த கோழி போல கணவன் வேலை முடித்து வீடு வருகின்றான்.

“இனி எங்கை போறது. தெரு முழுக்க வெள்ளம்” களைப்புடன் அவன்.
“கடைக்குக் கூட்டிக் கொண்டு போறதெண்டு சொன்னியள்!”
“நாளைக்குப் பார்ப்போமடா!” அவளைக் கட்டி அணைத்து சமாதானம் சொல்கின்றான். முத்தம் பொழிகின்றான். அவள் கண்கள் பனிக்கின்றன. அழகின் சிரிப்பு கண்ணீராக…

 

 

 

Series Navigationமண் சுவர்பூபாளம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *