நானும் எஸ்.ராவும்

This entry is part 6 of 30 in the series 15 ஜனவரி 2012

இப்போதுபோல பிரபலம் ஆகாத நிலையிலேயே எஸ்.ராமகிருஷ்ணனை நான் அறிவேன். இதற்கும் கிரியா ஊக்கி பால்நிலவன் தான். அப்போதைய இலக்கிய தேடலில் பல, எனக்கு அறிமுகமில்லாத படைப்பாளிகளை அவர் எனக்கு பரிச்சயப் படுத்தினார். அந்த வரிசையில் வந்தவர்தான் எஸ்.ரா.
நாற்பதுகளைக் கடந்து ஐம்பதைத் தொட்டுக்கொண்டிருக்கும் வயதில் இருந்த அவரை நான் பார்த்தபோது பெரிதும் சிலாகிக்கவில்லை. நமக்கு எப்போதுமே ஒரு ஜெயகாந் தன் பிம்பம் முன்னேராக ஓடிக்கொண்டிருக்கும். அதன் வழியாகப் பார்க்கும்போது எதுவும் பளிச்செனப் பதியாது.
வழுக்கைத் தலையை மறைக்க கிருதா, ஜடா முடி என்று வலம் வந்த ஜே கேவுக்கு மாற்றாக இவர் இருந்தார். அவர் சலவை செய்த இஸ்திரி போட்ட சட்டையை இன் பண்ணிக் கொண்டு லேசான தொந்திக்குக் கீழே பெல்ட்டுடன் பேண்ட் போட்டபடிதான் வருவார். இவரோ ரொம்ப கேஷ¤வல். கட்டம் போட்ட சட்டையை வெளியே விட்டபடி சாதாரண பேண்டுடன் வருவார். அழுக்கெல்லாம் கிடையாது. ஆனால் ஆடம்பரம் இல்லை. இவரும் வழுக்கைதான். ஆனால் மறைக்க கிருதா, ஜடா முடியெல்லாம் கிடையாது. உள்ளது உள்ளபடி.
அட்சரம் என்றொரு இதழ் நடத்திக் கொண்டிருந்தார். இப்போதைய உயிர்மை, காலச் சுவடை விட பெரிசு. திக் வண்ண அட்டை. நிறைய பக்கங்கள். அதில் நவீன ஓவியங்கள், புகைப்படங்கள். வெள்ளைக் காகிதத்தில் நேர்த்தியான அச்சு. அப்போதே விலை இருபத்தி ஐந்து ரூபாய். ஒன்றிரண்டு எனக்கு கொடுத்திருக்கிறார். என்ன எனக்குத்தான் நவீன இலக்கியம் புரிபடாமல் போயிற்று.
கதைகள் கூட மேஜிக்கல் ரியலிஸம் பாணியில் இருக்கும். முக்கியமான வரிகளை பெரிய எழுத்தில் கதைக்கு நடுவே கட்டம் கட்டி போட்டிருப்பார். இன்றளவும் இலக்கிய இதழ்கள் என்று சொல்லிக் கொண்டு கல்லாக் கட்டும் அத்துணை இதழ் களும் இதையே பின்பற்றுகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைய இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராவுடன் நான் பல மணி நேரம் கழித்தது தமிழ்மணவாளன் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் இலக்கிய கூட்டத்தில். திருநின்றவூர் (?) ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சோலை சூழ்ந்த ஒரு பள்ளியில் நிகழ்வு நடந்தது. பெரிய ஆலமரத்தடியில் தான் கூட்டமே. ஜெயந்தன் வந்திருந்தார். க்ருஷாங்கினி, சொர்ணபாரதி, பால்நிலவன், கலை மணிமுடி, செந்தூரம் ஜெகதீஷ், வண்ணை சிவா என்று பரிச்சயமான இலக்கிய முகங்கள்.
நவீன இலக்கியம் பற்றி இரண்டு பக்கங்கள் எழுதி வைத்து படித்தேன். ஜெயந்தன் மிகவும் ரசித்தார். மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். மூன்று மணிக்கு வட்டமாக நாற்காலிகள் போடப்பட்டு ( அப்படித்தான் நவீன இலக்கியக்காரர்கள் செய்வார்களாம். தேவநேயப்பாவாணர் சிற்றரங்கில் வரிசை நாற்காலிகளை கலைத்துப் போட்டு கூட்டம் போட்ட வெளி ரங்கராஜன் போன்றோர் இதில் அடங்குவர்.) எல்லோரும் வட்டமாக உட்கார்ந்தோம். நவீனக் கவிதை பற்றிய ஒரு கலந்துரையாடல்.
எஸ்.ரா. பத்தில் ஒருவராக எந்த முதன்மையுமின்றி உட்கார்ந்திருந்தார். எல்லோரும் பேச, நான் முந்தின நாள் ஒரு கூட்டத்தில் கேட்ட ஆத்மாநாமின் ஒரு கவிதையை வரி பிசகாமல் சொன்னேன். இப்போது மறந்து விட்டது. ‘ அப்படியே சொல்றீங்க ‘ என்று க்ருஷாங்கினி ஆச்சரியப்பட்டார். ஆத்மாநாமின் கவிதையின் அர்த்தம் என்ன? குறிக்கோள் என்ன? என்று கேட்டேன். எல்லோரும் எஸ்.ராவைப் பார்த்தார்கள். அவர் பேச ஆரம்பித்தார்.
நிதானமான பேச்சு, கொஞ்சம் நேஸல் டங்க்! இன்னுமொரு ஆச்சர்யம் இரண்டு மணி நேரக் கூட்டம் முழுமையும் முதலில் எப்படி உட்கார்ந்தாரோ அப்படியே உட்கார்ந்திருந்தார். தலை மட்டும் தான் பேசுபவரை நோக்கித் திரும்பியது.
ஜென் தத்துவம் போல என்று சொன்னார். மறைபொருள் என்றார். நவீனக் கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைத் தரும் என்றார். ஒரே நபருக்கு வெவ்வேறு கால கட்டத்தில் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு என்றார். ஒன்றும் புரியவில்லை. ஐந்து மணிக்கு ரயில் பிடிக்கவேண்டும் என்று நானும் க்ருஷாங்கினியும் கிளம்பி விட்டோம்.
பிலிம் சேம்பரில் ஒரு கூட்டம். பல பிரபலங்கள். மேடை முழுக்க இலக்கிய ஜாம்பவான்கள் தான். சுஜாதா, ஜெயகாந்தன், அசோகமித்திரன் என்று பலர் இருந்தார்கள். எல்லோரும் முன் வரிசையில் தன் பெயர் கூப்பிட்டவுடன் போகலாம் என்கிற மாதிரி அமர்ந்திருந்தார்கள். எஸ்.ராவுக்கு முன்வரிசை அழைப்புதான். ஆனால் அவர் அங்கே இல்லை. வெளியே தன் வாசகர்கள் கூட்டத்துக்கு நடுவே இருந்தார். இருபது முப்பது பேர் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். என் பக்கம் திரும்பிய போது பெயர் சொல்லி கைகொடுத்தேன். அட்சரம் இதழை கையில் திணித்து சிரித்தார். பூங்காக்கூட்டம் நடந்து ஒரு வருடம் மேலாகி விட்டது. ஆனாலும் அவர் என்னை மறக்கவில்லை. மேடையில் எல்லோரும் அமர்ந்தபின்பே வாசகர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அவர் மேடையேறினார். ஓர நாற்காலியில் சரிவர அமராமல் இருந்தார். பூங்கா கூட்டத்தில் இருந்த ஈஸ் அவரிடம் இல்லை.
ஆனந்தவிகடனில் அவரது கட்டுரைகளைப் படித்தபிறகுதான் எஸ்.ராவின் பலம் கவிதையோ கதையோ அல்ல.. கட்டுரைதான் என்று புரிந்து கொண்டேன். மனிதர் ஏன் இவ்வளவு வயதுக்கப்புறம் பிரபலமானார் என்றொரு கேள்வி என்னுள் இருந்தது. அனுபவத்திற்காக அலைந்ததிலேயே வயதாகிவிட்டது.
அதற்குப்பிறகு பல முறை அவருடன் பேசியிருக்கிறேன். கே கே நகரில் குடியிருக்கிறார். ‘ அந்தப் பக்கம் வரும்போது வாங்க ‘ என்று அழைத்திருக்கிறார். மழை பிடிக்கும் என்று எழுதும் படைப்பாளிகள் மத்தியில் வெயில் பிடிக்கும் என்று சொல்லும் வித்தியாசமான எழுத்தாளர்.
திரைப்படங்கள் பக்கம் போய்விட்டாலும் இன்னமும் மக்களுடன் நெருக்கமாகவே இருக்கிறார். புத்தகச் சந்தையில் நான் கண்ட காட்சியே சாட்சி.
0

Series Navigationசிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்பாசம் பொல்லாதது
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *