பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்

This entry is part 17 of 30 in the series 15 ஜனவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

மனிதனின் வாழ்வு சுற்றுச் சூழலைப் பொருத்தே அமைகின்றது. மனிதன் சூழலைக் கெடுக்காது இயற்கையுடன் இயைந்து இணைந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதன் இவ்வுலகில் மகிழ்வான வாழ்வை வாழ இயலும். நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலைப் பா பாதுகாத்து நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட நம்முடைய முன்னோர்கள் அத்தகைய நற்சிந்தனைகளைப் பழமொழிகள் வாயிலாகப் பாங்குற மொழிந்துள்ளனர்.

வீடும் வெயிலும்

மண்ணிற்கு அழகு தருவன மரங்கள் ஆகும். அது போன்றே வீட்டிற்கு முன்பாக மரங்கள் வைத்து அதனனைப் பராமரித்து வாரவேண்டும்.என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினர். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு மருத்துவ குணத்தை உடையதாக விளங்குகின்றது. வீட்டின் முற்றத்தில் கிணறை ஒட்டி முரங்கை மரத்தை வைத்து வளர்ப்பர். முருங்கை மரத்தின் வேரானது கிணற்று நீரின் மட்டம் வரை சென்று இந்நீரில் உள்ள தீமை பயக்கக் கூடிய கழிவுகளை உறிஞ்சி எடுத்து நீரைச் சுத்தமானதாக மாற்றிவிடும். இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் கிணற்று அருகில் முருங்கை மரத்தை வைத்து வளர்த்து வருகின்றனர். முருங்கையின் கீரை, பட்டை போன்றவை மருத்துவ குணம் நிரம்பியவை ஆகும். முருங்கைக் கீரை, காய் இவற்றை உண்டு வந்தால் கண்பார்வை சீர்படும். நரம்புத் தளர்ச்சி போன்றவை நீங்கிவிடும்.

அதுபோன்றே வேம்பு மருத்துவ குணம் நிறைந்த மரமாகும். இது விஷக் கிருமிகள் இல்லாதவாறு மனிதனைப் பாதுகாக்கும் தன்மைம கொண்டது. வேம்பும், வேம்பு சார்ந்த பொருள்களும் கிருமி நாசினிகளாகும். வெயில் காலங்களில் வேப்பமரநிழல் குளுமையானதாகவும், வேப்ப மரக் காற்று உடலுக்கு மகிழ்வைத் தரக் கூடியது. இம்மரங்கள் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இம்மரங்கள் சூழலைத் துதூய்மைப் படுத்துவதுடன் அதனைப் பாதுகாக்கவும் செய்கின்றது எனலாம். இதனை உணர்ந்த நம்முன்னோர்கள் வேம்பினை மாரியம்மனின் மறு உருவமாகக் பார்த்து அதனை வழிபட்டு வருகின்றனர். இத்தகைய மரம் வளர்க்கும் சிந்தனையை,

‘‘வீட்டுக்கு முருங்கை மரம்

வெயிலுக்கு வேப்ப மரம்’’

என்ற பழமொழி நன்கு எடுத்துரைக்கின்றது.

ஆறும் காடும்

ஆறும் காடும் இயற்கை மனிதனுக்குத் தந்த வளங்களாகும். இவற்றை அழித்து விடுவது மனித இனத்தின் தற்கொலைக்கான முயற்சியாகும். நீர்நிலைகளையும் காடுகளையும் நாம் பாதுகாகத்தால் நம் வாழ்வு வளமை பெறும்.

இவற்றின் தன்மையைக் கண்ட நமது முன்னோர்கள் ஆறுகளைத் தெய்வத்தன்மை பொருந்திய தாகக் கருதி அதனைப் பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்று ஆறுகள் போன்ற நீர்நிலைகளைச் சரியாகப் பராமரிப்புச் செய்யாது அப்படியே விட்டுவிட்டதாலும், ஆற்றுக்குள்ளும் அதன் கரைகளிலும் குடியிருப்புகளையும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்தும் அதனை மாசுபடுத்துகின்றனர். ஆறு, அதன் கால்வாய்கள் அகியவற்றை ஆண்டிற்கு ஒருமுறை நாணல் உள்ளிட்டவற்றை அகற்றித் தூய்மைப் படுத்துதல் நல்லது. அவ்வாறு செய்யவில்லை எனில் ஆறும் கால்வாயும் தூர்ந்துவிடும்.

காடுகளை மழை தரும்; மண்ணரிப்பைத் தடுக்கும். காடுகள் பல்வேறுவிதமான இயற்கைச் செயல்வங்களான வளங்களை அள்ளித்தந்து இறைவனின் தூதுவர்களாக விளங்குகின்றன. இத்தகைய காடுகள் அதிகமாகவும், விரைவாகவும் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாகும். நமது நாட்டில் அதிக அளவில் இருந்த காடுகளின் பரப்பு தற்போது மிகவும் குறைந்து காணப்படுகின்றது. காடுகள் அழிவுற்றால் பல்லுயிரின(Bio dibersity) நிலைகள் மாறும். பருவநிலைகளும் மாற்றமடைந்து பூமிக்கு அழிவு நேரும். இதனை உணர்ந்த நமது முன்னோர்கள் காடுகளை அழித்தல் கூடாது என்ற கருத்தினை,

‘‘ஆறு கெட நாணலிடு

காடு கெட ஆட(ஆடு) விடு’’

என்ற பழமொழி வாயிலாக அறிவுறுத்தினர். ஆறு நாணல் போன்றவற்றால் அழிந்துவிடும். ஆடுகள் நிறைய இருப்பின்(வெள்ளாடு) காடுகள் அழிவுறும். அதனால் ஆற்றைத் தூய்மைப்படுத்தி ஆடுகளை அளவோடு வளர்த்து காடுகளையும் ஆறு போன்ற நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

தண்ணீர் மாசுபாடு

உலகம் 75 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதனை, ‘‘ஆழி சூழ் உலகம்’’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நீர்வளம் மிகுந்திருக்கும் நாட்டிஎல் அதன் முக்கியத்துவத்தை யாரும் உணர்வதில்லை.

கனிமங்களின் இருப்பினை அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு உலகில் நீராதரத்தின் இருப்பினை யாரும் அறிந்து கொள்வதில் நாட்டம் கொள்வதில்லை. நீராதரத்தை மதிப்பீடு செய்தால்தான் ஒரு நாட்டின் முன்னேற்றததிற்கு உரிய திட்டங்களை வகுக்க முடியும். உலகின் மொத்த நீரிருப்பு 24,00,000 கன கிலோ மீட்டராகும்.ஏரி, குளம், நீர்த்தேக்கங்களின் நீரிருப்பு 2,80,000 கன கி.மீ ஆகும். ஆறுகள் சிற்றோடைகள் ஆகியவற்றின் நீர் இருப்பு 1200 க.கி.மீ. ஆகவுள்ளது. நிலத்தின் ஈரப்பதம் 85,000 க.கி.மீட்டராக உள்ளது. நிலத்தடி நீர் இருப்பு, 60,000,00 கனகி.மீட்டராக உலகில் உள்ளது.

இன்று நீரின்றி உலகம் இல்லை என்று அனைவரும் உணர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நீருக்காகவே உலகில் போர் ஏற்படும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இங்ஙனம் நீரின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிஞர்கள் கூறினாலும் உலகில் யாரும் கேட்பதில்லை. நீர்நிலைகளில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரைக் கலந்து அதனைப் பயன்படுத்த முடியாதவாறு செய்துவிடுகின்றனர். இதனால் குடிநீராகப் பயன்படும் நீர் கூட நஞ்சாக மாறிவிட்டது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நாற்றம் ஏற்பட்டு அதன் வழியே மக்கள் பயணிக்கும்போது மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும் நிலை ஏற்படுகின்றது. இத்தகைய நிலைமை மாற வேண்டும். மக்கள் கழிவு நீரை நீர் நிலைகளில் கலக்கவிடாது அதனைத் தூய்மைப் படுத்தி மறு சுழற்சிக்கு உட்படுத்தி அதனைப் பயன்படுத்த வேண்டும். இதனை,

‘‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’’

என்ற பழமொழி உணர்த்துகின்றது.

பெற்ற தாயைக் கைவிட்டுப் பிறர் பழிக்கின்ற நிலைமைக்கு அவளைத் தள்ளிவிட்டாலும் அதனைச் சீர் செய்து கொள்ளலாம். ஆனால் தண்ணீரைப் பிறர் பழிக்கின்ற நிலைக்குத் தள்ளிவிடுதல் கூடாது. அது உலகிற்குச் செய்யும் பெருந்துரோகச் செயலாகும். நீரை மாசுபடுத்தாது அனைவரும் பயன்படுத்துகின்ற வகையில் பாதுகாக்க வேண்டும் அஎன்ற அரிய சூழலியல்ச் சிந்தனையை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

மரம் வளர்த்து மழைபெற்று காடுகளைப் பாதுகாகத்து என்றும் எப்போதும் நீர்நிலைகளை மாசுபடுத்தாது உன்னத வாழ்வினை வாழ்ந்து உலகை அடுத்த தலைமுறையினருக்கு மாசில்லா உலகமாக ஒப்படைப்போம். முன்னோர் வழி நடப்போம்.

Series Navigationஒரு நாள் மாலை அளவளாவல் – 1ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *