உயிர்மை இதழின் கேள்வி
மத அடிப்படைவாதம் இலக்கியப் பிரதிகளை கண்காணிக்கும்போது அது தமிழில் சிறுபான்மையின மக்களின் இலக்கிய வளர்ச்சியைத் தடுக்கிறதா அல்லது அதுவே மீறலுக்கான உத்வேகத்துடன் கூடிய இலக்கிய மறுமலர்ச்சியைஏற்படுத்துகிறதா..
பதில்
தன்னைத்தவிர பிறவற்றை அழித்தொழிப்பது அடிப்படைவாதத்தின் முக்கியக் கூறு.இது மத அடிப்படைவாதமாக மாறும்போது தனது மதத்திற்கு எதிராக தாம் கருதுபவை அனைத்தையும் அழித்தொழிக்க எத்தனிக்கிறது. இது பிற மதங்களின் கருத்துரிமை,மதத்திற்குள்ளே நிகழ்த்தப்படும் ஜனநாயக உரையாடல்,மத அமைப்புக்குள்ளே வாழும் விளிம்புநிலை மக்களின் விடுதலை என எதுவாகவும் இருக்கலாம்
புனிதநூல்கள் குறித்த மரபுவழி வாசிப்பையும் பொருள்கோளலையும் படைப்பு ரீதியாக கேள்வி கேட்காத வரைக்கும் ஒரு படைப்பாளி தைரியமாக உயிர்வாழலாம்.அவனோ அல்லது அவளோ எழுத்து அகதியாக இடம்விட்டு இடம் பெயரவேண்டிய அவசியம் இருக்காது.காபிர்பத்வா வழங்கமுடியாது. இறந்து போனால் மய்யித்தை அடக்குவதற்கு மையவாடி தர மறுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படாது.
இஸ்லாமிய இறையியல் சிந்தனைப்போக்கில் அனல்-ஹக்(நானே உண்மை) கருத்தாக்கத்தை முன்வைத்தவர் சூபிஞானி மன்சூர் ஹல்லாஜ். கிபி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவருக்கு இஸ்லாமிய அப்பாஸித் ஆட்சியாளர் முக்ததிர்பில்லாஹ் மரணதண்டனை வழங்கினார்.சூபி மன்சூர் ஹல்லாஜ் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
எகிப்தின் முக்கிய நாவலாசிரியை நவ்வல் எல் சாதவி. தூக்குத்தண்டனைக் கைதிகள், மருத்துவமனைப் பெண்களின் பாலியல்பிரச்சினைகளையும், மனநிலைக் கோளாறுகளையும் பகுப்பாய்வுசெய்தவர். எண்பதுகளில் சிறையிலடைக்கப்பட்டார். மலம்துடைக்க வழங்கப்பட்ட டிஸ்யூபேப்பரையும்ஐப்ரோபென்சிலையும் கொண்டே தனது சிறைக்குறிப்புகளை எழுதிய வரலாறும் உண்டு.
சோமாலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அயன்ஹிர்ஸ் அலி பெண்ணுறுப்பு சுன்னத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர். டச்சுதிரைப்படத் துறை
தியோவான்கோவுடன் இணந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பெண்ணின் இடம் குறித்து பேசும் பணிதல் (சப்மிஸன்) குறும்படத்தை தயாரித்து வெளியிட்டார். தியோவான்கோ நவம்பர் 2004ல் படுகொலை செய்யப்பட்டார்.
மரபுவழி உலமாக்களுக்கும் சூபிகளுக்குமான முரண் தொடர்ந்து வரலாற்றில் நிகழ்ந்துள்ளது.18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெண்ணாயிரம் ஞானப்பாடல்களை எழுதிய சூபிஞானி பீர்முகமது அப்பாவிற்கு கண்டனம் தெரிவிக்க காயல்பட்டணத்திலிருந்து சதகத்துல்லா ஆலீமை அழைத்துவந்தார்கள். பீர்முகமதுஅப்பா தான் நெசவு செய்து கொண்டிருந்த காக்குழியில் மக்கமா நகரின் காபத்துல்லாவை காண்பித்து அதிசயம் செய்தாரென வாய்மொழி வரலாறு கூறும். உழைப்பையே தொழுகையென அறிவித்தவர். அன்பனே நீ நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே என எதிர்க் கவிதை பாடி பீர்முகமது அப்பா தன்னை தரநீக்கம்(Declass) செய்தபோது நாய்போல் ஒதுங்கி நின் வாயில்வந்தேன் எனப் பாடினார்.இறைவனின் வாசல் இந்த உலகில் காபத்துல்லா..காபா வாசலில் ஒரு நாய்போல் ஒதுங்கி வந்தேன் என்பதான தரநீக்கக் குரலை யாரால் என்ன செய்ய முடியும். இது பீர்முகமது அப்பா தன்னை பாதிக்கப்பட்டவர்கள் விளிம்புநிலை மக்கள் சார்பாக அடையாளப்படுத்தியதின் குறியீடே ஆகும்.
வேட்டைப் பெரிதென்று வெறிநாயைக் கைப்பிடித்து /காட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே – என பாடிய குணங்குடி மஸ்தான் சாகிபு 1835ல் மரணமடைகிறார். அருணாசலமுதலியார் என்ற இந்துப் பெருமகனார்தான் முதன்முதலில் சாகிபின் பாடல்களைப் பதிப்பித்துவெளியிட்டார். காஞ்சிபுரம் இராமஸ்வாமி நாயுடுவும் , மா,வடிவேலுமுதலியாரும் விளக்க உரைஎழுதி வெளியிட்டவர்களில் முக்கியமானவர்கள். 144 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்(1979) குணங்குடியார்பாடல்களை திருத்தணி என்.ஏ.ரஷீது என்ற ஒரு முஸ்லிமால் பதிப்பிக்க முடிந்திருக்கிறது.
இன்றைய முஸ்லிம்களின் தமிழ் அறிவுச் சூழலோ இன்னும் அபாயகரமாக இருக்கிறது. பீர்முகமதப்பா, குணங்குடியப்பா உள்ளிட்ட தமிழ் சூபிகளை இஸ்லாமியரே அல்ல என்றுகூறி வகாபிய அடிப்படைவாதிகள் நிராகரிக்கிறார்கள்.மாற்றுசமயக் கலாச்சாரத்தை தங்கள் கவிதைச் சொல்லாடல்களில் பின்பற்றி தூய இஸ்லாத்தை கெடுத்துவிட்டார்கள் என விமர்சிக்கிறார்கள். நவீனஇஸ்லாமியநுண்கலை,இசை,இலக்கியத்தையும் இவர்கள்அங்கீகரிக்கவில்லை.
மற்றொருபுறத்திலோ சூபிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டேஜமாத்துகளின் நிர்வாகிகள் , இலக்கிய பிதாமகர்கள் ஊர்விலக்கம்,இலக்கியவிலக்கம் என ஒடுக்குமுறையை நிகழ்த்தும் கலாச்சார வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.
சமயத் தொன்மங்களினூடாக படைப்புச் செயல்பாட்டின் பயணம் நிகழும் பின்காலனியக் காலமிது. எட்வர்டு சையதும்,காயத்திரி ஸ்பைவாக்கும் அடையாள அரசியல், அடித்தள மக்கள் குழும பண்பாடு குறித்தும் யோசிக்கவைத்துள்ளார்கள். ஜாலயதார்த்தம்,கலாச்சார யதார்த்தமென புனைவுகளின் பரப்பு விரிகிறது. என்றாலும் புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகளையும், இலக்கியப் பிரதிகளையும், மத அடிப்படைவாதிகள் பத்வா சாட்டைகளோடு தொடர்ந்து மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனக்கென்னவோ இன்னொன்றும் தோன்றுகிறது.. மதம்,புனிதங்கள்,விருதுகள் என எல்லாவகை அதிகாரமையங்களின் பாதங்களையும் நக்கிக் கொண்டு நாய்போல் கிடந்தால் ஒருவேளை இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது.
நன்றி
உயிர்மை டிசம்பர் 2011
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-28
- அறியான்
- ‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’
- நழுவும் உலகின் பிம்பம்
- குசினிக்குள் ஒரு கூக்குரல்
- சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘
- லிங்குசாமியின் ‘ வேட்டை ‘
- மாநகர பகீருந்துகள்
- மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்
- நல்ல தங்காள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)
- ஒரு நாள் மாலை அளவளாவல் (2)
- சோ – தர்பார்
- மூன்று நாய்கள்
- உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்
- சந்திரலேகா அல்லது நடனம்..
- புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)
- இறந்து கிடக்கும் ஊர்
- பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 10
- திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் மு வ நூற்றாண்டு விழா
- ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்
- தனி ஒருவனுக்கு
- துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்
- முன்னணியின் பின்னணிகள் – 23
- பயணி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 6