கலங்கரை

This entry is part 1 of 42 in the series 29 ஜனவரி 2012

வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலின் மைக் செட் அலறலில் கடைக்கு வந்தவர்கள் கத்தி கத்தி சாமான்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.ஜகுபர் அலியும் அவரது தம்பி கனியும் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.சரக்கு கொண்டுவந்த கலைமான் புகையிலைக் காரரும் குளிர்பான ஏஜெண்டும் கம்புக் கூட்டில் பையும் காதில் சொருகிய பேனாவுமாக காத்திருந்தனர்.

ரெண்டு கிலோ அரிசி,பாலிதீன் பையில் கட்டிய எண்ணெய்,உருட்டிய புளி,அரை கிலோ தக்காளி வாங்கிய மாரியம்மாள் ஆத்தா கடையின் கூட்டத்தில் இடைஞ்சல் செய்த பொடிசுகளைத் திட்டிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.மேலே கொக்கியில் தொங்கிக் கொண்டிருந்த இந்த முறை புதிதாக வந்திறங்கியிருக்கும் வெள்ளை ரொட்டியைப் பார்த்துக் கொண்டே அடுத்த சாமானை சொல்ல மறந்த பொடியனை கோவத்துடன் அதட்டினார் ஜகுபர் அலி.

“வீடு இருண்டு கெடக்கு சீக்கிரம் குடுப்பா மண்ணெண்ணைய…”என்று கனியிடம் சிறிய கேனை நீட்டினாள் பெலோமினா. இந்த அமளிக்கிடையே கூட்டத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கிழவன்

“தம்பி ஒரு கட்டு செய்யது பீடி குடுப்பா…ஒருகட்டு செய்யது பீடி…” என திரும்பத் திரும்ப கொண்டிருந்ததை இருவரும் கண்டுகொள்ளவில்லை.கோவத்தில் ஏதோ முனங்கிக் கொண்டே திரும்பி நடந்தவரை நடை மறித்து அழைத்தான் ஜகுபர் அலியின் தம்பி.

இருள் கவிழத் தொடங்கிய அந்த நேரம் காற்றின் இதம் கூடியிருந்தது.எழில் மிகு கிழக்குக் கடற்கரைச் சாலை நன்றாக குளிர்ந்திருந்தது.மணிமாறன் பழுது பார்க்கப்பட்ட வத்தயினை மாட்டு வண்டியில் கட்டி இழுத்துக் கொண்டு கடலுக்குச் செல்லும் சாலையில் சென்று திரும்பினான். உலகம் சுற்றும் ஒரு வெள்ளைக்காரத் தம்பதிகள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர். கையில் புத்தகம் தாங்கிய இரண்டு சிறுவர்களைப் அரவணைத்துக் கொண்டு அந்த சாலைக்குக் குறுக்கே நடந்து வந்த லெப்பை எதிரே உள்ள பள்ளிக்குள் நுழைந்தார்.அவர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் பள்ளி வாசலின் மேல் கட்டப் பட்டிருந்த ஒலிப்பெருக்கி ஒலிக்கத் துவங்கியது.கடைக் கெதிரே உள்ள நிறுத்தத்தில் ஏர்வாடி செல்லும் ஆறே கால் மருது பாண்டியருக்கு இரண்டு மூன்று பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்துக் கொண்டிருந்தனர்.எப்பொழுதும் நாகூர் செல்லும் வண்டிக்கு முன்பே வந்துவிடும் ஏர்வாடி வண்டி அன்று அந்நேரத்திற்கும் வரவில்லை.ஆற்றாமையில் அதில் ஒரு பெண் மருது பாண்டியரை சத்தம் போட்டு திட்டிக் கொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் ஆறே முக்கால் ராமேஸ்வரம் வண்டியே வந்துவிட்டது.அவர்கள் ஏறிய அந்த வண்டியை விட்டு இறங்கிய வேலு அதே கையோடு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு விறுவிறுவென கடற்கரைக்குச் செல்லும் சாலை வழியே நடக்கத் துவங்கினான்.

வழக்கமான திடீர் மின்சாரத் துண்டிப்பால் அடுத்த சில நொடிகளில் மைக் செட் தன் வாயைப் பொத்திக் கொண்டது.பேருந்து நிறுத்தத்தின் அருகேயுள்ள கொடி மரத்தின் கீழ் அமைந்த சிறு மேடையில் அமர்ந்து மணியும் பஷீரும் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது அப்பொழுது தான் அந்த சுற்றத்தின் காதுகளில் விழுந்தது.நடுக்கடலில் நாகூர் பிச்சையின் வலை அறுந்து போன கதையை மணி அச்சு பிசகாமல் பஷீரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.தன்னிடம் நூற்றி ஐம்பது ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் முருகேசனை கண்டபடி திட்டிக் கொண்டே அவ்விடத்தைக் கடக்கிறான் ரெத்தினம்.கள்ளு இறக்கப்படும் பனஞ் சாரிகளுக்கருகே சுண்டல் விற்கச் சென்ற ஜமீல் முழுவதையும் விற்றுவிட்டு வழக்கம்போல மெதுவாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீடு திரும்பிச் செல்கிறார்.

கடல் காற்று கவுச்சியை வீடு வீடாக கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது.முகம் தெரியாத அந்த இருட்டில் புயல் கட்டிடத்திற்கு முன்பாக மெத்தை போல விரிந்து கிடந்த குறு மணலில் இருந்து

“கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே…” பாடல் இயல்பான குரலில் ஒலிக்கத் துவங்கியது.அந்தப் பாடலுக்கு ஏற்றார் போல அவ்விடத்தில் பீடியின் கங்கு இருட்டில் ஆடிக் கொண்டிருந்தது.திடீரென

“மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா?

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை…”

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான்…”பாடல் முந்தைய பாடலை விட உணர்வுப் பூர்வமாக காளிமுத்துவின் பிசிறில்லாத குரலில் ஒலித்தது.

கடலில் தனக்கு நல்ல பாடு வந்த நாட்களிலெல்லாம் அந்த இடத்தில் காளிமுத்துவின் பாட்டு ஓங்கி ஒலிக்கும்.டி எம் எஸும் எம்ஜியாரும் ஒருங்கே இணைந்த அற்புதன் காளிமுத்து.தினமும் மாலை அந்த மணலில் சிறிது நேரம் சாய்ந்தால் தான் அன்று காளிமுத்துவிற்கு தூக்கம் வரும்.அந்த நேரங்களில் அருகில் வராமலேயே இருளில் படுத்திருக்கும் காளிமுத்துவிடம் சேதி பேசிக் கொண்டு மக்கள் சாலை வழி நடந்து செல்வார்கள்.செல்லையாக் கோனார் பொதுவிடத்தில் உள்ள பட்டியில் தன் ஆடுகளை அடைக்க மேய்த்து வந்த நேரம் மணல் விரிப்பில் அந்த பீடிக் கங்கைக் காண முடியவில்லை.தொலைவில் நடந்துகொண்டிருந்த காளிமுத்து அடுத்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருந்து மறைந்து போனார்.காளிமுத்து சென்ற சிறிது நேரத்தில் புயல் கட்டிடத்தைச் சுற்றி படுத்திருந்த மாடுகளில் ஒன்று மெதுவாக நடந்து சென்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் படுத்தது.நேரம் செல்லச் செல்ல ஏனைய மாடுகளும் ஒவ்வொன்றாக அதன் பக்கத்தில் சென்று படுத்தன.மாடுகள் இரவில் வீட்டிற்குப் போவதென்பதும் அவற்றைக் கட்டுதல் என்பதும் அங்கே வழக்கத்தில் இல்லாத ஒன்று.

அந்த முன்னிரவின் பிந்திய வேளையில் தெற்கிலிருந்து வேளாங்கண்ணிக்கு அந்த நீண்ட நெடிய சாலை வழி நடந்து செல்லும் புனிதப் பயணிகளின் ஒரு குழு இரவில் அங்கே உறங்கிச் செல்ல இடம் பார்த்துக் கொண்டிருந்தது.முடிவாக இடிந்து போன சத்திரத்தின் அருகில் உள்ள பழைய பெருமாள் கோவில் திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்தனர்.ஜகுபர் அலி கடையை மூட ஆயத்தமானார்.அந்நேரத்தில் சாலை வழியே பரட்டைத் தலை மற்றும் சிறு துணி மூட்டையுடன் மனம் பிறழ்ந்த பெண் ஒருத்தி மெதுவாக சென்று கொண்டிருந்தாள்.கடையின் பலகைகளை அடைப்பதில் மும்முரமாக இருந்த ஜகுபர் அலி சத்தமில்லாமல் அவள் தன் பின்னே வந்து நின்றதைக் கவனிக்கவில்லை.திரும்பியவர் திடுக்கிட்ட வேளை அவள் கையை நீட்டி வராத குரலில் எதோ பேச முற்பட்டாள்.சட்டென்று புரிந்தவராக பலகைக்குப் பின்னே கையை விட்டு இரண்டு வாழைப் பழங்களைப் பிய்த்துக் கொடுத்தார்.கையை உயர்த்திக் கும்பிட்டவள் மெதுவாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.அவளைப் போன்றவர்களுக்கும் ராமேஸ்வரம் செல்லும் சாமியார்களுக்கும் அந்த சாலையில் உள்ள எல்லா வீடுகளும் சொந்தங்களே.அவர்கள் நினைத்த இடத்தில் உண்டு தங்கி தங்கள் பயணத்தைத் தொடர்வர்.

வடக்கிருந்து வந்த லாரி ஒன்றின் வெளிச்சத்தில் சாலையில் படுத்திருந்த மாடுகளின் கண்கள் மின்னின.ஹாரனுக்கும் விலகாத மாடுகளை கிளீனர் இறங்கி விரட்டியதும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.கடையைப் பூட்டிய ஜகுபர் அலி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.அமைதியான அந்த இரவில் தொலைவே செல்லும் அந்த லாரி சக்கரத்தின் பட்டன் சவுண்ட் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.மீண்டும் அதைப் போன்ற ஒரு அழகிய நாளுக்காக கலமும் கடலும் கரையும் காத்துக் கொண்டிருந்தது.

-அருண் காந்தி

Series Navigationபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *