பழமொழிகளில் பழியும் பாவமும்

This entry is part 9 of 42 in the series 29 ஜனவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். பழக்கவழக்கங்களில் சிலர் வேறுபடுவர். பேச்சாலும், செயலாலும் வேறுபடுவர். ஆனால் எந்நிலையிலும் மாறாது உண்மையாளராக நடப்பவர் சிலரே ஆவார். இவர்களை நீதிமான்கள், அறவோர் என்றும் பழிபாவத்திற்கு அஞ்சுபவர் என்றும் வழங்குவர். சிலரோ, பழிபாவங்களுக்கு அஞ்சாது இழிவான செயல்களில் ஈடுபடுவர். தாம் தவறு செய்தாலும் அதனை ஒத்துக் கொள்ளாது அதற்கு வேறொருவர்தான் காரணம் என்று கூறுவர். தவறினைச் செய்துவிட்டு அப்பழியினைப் பிறர்மேல் போட்டுவிடுவர். இவர்களை எத்தர்கள், இழிந்தோர் என்று வழக்கில் கூறுவர். இத்தகையோரைப் பற்றி நமது முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது.

உலகின் இயல்பு

தவறு செய்பவரை எப்போதும் இவ்வுலகம் விட்டுவிடும். மாறாக தவறு செய்யாத ஒருவரை அவ்விடத்தில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகப் பழி சுமத்தி அவரைக் குற்றவாளியாக ஆக்கித் தண்டனை வழங்கும். இதனை,

‘‘பட்டப்பகல் திருடர்களைப்

பட்டாடைகள் மறைக்குது

ஒன்றுமில்லாப் பஞ்சையைத்தான்

திருடனென்று உதைக்குது’’

என்ற பட்டுக்கோட்டையார் பாடல்வரிகள் தெளிவுறுத்துவது சிந்தனைக்குறியது ஆகும்.

ஒருவன் செல்வமும் செல்வாக்கும் படைத்தவன் என்ற காரணத்திற்காக உலகோர் அவனைத் தவறு செய்தாலும் தட்டிக்கேட்காது விட்டுவிடுவர். அவன் தவறினைச் சுட்டிக்காட்டவும் தயங்கும். ஒன்றுமில்லாதவன் தவறு செய்யாவிட்டாலும்கூட அவனைக் கீழ்த்தரமாக ஏசித் தண்டிக்கும். இத்தகைய உலகியல்பை,

‘‘பேண்டாரை விட்டுவிட்டு பீயாரை அடிக்கிறமாதிரி’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. பேண்டார்(மலம்கழிப்பவர்)-தவறு செய்பவர், செல்வாக்க உடையவரைக் குறிக்கும். பீயார்(மலம், வழக்கில் மலத்தைப் பீ என்று கூறுவர்)- தவறு செய்யாத செல்வாக்கில்லாதவரைக் குறிக்கும். தவறு செய்தவனை விடுத்துத் தவறு செய்யாதவரைத் தண்டிக்கும், குற்றம் சுமத்தும் பழக்கத்தைக் கைவிடுதல் வேண்டும் என்ற நீதிவழுவாத் தன்மையினை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.

நீதிமுறை

மனிதன் பொருளுக்கு அடிமைப்பட்டவன். எவ்வாறேனும் தனக்குப் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே மனிதருள் சிலர் செயல்படுவர். இத்தகைய பொருள் வெறி பிடித்தோர் நேர்மையானவராக இருக்க மாட்டார்கள். மேலும் யார்மீதாவது பழியைப் போட்டுவிட்டு அவர்கள் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்துவிடுவர். இத்தகையவர்களை,

‘‘தேங்காய் தங்கிறவன் ஒருத்தன்

தெண்டங்கட்டுவறவன் ஒருத்தன்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. தவறு செய்பவன் ஒருவன். ஆனால் தண்டனை அனுபவிப்பவன் வேறொருவன். இதுவே இவ்வுலக நியதியாக உள்ளது. தவறு செய்தவர்கள் பலர் வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தவறு செய்யாதவர் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட நீதிமுறை முற்றிலும் கைவிடப்படவேண்டிய ஒன்றாகும். தவறு செய்பவர்கள் யாராயினும் அவர்கள் தவறுக்குரிய தண்டனையை அனுபவித்தல் வேண்டும். அதுவே சரியான நீதிமுறையாகும் என்ற அறிவியல் சிந்தனையை இப்பழமொழி உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

வேண்டுமென்றே திருடுபவர்கள், பணத்திற்காகப் பொருள்ளாகத் திருடுபவர்கள் நிறையப்பேர் இவ்வுலகில் உள்ளனர். இத்தகைய பேராசையாலேயே ஊழல்கள் அதிகரிக்கின்றன. பேராசையினால் பலபேரிடம் மோசடியில் ஈடுபடுபவர்களும் அதிகரிக்கின்றனர். ஆனால் இவர்கள் குறுக்குவழியைப் பயன்படுத்திக் கொண்டு தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். வயிற்றுப்பாட்டுக்காகத் தவறு செய்பவர்களே தண்டனை பெறுகின்றனர். இருவர் சேர்ந்து ஒரு தவறினைச் செய்யும்போது அதில் ஒருவர் மட்டுமே தண்டிக்கப்படுவதும் நிகழ்கின்றது. இரண்டாவர் தவறிலிருந்து விடுவிக்கப்பட்டுவிடுவார் அல்லது அவ்வகையிலேனும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வர். இது நீதிமுறைக்குப் புறம்பானதாகவும் விளங்குகின்றது.

‘‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்’’

என வள்ளுவர் கூறியுள்ளதைப் போன்று நீதிமுறை அமைதல் வேண்டும். இத்தகைய நீதிமுறையை விளக்கும் வகையில்,

‘‘நுங்கு தின்னவன் ஓடிப் போயிட்டான்(போய்விட்டான்)

அதை நோண்டித் தின்னவன் ஆப்ட்டுக்கிட்டான்’’

(ஆப்பட்டுக்கிட்டான்-அகப்பட்டுக் கொண்டான்)

என்ற பழமொழி அமைந்திலங்குகின்றது.

இங்கு நுங்கு தின்றவன் என்பது தவறினைச் செய்தவனையும், நோண்டித் தின்னவன் என்பது அவனுடன் சேர்ந்து சென்றவனையும் குறித்து நிற்கிறது. பலர் சேர்ந்து ஒரு தவறினைச் செய்கிறபோது அனைவருக்கும் உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்ற அறநெறியை இப்பழமொழி வலியுறுத்துவது நோக்கத்தக்கது.

நடுவுநிலையுடன் பேசுதல்

அறவோர் நடுவுநிலையுடன் நீதி வழங்குதல் வேண்டும். வேண்டியவர், வேண்டாதோர், நண்பர் உறவினர், பகைவர், ஏழை, பணக்காரன் என எதையும் பார்க்காது நேர்மையுடன் இருந்து நீதி வழங்குதல் வெண்டும். அவ்வாறு நீதி வழங்குபவரே சிறந்தவர் ஆவார். தனது நண்பனாக இருந்து அவர் தவறு செய்தால் அவர் மனம் வருந்தும் என்று கருதி தவறினைச் சுட்டிக்காட்டாது இருத்தல் கூடாது. அது நண்பர் தவறு செய்வதை ஊக்குவிப்பது போன்றதாகும். சிலர் தங்களது நண்பரைத் திருத்துவதை விட்டுவிட்டு, அவரைது தவறைச் சுட்டிக்காட்டுபவரை ஏசுவர். இது கீழான குணமாகும். இஃது பாவச் செயலாகும். இதனால் தவறு செய்பவருக்குத்தான் செய்தது, செய்து வருவது சரியானதுதான் என்ற எண்ணம் மேலோங்குவதுடன் தன்னை அவர் திருத்திக் கொள்ளாமல் மேலும் மேலும் தவறிழைத்துக் கொண்டே செல்வார். இது அவருக்கு பேரிடர் விளைவிக்கும். சிலரைப் பிடிக்காது என்பதற்காகவே அவர் மீது வீணாகப் பழிபோடுதலும் கூடாது. அது பெரும் பாவச் செயலாகும். தனக்குச் சாதகமாக நடந்து கொள்ள மறுக்கிறார் என்பதற்காகவும் பழி சுமத்துதல் கூடாது. இதனை,

‘‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமாகப் பேசாதே’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பழி பாவங்களுக்கு அஞ்சி நீதி வழங்குதல் வேண்டும். எதையும் யோசியாது பேசுதல் கூடாது என்ற வாழ்வியல் முறைமையினை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

இதே கருத்தினை,

‘‘ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல

சுண்ணாம்பும் வைக்கிற மாதிரி போசாதே’’

என்ற பழமொழியும் எடுத்துரைப்பது சிந்தனைக்குரியதாகும்.

பெண்பாவம்

பெண்கள் மீது வீணான பழியைச் சுமத்துதல் கூடாது. அது பெரும்பாவத்தில் தள்ளிவிடும். காமுகர் சிலர் தன் ஆசைக்கு இணங்காத பெண்ணின் மீது கீழ்த்தரமான குற்றம் சுமத்தி அவளை இழிவுக்கு ஆளாக்கி அவமானப்படுத்துவர். அது பாவச் செயலாகும்.பெண்ணை எந்தநிலையிலும் இழிவுபடுத்துதல் கூடாது. அதுபோன்று அவர்களைப் பலர் முன்னிலையிலும் இழிவுபடுத்தி நடத்துதலும் கூடாது. இது குலத்திற்கு அழிவினை விளைவிக்கும்.

பலர் கூடிய அவையில் துரியோதனன் திரௌபதியை இழுத்துவந்து அவளுடைய ஆடையைப் பற்றி இழுக்கச் செய்து அவமானப்படுத்தினான். அதுமட்டுமன்றி தன் மூத்தோனின் மனைவி என்றறிந்தும் தனது தொடையின் மேல் வந்து அமருமாறு திரௌபதியைப் பார்த்துக் கூறி இழிவுபடுத்தினான். தனது அரண்மனையில் பணிபுரியம் பணிப்பெண் என்று கூறியும் இழிவுபடுத்தினான். இறுதியில் அவனும் அவனைச் சார்ந்தோரும் ஒருவரும் எஞ்சாது அழிந்தனர். அதனால் பெண்ணிற்கு பழி உண்டாகுமாறு நடந்துகொள்ளுதல் கூடாது என்ற அரிய நெறியை,

‘‘பெண்பாவம் பொல்லாதது’’

‘‘பெண்பாவம் குலநாசம்’’

‘‘பெண்ணுக்குப் பொழ பேசாதே’’ (பொழ-பிழை)

என்ற பழமொழிகள் தெளிவுற விளக்குகின்றன. பெண்களைப் பற்றி இல்லாத, கூறக்கூடாத, பிழையானவற்றைப் பேசுதல் கூடாது. அங்ஙனம் பிழைபடப் பேசுவது தீங்குதரும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துவதுடன்,

‘‘தையலை உயர்வு செய்’’

என்ற பாரதியாரின் புதிய ஆத்திசூடியையும் நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

கொல்லாமை

எக்காரணம் கொண்டும் பிற உயிர்களைக் கொல்லுதல் கூடாது. அது பாவகரமான செயலாகும். எல்லா உயிர்களையும் நம் உயிர்போன்று கருதி நடத்தல் வேண்டும். அதுவே வாழ்வுக்கு வளம் சேர்க்கும் வழியாகும். சிலர் உயிர்களைக் கொன்று நாம் தின்பதால் எப்படிப் பாவம் வந்து சேரும் என்று வினவுவர். தின்பவர் இருப்பதனால் தானே உயிர்களைக் கொல்கின்றனர். ஊன் உண்ணாதிருத்தால் உயிர்க்கொலையும் நிகழாது போய்விடும். இதகை,

‘‘கொன்றால் பாவம் தின்னாப் போச்சு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியினை கொன்றால் பாவனம் தின்னாப் போச்சு’’ என்றும் வழக்கில் வழங்குவர். பிற உயிர்களைக் கொன்றால் அப்பாவம் தீராது. அவ்வுயிரின் உடலைப் புசிப்பாதல் போய்விடுமா? போகாது. இது ஊன் உண்பவர்களால் அவர்களுக்கேற்ப மாற்றி வைத்துக் கொண்ட கூற்றாகும்.

உயிர்ப்பலியிட்டு அதனைச் சமைத்து இறைவன் முன் படையலிட்டுவிட்டு உண்டால் பாவம் வராது(பாவம்-தீமை) என்று கருதுவது தவறான கருத்தாகும். உயிரைப் படைக்கும்இறைவனே உயிரைப் பறிக்க எண்ணுவாரா? இல்லை. இது நாமே நம்மைச் சமாதனப்படுத்துவதற்காக நமக்குள் கூறிக்கொள்வதற்கான கருத்தாகும். உயிர்களை எக்காரணங்கொண்டும் எதற்காகவும் கொல்லுதல் கூடாது என்பதையே மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகிறது.

நண்பனாக இருந்தாலும் தவறு செய்தால் அவரது தவறினை அவர் உணருமாறு செய்தல் வேண்டும். எந்நிலையிலும் நடுவுநிலைதவறி நடத்தல் கூடாது. பிறர் மீது பழி போடுவதைத் தவிர்த்தல் நல்லது. அது போன்றே பெண்ணைப் பற்றி இழிவான சொற்களைக் கூற் கூடாது. பிற உயிர்களைக் கொல்லுதல் கூடாது என்பன போன்ற வாழ்வியலறங்களை நம்முன்னோர்கள் பழமொழி வாயிலாகக் கூறியிருப்பது போன்றுதற்குரியதாகும். பழிக்கும் பாவத்திற்கும் அஞ்சி நடந்து நன்நெறியில் வாழ்வோம். வாழ்க்கை வசப்படும்.

Series Navigationஆவின அடிமைகள்விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *