முன்னணியின் பின்னணிகள் – 25

This entry is part 21 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
அப்படியே நாடகத்துக்குப் போனோம். என்ன நாடகம் என்ன காட்சி எதுவுமே மனசில் பதியவில்லை. என் கையை ஒட்டிய அவள் கையின் அந்த சேபிள் உறுத்திக்கொண்டே யிருந்தது. அவளது கைகளும் பிரியமாய் அந்தக் கையுறைகளை வருடித் தந்துகொண்டே யிருந்தன. இதுல என்னன்னா, மத்தாட்களிடம் இவள் சகஜமாய் ஊடாடியிருப்பாள் என்கிற நிலைப்பாடு பெரிய இம்சையாய் இல்லை, ஜாக் குய்பருடன் ஏற்பட்ட பழக்கம்தான் என்னைக் கலவரப்படுத்தி விட்டது. அவளால் எப்படி ஒத்துப்போக முடிந்தது? எப்படி? ஏழைகளையே பாசி போல் வழுக்கி விட்டு விடுகிறது வறுமை. அட என்னிடம் மாத்திரம் பணம் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும். ”அடியே இதைவிட நல்லதா நான் வாங்கித் தருவேன் உனக்கு. இதை உடனே அந்தாள்கிட்டத் திருப்பி யனுப்பிரு…” – சொல்ல ஆசை.
”என்ன பேசவே மாட்டேங்கறே?” என்று கேட்டாள் ரோசி.
”இல்லியே?”
”உடம்பு கிடம்பு சரியில்லையா?”
”அதெல்லா நல்லாதான் இருக்கு.”
என்னை ஒருக்களித்துப் பார்த்தாள். நான் அவள் கண்களைச் சந்திக்கவில்லை. என்றாலும் அந்தக் கண்களின் குறும்பு கொப்பளிக்கும் சிரிப்பை உணர்ந்தேன். அதன்பின் அவள் எதுவும் பேசவில்லை. நாடகம் முடிந்தது. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. திரும்பவும் குதிரை வண்டி அமர்த்திக் கொண்டோம். நான் சாரதியிடம் லிம்பஸ் தெருவில் அவள் முகவரியைக் கொடுத்தேன். விக்டோரியா தெரு வரை அவள் எதுவும் பேசினாளில்லை. பிறகு பேசினாள். ”நான் உன்னோட உன் அறைக்கு வர்றது உனக்குப் பிடிக்கல்லியா?”
”உன் இஷ்டம்.”
மூடுதிரையை உயர்த்தி சாரதிக்கு என் முகவரியைச் சொன்னாள். என் கையைப் பற்றி அப்படியே வைத்திருந்தாள். நான் சலனப்படவில்லை. சன்னலுக்கு வெளியே ஒரு விரைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே உருமிக் கொண்டிருந்தது. வின்சன்ட் சதுக்கம். அவள் வண்டியில் இருந்து இறங்க கைகொடுத்தேன். ஒரு வார்த்தை பேசாமல் வீட்டுக்குள் போனோம். என் தொப்பியை, கோட்டைக் கழற்றிக் கொண்டேன். தனது கம்பளியாடையையும் கையுறைகளையும் கழற்றி சோபாவில் எறிந்தாள் அவள்.
”என்ன ரொம்பச் சிணுங்கறே?” என்று என் பக்கமாய் வந்தாள்.
”அதெல்லா ஒண்ணில்ல” என்று வேறு பக்கமாய்ப் பார்த்தேன்.
ரெண்டு கைகளாலும் என் முகத்தை ஏந்திக் கொண்டாள் அவள்.
”இதென்ன கூத்தா யிருக்கு? ஜாக் குய்பர் ஒரு கம்பளிக் கோட்டு எனக்கு வாங்கித் தந்தால் உனக்கு என்ன போச்சு? உன்னால அது முடியாது, முடியுமா? அப்பறமென்ன?”
”அதுண்மைதான். எனக்கு ஐவேஜ் இல்லை.”
”டெட், அவருக்கும் முடியாது. ஒரு 260 பவுண்டு விலையுள்ள பெரிய பரிசு, அதை வேணான்னு சொல்ல என்னால முடியாது பாத்துக்க. ஒரு கம்பளிக் கோட்டு வேணும்னு நான் இத்தனை காலமா ஆசைப்பட்டுக் கிட்டிருந்தேன். வெறும் கனவாத்தான் அது இருந்தது. ஆனால் ஜாக்குக்கு அது ஒரு விஷயமே இல்லை!”
”தபார், வெறும் நட்புக்காக அவர் இதை உனக்கு வாங்கிக் கொடுத்தார்னு என்னை நம்பச் சொல்றியா?”
”நீ சொல்றது சரியா இருக்கலாம். எது எப்பிடியோ, அந்தாள் ஆம்ஸ்தெர்தாம் போயாச். இனி அவர் எப்ப வருவார் யாருக்குத் தெரியும்?”
”அட, அவர் ஒராள் தானா என்ன?”
சட்டென அவளைப் பார்த்தேன். சினந்த, அடிபட்ட, சோகவயப்பட்ட கண்கள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அடடா, இந்த இனிமையும் எளிமையும் அப்படியே ஆளை உள்ளே போட்டு ஆட்டிவிடுகிறது. மகா மிருதுவாய்ப் பேசினாள்.
”அட என் அன்பே… நீ ஏன் அடுத்தாளைப் பத்தில்லாம் இத்தனை அலட்டிக்கிட்டிருக்கே? அதுல உனக்கு என்ன சங்கடம்? என்னோட நீ சந்தோஷமா இருந்தே, உண்டா இல்லியா?”
”ஓகோன்னிருந்தேன்.”
”அப்பறமென்ன? வெறுன்ன புலம்பறதுலயும் பொறாமைப் படறதுலயும் அர்த்தமில்லை. உனக்கு என்ன கிடைக்குதோ அதில் சந்தோஷப்படலாமில்லே? வாய்ப்பு கிடைக்கும்போதே கிடைக்கிற சந்தோஷங்களை அனுபவிச்சிறணும்டா. அட அதிகபட்சம் ஒரு நூறு வருஷம். அத்தோட நாம எல்லாருமே மண்ணோடு மண்ணாயிருவம். அப்ப இது எதுவும் கதையாவுமா சொல்லு? முடிஞ்ச அளவு சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போவோம்.”
என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். என் உதடுகளைக் கவ்வினாள். என் கோபம் எங்கே போனது தெரியாது. அவள் அழகே அப்போது என் நினைவில் வந்தது. ஹா, அவளது அந்த அணைப்பு…
”நான் எப்பிடி இருக்கேனோ, அப்பிடியே என்னை நீ ஏத்துக்கணும்” என்று காதில் சொன்னாள்.
”சரி” என்றேன்.
>>>
இத்தனை கூத்திலும் நான் திரிஃபீல்டைப் பார்க்கவே இல்லை. ஒரு பத்திரிகையின் இலக்கியப் பகுதி ஆசிரியர் என்று பகல்வேலை அவருக்கு சரியாக இருந்தது. அந்தி சாய எழுத உட்கார்ந்து விடுகிறார். ஆனாலும் சனி மதியங்களில் அவர் தன்னை விடுவித்துக் கொள்கிறார். இணக்கமான அதேசமயம் விநோதமான முறையில் அவர் உற்சாகமாய் அப்போது இருப்பார்.
என்னைக் காண அவர் சந்தோஷப் பட்டாப் போலத்தான் இருந்தது. என்னோடு பலதரப்பட்ட விஷயங்களைக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பார். என்றாலும் என்னைவிட வயதில் மூத்த, என்னைவிட முக்கிய விருந்தாளிகளை அவர் அதிகம் கவனிக்க வேண்டியிருந்தது.
என்ன, எனக்குள்ளே ஒரு யோசனை, நாளாக நாளாக அவர் ஏனோ தனிமைப்பட்டு வந்தார். முன்னைப்போல அந்த துள்ளலான, அசட்டையாகவும் எக்குத் தப்பாகவும் பேசுகிறதெல்லாம் பிளாக்ஸ்டேபிளோடு போயிற்று. ஆனால் கூட்டத்துக்கு வந்த மத்தாட்கள் அப்படி இல்லை என நான் இப்போது கவனிக்கிறேன். அத்தனைக்கு நானே வளர்ந்திருக்கிறேன்… அந்தக் கூட்டத்தால் ,இவரைப்பற்றி நான் அப்படி முன் அபிப்ராயம் வைத்திருந்தேனோ என்னவோ? இவர்களோடு பேசிப் பழகி கேலி கிண்டல் என அரட்டையடித்து, அவரும் சிறிது உருமாறி யிருக்கலாம்.
இப்போது அவர் எழுத்து வாழ்க்கையில் மூழ்கி, அவரது நிஜ வாழ்க்கையையே ஒரு கனவாக ஆக்கிக்கொண்டு விட்டாரோ என்றுகூடப் படுகிறது. பொது விருந்துகளில் அவரை சில சமயம் எதும் பேசச் சொல்கிறார்கள். ஒரு இலக்கிய அமைப்பில் உறுப்பினாராக ஆகியிருக்கிறார். தனது சிறு வட்டம் தாண்டி வெளியே நிறைய அறிமுகங்கள் இந்நாட்களில் அவருக்கு அமைந்திருக்கின்றன. அவரது எழுத்து அப்படியான விரிவை ஏற்படுத்தி யிருக்கிறது.
நிறைய சீமாட்டிகள் இப்போது அவரை தேநீர் என்றும் விருந்து என்றும் தங்கள் இல்லங்களுக்கு அழைக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்களைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து ஊர்காண உபசரிப்பது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் ரோசியையும் அழைத்தார்கள். ஆனால் அவள் போகிறதேயில்லை. அவளுக்கு இந்த உபசாரமெல்லாம் பெரிதாய்ப் படவில்லை. அந்தச் சீமாட்டிகளும் அவள் வர்லியா, சரி என்று விட்டுவிடுகிறார்கள். டெட் வரவேண்டும் அவர்களுக்கு, விஷயம் அவ்வளவே,
சபைக் கூச்சம் அவளுக்கு இருக்கலாம். நமக்கு அது ஒட்டாது என அவள் நினைத்திருக்கலாம். இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன சோலி? ஒன்றிரண்டு தடவை அவர்கள் அவளை வரச்சொல்லி மரியாதை நிமித்தம் வலியுறுத்தினார்கள். ஆனால் அவள் வந்ததும் அப்படி வாய் உபசார மரியாதை அவர்களுக்கே சங்கடமாய் முடிந்தது. அவள் ஒட்டவே யில்லை அங்கே. அவளுக்கு இலக்கியம் தெரியாது.
அந்த சமயத்தில் தான் எட்வர்ட் திரிஃபீல்ட், தி கப் ஆஃப் லைஃப் எழுதியது. (கோப்பையில் வாழ்க்கை). அவரது படைப்புகளை விமரிசனம் செய்கிறது என் வேலை அல்ல. இப்போது அவர் படைப்புகள் பற்றி எக்கச்சக்க கணிப்புகள் வந்தும் ஆயிற்று. சராசரி வாசகனின் பசிக்கு தீனியாகிற அளவில் நிறைய இருக்கத்தான் இருக்கின்றன.
ஆனால் இதை நான் சொல்ல வேண்டும். அவரது புத்தகங்களில், இந்த கோப்பையில் வாழ்க்கை, அத்தனை கொண்டாடப் படவில்லை, பிரபலமாகவில்லை என்றாலும், என்னைப் பொருத்தவரை அவரது படைப்புகளில் ஆக சுவையானது ஆதுவே. ஆங்கில இலக்கியத்தில் காணப்படும் மனஅவசங்களில் ஒரு பட்டவர்த்தனமான சுயம்புவான வீர்யம் இதில் இருக்கிறது. வாழ்க்கையை நேரடியாக உரித்துக் காண்பிக்கிற புத்துணர்ச்சியை, கடுக் என்ற உணர்வை இதில் நாம் எட்டுகிறோம். புளிச்ச ஆப்பிள் ருசி, பல்லைக் கூச வைக்கிறது. என்றாலும் வாயின் அண்ணத்துக்கு அந்தச் சுவை தனி அனுபவம் தான். அவரது மத்த புத்தகங்களை விட, இதைத் தான் அவர் எழுதியிருக்க வேண்டும், என்று தோன்றுகிறது. ஒரு குழந்தையின் மரணக் காட்சி. ஐயோ, இதயத்தைத் துடிக்க வைக்கிறது. ஆனால் வார்த்தைகளால் போட்டு அழுத்தாமல் அதை அவர் சொல்லியிருக்கிறார். முனகல், ஊளை அதில் இல்லை. அதைத் தாண்டி நிகழும் ஒரு சம்பவம்… வாசித்தவர் மனசில் ஆழப் பதிந்துவிடும் அவை.
தனிமை வாட்டும் திரிஃபீªல்டின் மூளையில் அவர் எழுதிய இந்தப் பகுதி தான் ஒரு புயலை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ? புத்தகம் வெளியான சில நாட்களில் அவரது மற்ற நாவல்களைப் போலவே இதுவும் வழக்கமான வரவேற்பை எட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வழக்கமான புத்தக மதிப்புரைகள். பொதுவாக பாராட்டு பெறும் அது என்கிற எதிர்பார்ப்பு. கொஞ்சம் அப்படி யிப்படி முணுமுணுப்புகளும் சின்ன அளவில் எழலாம். விற்பனையும் கணிசமாக என்றில்லா விட்டாலும் மோசமில்லை என்கிறதாக இருக்கும். ஒரு 300 பவுண்டு அளவுக்கு அதில் வரும்படியை அவர் எதிர்பார்க்கிறதாகச் சொன்னாள் ரோசி. நதிப்பக்கமாய் இந்தக் கோடையில் வீடு மாற்றிவிடலாம், என்றும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
நாவலைப் பற்றி ஆரம்பத்தில் வந்த ஒன்றிரண்டு குறிப்புகள் பட்டுக்கொள்ளாமல் இருந்தன. அப்புறம் ஒரு காலையிதழில் கடுமையான தாக்குதல் நிகழ்ந்தது. அந்தப் புத்தகம் எதிர்பாராத அளவில் சமூக ஒழுங்குகளை சின்னா பின்னப் படுத்துகிறது. ஆபாசமானது. அதை வெளியிட்ட பதிப்பாளர்களையும் அது வசைபாடியது. இங்கிலாந்தின் இளைஞர்கள், இளம் பெண்களிடையே அது கிடைத்தால் என்னென்ன மோசமான விளைவுகள் எல்லாம் ஏற்படும், என ஈறும் பேனும் பெருமாளாக்கப் பட்டன. பெண்ணினத்துக்கே அவமானம் இந்தப் புத்தகம், என்று ஒரு கூச்சல் எழுந்தது. ஐயோ இது இளைய தலைமுறையினரிடையே, கன்னிகைகளிடையே கிடைத்தால்… என்று கலவரப்பட்டு கவலைப்பட்டார் ஒரு மதிப்புரைஞர். சில நாளிதழ்கள் அவர்மீது வழக்கு தொடர்ந்தன. அதைக்காட்டிலும் பைத்தியக்காரர்கள் லோகத்தில் இல்லாமல் இல்லை. அவர்கள் புத்தகத்தைத் தடை செய்யச் சொன்னார்கள். பொதுநல வழக்கு தொடராமலேயே கூட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிற அளவுக்கு மோசமான புத்தகம் இல்லியா இது, என்று சிலர் கிளம்பினார்கள்.
ஆளாளுக்கு கால்பந்தாய் உதைத்தார்கள் அந்த நூலை. எட்டு திசையிலும் கிளர்ந்தது எதிர்ப்பு. பற்றியது நெருப்பு. எங்கோ மூலையில் இருந்து ஒரு தைரியமான எழுத்தாளர், இந்தப் புத்தகம் தேசிய அளவையும் தாண்டி உலகளாவிய சமாச்சரம், இந்தளவு யதார்த்தமாய் மானுடத்தை வரைந்துகாட்டிய எட்வர்ட் திரிஃபீல்டின் வேறு புத்தகம் இல்லை, என்று கொடுத்த குரல் எடுபடவில்லை. அட அது சராசரிப் பேச்சு, இலக்கியம்னா என்ன, ரெண்டு கொம்பு வேணாமா?… என அவர்களை பிறத்தியார் ஒதுக்கி விட்டார்கள். நூலகங்களில் அந்த நூல் தவிர்க்கப்பட்டது. ரயில்நிலைய புத்தகசாலைகளில் விற்பனைக்கு என அதை வைக்க மறுத்து விட்டார்கள்.
இதெல்லாம் எட்வர்ட் திரிஃபீல்டுக்கு ரொம்ப மன உளைச்சலைத் தந்தது. ஆனால் மிகுந்த அனுபூதியுடன் அவர் அமைதிகாத்தார். தோளைக் குலுக்கிக் கொண்டார்.
”இது யதார்த்தம் அல்ல, நிசம் அல்லன்றாங்கப்பா” என்று புன்னகைத்தார். ”நாசமாப் போக அவர்கள். அது உண்மைக்கதை.”
ஆனால் அவரது நம்பகமான நட்பு வட்டம் இந்தச் சூழலில் அவரை உயர்த்திப் பிடித்தது. ஆ, அழகியலில் திருப்புமுனையாக்கும் இது, மைல் கல்… என அதை அவர்கள் தலைமேல் வைத்து கொண்டாடப் புகுந்தார்கள். இதற்கு அதிர்ச்சியடைகிற நபர் கலைக்கண் படைத்தவர் அல்ல. திருமதி பார்த்தன் திரஃபோர்டு இது ஒரு உச்சபட்ச அபாரப் படைப்பு எனக் கொண்டாடத் தயங்கவே இல்லை. குவாட்டர்லி இதழுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு அவள் வளரவில்லை அப்போது என்றாலும், எட்வர்ட் திரிஃபீல்டு சார்ந்த அவளது மதிப்பு கலகலப்பதாய் இல்லை.
ஒரு காலத்தில் அத்தனை புழுதியைக் கிளப்பிய அந்தப் புத்தகத்தை இப்போது வாசிப்பது ஒரு வித்தியாசமான, பாடம் படிக்கிறதான அனுபவம் எனக்கு. லோகத்தின் மகா வெகுளிக்குக் கூட சின்ன வெட்கத்தைத் தரும்படி அதில் ஆபாசம், விரசம் இல்லை. இன்றைய வாசகனுக்கு அதில் ஒரு வார்த்தை கூட முரண்படாது.
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationஇந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்புசுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *