அடை மழையில் நனையும் ஞாபகங்கள் – வளவ.துரையனின் “விடாததூறலில்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து

This entry is part 39 of 40 in the series 12 பிப்ரவரி 2012

முனைவர் க. நாகராசன்.

வெளீயீடு : அகரம் மனை எண் ; 1, நிர்மலா நகர், தஞ்சாவூர். 637 007
விலை; ரூ 60

நல்ல கவிதைத் தொகுப்பு தரும் வாசிப்பு அனுபவம் அலாதியானது. கவிதையில் இடம் பெறும் வீர்யமான ஒரெ ஒரு சொல்கூட நம் மனத்தைப் பரவசப்படுத்தி ஞாபகங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, நினைக்கும் போதெல்லாம் இனிமையைத் தரவல்லது. சமீபத்தில் வந்துள்ள வளவ. துரையனின் “ விடாத தூறலில் “ கவிதைத் தொகுப்பு ஏராளமான இனிய தருணங்களை மீட்டெடுக்கும் வல்லமை கொண்டதாய் மிளிர்கிறது.

குறிப்பிட்டத்தகுந்த பல கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கிராமத்தின் முக்கிய இடமாகவும் பரபரப்புடனும் இயங்கிய கீற்றுக் கொட்டகை, இடிந்துபோன கட்டிட்டத்துடன் முட்டவரும் காளையாகக் காட்சி அளிக்கும் அவலத்தை முன் வைக்கிறது. ” மாற்றம் கவிதை. இன்று கூட்டமும் இல்லை. காலம்தான் எத்தகைய முரணை முன் வைக்கிறது. ஒட்டகச் சாணி வாரிப்போட்டு கையெல்லாம் ரணமான (அரேபியாவிற்கு சம்பாதிக்கப் போன) அண்ணணின் மடலை வரைகிறது “ ஒரு கடிதம்“ கவிதை. இன்னும் இந்தத் துயரம் தொடர்ந்தபடியேதான் உள்ளது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இடம்பெறும் “அப்பா எப்ப வர்ரீங்க? “ எனும் சிறுமியின் பிஞ்சுக்குரலாலான மொபைல் காலர் ட்யூன் நினைவுக்கு வருகிறது.

போகிறபோக்கில் சாதாரண சம்பவங்களைக்க்கூட நேர்த்தியாகப் படம் பிடிக்கின்றன சில கவிதைகள். உதாரணம் “ அவர்களுக்கென்ன “ மற்றும் “ இழப்பு “. தற்செயலாக இரண்டு கவிதைகளுமே விடிகாலை எழுந்திருப்பதையே முன் வைக்கின்றன. முதலாவது கவிதை உலக நோக்கிலும் அதே விஷயத்தை இரண்டாவது கவிதை அழகியல் கூறுகளோடும் விவரிக்கின்றன. “ அழுத்தம் “, “ வெறும் கூடு “ இரு கவிதைகளும் நுண்ணிய உணர்வுகளை மீட்டுகின்றன. மீன் தொட்டியில் ஊருக்குப் போகும் அவசரத்தில் உணவு போடாமல் மறந்த தவறையும், காலியான பறவைக் கூடு மனத்தில் எழுப்பும் கவலையையும் முறையே மிகுந்த அவதானிப்போடு கவிதைகள் இயம்புகின்றன.

கவிதைக்கான எந்த அறிகுறியும் இல்லாத “ நரை” , ஒரு வித்தியாசமான படைப்பு. ”அழுத்தம்” கவிதை வளவ துரையனின் மலைச்சாமி நாவலை நினைவுபடுத்துகிறது. நகர நாகரிகத்தில் மாறிவிட்ட அய்யனாரும் குதிரைகளும் ” பயம் ” கவிதையில் அன்னியமாகத் தோற்றமளிக்கின்றனர். “முரண்” எனும் ஒரே தலைப்பில் இரண்டு கவிதைகள் (பக்கம் 16, மற்றும் 35) இடம் பெற்றுள்ளன. இரண்டுமே நல்ல கவிதைகள். இரண்டாவது கவிதையில் தூக்கில் தொங்கும் பிணம் நல்ல உவமை. “ சில “ கவிதையின் ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் பழமொழி போல் உள்ளது.

நுணுக்கமான பதிவு உள்ள ஓர் கவிதை “ நானும் குருவியும் “ . குருவியைப் பார்ப்பது பெரிய விஷயம் அல்ல. குருவி கவிஞரைப் பார்ப்பதுதான் ஆகப் பெரிய செய்தி. அழகாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது. 75 ஆம் பக்கத்தில் “பார்வை“ என்ற கவிதையிலும் குருவி வருகின்றது. ஒன்றல்ல, இரண்டு குருவிகள். அதுவும் ஜோடிக் குருவிகள். அவையும் கவிஞரைப் பார்க்கின்றன. அதுவும் ஏளனப்பார்வை. எந்த நடைமுறைப் பிர்ச்சினையும் இல்லாமல் வீடு கட்டி முடித்த வெற்றிப் பார்வை அது. “ எச்சம் “ கவிதை பாவண்ணனின் பெண்ணையாறு கவிதையையும், “ முகம் “ முகுந்த் நாகராஜனின் K அலைவரிசை வாடகை வீட்டுக்காரர் கவிதையையும் நினைவுபடுத்துகின்றன.

நூலெங்கும் இழப்பின் வலி பல கவிதைகளில் தெரிகின்றது. அதற்கு நல்ல உதாரணம் “ அசை “. மீறல் எனும் கவிதை நவீன பெண் கவிஞர்களைச் சீண்டுகிறது. (பெண் கவிஞர் யாராவது படித்துவிட்டு திட்டித் தீர்க்கப் போகிறார்கள்.) நூலின் ஆகச் சிறந்த கவிதையாக “ சிரிப்பு “ என்ற கவிதையைச் சொல்லலாம். நேர்த்தியான செதுக்கல். நல்ல நவீன கவிதைக்கு வலிமையான எடுக்காட்டு, “ கொசுவும், சுள்ளானும் “ வித்தியாசமான முயற்சி. நன்றாக வந்துள்ளது.

” விடாத தூறலில் “ எனும் நூலின் தலைப்பு ”என்ன ஆகப் போகிறது ” என்கிற கவிதையில் ஒரு வரியாக வருகிறது.

” விடாத தூறலில்

நனைந்து கொண்டே

போய்த் தீர வேண்டிய

அவசியம் இருக்கையில்

கவலைப் பட்டு என்ன ஆகப்போகிறது ? “
சிற்றிதழ் சூழலை விவரித்து எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள் மானுட வாழ்விற்கே பொருத்தமாக அமைவது நூல் தரும் பரவசங்களில் ஒன்று.
ஏறக்குறைய இதே விஷயத்தை அடுத்தப் பக்கத்தில் உள்ள “ வாழ்க்கை “[ பக்கம் 65 ] கவிதையில் வேறு வழங்கி உள்ளது குறிப்பிடக்கது. அந்த வரிகளாவன :

” எப்படியோ

வாழ்ந்துதான்

தொலைக்க வேண்டி இருக்கிறது

வாழ்க்கையை “

” கரிக்கிறது “ கவிதையின் “பாம்பின் வாய்த்தேரை” நல்ல உவமை. கவிதைகளின் ஊடேத் தொடர்ச்சியாகப் பயணம் செய்யும் நாயும் (பக்கங்கள் 18, 25, 37, 58), மழையும் (பக்கங்கள் 25, 30, 45, 53, 59, 62, 63) வலிமையான படிவங்களாக கவிதைகளுக்கு செறிவூட்டுகின்றன. அழகான எழுத்துரு (FONT) கண்களுக்கு இதமாக உள்ளது.

வயது ஆக ஆக, சின்ன வயது ஞாபகங்கள் மனத்திலே நிறைய வலம் வருகின்றன. மயிலிறகால் வருடுவது போல ஏராளமான அனுபவங்களை துரையனின் கவிதைகள் ஞாபகப்படுத்துகின்றன. “ சின்ன வயதில் விநாயகனே பாட்டு ஒலிக்கும் கீற்றுக் கொட்டகை, பெருமாள் கோயில் தேரோட்டம், ஓங்கிக் குட்டிய ஒண்ணாம் வகுப்பு டீச்சர், குடுமி வாத்தியார், மாரியம்மன் கோயில் திருவிழா, அந்தத் திருவிழவிற்குத் தவறாமல் வருகை புரியும் குடைராட்டினக்காரன், கல்யாணம் ஆகாத கோகிலாக்கா, கை உடைந்து போன ஐயனார் சிலை, மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்த ஆற்றுத் திருவிழா, நேர்த்தியாக தலைப்பாகை கட்டும் தாத்தா, ” இப்படி நிறைய கதை மாந்தர்களும், சம்பவங்களும் கவிதைகள் எங்கும் வலம் வருகின்றனர்.
கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட நடு வயது மற்றும் அவ்வயதைத்தாண்டிய ஒவ்வொருவருக்குமே மிகவும் பழக்கமான மாந்தர்கள் இவர்கள். இந்த ஒரு விஷயம்தான் கவிதைத் தொகுப்பை வேறு படுத்திக் காட்டுகிறது. முக்கியமான தொகுப்பு எனக் கருதத் தூண்டுகிறது.

கவிஞரின் அனுபவங்கள் வாசகரின் அனுபவங்களாக இந்த நூலில்
மடைமாற்றம் பெற்று இழந்து போன வாழ்வின் படிவங்களாக உறைந்துள்ளன. இந்த விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் இரவின் இந்தத் தருணத்தில் வெளியே பெய்து கொண்டிருக்கும் தொடர் மழையைக் கூட
(டிசம்பர் 2011) இந்தக் கவிதைகளின் நீட்சியாக என்னை எண்ண வைக்கிறது.

***************************************************************************************************************************

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 6) எழில் இனப் பெருக்கம்கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 9
author

முனைவர் க. நாகராசன்.

Similar Posts

Comments

  1. Avatar
    K.GOVINDAN says:

    அடை மழையில் நனையும் ஞாபகங்கள் நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்.மழையில் நினைவது ஒரு இன்ப உணர்வை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *