பாண்டிராஜின் ‘ மெரினா ‘

This entry is part 11 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சென்னையின் மெரினா கடற்கரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. ஒரு முறை என் தம்பி தொலைந்து போய் கிடைத்ததும் அந்த மெரினா கடற்கரையில் தான். அந்த அரை மணி நேர, அரையிருட்டுத் தேடல், ஒரு திகில் அனுபவம்.
பாண்டிராஜுக்கு வேறு களம். சிறுவர்கள் மீது அக்கறை கொண்டவராக, பசங்க படத் தில் கிடைத்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது அவருக்கு. கிளீன் மூவி கொடுக்க வேண்டும் என்கிற லட்சியமும் அதில் சேர்ந்து விடுகிறது.
கடற்கரையையே உலகமாகக் கொண்டு வாழும் சிறுவர்கள், சில வளர்ந்தவர்கள் என கதை போகிறது. பளிச் பாத்திரங்களாக, சிறுவர்களை நம்பியே படம் எடுத்த தைரியத்தை பாராட்டவேண்டும்.
அம்பிகாபதி, கைலாசம், கிரைண்டர் என சிறுவர்களை வைத்து பின்னப்பட்ட கதை. கூடவே மருமகளால் துரத்தப்பட்டு, அங்கு பிச்சையெடுக்கும் தாத்தா, குதிரையை வைத்து சவாரியின் மூலம் சம்பாதிக்கும் ஆள், அவ்வழியாக தினமும் போகும் தபால் காரர், கைலாசத்தைத் தேடி சென்னை வரும் போலீஸ்காரர்கள், மத்தளம் தட்டி, மகளை ஆட வைத்து, பாடிப்பிழைக்கும் ஒருவர் என வர்ணஜால பாத்திரங்கள்.
டிவியில் பார்த்த சிவகார்த்திகேயன், களவாணி ஓவியா,சிறுவர்களை அரசு இல்லத்தில் சேர்க்கும் அதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மட்டும் தான் பிரபல நடிகர், நடிகையர். மற்ற காட்சிகளில் எல்லாம் புதுமுகங்கள். ஆனால் யாரும் சோடை போகவில்லை. மெரினாவின் சரித்திரத்தைக் கூட, காமெண்ட்ரி போலல்லாமல், ஒரு டிவி தொகுப்பாளினி மூலம் சொல்வது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
திண்டுக்கல்லில் சிறுவர்களிடையே நடக்கும் கல்லெறி விளையாட்டில், காவல் அதிகாரியின் மகன் தலையில் காயமடைய, அவன் இறந்து விட்டான் என்று பயந்து, சென்னைக்கு ஓடிவரும் கைலாசம், சித்தப்பாவின் சாராயக்கடையில் வேலை செய்யப் பிடிக்காமல், படிக்கும் ஆசையுடன் வரும் அம்பிகாபதி, கைலாசத்தைத் தேடி வரும் போலீஸ், அவனைக் கண்டுபிடித்து ஊருக்கு கொண்டு செல்லும் வரை ஒரு பாதி. அவன் திரும்பும்போது, சிறுவர்கள் எல்லோரும் அரசு இல்லத்தில். அம்பிகாபதியைப் பிரிய முடியாத கைலாசம் அவனைத்தேடி விடுதி வர, அவன் படிக்கிற ஆசையில் அங்கேயே தங்க விருப்பம் சொல்ல, தபால்காரர் தத்தெடுத்து அவனைக் கைலாசத்துடன் சேர்க்கிறார். பிச்சையெடுக்கும் தாத்தாவை தடுத்து, அம்பிகாபதி திருத்த, அவர் புல்லாங்குழல் விற்று வரும் காசில் அவனைப் படிக்க வைக்க பள்ளியில் விண்ணப்ப படிவம் வாங்குகிறார். பள்ளியில் சேர்ப்பதற்கு முன் அவர் இறந்து விடுகிறார். பசங்களே அவருக்கு எரியூட்டுவது இன்னொரு நல்ல காட்சி. பாடை கட்டாமல் குதிரை மேலேயே பிணத்தை ஏற்றி செல்வதும் நல்ல டச்.
சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் ‘தத்துவம் ‘ காதலைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு வரியும் கவிதை. பீச் பாடகரை வைத்துப் பழைய பாடல்களை காட்சிக்கு ஏற்றவாறு இணைத்திருப்பது நல்ல உத்தி. பல இடங்களில் நல்ல வசனங்கள், வரம்பு மீறாத நகைச்சுவைக் காட்சிகள்.
‘ வியாபாரம் தவிர என்ன செய்றீங்க? ‘
‘ திங்கட்கிழமை, திங்கட்கிழமை பீச்ச சுத்தம் பண்ணுவோம் ‘
‘ வேற என்ன? ‘
‘ சுண்டல் விக்கும்போது செருப்பு போட மாட்டோம். மண் சுண்டல்ல கலந்திரும். ‘
‘ காதல்ன்றது காக்காப்பீ மாதிரி.. எப்போ யார் தலைல விழும்னு யாருக்குமே தெரியாது ‘
‘ காதல்ன்றது ஒரு குரு. ஆனா எல்லாரையும் அது தன் சிஷ்யனா ஏத்துக்கறது இல்ல’
பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் போரடிக்கவில்லை. பின்னணி இசையும் அதே அதே. பிரமாதமான ஒளிப்பதிவு எல்லாம் இல்லை. ஆனால் கண்களை உறுத்தவில்லை.
பீச்சில் வியாபாரம் செய்யும் சிறுவர்கள் சைல்ட் லேபர் இல்லை.. சைல்ட் ஒர்க்கர் என்று ஒரு பதிவு. வாழ்வுக்காக, மாலை வியாபாரம் என்றாலும், சிறுவர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஒரு பாசிட்டிவ் மெஸேஜுடன் படம் முடிகிறது.
பாண்டிராஜுக்கு பாராட்டுக்கள்.
0
கொசுறு
மல்டிப்ளெக்ஸ்களில் அரசு ஆணைப்படி பத்து விழுக்காடு இருக்கைகள் பத்து ரூபாய் கட்டணத்தில் விற்கவேண்டும். உதயம் காம்ப்ளெக்சில் தனியாக கவுண்டரே இருக்கிறது. ஆனால் விருகம்பாக்கம் பேம் அரங்கில் அதை காம்போ என்கிறார்கள். அதாவது டிக்கெட் பத்து ரூபாய். கூடவே பாப்கார்ன், பெப்சி சேர்த்து எண்பது ரூபாய். திரைக்கு அஞ்சடி முன்னால் பத்து இருக்கைகள் தனியாகப் போட்டிருக்கிறார்கள். இது எப்படி பத்து விழுக்காடு ஆகும். மேலும் அங்கிருந்து பார்த்தால், விட்டத்தில் வெண்ணிலவைப் பார்த்த கதைதான். கழுத்துச் சுளுக்கு கியாரண்டி.
0

Series Navigationபழமொழிகளில் எலியும் பூனையும்பரிகாரம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *