பேஸ்புக் பயன்பாடுகள் – 2

This entry is part 5 of 40 in the series 12 பிப்ரவரி 2012

“கீதா.. இன்னிக்கு ராதாவுக்குப் பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறதா?”

“எனக்கு ஞாபகம் இருக்கவில்லை.. ஆனால் தெரியும்..”

“என்ன சொல்லறே.. புரியலையே!”

“எனக்கு அவள் பிறந்த நாள் இன்று என்பது ஞாபகம் இல்லை. ஆனால் இன்று என்பதை பேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்டேன். இப்போ புரியதா?”

“அப்படியா? அவளுக்கு என்ன பரிசு தரலாம்?”

“நான் பரிசும் கொடுத்துட்டேன்..”

“கொடுத்துட்டியா? என்னை விட்டுட்டியே?”

“பைசா செலவில்லாமே.. பரிசை அனுப்பிட்டேன். நீயும் பரிசு கொடுக்கலாம்..”

“என்னது செலவில்லாமையா? அப்படி என்ன பரிசு?”

“கேக் ஒன்றை அனுப்பிட்டேன்..”

“என்ன சொல்றே.. காசு இல்லாம கேக்கா?”

“ஆமாம் ராணி.. நம்ம நண்பர்களுக்கு கேக், பிஸ்கெட்டு, பூக்கள்ன்னு எதை வேண்டுமானாலும் நாம் பேஸ்புக் மூலமா அனுப்பலாம்..”

“வீட்டுலே போய் கொடுப்பாங்களா?”

“என்ன ராணி? நமக்கு பொருளா முக்கியம்.. அன்பு தானே.. அந்த அன்பை வாழ்த்து அனுப்பறது மூலமா காட்டுறோமில்லையா? அதே போல கேக்கை அனுப்பலாம். சாப்பிட முடியல்லைன்னாலும், கேக் கிடைத்த மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும். அவ்வளவுதான்..”

“பரவாயில்லை.. கீதா நீ தேறிட்டே..”

“நீயும் பேஸ்புக்கை நல்லா உபயோகிக்கக் கத்துக்கோ..”


பேஸ்புக் மூலமா நாம் பிறந்த நாள்களை தெரிந்து கொள்ளலாம். அந்த நாளில் பரிசுகளை அனுப்பலாம். இது தற்போது பேஸ்புக் உலகில் மிகவும் பிரபலம்.

பிறந்த நாள் பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்தினால் இதைச் செய்யலாம். பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு நான்கு நாட்களுக்கு முன் ஒரு செடியை அனுப்பினால், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு தினம் நீர் ஊற்றி வளர்த்தால், நான்காம் நாள் அது வளர்ந்து அழகிய பூவினைத் தரும். இந்தப் பயன்பாடு பலரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது.

நீங்கள் அதிகப் புத்தகங்கள் படிப்பவரா? அதிகப் படங்கள் பார்ப்பவரா? அதிகப் பாடல்கள் கேட்பவரா? அப்படியென்றால் என்ன புத்தகம் படிக்கலாம்.. என்ன படம் பார்க்கலாம்.. என்ன பாடல் கேட்கலாம் என்ற குழப்பம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும். அப்போது புத்தகங்கள் மேல் அதிகப் பிரியம் கொண்ட உங்கள் நண்பர் ஒருவர் என்ன புத்தகம் படிக்கிறார் என்றோ, படங்கள் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தும் நண்பர் ஒருவர் என்ன படம் பார்க்கிறார் என்றோ, பாடல்களின் மேல் பிரியம் கொண்ட நண்பர் ஒருவர் என்ன பாடல் கேட்கிறார் என்றோ அறிய வேண்டுமா? பேஸ்புக்கில் தாங்கள் செய்யும் காரியங்களைப் பற்றி உடனுக்குடன் எழுதி வைக்கும் நபராக அந்த நபர் இருந்தால், அவருடன் நீங்கள் தொடர்பு கொண்டவராக இருந்தால், அதை உடனே அறிந்து கொள்ளலாம். அதற்கேற்றாற் போல் நீங்கள் முடிவு செய்து கொண்டு, அந்தப் புத்தகத்தையோ, படத்தையோ, பாடலையோ நீங்கள் படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம். இதுவும் பேஸ்புக்கில் இருக்கும் புத்தகம், படங்கள், பாடல்கள் பயன்பாட்டுகளின் மூலமாகவே நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பல இடங்களுக்கு சென்று வர விருப்புவரா? எந்த எந்த இடங்களுக்குச் சென்றால் நன்றாக இருக்கும்? இதை நீங்கள் கூகுள் இணையத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால் உங்களின் ஒத்த ரசனையுடையவர் அங்கு சென்று வந்த பின் தரும் விவரங்கள் சிறந்ததல்லவா? அந்த நண்பர் பேஸ்புக்கில் இருந்து இதைப் பற்றிய விவரங்களை டிராவல் பயன்பாட்டின் மூலமாகப் பதிவு செய்திருந்தால், அதை நீங்கள் கண்டு அங்குச் செல்லலாமா, அங்கே சென்றால் என்ன செய்யலாம், என்னென்ன பிரச்சினைகள் வரும், என்பதை அறிந்து கொண்டு சென்றால் சிறப்பானதாக இருக்குமல்லவா?

உங்கள் ரசனைக்கு ஒத்த மனிதர்களை பேஸ்புக் உலகில் தேடிக் கண்டுபிடித்து நண்பர்களாக்கிக் கொண்டால், உங்களுக்கு அவர்கள் பல வழிகளில் உதவுவார்கள். மேற் சொன்னபடி படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் குழுவில் சேர்ந்து கொண்டால், புத்தகம் பற்றிய விமர்சனங்களைப் பார்த்து, நீங்களும் அந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். படம் பற்றிய விமர்சனத்தைத் தெரிந்து கொண்டு, படம் பார்க்கலாம். சென்று வந்த இடங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு, அந்த இடம் உங்களுக்கு உகந்ததா என்பதை அறிந்து கொண்டு அங்குச் செல்லலாம்.

உணவகங்கள் பற்றிய விமர்சனம், அங்கு கிடைக்கும் உணவு பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டு, அந்த உணவு உண்ணச் செல்லலாம். அல்லது அங்கு செல்லாமலே இருக்கலாம்.

மின்னஞ்சல்கள் மூலமாக பதில் கேட்டுக் காத்திராமல், இப்படிப் பயன்பாடுகள் மூலமாக உடனடியாக அறிந்து கொண்டு, வேண்டியதைச் செய்யலாம்.

அடுத்து விளையாட்டு. அனைவருக்கும் கணிணியில் மிகப் பிடித்த விஷயமாயிற்றே. பேஸ்புக் பயன்பாட்டில் பல்வேறு விளையாட்டுகள் மலிந்து கிடக்கின்றன. ஒருவராகவோ, இருவராகவோ அல்லது பலருடனோ சேர்ந்து விளையாடும் ஆட்டங்கள் உள்ளன. சொல் விளையாட்டுக்கள், எண் கணித விளையாட்டுக்கள், மூளை ஆயந்தறியும் விளையாட்டுகள் என்று அறிவு சார்ந்த விளையாட்டுகள் பலவும் இதில் உண்டு. அதிரடி, சாகசம், புதிர் விளையாட்டுகள், சுடுவது, சண்டை, சூதாட்டம், வியூகம், பலகை விளையாட்டுகள் என்று பற்பல உள்ளன.

பேஸ்புக் உள்ளே செல்லச் செல்ல, பல்வேறு பயன்பாடுகள் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். என்ன பயன்பாடுகள் இருக்கின்றன என்பது தெரியவில்லையென்றால், உங்கள் நண்பர்கள் விரும்பும் பயன்பாடுகள் என்ன என்பதை பேஸ்புக் காட்டும். இடப்புறம் இருக்கும் தொடர்பு வார்த்தையைச் சொடுக்கினால் போதும், அதைக் காட்டும். பிறகு நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் மிகப் பிரபலமான பயன்பாடு “குருப்ஸ்” என்று அழைக்கப்படும் குழுக்கள் பயன்பாடு.
குழுக்கள் பயன்பாடு பேஸ்புக் உலகின் மிக முக்கிய பயன்பாடாக அனைத்துப் பயனர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாமாக குடும்பம், கல்வி கற்ற பள்ளிக்குழு, கல்லூரிக்குழு, ஆட்டக்குழு, உடன் வேலை செய்பவர்கள் குழு என்று பல தரப்பட்ட குழுக்களை ஏற்படுத்தி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டால், பேஸ்புக் மூலமாக விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் அனைவருடனும் அரட்டை அடிக்கலாம். வாக்கெடுப்புகள் செய்யலாம். குழுவிற்குள் நடக்கும் விசயங்கள் குழுவினருக்கு மட்டுமே என்றோ, மற்ற சமூகத்திற்குத் தெரியப்படுத்தவும் தெரியப்படுத்தாமலும் இருக்கும் அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்கான பல்வேறு செயற்பாட்டு அமைப்புகளை தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

சமூகப் போராட்டங்களும் இப்போது பேஸ்புக் மூலமாக எழுச்சியுடன் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்தப் “குரூப்ஸ்” பயன்பாடு மிகவும் நல்ல முறையில் உதவுகிறது.

குழுக்களின் செயல்பாட்டு அட்டவணையை இதன் மூலம் அமைத்துக் கொள்ளலாம். நாள், இடம், நேரம் பற்றிய விவரங்களை மட்டுமே இதில் ஏற்றினால் போதும். யார் யார் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியும் முடியாது என்பதை செய்தி கண்டதும் குழுவினர் உடனே பதித்தால், மற்ற குழுவினர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தெரிந்து விடும். அதற்கேற்ப தங்கள் திட்டத்தை மாற்றவோ, திட்டத்தை நிறைவேற்றவோ செய்யலாம்.

ஒரேயொரு செய்தி மூலமாக உங்கள் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பற்றிய விவரத்தை உங்கள் குழுவினருக்கு தெரியப்படுத்திவிடலாம்.

இதில் “அகேப்” என்று அழைக்கப்படும் பயன்பாடு, பயனர்கள் “காஸஸ்” என்று அழைக்கப்படும் காரணங்களும் நன்கொடை பெறவும், உறுப்பினர்களைச் தேர்வு செய்யவும் பயன்படுத்தலாம். யாரேனும் ஒருவர் ஒரு காரணத்தை உருவாக்கினால் அல்லது சேர்ந்தால், அது அவர்களது “நியூஸ் ஃபீட்” என்று சொல்லப்படும் ‘செய்தி வழங்கல்’ பகுதியில் காட்டும். இதன் காரணமாக அந்த நபரின் நண்பர்கள் அனைவரும் அதைப் பார்க்கலாம். காரணத்தைப் பற்றிய விவரங்களும் உடன் இருக்கும். மொத்தம் வசூலான தொகையும் புதிய உறுப்பினர்கள் தெரிவும் உடன் இருக்கும். பல அடுக்கு வியாபார நோக்கும் இதில் ஒரு அம்சம். ஒரு பயனர் மூலமாகத் தரப்பட்ட தொகையோடு அந்தப் பயனர் தேர்வு செய்த உறுப்பினர் தந்த தொகையும் சேர்க்கப்பட்டு, மொத்தத் தொகையைக் காட்டி, அந்தப் பயனரை மகிழ்ச்சிப்படுத்தவும் உதவுகிறது.
தற்போது பேஸ்புக்கில் 80 கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதிகள் உண்டு. தங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றலாம்.

அடுத்து புகைப்படங்கள் ஒரு பயன்பாடு. உங்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் ஏற்ற வேண்டுமானால் புகைப்படப் பயன்பாட்டை தொடங்க வேண்டும். பிறகு அதில் ஆல்பம் உருவாக்கப்பட்ட பின் படங்களை ஏற்றலாம். யார் யார் படங்களைப் பார்க்கலாம் என்பதையும் கூறலாம். டேக் எனப்படும் பின்னிணைப்பு ஒன்றையும் அமைக்கலாம். இதன் மூலம் புகைப்படத்தைக் கண்டுபிடிக்கவும், தரம் பிரிக்கவும் முடியும்.

படங்களை மாற்றி அமைக்க வேண்டுமா? படங்களைச்; சரி செய்ய வேண்டுமா? அழகிய புகைப்படத்தை வரிப்படமாக மாற்ற வேண்டுமா? இதையெல்லாம் பிக்னிக் என்ற பயன்பாட்டின் உதவி கொண்டு செய்யலாம். ஆம். பதிவு செய்த புகைப்படங்களை உங்கள் விருப்பப்படி பிக்னிக் என்ற பயன்பாட்டின் உதவியோடு மாற்றி அமைக்கலாம். படத்தை பென்சில் வரைபடமாகக் கூட மாற்றலாம்.

டைம்லைன் என்ற பயன்பாடு தற்போது புகுத்தப்பட்டுள்ளது. இது உங்களது கால வரலாற்றை வைத்துக் கொள்ளவும், விடுபட்ட விசயங்களை எந்த நேரத்திலும் ஏற்றப்படவும் வசதி செய்து தருகிறது.

வீடியோ படங்களையும் இப்போது பேஸ்புக்கில் ஏற்றலாம். படங்களை யூ டியூப் வழியாகப் பார்க்கலாம்.

பல ஆண்டுகளாக முகம் பார்க்காமல் நட்பு வளர்த்தவர்கள், இப்போது வீடியோ அரட்டையும் அடிக்கும் பயன்பாட்டையும் பேஸ்புக் தருகிறது. இன்டர்நெட் தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்கைபியுடன் இணைந்து, இதைத் தருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவும், பேசிக் கொள்ளவும் செய்யலாம்.

மேலும் சில பயன்பாடுகளை அடுத்த வாரம் தெரிந்து கொள்ளலாம்.

Series Navigationஇந்த வார நூலகம்‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *