சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
அடுத்த ஆறு மாதத்தில், கோப்பையில் வாழ்க்கை சார்ந்த பரபரப்புகள் அமுங்கின. பை தெயர் ஃப்ரூட்ஸ், (சாதனைகளினால்) என ஏற்கனவே பதிப்பித்த நாவலைத் திரும்ப திரிஃபீல்ட் ஆரம்பித்திருந்தார். எனக்கு நாலாவது வருடம். வார்டில் இருக்கும் நோயாளிகளின் காயங்களுக்குக் கட்டுப்போடும் வேலை எனக்கு. மருத்துவமனையின் பிரதான கூடத்துக்குப் போய் பெரிய டாக்டர் வர காத்திருந்தேன். கடித அலமாரியில் எனக்கு எதும் கடிதம் இருக்கிறதா என்று பார்த்தேன். சில சமயம் என் வின்சன்ட் சதுக்க முகவரி தெரியாதவர்கள் மருத்துவமனை முகவரிக்கு எழுதுவார்கள். ஆச்சர்யம் – எனக்கு ஒரு தந்தி!
தயவுசெய்து தவறாமல் இந்த மதியம் ஐந்து மணிக்கு என்னை வந்து சந்திக்கவும். விஷயம் முக்கியம். இசபெல் திரஃபோர்ட்.
அவளுக்கு என்னிடம் என்ன வேலை என்றே எனக்குப் புரியவில்லை. கடந்த ரெண்டு வருடங்களில் அவளை ஒரு டஜன் தடவைகள் சந்தித்திருக்கிறேன். ஆனால் மனுஷி என்னைக் கண்டுகொள்ளவே மாட்டாள். நானும் அவள் வீட்டுக்கெல்லாம் போனதே இல்லை. ஆண்கள் தேநீர் நேரங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க என்று வீட்டில் கிடைக்க மாட்டார்கள். ஒருத்தரும் இல்லாததற்கு, கடைசி நேரத்தில் அந்தப் பெண்மணி சரி, ஒரு மருத்துவ மாணவன் வந்தால் வரட்டும்… என நினைத்தாளோ என்னவோ?ஆனால் அந்தக் குறிப்பு, அதைப் பார்த்தால் விருந்து போலவும் தோணவில்லை.
என்னைக் கூட அழைத்துச் செல்கிற சர்ஜன் உம்மணா மூஞ்சி. வளவளவென்று பேசுவார். அஞ்சு வரை நான் வேலைசெய்ய வேண்டியிருந்தது. அதன்பின் ஒரு இருபது நிமிடம் ஆகிவிட்டது… நான் செல்சி வந்தடைந்தேன். ஒரு கொத்தான அடுக்ககத்தில் நதியோரத்தில் திருமதி பார்த்தன் திரஃபோர்டு வசித்துவந்தாள். நான் போய்ச்சேர்ந்து அவள் வீட்டு அழைப்புமணியை ஒலிக்கச் செய்தபோது மணி கிட்டத்தட்ட ஆறு. ”அம்மா வீட்ல இருக்காங்களா?”
நான் வரவேற்பறைக்குள் நுழைந்தேன். நான் தாமதமாக வந்ததைப் பற்றி அவளிடம் பேச ஆரம்… என்னை நிறுத்தினாள்.
”வேலை முடியல்லன்னு நாங்களே நினைச்சிக்கிட்டோம். அது பரவால்லப்பா.”
கூட அவள் கணவரும் இருந்தார்.
”அவனுக்கு தேநீர் தரலாமே…” என்றார் அவர்.
”தேநீரா, இப்பவா? நாழியாயிடுச்சே, இல்லியா?” என்னை தன்மையாய்ப் பார்த்தாள். கருணையைப் பொழிந்தன கண்கள். ”நான் போடற தேநீர் வேணுமா?”
நான் தாகமாகவும் பசியாகவும் இருந்தேன். மதியமே நான் ஏதோ கொறித்திருந்தேன். முட்டைபோட்டுத் தயாரித்த ஸ்கோன் பிஸ்கட். வெண்ணெய். ஒரு கோப்பை காப்பி – அவ்வளவே. அதை எதுக்கு அவளிடம் சொல்லணும் என்று விட்டுவிட்டேன். தேநீரும் மறுத்து விட்டேன்.
”உனக்கு ஆல்குட் நியுடனைத் தெரியுமா?” அவள் கேட்டாள். நான் உள்ளே வரும்போதே ஒரு மனிதர் கைவைத்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பதை கவனித்தேன். அவர் எழுந்து கொண்டார். ”நம்ம எட்வர்ட் வீட்டில் இவரைப் பாத்திருக்கே இல்லியா?”
பார்த்த ஞாபகம் இருந்தது. அவர் அடிக்கடி வருவது இல்லை அங்கே. ஆனால் அந்தப் பேர் எனக்கு ஞாபகம் இருந்தது. அவரிடம் நான் பேசியதாகவே ஞாபகம் இல்லாததால், எனக்கு அவரைப் பார்த்ததில் அபார கூச்சம். இப்போது நாம அவரை மறந்து விட்டோம், என்றாலும் அந்தக் காலத்தில் அவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற விமரிசகர். ஆஜானுபாகுவான பழுப்பு மனிதர். முகம் வெண்மையாய் பொம்மியிருந்தது. வெளிர் நீலக் கண்கள். முடி நரை கண்டிருந்தது. பொதுவாக அவர் வெளிர் நீலத்தில் டை அணிவது வழக்கம். அந்தக் கண்களுக்கு இன்னும் அது அழகைத் தரும்.
திரிஃபீல்ட் இல்லத்தில் அவர் சந்தித்த மற்ற எழுத்தாளர்களிடம் அவர் ரொம்ப நட்பு பாராட்டினார். சுவாரஸ்யமான, அதிரடியான தகவல்கள் எல்லாம் அவர்களிடம் சொல்வார். ஆனால் அவர்கள் போனபிறகு அவர்களையே எள்ளிநகையாடி கொள்ளி வீசினார். அதிராத நிதானமான பேச்சு. தேர்ந்த சொல்லாட்சி. நண்பனைப் பற்றியே அத்தனை வக்ரமாய் யாரும் பேசிவிட முடியாது.
ஆல்குட் நியுடன் கைகுலுக்கினார். உடனே திருமதி பார்த்தன் திரஃபோர்டு எனது சங்கோஜத்தை மட்டுப்படுத்துகிற அளவில் அவளே வந்து என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிப்போய் தன் பக்கத்து சோபாவில் அமர்த்திக் கொண்டாள். மேஜையில் இன்னும் தேநீர்க் கெட்டில் இருந்தது. அவள் ஒரு ஜாம் சான்ட்விச்சை எடுத்து மெல்ல கடித்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.
”திரிஃபீல்ட் தம்பதிகளை இப்பசத்திக்கு எப்பவாவது பாத்தியா?” இயல்பாய்ப் பேச்சைத் துவங்கினாள் அவள்.
”போன சனி போயிருந்தேன்” என்றேன் நான்.
”அதுக்குப் பிறகு அவரையோ அவளையோ பார்க்கவே இல்லியா?”
”ம்ஹும்.”
திருமதி பார்த்தன் திரஃபோர்டு ஆல்குட் நியுடனை, அப்புறம் அவரைத் தாண்டி தன் கணவரைப் பார்த்தாள், பேச அவளுக்கு உதவிக்கு வரும்படியான கோரிக்கைப் பார்வை.
”சுத்தி வளைச்சிப் பேசி பிரயோஜனங் கிடையாது இசபெல்…” என்றார் நியுடன். கண்களை வன்மமாய்ச் சிமிட்டினார். சுருக்கெனப் பேசுவது அவர் பாணி.
திருமதி பார்த்தன் திரஃபோர்டு என்பக்கம் திரும்பினாள்.
”அப்ப திருமதி திரிஃபீல்ட் அவள் கணவனை விட்டு ஓடிட்டாள்ன்ற விவரம் உனக்குத் தெரியாது.”
”என்ன சொல்றீங்க?”
அதிர்ச்சியாய் இருந்தது. என் காதுகளையே நம்ப முடியவில்லை என்னால்.
”நீங்களே நிசத்தை அவனாண்ட சொல்லிட்டா நல்லது ஆல்குட்” என்றாள் திருமதி திரஃபோர்டு.
விமரிசகர் நாற்காலியில் பின்சாய்ந்து வசதி பண்ணிக்கொண்டார். கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டார். குரல் பிசிறியது.
”அவருக்காக ஒரு இலக்கியக் கட்டுரை எழுத வேண்டியிருந்ததால், நேற்று இரவு எட்வர்ட் திரிஃபீல்டைப் பார்க்கப் போயிருந்தேன். ராச்சாப்பாடு கழிந்தது. அருமையான ராத்திரி. அவர் வீடு வரை நடக்கலாமாய் இருந்தது. எனக்காக அவர் காத்திருப்பார் என்று தெரியும். தவிரவும் ராத்திரியானால் அவர் எங்கும் போவது இல்லை. பெரிய நிகழ்ச்சி, அகாதெமியில் விருந்தோம்பல், மேயரின் உபசார நிகழ்ச்சி என்று இல்லாவிட்டால் வெளியே கிளம்புவது இல்லை. அப்ப என்னோட ஆச்சர்யத்தை நினைச்சிப் பாரு… யப்பாடி… நான் திக்குமுக்காடி திண்டாடிப் போனேன்… நான் போகிறேன். அவர் வீடு திறந்து கிடக்கு. உள்ளயிருந்து எட்வர்ட்.
… உனக்குத் தெரியும்லியா? அந்த இமானுவல் கன்ட்… (ஜெர்மானிய தத்துவ ஆசான்.) கண்டிப்பா தினசரி அவர் வெளியே உலா வந்தால் குறிப்பிட்ட நேரம்தான் வருவார். அவர் வர்றதைப் பார்த்துக்கிட்டு கோனிக்ஸ்பர்க் சனங்கள் தங்கள் கடிகாரத்தை சரிசெய்து கொள்வார்கள்… ஒருநாள் அவர் தன் வீட்டைவிட்டு ஒருமணி முன்னதா வெளிய வந்தாரா… எல்லாருக்குமே தூக்கிவாரிப் போட்டது. என்னவோ பிரளயம் ஆயிருக்குன்னு தான் அதன் அர்த்தம், அது அவங்களுக்குத் தெரியும். அவங்க யூகம் சரி, அவருக்கு உளவுத் தகவல் வந்திருந்தது, பாரிசின் பாஸ்டிலே சிறையை பிரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு இடிக்கப் போகிறார்கள்…”
ஆல்குட் நியுடன் நிறுத்தினார். கிளைக்கதையின் சாறு உள்ளே இறங்கட்டும்… திருமதி பார்த்தன் திரஃபோர்டு புரிந்தாப்போல ஒரு பாராட்டுப் புன்னகை வழங்குகிறாள்.
”எட்வர்ட் திரிஃபீல்ட் என்னை நோக்கி விறுவிறுவென்று வந்தார். அப்போது இத்தனை பெரிய உலகளாவிய களேபரத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதிர்பாராதபடி என்னவோ கோளாறு ஆயிருக்கிறது, அது தெரிஞ்சது. உலா கிளம்பவில்லை அவர்… கையில் கையுறையும் இல்லை. தடியும் இல்லை. வேலையில் இருக்கிற போதான கோட்டையே அணிந்திருந்தார். நாள்பட்ட ஒரு அல்பக்கா வகைத் துணி. விசாலமான தொப்பி. பதட்டமாய் இருந்தார். எதும் குடும்பத் தகராறா, இப்பிடி தலைதெறிக்க ஓடி வர்றாரு…. எதும் கடிதத்தைத் தபாலில் சேர்க்க அவசரமாப் போறாரா?…ன்னு பல யூகங்கள். கிரேக்க குருமார்களை அடித்துத் துரத்திப்போன ஹெக்டர் போலத் தெரிந்தார் என் பார்வைக்கு.
… என்னைப் பார்த்த மாதிரியே இல்லை அவர். அட ஒருவேளை என்னைப் பார்க்க அவர் விரும்பல்லியோன்னே எனக்கு ஆயிட்டது. நான் அவரை நிறுத்தினேன். எட்வர்ட்? – அவர் என்னைப் பார்த்து திருதிருவென்று முழித்தார். என்னை அடையாளம் தெரியவில்லை மாதிரிதான் பட்டது. ஏன் இத்தனை ஆவேசமா பழக்கப்படாத ரேஸ் குதிரைய வசக்கும் போது புழுதிகிளப்பி கோபமாப் போகுமே அதைப்போல வர்றீங்க?… என்று கேட்டேன். ‘நீங்களா?’ன்னாரு. எங்க போறீங்கன்னு கேட்டேன். ‘எங்கயும் இல்ல,’ அப்டின்னாரு.”
அட இந்தக் கதையை இந்த ஜாட்டான் முடிக்கவே மாட்டான் என்றிருந்தது. திருமதி ஹட்சன் எனக்காக ராத்திரிச் சாப்பாடு போட காத்திருப்பாள். நான் அரை மணி தாமதமாய்ப் போய் அவளிடம் திட்டு வாங்கவா?
”நான் வந்த சமாச்சாரம் என்னன்னு எடுத்துச் சொல்லி, வாங்க வீட்டுக்குப் போவம்… உட்கார்ந்து எல்லாம் பேசிக்கலாம், என்றேன். வீட்டுக்குப் போறாப்ல எனக்கு மனசு அமைதியா இல்ல, என்றார். நாம நடப்பம், நடந்துகிட்டே பேசலாம்… என்றார். சரின்னு நானும் திரும்பி அவரோட நடக்க ஆரம்பித்தேன்.
… அவரானா விறுவிறுன்னு நடக்கறாரு. என்னால, கூட வர முடியல்ல. கொஞ்சம் மெதுவாப் போங்க சார்ன்னேன். டாக்டர் ஜான்சன், அவரேகூட இப்படி ஃப்ளீட் தெருவில் இவர்கூட நடந்தால் எதையும் பேசிற முடியாது. எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அது. அவர் நடத்தையே வித்தியாசமா இருந்தது. ஆளே அதிர்ந்திருந்தார். சரி இப்படி நெரிசலான தெரு வேணாம், கொஞ்சம் நடமாட்டம் மட்டான தெருப்பக்கமா அவரை அழைச்சிட்டுப் போலாம்னு பார்த்தேன்.
… என் கட்டுரை பத்திப் பேசினேன் அவரிடம். முதலில் என் மனசில் கருவாகி யிருந்தது வேறு, இப்ப எழுதுவதற்கு உருவாகி யிருந்தது வேறு. இப்ப அது ஒரு வார இதழுக்குச் சரிப்பட்டு வருமா என்பதில் எனக்கு சந்தேகம். நான் நினைக்கிறதை அப்படியே தெளிவாகவும் முழுசாகவும் அவரிடம் சொன்னேன். நீங்க என்ன நினைக்கறீங்கன்னு அவரிடம் கருத்து கேட்டேன். ‘ரோசி என்னை விட்டுப் போயிட்டா’ன்னார் அவர்.
…. ஒரு விநாடி அவர் என்ன சொல்றார்னே எனக்கு விளங்கல. உடனே சட்னு பொறி தட்டியது, அந்த தனம் பெருத்த பெண்… அவள் கையால் நான் தேநீர் வாங்கிக் குடிச்சிருக்கேனே… அவளை இழந்ததைத் தான் பேசுகிறார் என்று புரிந்தது. அவரது குரலின் த்வனி, என் இரங்கலை வேண்டுகிறாப் போலத்தான் இருந்தது. அட வாழ்த்துக்கள் என்று நான் சொல்லவில்லை.”
திரும்ப நிறுத்தி, அநாச்சாரமாய் கண் சிமிட்டினார்.
”என்னமாச் சொல்றீங்க ஆல்குட்” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு.
”அடேங்கப்பா!” இது அவள் கணவரின் பாராட்டு.
”பாவம், அந்த மனுசன், அப்ப அவருக்கு வேண்டியதெல்லாம் ஆறுதல்தான்னு புரிஞ்சது. அட நண்பான்னு ஆரம்பிக்குமுன், அவரே இடைவெட்டினார். போன தபாலில் ஒரு கடிதம் வந்தது…ன்னார். அவள் ஜார்ஜ் கெம்ப் கூட ஓடிப் போயிட்டாள்…”
ஹா…வென மூச்செடுத்தேன். ஆனால் எதுவும் பேசவில்லை. சட்டென்று என்னைப் பார்த்தாள் திருமதி பார்த்தன் திரஃபோடு.
ஆல்குட் தொடர்ந்தார். ”யார் ஜார்ஜ் கெம்ப்? எனக்குத் தெரியவில்லை. பிளாக்ஸ்டேபிள், என்று அவர் பதில் சொன்னார். எனக்கு கொஞ்சம் யோசனையாய்ப் போச்சு. சரி, மனசுல உள்ளதைப் போட்டு உடைச்சிருவம். அட அவ ஒழிஞ்சது நல்ல விஷயம்தான்யா, என்றேன். ஆல்குட்!… என அவர் கதறினார்.
… நான் நின்றேன். அவர் தோளைப் பற்றினேன். அவள் உங்களோட அத்தனை நண்பர்கள் கிட்டவும் பழகி, உங்களை ஏமாத்திட்டிருந்தாள். அது ஊருக்கே தெரியும். என் பிரியமான எட்வர்ட், நாம நிசத்தை நேரே சந்திப்பம். உங்க சம்சாரம், ஒரு பீடை. என்னிடமிருந்து உருவிக்கொண்டார். ஹ்ரும், என உருமினார். போர்னியோ காட்டில் உராங்உடான் குரங்குக்கு தேங்காய் தரலைன்னா இப்பிடித்தான் உருமும்!… அவரை நிறுத்துமுன்னால் அழுதுகிட்டே ஓடிட்டார். எனக்கு எதுவுமே விளங்கல, அவரது கதறல் கேட்குது. படபடவென்று அவர் போற சத்தம் கேட்குது…”
”அவரைப் போக விட்ருக்கக்கூடாது நீங்க” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. ”அவர் இருந்த கலவரத்துல நேராப் போயி தேம்ஸ் நதில குதிச்சிட்டார்னா?…”
”நான்கூட அப்பிடி நினைச்சேன். ஆனால் அவர் நதியைப் பார்க்க ஓடவில்லை. அடுத்த சின்ன சந்துகளுக்குள்ள விறுவிறுன்னு போறார். அத்தோட எனக்கு ஒரு நினைப்பு வேற… ஒரு இலக்கியவாதி, எதோ எழுத்து வேலை வெச்சிருக்கிறவர்… பாதில அதை விட்டுட்டு தற்கொலை பண்ணிக்கறா மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லை. அவருக்கு என்ன பிரச்னை வந்தாலும், இந்த புகழ் வளாகத்தை விட்டு, ஒரு படைப்பை பாதில நிறுத்திவிட்டு அவர் போக விரும்ப மாட்டார்னு நான் நினைச்சேன்.”
கேள்விப்பட்ட விஷயங்கள் குபீரென என்னை அமுக்கின. என்ன எழவோ நடக்கட்டும், இந்த திருமதி திரஃபோர்டு எதுக்கு இப்ப என்னை இங்க கூப்பிட்டு உட்கார வெச்சிக்கிட்டு, விலாவாரியா கதை பேசிட்டிருக்கிறாள்? எங்ககிட்ட வம்பு பேச அவளுக்கு எதுவும் இல்லை. நான் ஆவென வாயைப் பிளந்து இந்தக் கதையைக் கேட்பேன், என அவள் நினைத்திருக்க மாட்டாள். வெறும் தகவலாகவும் நான் அதைக் கேட்டுக்கொள்வதை விரும்ப மாட்டாள் தான்.
”பாவம் எட்வர்ட்” என்றாள். ”யாரும் மறுக்க முடியாது, அவள் அவரை விட்டுப்போனது நல்ல விஷயம்தான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடும்பாங்க. ஆனால் பாவம் அவர்தான் அதை உள்ள போட்டு உழப்பி அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருப்பார்னு படுது. நல்லவேளை இசகுபிசகா எதுவும் பண்ணிக்கல, அந்தமட்டுக்கு அதிர்ஷ்டம்தான்.”
என் பக்கமாய்த் திரும்பினாள்.
”திரு நியுடன் எங்களாண்ட தகவல் சொன்னாரா, நான் லிம்பஸ் தெரு பக்கம் போய்ப் பார்த்தேன். எட்வர்ட் வீட்டில் இல்லை. வேலைக்காரி, இப்பதான் வெளியால போனாருன்னாள். அப்பன்னா அவர் ஆல்குட்டை சந்தித்த நேரத்தையும், இன்னைக்குக் காலைல நான் போய்ப் பார்த்த நேரத்தையும் வெச்சிப் பார்க்கறச்ச இந்த இடைவெளில அவர் திரும்ப வீட்டைப் பார்க்கப் போயிருக்கலாம். இப்ப… நான் உன்னை ஏன் கூப்பிட்டேன்னு உனக்கு ஆச்சர்யமாய் இருக்கலாம்.”
அதான் ஆரம்பிச்சிட்டியே, நீயே சொல்லு, என்கிறாப்போல நான் மௌனம் காத்தேன்.
”உனக்கு திரிஃபீல்ட் தம்பதியரை பிளாக்ஸ்டேபிள்ல வெச்சிதான் முதலில் தெரியும். இல்லியா? யாரு ஜார்ஜ் கெம்ப் பிரபு, அவரைப் பத்திச் சொல்லு. அவர் பிளாக்ஸ்டேபிள் ஆள்னு எட்வர்ட் சொல்லியிருக்கார் இவராண்ட…”
”அவருக்கு நடுத்தர வயசு. குடும்பம் உண்டு. மனைவி, ரெண்டு குழந்தைகள். பிள்ளைங்களுக்கு என் வயசு இருக்கும்.”
”யார் அவருன்னே எனக்குப் புரியல. திப்ரெட் வரிசையில் அவர் பேரு இல்லியே?”
எனக்குச் சிரிப்பு வந்தது.
”ஓ அவர் நிசத்தில் பிரபு இல்லை. ஒரு உள்ளூர் கரி வியாபாரி. ஊர்ல அவருக்கு அப்பிடிப் பேர். பார்க்க அத்தனை அலட்டலா இருப்பான்… ஜனங்க அவனை தமாஷா அப்பிடிக் கூப்பிடறாங்க.”
”காட்டுப்பயல்களின் ஹாஸ்யத்தை நாம எப்பிடிக் கண்டுக்க முடியும்? விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சலம்பாங்க” என்று இலக்கியத் தரமாய்ப் பேசினார் நியுடன்.
”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் பார்த்தாள். அதாவது, நீதான் உதவணும் என்கிற குறிப்பா இது.
>>>
தொடரும்
storysankar@gmail.com
- கல்விச்சாலை
- சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்
- அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்
- இந்த வார நூலகம்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 2
- ‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!
- இவள் பாரதி கவிதைகள்
- நினைவுகளின் சுவட்டில் – (85)
- வாப்பாவின் நாட்குறிப்பைப் போல
- பழமொழிகளில் எலியும் பூனையும்
- பாண்டிராஜின் ‘ மெரினா ‘
- பரிகாரம்
- புள்ளியில் மறையும் சூட்சுமம்
- கம்பன் கழகத்தின் பொங்கல் விழா
- மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3
- அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)
- மெஹந்தி
- அதோ ஒரு புயல் மையம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 13
- முன்னணியின் பின்னணிகள் – 26
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)
- பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு
- ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘
- விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘
- மாதா+ பிதா +குரு < கொலைவெறி
- செல்லாயியின் அரசாங்க ஆணை
- “வரும்….ஆனா வராது…”
- எருதுப் புண்
- ”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2
- கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்
- சிற்றேடு – ஓர் அறிமுகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 10
- ரயிலடிகள்
- தோனி – நாட் அவுட்
- மோகம்
- பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 6) எழில் இனப் பெருக்கம்
- அடை மழையில் நனையும் ஞாபகங்கள் – வளவ.துரையனின் “விடாததூறலில்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 9