ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

This entry is part 12 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இருபதாம் நூற்றாண்டில் வெளியான “குருவியின் வெற்றி” என்னும் கவிதைத் தொகுதி “ஷிங்கிசி தகஹாஷி” என்னும் ஜென் சிந்தனையாளரின் படைப்பாகும். சமகாலத்திய ஜப்பானியக் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். இவரது கவிதைகளில் சிலவற்றை வாசிப்போம்.

ஓசையில் ஒரு வனம்
_______________
மேலெழும்
புகையில் பைன் மரம் அசைகிறது
ஓசையில் ஒரு வனம்

டஃபோடில் பூக்களை
நதி ஒரு கண்ணாடி போலப் பிரதிபலிக்கும் இடத்தின்
என் கால்கள் தாமே தோற்கின்றன

ஒரு குளிர் காற்று
ஸஸாங்கா பூக்களின்
வெண்மை நினைவுகள்
வெதுப்பான மழை வந்து போகிறது

நான் கரையில் வில்லோ மரங்கள் பூக்கும் வரை
நீர் வடியும் வரை காத்திருப்பேன்

விமானத் தாக்குதலின்
இடிபாடுகளின் மீது காலம்
பொசுக்கப் படுகிறது

எப்படியோ நான் இங்கே இப்போது
வேறாக இருக்கிறேன்

____________________________________________

ஒட்டகம்
______

ஒட்டகத்தின் திமில் மேகங்களுடன்
இடம் மாறும்

இத்தகைய தனிமை தலையை வெட்டும்

என் புஜங்கள் நீளூம்

பாலைவனத்துத் தீயையும்
மலைச்சிகரங்களையும் தாண்டி

___________________________________________

அழிவு
_____

உலகம் பிளந்து கொண்டே வருகிறது
ஒரு பொத்தானை அழுத்த வேண்டிய தேவையில்லை
ஒரு விரலின் தொடுகையில் அது விழுந்து விடும்
ஏன், அது ஒரு குருவியின் கண்ணின் வால் நுனியில் ஊசலாடுகிறது

உலகம் என்பது அதீதமாகக் கண்ணிலிருந்து பெருகும் திரவம்
உன் மூக்கு முடியிலிருந்து இறங்கும் மக்கள் கூட்டம்
உன் வலது கையை உயர்த்து: இது உன் உள்ளங்கை
ஒரு குருவியின் கண்ணிமையில் முழுதுக்குமே இடமுள்ளது

அற்ப அளவிலானது: பிரபஞ்சம்
எல்லா வலிமையும் இங்கே இருக்கிறது
ஆகப் பிரம்மாண்ட வலிமை இங்கே

நீயும் குருவியும் ஒன்று தான்
அவன் விரும்பினால் உன்னை நசுக்கி விடுவான்
பிரபஞ்சமே அவன் முன் நடுங்கும்

___________________________________________

கடவுள்கள்
________

கடவுள்கள் எங்குமுள்ளனர்
கொஷி மற்றும் இஜுமோ* இனங்களுக்கிடையான போர்
இன்னும் நீடிக்கிறது
எல்லாவற்றுக்கும் எல்லாவுமான அந்த ஒன்று
வேறுபாடுகளை முடிக்கிறது

மூவாயிரம் உலகங்களும் பிளம் பூக்களில்
இருக்கின்றன
கடவுள் தான் அதன் வாசம்

(*கொஷி மற்றும் இஜுமோ இனங்களுக்கிடையான போர். இஜுமோ கொரியா மற்றும்
சீனத்திலிருந்து வந்தவர்கள். கொஷி ஜப்பானிலேயே இருந்தவர்கள். இருவருக்கும்
5ம் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டு வரை போர் நிகழ்ந்தது. இப்போது போர் ஏதும்
இல்லை. கவித்துவமான பொருளே அதற்கு)

__________________________________________

கிளிஞ்சல்
________
எதுவும் எதுவுமே பிறக்கவில்லை
மரிக்கிறது கிளிஞ்சல் சொல்லும் மீண்டும் மீண்டும்
உள்ளீடற்ற தன் உடலின் ஆழத்திலிருந்து
அலையால் அடித்துச் செல்லப் படும் – அதனாலென்ன?
அது மணலில் உறங்கும் வெய்யிலில் காய்ந்து
நிலவொளியில் உறங்கி
கடலோடோ வேறு எதனோடுமோ அதற்குச்
செய்ய ஒன்றுமில்லை
மீண்டும் மீண்டும்
அது அலைகளுடன்
காணாமற் போகும்

__________________________________________

சர்க்கரை வள்ளிக் கிழங்கு
___________________

எல்லாப் பொருட்களை விடவும்
நான் சர்க்கரை வள்ளிக் கிழங்காக இருப்பேன்
அப்போது தான் தோண்டி எடுத்ததாக
___________________________________________

Series Navigationகுரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012பேஸ்புக் பயன்பாடுகள் – 3
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    sathyanandhan says:

    அன்பு வாசகருக்கு, 26.2.12 ல் வெளியாகி உள்ள இப்பகுதி “ஜென் ஒரு புரிதல்-32” ஆகும். கவனக் குறைவாக 31 என்று குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன். வணக்கங்களுடன் சத்யானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *