பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்

This entry is part 15 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் போய்விடு. நான் போய் இரை தேடிக்கொண்டு வருகிறேன்’’ என்று ஹிரண்யனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றது. ஏதோ ஒரு காட்டுக்குப் பறந்து போயிற்று. அங்ளே ஒரு புலி கொன்று போட்டிருந்த காட்டெருமையைக் கண்டது. வயிறு நிறைய அதைத் தின்ற பிறகு, செம்பரத்தைப்பூபோல செக்கச் செவேலென்றிருக்கும் மாமிசத் துண்டம் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பிந்து, ‘’ஹிரண்யனே; வெளியே வா, நான் கொண்டு வந்திருக்கும் இந்த மாமிசத்தைச் சாப்பிடு’’ என்று அழைத்தது. காக்கை வெளியே சென்றிருக்கும் போது ஹிரண்யனும் முன்யோசனையோடு அரிசியும் தானியமும் தன் நண்பன் சாப்பிடுவதற்காகத் திரட்டித் தாயாராக வைத்திருந்தது. எனவே, ‘’நண்பனே, என்னால் முடிந்த அளவுக்கு அரிசி சேர்த்து வைத்திருக்கிறேன். சாப்பிடு’’ என்று ஹிரண்யனும் சாப்பிட்டது. இதனால் இவருவரிடையிலும் உவகை மிகுந்து, அன்பு பேணும் முறையில் உட்கார்ந்து சாப்பிட்டன. ஆஹா, நட்புக்கு வித்திடுவது இந்தச் செய்கைதானே! ஒரு பழமொழி கூறுவபோல்,

தருவது, பெறுவது; மனம் விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, விருந்து படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா?

நல்லுதவி செய்யாமல் நட்பு பிறவாது; யாருக்கும் எப்படியும் கிடைக்காது. ஈகை செய்வதால் தேவர்களும் திருப்தியடைகிறார்கள்.

ஈகை உள்ளவரை நட்பும் பாராட்டப்பெறும், ஈகையொழித்தால் நட்பும் நலிந்தொழியும். மடி வற்றிப் போனால் தாய்ப்பசுவைக் கன்றுகூட விட்டுப் பிரிந்து விடுகிறது.

என்றும் பழமொழி உண்டு. சுருங்கச் சொன்னால், எலியும் காக்கையும் நிரந்தரமான நட்புடன் ஒழுகின. அவற்றிடையே வளர்ந்த நட்பு திடமானது. நகமும் சதையும்போல் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தன.

காக்கையின் நல்லுபசாரங்களும் நற்செய்கைகளும் எலியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அதன்மேல் எலிக்கு அளவுகடந்த நம்பிக்கை உண்டாயிற்று. காக்கையின் இறக்கைகளுக்கிடையே நிம்மதியாக தங்கும் அளவுக்கு எலிக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

ஒருநாள் காக்கை திரும்பிவந்தபோது அதன் கண்களில் நீர் நிறைந்திருந்தது. விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தது. ‘’நண்பனே, இந்த நாட்டை நான் வெறுக்கத் தொடங்கிவிட்டேன். வேறு எங்காவதுப் போகப் போகிறேன்’’ என்று தழதழத்த குரலில் எலியிடம் சொல்லிற்று.

‘’வெறுப்பு அடையக் காரணம் என்ன?’’ என்று கேட்டது எலி.

‘’சொல்கிறேன், கேள். மழை தவறிப்போய் இந்த நாட்டில் பயங்கரமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நகரத்தில் ஜனங்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுதெல்லாம் அவர்கள் காக்கைகளுக்குப் பலியாக அன்னம் வைக்கிறதில்லை. அதுமட்டுமா? பறவைகளைப் பிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு வலை விரித்து வைத்திருக்கிறார்கள். எனக்கு என்னமோ ஆயுள் மிச்சமிருக்கிறதுபோலும், அதனால்தான் சிக்காமல் இருந்து வருகிறேன். இருந்தபோதிலும், வேற்று நாட்டுக்குச் செல்வதைப் பற்றி நினைக்க நினைக்க அழுகை வருகிறது. வேறிடம் போவதற்குக் காரணம் இதுதான்’’ என்று காக்கை விளக்கியது.

‘’சரி. போகிறது என்றால் எங்குதான் போவாய்?’’ என்று கேட்டது எலி.

‘’தென்கோடியில் அடர்ந்த காட்டின் மத்தியிலே பெரிய ஏரி ஒன்றிருக்கிறது. அங்கே மந்தரகன் என்ற ஆமை இருக்கிறது. அது என் உயிர் நண்பன்; உன்னைவிட எனக்கு நெருங்கிய நண்பன். அது எனக்கு மீன் துண்டுகள் கொடுக்கும். மீன் துண்டுகளை நான் சீக்கிரமாக ஜீரணிக்க முடியும். அந்த ஆமையோடு இருந்து, நகையும் சுவையும் கலந்த பேச்சுக்களைப் பேசி, ரசமாகப் பொழுதைக் கழிப்பேன். இன்னொரு விஷயம், பறவைகளை இப்படிச் சாகடிப்பதைக் காணச் சகிக்கவில்லை.

குடும்பத்தில் சாவு ஏற்படுவதையும், நண்பனுக்குச் சங்கடம் ஏற்படுவதையும், மனைவி சோரம் போவதையும், நாடு நாசமாவதையும், காணப்பெறாமலிருப்பவனே பாக்கியசாலி.

என்றொரு பழமொழி தெரிவிக்கிறது’’ என்றது காக்கை.

‘’அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். எனக்கும் ஒரு பெரிய துக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றது எலி.

‘’என்ன துக்கம் உனக்கு?’’ என்றது. காக்கை,

‘’அது ஒரு பெரிய கதை. சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது. அங்கு போனபின் விவரமாகச் சொல்கிறேன்’’ என்றது எலி.

‘’நான் ஆகாயத்தில் பறந்து போகிறேன். நீயோ தரையில் ஓடுபவன். நீ எப்படி என்னோடு வரமுடியும்?’’ என்று கேட்டது காக்கை.

‘’என் உயிரைக் காப்பதில் உனக்கு அக்கறை இருக்குமானால் என்னை உன் முதுகில் சுமந்துகொண்டு மெல்ல பறந்துபோ!’’ என்றது எலி.

காக்கைக்கு ஒரே சந்தோஷம். ‘’நான் கொடுத்து வைத்தவன்தான். என்னைவிட பாக்கியசாலி வேறு யாருமில்லை. நீ சொன்னபடியே செய்யலாம். முழுவேகத்தில் பறப்பது முதலாக, பறப்பதில் எட்டுவிதங்கள் உண்டு. அவை எட்டும் எனக்குத் தெரியும். எனவே, உன்னைச் சௌகரியமாகக் கூட்டிச் செல்வேன்’’ என்றது காக்கை.

‘’நண்பனே, பறப்பதில் எட்டு வகை உண்டு என்றாயே? அவை என்னென்ன? அவற்றின் பெயரைச் சொல்’’ என்று கேட்டது எலி.
காக்கை சொல்லிற்று:

முழு வேகத்தில் பறப்பது, பாதி வேகத்தில் பறப்பது, மேல் நோக்கிப் பறப்பது, தொலைதூரம் உயரத்தில் பறப்பது, வட்டத்தில் பறப்பது, நேராகப் பறப்பது, கீழ்நோக்கிப் பறப்பது, மெதுவாகப் பறப்பது – என்றபடி பறப்பது எட்டு வகைப்படும்.

இதைக்கேட்ட ஹிரண்யன் காக்கையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது. காக்கை முழு வேகத்தில் பறந்தது. பிறகு மெல்லக் கீழிறங்கிப் பறந்து தன் நண்பனை ஏரிக்குக் கொண்டுவந்து சேர்த்தது.

எலியைச் சுமந்துகொண்டு ஒரு காக்கை பறந்து வருவதை மந்தரகன் (ஆமை) கண்டுவிட்டது. ஆமை சமயசந்தர்ப்பம் அறிந்த ஜந்து அல்லவா? வருவது யாரோ என்னவோ என்று சந்தேகித்து, உடனே நீரில் களுக்கென்று மூழ்கிச் சென்றுவிட்டது. லகுபதனகன் (காக்கை) ஏரிக்கரையிலுள்ள ஒரு மரப்பொந்தில் எலியை விட்டு விட்டு, மரக்கிளையின் நுனியில் உட்கார்ந்து கொண்டது. ‘’நண்பா, மந்தரகனே, வா, வெளியே! நான்தான் உன் நண்பனாகிய காக்கை. வெகுநாள் உன்னைப் பார்க்காமல் மனம் வாடி வந்திருக்கிறேன். வா, என்னை வந்து தழுவிக்கொள்!

நண்பனை நெஞ்சோடு சேர்த்துத் தழுவிக்கொள்வதில் உண்டாகிற குளுமைக்கு ஈடாக பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனமும், சில்லென்றிருக்கும் பனித்துளிகளும் குளுமை தருவதில்லை. அதில் ஒரு வீசம் கூட இவை தருவதில்லை.

என்றொரு முதுமொழி உண்டு’’ என்று உச்சஸ்தாயியில் காக்கை கூவி அழைத்தது.

இந்தச் சொற்களைக் கேட்டதும் ஆமை மிக உன்னிப்பாக மேலும் கீழும் பார்த்தது. நண்பனை அடையாளம் கண்டுகொண்டது. உடனே அதன் உடலெல்லாம் புளகித்தது; கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. அவசர அவசரமாக நீரிலிருந்து வெளியே கரையேறி, ‘’உன்னை முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. என் தவறை மன்னித்துவிடு!’’ என்றது. மரத்திலிருந்து காக்கை இறங்கி வந்தவுடனே, ஆமை அதை இறுகத் தழுவிக்கொண்டது.

இப்படி,ப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்து கொண்டபின், உள்ளும் புறமும் புளகாங்கிதமடைந்த நிலையிலே அவை இரண்டும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டன. வெகுகாலமாக பிரிந்திருந்தபோது கிடைத்த அனுபவங்களையும் விஷயங்களையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. ஹிரண்யனும் வந்து மந்தரகனை வணங்கி விட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. அதைப் பார்த்தபடியே, லகுபதனகனிடம், ‘’நண்பனே, இந்த எலி யார்? இயற்கையிலே இது உனக்குத் தீனியாக இருக்கிறதாயிற்றே?’’ இதை உன் முதுகில் சுமந்து அழைத்து வருவானேன்?’’ என்று ஆமை கேட்டது.

‘’இது என் நண்பன், ஹிரண்யன் என்று பெயர். எனது இரண்டாவது உயிர்போல் இதை நான் கொண்டாடுகிறேன். சுருங்கச் சொன்னால்,

மழைத் துளிகளை எண்ணமுடியுமா? வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா? பூமியிலுள்ள மணலை எண்ண முடியுமா? முடியாது.

அது போலத்தான். இதன் குணநலன்களையும் எண்ண முடியாது. இதன் உயரிய குணங்களைக் கணித சாஸ்திரத்தாலும் அளக்க முடியாது. அப்பேர்ப்பட்ட இந்த மகாத்மா விரக்தி நிறைந்த உள்ளத்துடன் இங்கு வந்திருக்கிறது’’ என்றது காக்கை.

‘’மனோவிரக்திக்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டது.

Series Navigationபட்டறிவு – 2முன்னணியின் பின்னணிகள் – 29
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *