பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’

This entry is part 10 of 45 in the series 4 மார்ச் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

நாடு, வீடு என்று அனைத்தையும் ஆட்டிப் படைப்பது பொருளாதாரம் ஆகும். பொருள் ஆதாரத்தில் தான் நாடும், வீடும உலகமும் நிலை கொண்டுள்ளன. இப்பொருளாதாரத்திற்கு அடித்தளமாகத் திகழ்வதில் ஒன்று பணம். பணத்திற்கு காசு, நாணயம் என்று வேறுவேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இப்பணத்திற்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

பணம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் பண்டமாற்று வணிகமே நடந்துவந்தது. மக்கள் தங்களிடம் உள்ள பொருளைக் கொடுத்து அதற்கு ஏற்றாற்போல் தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். இத்தகைய பண்டமாற்று வாணிகத்தை,

‘‘கொள்வதும் குறைபடாது

கொடுப்பதும் குறைபடாது’’

என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.

பணம் புழக்கத்திற்கு வந்த பின்னர் பண்டமாற்று என்து இல்லாமற் போனது. இன்று இப்பணமே அனைத்தையும் நிர்ணயிக்கும் பொருளாக விளங்கி வருகின்றது. இப்பணத்தைப் பற்றிப் பல்வேறுவிதமான செய்திகைளப் பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பணத்தின் தன்மை, பணம் வைத்திருப்பவனின் இயல்பு, புதிதாகப் பணம் சேர்த்தவனின் இயல்பு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு தகவல்களை இப்பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன.

பணத்தின் இயல்பு

பணத்தைப் பொருள் என்றும் பொதுவாக மக்கள் குறிப்பிடுவர். பணம் வைத்திருப்பவனைப் பணக்காரன், என்றும், பெண்ணா இருப்பின் பணக்காரி என்றும் கூறுவர். இப்பணத்தைச் செல்வம் என்றும் கூறும் வழக்கும் உள்ளது. செல்வம் உடையவனைச் செல்வந்தர், செல்வந்தன் என்றும் குறிப்பிடுகின்றனர்.

அதுபோல் பணத்தின் அளவை வைத்தும் மனிதர்களுக்குப் பெயர்கள் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. சில லட்சங்களை வைத்திருந்தால் அவனை லட்சாதிபதி என்றும், கோடி ரூபாய்கள் வைத்திருந்தால் கோடடீஸ்வரன் என்றும் மக்கள் மனிதர்களைப் பணத்தின் அளவை வைத்துப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

பணமாகிய பொருள் முட்டாளை அறிவாளியாக்குகிறது, அறிவாளியை முட்டாளாக்குகிறது. நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும், நீதியை, அநீதியாகவும், அநீதியை நீதியாகவும், ஒழுக்கத்தை, ஒழுக்கக் கேடாகவும், ஒழுக்கக் கேட்டை, ஒழுக்கமாகவும் மாற்றி விடுகிறது. இப்பணமாகிய பொருள் மனதனுடைய பண்பை அடியோடு மாற்றி விடுகிறது.

பணம் இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் காட்டும் தன்மை கொண்டது. அதனால்தான்,

‘‘முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக் கோனே-காசு

முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!

கட்டியழும்போது தாண்டவக்கோனே!

காசுபெட்டிமீது கண்வையடா தாண்டாவக்கோனே!’’

என்று பாடினர் போலும்.

இத்தகைய பணம் எதையும் செய்யும் வல்லமை வாய்ந்தது. மகாபாரத யுத்தத்தின் போது முதல் நாளில் தருமன் பீஷ்மரிடம் சென்று அவருடன் போரிடுவதற்கு அனுமதியும் வெற்றிபெற வாழ்த்தும் பெற வேண்டி வணங்கி நிற்கிறான். வணங்கி நின்ற தருமனைப் பார்த்த பீஷ்மர்,

‘‘தருமா மனிதன் பொருளுக்கு அடிமைப்பட்டவன். பொருள் யாரிடம் இருந்து பெறுகிறானோ அவனுக்கே அடிமையாகி அதர்மமாக இருந்தாலும் அதன் வழிச் செல்லத் தொடங்குகிறான். இதற்கு நானே உதாரணம் ஆவேன் என்பதனை உணர்ந்து கொள்வாயாக! நான் துரியோதனன் பொருளுக்கு அடிமையாகிவிட்டேன். நீ தர்மத்தின்படி போரிடு. உனக்கே வெற்றி கிடைக்கும்’’ என்று கூறி வாழ்த்தி அனுப்புகிறார். இதனையே துரோணரும் கூறுகிறார். தருமன் தர்மத்தின் வழிப்போரிட்டு முடிவில் வெற்றி பெறுகிறான். பணமாகிய பொருள் நல்லவர்களைக் கூட அதர்மத்தின்வழிச் செல்லத் தூண்டியுள்ளது மகாபாரதத்தின் வழி நமக்குப் புலப்படுகிறது.

வழக்கில் பணம் பிச்சைக்காரனிடம்கூட இருக்கிறது என்று கூறுவர். ஆம் அப்பணம் பிச்சைக்காரனைப் பெருமுதலாளியாக மாற்றிவிடுகிறது என்பதுதான் உண்மை. இத்தகைய வாழ்வியல் உண்மையை,

‘‘பணம் பத்தும் செய்யும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. ஒரே நேரத்தில் பணம் பத்துவிதமான செயல்களைச் செய்ய வைக்கும் தன்மை கொண்டது என்பதனையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. மேலும் மனிதனின் பத்துவிதமான நல்ல குணங்களையும் அழியும்படி செய்துவிடும் தன்மை பணத்திற்கு உண்டு. மனிதன் பொருளுக்கு அடிமைப்பட்டவன். பொருள் மனிதனை அடிமைப்படுத்துகிறது. இப்பணம் பத்துவிதமான குற்றச் செயல்களையும், படுபாதகமான செயல்களையும் செய்ய வைக்கும் தன்மை கொண்டது என்பது இப்பழமொழி தெளிவுறுத்தும் வாழ்வியல் உண்மையாகும்.

அதுமட்டுமல்லாது இப்பணமானது நல்ல செயல்களுக்கு மட்டுமல்லாது தீயன செய்வதற்கும் காரணமாக அமைகிறது. இப்பணமானது யாரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்பவே மாறுகிறது என்பதைனையும் இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

பணம் வலிமை வாய்ந்தது. பணக்காரன் தவறு செய்தாலோ, நாணயமின்றி நடந்தாலோ அவனைவிட்டுவிடுவர். ஆனால் ஒன்றுமில்லா ஏழை தவறு செய்தால் அவன் செய்யாத தவறுகளையெல்லாம் அவன் மீது சுமத்தி அவனது வாழ்வை உருக்குலைத்து விடுவர். இதனை,

‘‘பட்டப்பகல் திருடர்களைப்

பட்டாடைகள் மறைக்குது

ஒன்றுமில்லாப் பஞ்சையைத்தான்

திருடனென்று ஒதைக்குது’’

என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் புலப்படுத்துகின்றன. பலகோடிக் கடனை வாங்கிக் கொண்டு கட்டாது திரிந்தவனை மதிக்கின்றனர். குறைந்த அளவு கடன் வாங்கித் தொடர்ந்து பணத்தைக் கட்டிவரும்போது ஒருதவணை ஏதும் தவறிவிட்டால் அவனைத் தண்டிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையம் எடுக்கின்றனர். இதற்குப் பணமே காரணமாக அமைகிறது. இத்தகைய கருத்தினை,

‘‘ஈட்டி எட்டுனம்புட்டுத்தான்(எட்டியவரை) பாயும்

பணம் பாதாளம் வரை பாயும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

உடல் பலம் உள்ளவன் எவ்வளவு தூரம் ஈட்டியை எறிய முடியுமோ? அவ்வளவு தூரம்தான் எறிவான். ஆனால் பணக்காரன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பாதாளம் வரையும் செல்வான். அனைத்தையும் பணத்தின் வாயிலாகச் சாதித்து விடுவான். அவனிடம் இருக்கும் பணத்திற்காகவே பழகுபவர் பலராக இருப்பர். இதனை,

‘‘கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்

கூட்டமிருக்கும் உன்னோடு’’

என்ற கண்ணதாசன் வரிகள் எடுத்தியம்புவது சிந்தனைக்குரியதாகும். பணத்தின் ஆற்றலை அதன் நிலைப்பாட்டை உணர்த்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

பணக்கட்டு – ஜனக்கட்டு

ஒரு மனிதனுக்கு இரண்டுவிதமான பலம் தேவை. ஒன்று ஆள் பலம். மற்றொன்று பணபலம். இதில் ஏதாவது ஒன்று இருக்கும் மனிதன் வெற்றியாளனாக மாறுகிறான். இரண்டையும் மனிதன் தாமாகவே உருவாக்குதல் வேண்டும். பிறர் யாரும் உருவாக்கித் தரமாட்டார்கள். இதற்கு முயற்சி வேண்டும். இதனை,

‘‘ஒன்று ஜனக்கட்டு(ஆள்பலம்) வேண்டும்

இல்லை பணக்கட்டு(பணபலம்) வேண்டும்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.

பணபலமும், ஆள் பலமும், மனிதனின் உழைப்பினாலும், அவனது பண்பு மற்றும் செயல்களினாலும் ஏற்படுகின்றன. இதனை மனிதன் உணர்ந்து செயல்படவேண்டும் என்று இப்பழமொழி உள்ளீடாக வலியுறுத்துகிறது எனலாம்.

பணமா? குணமா?

பணம் பெரிதா? குணம் பெரிதா? இக்கேள்வி வல்லாண்டுகளாக நம்மிடையே கேட்கப்பட்டு வரக்கூடிய கேள்வியாகும். இதற்குச் சிலர் பணம் என்றும், சிலர் குணம் என்றும் இன்னும் சிலர் இரண்டும் என்றும் விடைகூறுவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு ஒவ்வொன்றும் பெரியது என்று கூறுவர்.

நிரந்தரமாக எது ஒரு மனிதனிடம் நிலைத்து நிற்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எது பெரியது என்று தீர்மானிக்கப் பெறுகிறது. பணம் பெரியது என்று நினைப்பவர்கள் அது நிரந்தரமா? என்று நினைப்பது கிடையாது. அது ஓரிடத்தில் நிலைத்து நிற்காது இடம்விட்டு இடம்சென்று கொண்டேஇருக்கும்.

பணம் படைத்தவர்களுள் சிலரே பணக்காரர்களாக நிலைத்து இருக்கின்றனர். பலர் அவர்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளாகவே பணத்தையும் தங்கள் செல்வாக்கையும் இழந்துவிடுகின்றனர். பணம் வைத்திருப்பவருக்காக எந்தக் கூட்டமும் கூடாது. ஏனெனில் அவரிடம் இருக்கும் பணத்திற்காகவே ஆள்கள் கூடுவர். பணம் தீர்ந்தவுடன் அவர்கள் அனைவரும் ஓடிவிடுவர். ஆனால் குணத்திற்காகப் பழகுபவர்கள் உண்மையானவர்களாக இருப்பர்.

இவர்கள் பொன், பொருள், பணம் இவற்றை எதிர்பார்த்துப் பழகமாட்டார்கள். பண்பிற்காகப் பழகுபவர்கள் இவர்கள். இவர்கள் எதற்காகவும் எப்பொழுதும் நட்புச் செய்தவர்களைவிட்டுவிட்டு ஓடமாட்டார்கள். குணமே என்றும் நிலைத்திருக்கும் எனலாம். பணம் ஒருவனைக் கைவிட்டுவிட்டாலும் ஒருவனது குணம்(பண்பு) என்றும் கைவிடாது துணைநிற்கும்.

அதுபோல் குணமுடையவன் இறந்துவிட்டால் உண்மையான அன்புடன் வருந்தித் துன்’புறுவோர் பலர். பணமுடையவன் இறந்துவிட்டால் அவனுக்காக, அவனது இறப்பிற்காக வருந்தாது அவனுடைய பணத்திற்காக மட்டுமே அழுவர். இதுவே உலக இயல்பாகும். பணத்தைத் தமக்குப் பங்கு பிரித்துக் கொடுக்காமல் சென்றுவிட்டாரே என்று புலம்பிப் பணத்தை மனதில் வைத்தே புலம்பி அழுவர். ஆனால் பண்பிற்காக, குணத்திற்காக அழுபவர் உண்மையான துன்பத்துடன் வருந்துவர். இத்தகைய உலகியல் நிகழ்வினை,

‘‘பணத்துக்கு அழுகுறியோ?

குணத்துக்கு அழுகுறியோ?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. பணத்தைவிட குணமே சிறந்தது என்பதையும், குணம் நிலையானது, பணம் நிலையற்றது என்ற கருத்துக்களையும் இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

புதுப்பணக்காரன் செயல்

சிலர் பணம் தனக்குக் கிடைத்துவிட்டால் அவர்களின் இயல்பான தன்மை மாறிவிடும். இயல்பான நிலையிலிருந்து மாறிநடப்பர். சிலர் பண்பு மாறி பகட்டான வாழ்வினை வாழ்வர் எளிமையாக இருந்தவர் பணம் வந்தவுடன் தன்நிலை மாறி நடப்பர். இதுவேறுபட்டதாகக் காணப்படும். இத்தகையோரின் நடத்தையினை,

‘‘அற்பனுக்கு வாழ்வு வந்தா

அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்’’

(வாழ்வு-பணம் வந்தால்)

‘‘கோவணத்துல ஒரு காசு இருந்தால்

கோழிகூப்புட ஒரு பாட்டு வருமாம்’’

என்ற பழமொழிகள் புலப்படுத்துகின்றன.

பணத்திற்காக அற்பத்தனமாக நடந்து கொள்பவர்கள் அதிகமான பணம் கிடைக்கப்பெற்று விட்டால் வரைமுறையின்றி நடந்து கொள்வர். தன்னிடம் பணம் இருக்கின்றது என்பதைப் பிறர் அறிந்து கொள்ள வேண்டும் என்றே அவர்களது நடவடிக்கைகள் இருக்கும். பணம் இருந்து விட்டால் நடை, உடை, பாவனை அனைத்தும் அவர்களுக்கு மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பண ஆசை

ஆசை அளவில்லாதது. கடலைவிடப்பெரியது. அதிலும் அடங்கக் கூடிய ஆசையும் உண்டு. அடங்காது வளர்ந்து கொண்டே இருக்கும் ஆசைகளும் உண்டு எனலாம். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று பண ஆசையாகும். பணம் எப்படியாவது எந்தவழியிலாவது தமக்கு வந்துசேர வேண்டும் என்று பலரும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பர். ஆனால் நிம்மதி, அமைதி இவையாவும் பணம் வந்தவுடன் நீங்கிவிடும். எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றினாற் போன்று இப்பண ஆசை,பணவெறியாக மாறி மனிதனைப் பலநிலைகளிலும தவறுகள் செய்யத்தூண்டும் எனலாம்.

பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக மனிதன் எத்தகைய செயலையும் செய்வதற்குகத் தயாராக உள்ளான். அதனால் தனக்கு இழுக்கு நேருமே என்றெல்லாம் அவன் கலைப்படுவதில்லை. எப்படியாவது பணம் வந்தால் போதும் என்றுமட்டுமே நினைக்கிறான். பணமே குறி என்று அலைகிறான். மனிதனின் இத்தகைய இழிநிலையை,

‘‘நாய் வித்த காசு குரைக்கவா செய்யும்?’’

‘‘கருவாடுவித்த காசு வீசவா செய்யும்?’’

என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. நாய்விற்றாலும், கருவாடு விற்றாலும் தமக்குப் பணம் கிடைத்தால் போதும் என்று கருதக்கூடிய பண்புடையவனாக மனிதன் உள்ளான் என்பதை இப்பழமொழிகள் புலப்படுத்துகின்றன.

மேலும் இளம் வயது முதல் முதிய வயதுவரை உள்ளோர் அனைவரும் பணத்தின் மேல் குறியாக உள்ளனர். ஒருவருக்கு உணவு கொடுத்தால் அவர் உண்டுவிட்டுப் போதும் என்று கூறிவிடுவார். மீண்டும் வேண்டும் எனக் கேட்க மாட்டார். ஆனால் பணத்தைக் கொடுத்தால் அவன் ஆசை அடங்காது. அவன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பான். வேறுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பணத்தின்மீது ஆசையுடன் இருப்பர். இதனை,

‘‘பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

ஒருவன் இறந்து விட்டால் அவனது நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைப்பர். பணத்தின் மீது ஆசையுடன் இருந்து ஆவியாய் அலைவர் என்பதற்காகப் பணத்தை சுடுகாட்டிற்குத் தூக்கிச் தூக்கிச் செல்லும்போது சில்லரைக்காசுகளைத் தூக்கி வீசிக் கொண்டே செல்வர். பணத்தின் இயல்பையும், மனிதனின் பண ஆசையையும் தெளிவுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

வாழ்விற்குப் பணம் தேவை. ஆனால் அதுவே வாழ்க்கையாக இராது. உப்புப் போன்றது பணம எனலாம். எணவில் அளவோடு உப்பு இருந்தால் உணவு சுவையாக இருக்கும. கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காது. பணமும் அதுபோன்றதே அளவோடு தேவைக்கு ஏற்றவாறு இருந்தால் பயன்மிக்கது. இல்லையெனில் மிகுந்த துயரத்தைத் தரும். இத்தகைய கருத்துக்களை நம் முன்னோர்கள் பழமொழிகளாக அமைத்துள்ளனர் எனலாம். அளவுடன் பணத்தைச் சேர்த்து மனநிறைவுடன் மகிழ்ந்து வாழ்வோம்!.

Series Navigationபாதுஷா என்னும் ஒரு பாதாசாரிஜென் ஒரு புரிதல்- பகுதி 33
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *