வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2

This entry is part 8 of 45 in the series 4 மார்ச் 2012

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்ப்பொருள் காண்பது அறிவு. .._

நீச்சல்குளம் அருகில் சென்றவள் உட்கார விரும்பவில்லை. சிறிது தூரமாவது நடக்க எண்ணினேன். நீச்சல் குளக் கூடாரத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றேன். பெரிய காடுபோல் உயர்ந்து வளர்ந்த மரங்கள் ! பச்சைக் கம்பளமாய்ப் புல்வெளி!. செம்பருத்திச் செடிகள் . அதன் பக்கத்திலேயே மல்லிகைப் பந்தல்! மல்லிகையின் மணம் மயக்கியது. இயற்கையின் எழில் எங்கும் கொட்டிக் கிடந்த்து.

நடந்தது போதுமென குளத்திற்குத் திரும்பி ஓர் நாற்காலியில் அமர்ந்தேன். குளத்தில் தேங்கியிருந்த நீலநிறத் தண்ணீர் என்னைக் குளிரவைத்தது. அமைதியைக் கலைத்த ஓர் சத்தம் என் கவனத்தை ஈர்த்தது. இரண்டு அணில்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தன. மேற்கூரையில் ஏறித் துரத்துவதுவும் பக்கத்தில் இருக்கும் மரங்களீல் தாவிக் குதிப்பதுமாய் விளையாடின. ஓர் அணில் கீழே வந்து உட்கார்ந்து என்னைப் பார்த்தது. இல்லை இல்லை என்னைப் பார்த்தது போன்ற உணர்வு.. அதன் உயர்ந்த வாலின் அழகு மயிலின் தோகையை நினைவூட்டியது. முதுகின்மேல் மூன்று வரிகள்!. இப்படி இணை கோடுகளாக யார் வரைந்திருப்பார்கள் ?அணிலின் கண்களும் அழகு! அதைப் பாடிப் புகழும் பாடல்கள் நம்மிடையே அதிகம் இல்லையே, ஏன்? அணில் மீண்டும் ஓட ஆரம்பித்த்து. அதைத் தொடர்ந்த என் பார்வையில் பட்டது மலர்ந்த ரோசாப் பூக்கள்! முகத்தளவு பூ! ஒரு பூவில் இத்தனை வண்ணமா!?

தென்றலின் வருடலில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரும் சிலிர்த்தது. மெல்லிய அலைகளை உற்றுப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

எங்கோ ஓர் குரல் ஒலித்தது.

“சும்மா இரு “

மனச் சுளுக்கு விடுபட்டு ஆழ்மன சக்தியில் அமிழ்ந்தேன்.

இந்த மண் கற்றுக் கொடுத்த கலை “தியானம்”. நம் சித்தர்களின் சித்து வேலைகள் பல பெயர்களைச் சுமந்து கொண்டு உலகம் முழுவதும் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

எத்தனை மணித்துளிகள் அமர்ந்திருந்தேன் என்று தெரியாது. விழிப்புணர்வு வந்த பொழுது உற்சாகமாயிருந்தது. மனத்திலே இளமைத் துள்ளல்!

என் அறைக்குச் சென்று கணினி முன் அமர்ந்தேன். முதல் நாள்தான் என் மகன் சில காணொளிகளைத் தரவிறக்கம் செய்திருந்தான்.

BBC தயாரிப்பு.இந்த மண்ணின் உயிரினங்களின் வாழ்வியல். பெயர் LIFE

ஏற்கனவே இயற்கையுடன் இணைந்து விளையாடி விட்டு வந்தவளுடன் இப்பொழுது கணினித் திரை மூலம் எத்தனை உயிர்கள் உறவாட வந்தன!.இயற்கையுடன் போட்டி போட மனிதன் எவ்வளவு முயன்றாலும் வெல்ல முடியுமா?! ஒவ்வொரு காட்சியிலும் மனிதனின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய ஒளிப்பதிவு. உலகில் வாழும் உயிரினங்களான பூச்சி முதல் பறவைகள், மிருகங்கள், நீரில் வாழ்வென என்று பகுத்து ,அக்கறையுடன் அர்த்தம் நிறைந்த காணொளியாகத் தயாரித்துள்ளார்கள்.

காதலும் வீரமும் அவர்களிடையே பார்த்தேன். சுயம்வரக் காட்சிகளும் இருந்தன.

சில காட்சிகள் சிந்தனையைத் தொட்டன.

ஒரு பெண்ணை ஈர்க்க எல்லா உயிரினங்களும் கவித்துவத்துடன் செய்யும் முயற்சிகள் ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன.

ஓர் பறவையினம். ஆண்பறவை பல இடங்களுக்குச் சென்று, வண்ண வண்ண மலர்கள், வண்ணமயமான காய், கனிகள், இலைகள் என்று கொண்டு வந்து குடில்போல் ஓன்றை அமைத்து அலங்காரம் செய்கின்றது. பெண் பறவை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு , அதற்குப் பிடித்த அலங்காரக் குடில் அருகில் நின்று அதை அமைத்தவனைப் பார்க்கின்றது. அதன்பின் ஆணும் பெண்ணும் இணைகின்றன.சுயம்வரப்போட்டி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

மிருகங்கள் வீரத்தைக் காட்டி பெண்ணை ஈர்க்கின்றன

தாய்மை உணர்வு எல்லா உயிரினங்களூக்கும் பொதுவானது. முட்டையிட்டு ஒதுங்கி வாழ கூடு கட்ட ஆண்பறவை உதவி செய்கின்றது. முட்டை இட்டபின் அதைப் பாதுகாக்க தாய்ப் பறவை தகுந்த இடம் தேடுவதும் பாதுகாப்பாக வைப்பதும், குஞ்சாக வெளிவரும் பொழுது குடிக்க நீரும், உணவுக்கு வேண்டியதும் முதலிலேயே சேகரித்து முட்டையுடன் வைக்கின்றது

பெண் குரங்கு தன் குட்டிக் குரங்கிற்கு மரம் தாவுவதிலிருந்து, சரியான உணவு சாப்பிடும்வரை கற்றுக் கொடுக்கின்றது. பாதுகாப்பாக வாழும் வழிகளைச் சொல்லிக் கொடுக்கின்றது

இன்னொரு காட்சி திகைப்பை ஏற்படுத்தியது. ஓர் ஆண்குரங்கிற்கும் பெண் குரங்கிற்கும் சண்டை நடக்கின்றது. பெண் குரங்கின் காலில் அடிபட்டு விடுகின்றது. அது வேறு யாருமல்ல ஆணின் துணைவிதான். பின்னர் ஆண் குரங்கு நடக்கும் பொழுது பெண் குரங்கு தன் ஒரு குட்டியைச் சுமந்து கொண்டு இன்னொன்றைக் கூட்டிக் கொண்டு ஆண் குரங்கின் பின்னால் நொண்டிக் கொண்டேசெல்ல ஆரம்பிக்கின்றது. பெண்ணியம் எங்கே? ஆணாதிக்கம் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. .

அடுத்து கண்ட காட்சியும் வியப்பை ஏற்படுத்தியது.

யானைக் கூட்டம் ஒன்று சென்று கொண்டு இருக்கின்றது. ஒரு குட்டி யானை சேற்றில் மாட்டிக் கொள்கின்றது. தாய் யானை காப்பாற்ற முயல்கிறது. அதன் முயற்சிகள் சரியில்லாததால் குட்டி யானை மேலும் சேற்றில் ஆழமாகப் புதைய ஆரம்பிக் கின்றது. அப்பொழுது பாட்டி யானை வந்து அம்மா யானையைப் புறம் தள்ளிவிட்டு வெகு லாகவமாக குட்டியைச் சேற்றிலிருந்து விடுவிக்கின்றது. இதில் அட்டன்பரோவில் வர்ணனை காட்சிக்கு இன்னும் வலு சேர்க்கின்றது. . பெரியவர்களின் அனுபவங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதவை என்பதைக் கூறுகின்றார். கூட்டுக் குடும்பத்தின் சக்தி!. இக்காட்சியினில் எந்த இயக்குனரும் யானைகளுக்குச் சொல்லிக் கொடுத்து எடுத்ததில்லை. இயற்கையான வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டி யிருக்கின்றார்கள்

இன்னொரு காட்சி. ஓர் பறவை வேட்டையாடி மாமிசம் உண்ட பின் எலும்பை உடைத்து சாப்பிட முடியவில்லை. அதனைக் கால்களில் பிணைத்துக் கொண்டு வெகுதூரம் பறக்கின்றது. ஓர் பாறையைக் காண்கின்றது. பறவை மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றது. சரியான கோணத்தில் எலும்புத் துணடை பாறையில் வீசுகின்றது. மிக உயரத்திலிருந்து வீழ்ந்ததால் எலும்புத் துண்டு உடைந்து சிதறுகின்றது. பின்னர் பறவை அதை எடுத்து உண்கின்றது. எந்தக் கல்லூரியிலும் பொறியியல் படிக்கவில்லை. எல்லாம் உள்ளுணர்வு என்று சொல்லிவிட முடியாது. திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றன. ஆசை, பாசம், கோபம், பயம், எச்சரிக்கை உணர்வு எல்லாம் இருக்கின்றன. மனிதன் தன்னை உயர்த்தியாக நினைப்பவைகளை எண்ண ஆரம்பித்தேன்.

சுயப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவர் மீது குற்றம் சுமத்த ஓர் விரலை நீட்டும் பொழுது மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருக்கின்றன என்று சொன்னவர் சாதாரணமானவரல்ல.. ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த உயிரினங்களின் வாழ்வியலைப் பார்த்தபின் ஓர் எண்ணம் மனத்தை உறுத்தியது. எந்த இனமும் ஓர் பெண் இனத்தை பலர் கூடியிருந்து ஒரே நேரத்தில் உடலுறவு கொண்டு அழிப்பதைக் காணவில்லை. எங்கும் கேள்விப்பட்டதுமில்லை. உயிரினங்களின் உயர்ந்தவனான மனிதன் மட்டும் ஏன் இப்படி பெண்ணை வதைக்கின்றான்?. மனித இனமும் தோன்றிய காலத்தில் இயல்பான வாழ்க்கைதான் நடத்தி இருக்கின்றான். வயிற்றுக்குப் பசி போல் உடலுக்கு உறவு வேண்டி அனுபவித்து வாழ்ந்திருக்கின்றான். கற்பு என்பது பின்னால்தான் கற்பிக்கப்பட்ட்து. இருப்பினும் ஒரு பெண்ணை பலர் அழிப்பது எப்போது ஆரம்பித்திருக்கும்? கொடுமையிலும் கொடுமை. மிருகம் போல் என்ற ஒப்பீடும் சரியில்லையே.

உயிரினங்கள் தோன்றி இலட்சக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவன் வாழ்வியலில் ஓர் கட்டமைப்பு தோன்ற ஆரம்பித்திருக்கின்றது. பின்னர் எத்தனை மாற்றங்கள் !

மனம்

இது எங்கே இருக்கின்றது? இதயத்திலா அல்லது மூளையிலா? இன்னும் மனத்தைபற்றி சரியாக விளக்க முடியவில்லை. ஆன்மீகவாதிகள் அவர்கள் கோணத்தில் விளக்கம் தருகின்றார்கள்.

மனம்படுத்தும்பாடு கொஞ்சமா? வாழ்வியலின் நாயகனே மனம்தானே

வாழ்வியல் வரலாற்று நாயகனும் மனமே.

நம அனுபவங்களைச் சரியாகப் புரிந்துகொண்டால் கிடைக்கும் படிப்பினைகள் ஏராளம்.

என் வாழ்க்கை ஏட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். எத்தனை சந்திப்புகள்! எத்தனை அனுபவங்கள்!

மாதச் சம்பளம் வாங்கிப் பிழைத்த ஒருத்தியின் வாழ்க்கையில் அப்படி சுட்டிக் காட்ட என்ன இருக்க முடியும் என்ற முணுமுணுப்பு கேட்கின்றது. . இந்த .சாதாரணமான ஒருத்தியின் வாழ்க்கையில் பள்ளத்தை மட்டுமல்ல சிகரத்தையும் பார்க்கலாம்.

நான் மிகவும் சாதரணமானவள்தான். கிராமத்தில் வளர்ந்தவள். எங்கள் கிராமம் மிகவும் சின்னது. சில நிமிடங்களில் ஊரையே சுற்றி வந்துடலாம். பத்து வயசிலே என் கூடப் படிச்ச பசங்க எனக்கு வச்ச பேரு சிறுத்தைப் புலி. அந்தக்காலத்திலும் சினிமாக் கிறுக்கு உண்டு. கூத்துக்கு மயங்கறது எந்தக் காலத்துலே இல்லை !. என் காலத்திலே எனக்குப் பிடிச்சவரு பி. யு. சின்னப்பா. நல்லா சண்டை போடுவாரு. கத்திச் சண்டை, சிலம்புச் சண்டை போடுவாரு. குஸ்தியிலேயும் அவர் ராஜாதான். டூப் கிடையாது. நானும் ஒரு குச்சியை கையிலே வச்சுக்கிட்டு ஊரைச் சுத்துவேன். எதிரே எவனாவது வந்தா சண்டைக்கு வாடான்னு கூப்பிடுவேன். .வந்துட்டாலோ குச்சியைச் சுழற்றி அடிப்பேன். பசங்களுக்கு என்னைக் கண்டாலே பயம். அதான் அந்தப் பேரு வச்சாங்க. சுவத்துலேயும் எழுதினாங்க. அதுக்கு எனக்கு கோபம் வல்லே. கலர் சாக்பீஸ் வச்சு அழகு படுத்துவேன்.

ஊரு எனக்கு கொடுத்த அடுத்த பட்டம் அடங்காப் பிடாரி. பொண்ணா இது ? பிசாசு. சின்ன வயதிலேயே எனக்கு எத்தனை விருதுகள்!

அடுத்து வந்தது ஒரு சோதனை. பெண்கள் வயசுக்கு வந்துட்டா பள்ளிக்குப் போகக் கூடாது. தாவணி போட்டாலே வீட்டில் அடைத்துவிடுவார்கள். எங்கள் கிராமத்தில் வயசுக்கு வந்த பின்னும் பள்ளிக்குப் போன முதல் பெண் நான்தான். என் தந்தை ஓர் காங்கிரஸ்காரர். சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். ராட்டையில் நூல் நூற்று, சிட்டம் போட்டு அதனைக் கடையில் கொடுத்து கதர்த் துணி வாங்கி பாவாடை சட்டை தைத்துக் கொள்வேன். காங்கிரஸ் ஊர்வலத்தில் அக்கட்சிக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலத்தில் முதலில் செல்வேன். மேடையில் வைஷ்னவ ஜனதோ, வந்தேமாதரம் பாடல்கள் பாடுவேன். அப்படியிருக்க பள்ளிக்குப் போகாமல் இருப்பேனா?! அதுசரி, நான் மட்டும் போனால் போதுமா?

எனக்கு இரு தோழிகள் ஒருத்தி பெயர் மீனாட்சி. இன்னொருத்தி பெயர் சுப்புலட்சுமி. ஏழாவது படிக்கும் பொழுதே.நன்றாகக் கவிதை எழுதுவாள் சுப்புலட்சுமி. அவள் எழுதிய கவிதை ஒன்றின் நான்கு வரிகள் மட்டும் இன்னும் நினைவில் இருக்கின்றது.

தமிழே தமிழே அமுதத் தமிழே

தமிழர் போற்றும் தத்துவத் தமிழே

இன்னமு தூட்டும் இன்பத் தமிழே

கன்னல் சுவை தரும் கற்கண்டு தமிழே

அந்தக் கவிதைப் பெண் பெரிய மனுஷியாகி விட்டாள். வீட்டில் சிறை வைக்கப் பட்டாள். அவள் வீட்டிற்கு ஓடினேன். அவள் பெற்றோரைக் கெஞ்சினேன். அனுப்ப மறுத்தனர். அவளைப் பள்ளிக்கு அனுப்பும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றேன். நான் செய்த முதல் உண்ணாவிரதப் போராட்டம். என் தோழியை பள்ளிக்கு அனுப்பினார்கள். ஆனால் ஒரு மாதத்திலேயே மாப்பிள்ளை பார்த்து மண முடித்து மதுரைக்கு அனுப்பி விட்டார்கள் பதினான்கு வயது கூட நிரம்பாத அந்த கவிக் குயிலை மணமுடித்து வெளியூருக்கு அனுப்பி விட்டார்கள். அவளைச் சில வருடங்கள் கழித்துப் பார்க்கப் போனேன். ஏற்கனவே ஒரு குழந்தை. வயிற்றிலும் குழந்தை. கவிதை எழுதிய கை கல்லுரலில் மாவரைத்துக் கொண்டிருந்த்து. என்னால் அழத்தான் முடிந்த்து. என் பயணத்தில் முதல் தோல்வி.

என் கிராமம் அளவில் சின்னது. கீர்த்தியில் பெரியது. பாரதியின் ஊர். அவர் படித்த பள்ளி, சுவாமி சிவானந்தா படித்த பள்ளியில் பயின்றவள். பெண் விடுதலை பாடியவன் ஊரில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என் பணிப் பயணத்திற்கு அஸ்திவாரமாகும். வெற்றிகள் என்னை மயக்கிய தில்லை. தோல்விகளும் என்னைத் துவளச் செய்யவில்லை. என் இயல்புகளுடன் நான் வாழ்ந்த மண்ணும் என்னை உருவாக்கி யிருந்தது. பட்டம் பெற்றவுடன் நான் படித்த அதே பள்ளீயில் ஆசிரியைப் பணிக்குச் சென்றேன். அப்படியே அதில் நான் நீடித்திருந்தால் இப்பொழுது உங்கள் முன் வந்திருக்க மாட்டேன். என் தோழி போல் எங்கோ இருந்திருப்பேன்

என்னை வேறு திசையில் ஒருவர் அனுப்பினார். எனக்கு அறிவுரைகள் வழங்கி நான் என்ன செய்ய வேண்டுமென்றும் கூறி கிராமப் பணிக்கு அனுப்பியவர் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள்.. “மோதிரக் கையால் குட்டு” என்று கேள்விப் பட்டிருப்போம். என்னைச் சமுதாயத்திற்கு அனுப்பியவர் காந்தியவாதி. எனவே என் பயணமும் சவால்கள் நிறைந்ததாகவே அமைந்தது.

அந்த நாளில் கல்வி கற்க ஆர்வம் காட்டவில்லை. அதிலும் பெண்கள் ஒரு வயதிற்கு மேல் பள்ளிக்குச் செல்ல முடியாது.

உதாரணத்திற்கு திருமதி சரோஜினி வரதப்பன் அவர்களைப் பார்க்கலாம் வயதான பின்னர் மைசூர் திறந்தவெளிக் கல்வி கற்று தன் எண்பது வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.

படித்த பெண்கள் சுதந்திரமாக கிராமங்களில் நடமாடும் பொழுது பலரின் கண்களை உறுத்தும். நடை உடை பாவனைகளில் கொஞ்சமாவது கிராமத்துப் பெண்களைவிட வித்தியாசமாகத் தோன்றுவர். பல ஆண்களை ஈர்க்கும். பெண்களை உறுத்தும். அப்படிபட்ட காலத்தில் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுடன் ஒருத்தி போனால் என்ன சவால்கள் வருமோ அவைகளைச் சந்தித்தாக வேண்டிய நிலை

வாசகர்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகின்றேன். சம்பவங்கள் கூறப்படும் பொழுது அந்த நிகழ்வுகளின் காலம், சூழல், சமுதாயக் கட்டுப்பாடுகளைப் புரிந்து கொண்டு அதன் தனமையை உணர வேண்டும். காரணமாகவே இதனைக் கூறுகின்றேன்

பெண்ணியம் பேசும் ஓர் சகோதரி கண்ணகியை விமர்சனம் செய்ததை என்னால் மறக்க முடியவில்லை. பெண்மைக்குக் கண்ணகி போற்றுதலுக் குரியவள் அல்ல. புருஷன் இன்னொரு பெண்ணுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த பொழுதும் பேசாமல் இருந்தவள். அறிவு, அழகு, திறமை இல்லாதவள். அத்தனைக்கும் பிறகும் பாதி ராத்திரியில் வந்து கூப்பிட்டவுடன் மறுப்பு சொல்லாமல் பின்னால் கோழையைப் போல் போனாள். மன்னனின் சபையில் பேசினாள் என்பதைத் தவிர வேறு எதுவும் சிறப்பு கிடையாது. கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் என்று அந்த சகோதரி நினைக்கின்றார்கள்? கணவருடன் சண்டை போட்டிருக்கவேண்டும். பணக்கார மாமனார் மாமியார். அவர்களுடனும் சண்டை போட்டிருக்க வேண்டும். அவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும். இதையும் கூறியிருக்கலாமே. அவனை விட்டு இன்னொருவனை மணந்திருக்கலாம் அல்லது மணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே என்றும் ஆலோசனைகள் கூறலாமா? கண்ணகி வாழ்ந்த காலம் எது? அப்பொழுதிருந்த சமுதாயம் எப்படி இருந்த்து? ஒருவரைப்பற்றிப் பேசும் பொழுது அவர்கள் வாழ்ந்த காலம், சமுதாயக் கட்டமைப்புகள் எல்லாம் அறிந்து பேச வேண்டும். இப்பொழுது வாழும் காலத்துடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது பொருந்தாது.

அன்று ருதுவானவுடன் பள்ளிக்குச் சென்றதால் ஊரின் பேச்சுக்கு ஆளானதும் நான்தான். இன்னும் வாழ்ந்து கொண்டு இடையில் நடந்த மாற்றங்களையும் பார்த்து வருபவள். இப்பொழுது கூட நான் சென்னையில் ஜீன்ஸ் போட முடியாது. அமெரிக்காவில் ஜீன்ஸ், பனியன் போட்டுப் போகின்றேன். ஒரே காலத்தில் கூட சூழல் மாறுகின்றது. இதுதான் மனிதனின் வாழ்வியல். கால வெள்ளத்தோடு போய்க் கொண்டிருக்கின்றோம். புரியாதவர்கள் பின் தங்கி விடுகின்றார்கள்.

இந்தத் தொடரில் வாழ்வியலில் பல கோணங்களைப் பார்க்கப் போகின்றோம். அகம், புறம் என்று தமிழன் வகுத்திருக்கின்றான். எனவே அதையொட்டியே எழுத நினைத்துள்ளேன். இன்னும் சில தகவல்கள் முன்னதாகக் கொடுக்க விரும்புகின்றேன். வெறும் அடுப்படிக் காட்சிகளை, அல்லது சுற்றுலாத் தகவல்களோ கூறுவார்கள் என்று ஆரம்பத்திலேயே சலிப்பு வந்துவிடக் கூடாது. அதற்காகவே சில சந்திப்புகள், சில நிகழ்வுகளின் அடையாளங்களைக் காட்டினால் படிக்கும் ஆர்வம் போகாது. அடுத்து அந்த சில செய்திகளைப் பார்த்துவிட்டு பயணம் தொடங்கி விடலாம் நாம். அர்த்தமுள்ள ஓர் பயணம் செல்லப் போகின்றோம் என்று முன்னதாகவே உறுதி கூறிக் கொள்றேன்

“பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளைத் தங்கள் இஷ்டம்போல் மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதன் மனம் போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்” _

– சுவாமி சிவானந்தர்

(பயணம் தொடரும்)

Series Navigationநிஜங்களுக்கான பயணிப்புக்கள்பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி
author

சீதாலட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    அன்பு சீதாம்மா…
    நீங்கள் ரசித்த ரோஜா மலர்….நீங்கள் கண்டு ரசிக்கும் நீச்சல் குளம்….இவற்றோடு…உங்கள் வாழ்வியல் அனுபவங்கள்…!
    அடுத்தது என்ன…? என்று ஆவலைத் தூண்டும் பொன்னான நிகழ்வுகள்..எழுதிய அத்தனையும் கண்முன்னே படமாக
    விரிந்து சிரிக்கிறது..வியக்கிறேன்…எட்டயபுரத்து மண்ணுக்கு மகிமை அதிகம் தான்….!காணொளியைக் கூட உங்கள் விமரிசனம்
    மனக் கண்முன்னே..ஒளிவடிவாக்கும் எழுத்து வித்தை…அபாரம்.பறவைகளைப் பற்றியும்…விலங்கினம் பற்றியும்..தெரியாத பல
    விஷயங்களை உங்கள் கட்டுரை பாடம் சொல்லித் தந்ததே..அதன் மேல் ஒரு ஆர்வத்தையும் உண்டு செய்கிறதே.அதற்கு நன்றி.
    தங்களின் அனுபவ அஸ்திவாரம்….எனக்குப் புதையல்….! பெண்ணியமும்….வாழ்வியலும்….சிந்தனையை எழுதும்போதே…கைபிடித்து
    அழைத்து செல்லும்…உங்கள் தலைமை வழிகாட்டியாக..இந்தப் பயணம் துவங்கும் முன்பே இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறதே…
    பயணம் முழுதும் இனிமை…இளமை….புதுமை….போட்டி போட்டுக்கொண்டு அழைத்து செல்லும் இடம் “இன்னொரு உலகம்….” ஆக
    இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை….இந்த இனிய பயணத்திற்கு……விசா இல்லை….பயணச் சீட்டு இல்லை…பளுவான சுமை இல்லை…!
    கணினி முன் அமர்ந்து…திண்ணை வந்தால்..போதும்..! சிந்தனைப் பயணம்…..சீதாம்மா தயவில்.!
    என்றும் அன்புடன்.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *