எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்

This entry is part 34 of 35 in the series 11 மார்ச் 2012

மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் மறைந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், நடிகருமான திரு.தி.சு.சதாசிவம் அவர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கும் அவரோடான சந்திப்புகள் நினைவுக்கு வந்து மனம் கனத்தது. கடந்த ஒரு வாரமாக அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன.

அவரைச் சந்திக்கும் முன்னராகவே, பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது மொழி பெயர்ப்பு நாவல்கள் இரண்டினைப் படித்து அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது. பிரபல கன்னட நாவலாசிரியர்
அனந்தமூர்த்தி அவர்களது ‘சமஸ்காரா’ நாவல், பழைய புத்தகக்கடை ஒன்றில் அதிர்ஷ்டவசமாய்க் கிடைத்தது.
அந்த அற்புதமான நாவல், மொழிபெயர்ப்பு என்ற உணர முடியாதவாறு என்னை வெகுவாய்க் கவர்ந்தது. படித்த முடித்தபின்தான் மொழிபெயர்த்தவர் தி.சு.சதாசிவம் என்று அறிந்தேன். இப்படி படிக்கும் போதே மொழிபெயர்த்த வர் நினைவுக்கு வந்து உறுத்தாத சுகமான அனுபவம் – எனக்கு சுந்தரராமசாமி அவர்களது ‘செம்மீனை’ப் படித்த போதும், கா.ஸ்ரீ.ஸ்ரீ யின் காண்டேகர் நாவல் மொழிபெயர்ப்புகளிலுமே கிடைத்திருக்கின்றன. பின்னர் அவரது மொழிபெயர்ப்பில் வந்த, இன்னொரு பிரபல கன்னட நாவலாசிரியர் சாராஅபுபக்கரின் ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்’
நாவலுக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளுக்கான ‘சாகித்ய அகாதமி’ விருது அவருக்குக் கிடைத்த போது அவர் மீது எனக்கிருந்த மதிப்பை மேலும் உயர்ந்தது. ஆனால் விரைவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு வரும் என்று அப்போது நினைக்கவில்லை.

‘ஆயிஷா இ.ரா.நடரசன்’ அவர்கள் தனது ‘குரல்’ அமைப்பின் சார்பில் அவரது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டை கடலூரில் ஒரு மாலைப் பொழுதில் நிகழ்த்திய போது, அவருடனான சந்திப்பபு எதிர்பாராமல் நிகழ்ந்தது. விழாவுக்கு நான் தலைமை ஏற்றிருந்தேன். நூலை திரு. சதாசிவம் வெளியிட, சிறந்த விமர்சகரும் கவிஞருமான திருமதி.லதா ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்தார். திருவாளர்கள் குறிஞ்சிவேலன், கவிஞர் பழமலய், எஸ்ஸாசி, வளவதுரையன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இரவு திரு நடராசன் ஏற்பாட்டின்படி நான், கவிஞர் பழமலை, சதாசிவம் மூவரும் ஒரு லாட்ஜில் தங்க
நேர்ந்தபோது அவருடன் நெருக்கமாகப் பழகவும் பேசவும் நேர்ந்தது. மிக எளிமையான தோற்றமும் தீர்க்கமான முகமும் இனிமையாய்ப் பழகும் குணமும் உடையவராக இருந்தார். இரவு முழுவதும், முன்னரே பழக்கமற்ற எங்கள் இருவருடனும் பலநாட்கள் பழகியவர் மாதிரி மிகுந்த நட்புடனும் பாசத்துடனும் பேசிக்கொண்டிருந்தார். அவரது மொழிபெயர்ப்பு அனுபவங்களையும், பிரசுரிக்க – தக்க பிரசுரகர்த்தர் கிடைக்காமல் கைவசம் தேங்கியுள்ள சில நல்ல மொழிபெயர்ப்புகள் பற்றியும் பேசினார். மறுநாள் காலையில் விடை பெற்றோம்.

பிறகு அவர் ஓய்வு பெற்று சில நாட்கள் கழித்து, சென்னையில் தற்செயலாக இராயப்பேட்டையில்
‘இராயப்பேட்டை ‘பெனிபிட் ஃபண்ட்’ வாசலில் சந்திக்க நேர்த்தது. நான் உள்ளே நுழைகையில் அவர் உள்ளிருந்தது வெளிப்பட்டார். எதிர்பாராத சந்திப்பில் இருவருமே நெகிழ்ந்து கடலூர் சந்திப்பை நினைவு கூர்ந்தோம். பிறகு ”இங்கே எப்படி நீங்கள்….?” என்று நான் கேட்டபோது மிகுந்த சோகத்துடன் அந்த இழப்பைச் சொன்னார். நம்பி முதலீடு செய்ய உகந்ததாய் பிரபலமாக இருந்த இராயப்பேட்டை பெனிபிட்ஃபண்ட் அந்த சமயத்தில், அது போன்ற எல்லா நிறுவனங்களையும் போல நொடித்துப் போயிருந்தது. சதாசிவம் தனது ஒய்வூதியக்கொடை மற்றும் சேமிப்பு முழுவதையிம் – ஏறக்குறைய ஐந்து லட்சம் போல அதில் முதலீடு செய்திருந்தார். அந்தப்பணம் தான் அவரது ஜீவாதாரம். இப்போது அது திரும்பக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் பேசினார். அந்த சோகமான முகம் இப்போதும் என மனத்திரையில் ஒடுகிறது. எனக்கு அவருக்கு ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. பிறகு அவரைச் சந்திக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சியில் அவர் நடித்தபோது பலதடவை பார்த்துண்டு.

அவர் முதலீடு செய்த நிறுவனத்தால் முழு தொகையையும் தன் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தர முடியவில்லை. அரசின் தலையீட்டால் 1000. 2000 என்று தவணைகளால் பல ஆண்டுகளாக இன்னும் தந்து கொண்டிருப்பதாகத் தகவல். திரு.சதாசிவம் தன் வாழ்நாளுக்குள் பாதியையாவது திரும்பப் பெற்றிருப்பாரா என்று தெரியவில்லை. அவரது மரணம் பற்றி அறிந்ததும் இந்த நினைவுதான் என்னை வருத்தியது. அவரை நினைக்கும் போதெல்லாம் எழுத்தாளரை வஞ்சிக்கிற பலரோடு இது போன்ற நிறுவனங்களும் சேர்ந்திருப்பதை எண்ணி வருந்துவதைத் தவிர வேறு தெரியவில்லை.

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 31தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்
author

வே.சபாநாயகம்

Similar Posts

2 Comments

  1. Avatar
    SRINIVASAN. V. says:

    வணங்கி மகிழ்கிறேன்.
    தி.சு.சதாசிவம் கட்டுரை நன்றாக இருந்தது.
    நன்றி சார்.
    அன்புடன்,
    சீனுவாசன்.
    ( கமல் ஹாசனின் மகாநதி திரைப்படம் நினைவுக்கு வந்தது – அதிலே இந்த நிதி டெபொசிட் இழப்பு குறித்து ஒரு சித்திரம் துல்லியமாக வந்திருக்கும். )

  2. Avatar
    SRINIVASAN. V. says:

    வணங்கி மகிழ்கிறேன்.
    தி.சு.சதாசிவம் கட்டுரை நன்றாக இருந்தது.
    நன்றி சார்.
    அன்புடன்,
    சீனுவாசன்.
    ( கமல் ஹாசனின் மகாநதி திரைப்படம் நினைவுக்கு வந்தது – அதிலே இந்த நிதி டெபொசிட் இழப்பு குறித்து ஒரு சித்திரம் துல்லியமாக வந்திருக்கும். )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *