அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்

This entry is part 7 of 36 in the series 18 மார்ச் 2012

பன்னிரெண்டு சிறுகதைகளை தன்னகத்தே கொண்டு நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’ சிறுகதை தொகுப்பு.குறிஞ்சி பூக்கும் பருவம் பன்னிரு வருடங்கள்.அதற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால் படைப்புக்கள் குறிஞ்சியின் தன்மையை பெற்றுள்ளனவா என்றால்,அபூர்வமாய் சில படைப்புக்கள் நம் மனதை ஆக்கிரமித்து நம்முள் பல கசிவுகளை உண்டாக்கி செல்லும்.அப்படியான கசிவு,மன அதிர்வு ஆகியவை அழகிய பெரியவனின் ‘தீட்டு’ என்ற குறுநாவல் தொகுப்பை வாசித்த போது ஏற்பட்டது.முதன் முதலாக அப்படியான ஒரு’உளநெருடலா’ன படைப்பின் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியவர் அழகிய பெரியவன்.அவர் கையாண்ட சில விஷயங்கள்-மனித செயப்பாடுகள்- ஜெயமோகனின் ’ஊமைச்செந்நாய்’ சிறுகதையில் பின்னாட்களில் கண்ணுற நேர்ந்த போது ஆச்சரியப்பட்டு போனேன்.பெண்ணை தன் இச்சை பொருளாக்கி,கையாலாகாத ஆண் எப்படி அவர்களை கைக்கொள்கிறான் என்பதை ‘தீட்டு’விவரித்த அதே நிலையில் ‘ஊமைச்செந்நாயு’ம் வாய் வழி புணர்(Oral Sex) நிகழ்வை பதிந்திருந்தது.
“கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய்.தீர விசாரிப்பதே மெய்”என்பது நிதர்சன உண்மையென்பதை உணர்ந்த கணங்கள்,’தீட்டி’ன் மயக்கதோடேயே ’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’தொகுப்பை அணுகிய போது உண்டானது.முதல் வாசிப்பில் சாதாரணமான ஒரு சிறுகதை தொகுப்பாகவே என்னுள் இப்படைப்பு இடம் கொள்ள ஆரம்பித்தது. முந்தைய படைப்புக்களின் தாக்கத்தோடேயே உள்நுழைந்ததால் அதிலும் குறைவாக எழுதும் எண்ணம் தனக்கில்லை என்றும், மௌனி,சா.தமிழ்செல்வன் போல் குறைவாக எழுதி ஆளுமைகளாகிவிட்டவர்களை நெருங்க,இன்னுமின்னும் எழுதிக்கொண்டேயிருப்பேன் என்பதாயும், 61 சிறுகதைகள் எழுதிய பின்பும் ஆறாத மனதோடு எழுதிக்கொண்டிருப்பதே என் பணி என்று கூறும் அழகிய பெரியவனின் உள்ளக்கிடக்கையை மனதிற்கொண்டும் படைப்பை நாம் அணுகும் போது எதுவுமே இல்லாததாய் தான் படுகிறது.கடைசி சிறுகதையை படித்த போது’தீட்டி’ல் ஏற்பட்ட பரவசம் மீண்டும் தனக்கேற்பட்டதாய் உணர்ந்த அழகிய பெரியவன் நம்மையும் அதே உணர்வு நிலைக்கு அழைத்துச்செல்ல முயலுகையில் நாமும் ஆர்வமாய் முதலில் கடைசி படைப்பிலிருந்து வாசிக்க ஆரம்பிக்கிறோம்.இப்படியாக பன்னிரெண்டு சிறுகதைகளையும் படித்து முடித்த பின்பு எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாத சூழ்நிலையில் படைப்பை நாம் மறந்துவிடுவது ஒரு சாதாரண நிகழ்வாய் மாறி நின்றுவிடுகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் -தலித்திய-வாழ்வியலையே அதிகதிகம் சொல்வதாய் குற்றச்சாட்டு தன் மீதுள்ளதாய் படைப்பாளி முன்பே கூறிவிட்டபடியால் அதிலும் அந்த வாழ்க்கை முறையில் சொல்வதற்கு இன்னும் நிறைய பொதிந்திருப்பதையும் சுட்டிக்காட்டி அவற்றை கைக்கொள்ள படைப்பாளிகள் முன் வர வேண்டுமென்று சொல்வதாலும் ’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’ எழுச்சி பெற வைக்கும் தூண்டுகோலாய் அமைகிறது என்ற மனவோட்டத்தோடு மறந்து போனேன்.
எதேச்சையாக மிக சமீபத்தில் நண்பர் ஒருவரிடம்’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புக’ளை கண்ட போது பிரமிப்பு ஏற்பட்டது.காரணம் நண்பர் படைப்புக்கள் வெளியாகி கைக்கு கிடைத்த உடனேயே அவற்றை வாசித்து விட்டு ஒதுக்கிவிடும் பழக்கமுடையவர்.அவரின் கைகளில் வெளியான பல காலங்கள்-நான்கு மாதங்கள்-கழித்தும் ஒரு படைப்பு நின்றிருக்கிறதே என்பதே அது.அதை வெளிக்காட்டாமல் நான் மறுபடியும் மறுவாசிப்புக்காய் வேண்டி ‘சிவபாலனை’அணுகிய போது அது தன்னகத்தே பதுக்கி வைத்திருந்த பல விஷயங்கள் புரிபட ஆரம்பித்தது.நுணுகி ஆய்ந்து ஒரு வரைமுறைக்குள் படைப்பை கட்டுப்படுத்த முயன்ற எனது விழைவு கரை உடைத்து வெளிப்போந்தும் கட்டற்ற பெருக்காய் ஆனது கண்டு எனக்கே ஆச்சர்யம்.மிகுமிகையான எண்ணவோட்டமாயும் மாறிவிடும் அபாயம் உள்ளதென்ற எச்சரிக்கையோடு அடுத்த கட்ட வாசிப்பனுபவ பகிர்தலுக்குள் நகர்கிறேன்.இரண்டாம் வாசிப்பின் துவக்கம்.
முதல் சிறுகதை தொகுப்பின் தலைப்பைக்கொண்டது.சிவபாலன் அகமும் புறமும் ஒன்றல்ல என்பதை நிலைநிறுத்தும் பாத்திரமாய் முன்னிறுத்தப்படுகிறார்.முற்போக்கு எண்ணங்களை கொண்டவர்.பலராலும் அப்படி அறியப்பட்டவர்.பெண்மையை சிறுமைப்படுத்தி அடக்கியாளும் ஆண்மைவாதியாயும் இனவாதியாயும் வெளிச்சமிடப்படுகிறார்.ஆதிக்கவர்க்கம் பொருளாதாரத்தில் சிறுமைப்பட்டிருந்தாலும் இனப்பற்றும் சாதியக்கொடுங்கைகளுக்கு சொந்தமானதாயும் இருப்பதற்கு டீக்கடைகாரரே சாட்சி.மாறிவரும் உலகியற்போக்கு இறுதியில் திரைப்படத்தின் இறுதிகாட்சிகள்(கிளைமாக்ஸ்) போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.மகளை கொன்றதற்கான கழிவிரக்கம் புதிய துவக்கமாய் உருப்பெறுகிறது.சட்டத்திடம்(காவல் துறை) தன்னை ஒப்படைக்க முயன்றிருக்கலாமோ என்ற எண்ணம் மேலெழுவதை தடுக்க முடியவில்லை.சிவபாலன் இடம் பெயர்கிறார் குடியானவர்களின் மேம்பகுதியிலிருந்து குடிமையற்றவர்களின் சிறும்பகுதிக்கு.முயற்சி திருவினையாக்கும்.முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்.நம்புவோம்.
‘புளியம் பூக்கள்’ மெல்லிய உணர்வுகளோடு காதல் மணம் தவழும் பொழுதுகளை வெளிச்சமிடுகிறது.பாட்டாளிகளின் வலிகளையும் அவர்களது மனவோட்டத்தையும் படம் பிடித்துக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.கம்சலை ‘மானம்’பெரிதென வாழ்வினை அமைத்தவளாய் சித்தரிக்கப்பட்டுள்ளாள்.
‘வாகனம் பூக்கும் சாலை’ சிறார் கல்வியையும் கட்டாயக்கல்வியையும் முன்னிறுத்துகிறது.கல்விக்கண் திறக்கும் முரளியின் பாத்திரம் அபூர்வமாய் தான் காணக்கிடைக்கிறது.
‘ஈசல் சொற்கள்’ மனப்போராட்டங்களை வெளிப்படுத்தும் படைப்பு. புண்படுத்தும் சொற்கள் ஈசல் போல் வாழ்நாட்களை கொண்டது.அற்ப காரணங்களுக்காய் சொற்களை விரயமாக்குதல் ஈசல் போல் வந்த சுவடு தெரியாது மறைதலை சொல்லிச்செல்கிறது.மனக்கசப்புகள் கசடாய் மாறி வெளிப்படுதலும் அழகாய் பதியப்பட்டுள்ளது.
‘ஒளிச்செவ்வகம்’ தொலைக்காட்சிக்குள் தங்களது வாழ்வை தொலைப்பவர்களுக்கானது.வாசிப்பு பழக்கத்தையும் இன்ன பிற வாழ்வியல் செயப்பாடுகளையும் முடக்கிப்போடுகிற ஒளிச்செவ்வகம் எந்தெந்த நிலைகளில் அதன் திறனை வெளிபடுத்துகிறதென்பதை ஆழ பதித்திருக்கிறார்.
‘பனிமூட்டம்’ விலகுதற் போல் சூரியனின் வருகையாய் பெண்கள் ஓர்மையில் செயல்படத் துவங்கும் போது பாலியல் வக்கிரச்செயல்களும் பெண்ணியத்திற்கு எதிரான செயல்களும் அடங்கிப்போய் பின் செயலற்று போதலும் சொல்லப்படுகிறது.அழகாயும் ஆழமாயும் சொல்லப்பட்டிருக்கும் கதையின் நேர்த்தியில் படைப்பாளியின் ஆளுமைத்திறன் வெளிப்படுகிறது.
’புலன்’ இரு மாறுபட்ட வாழ்வியல் திறனை கோடிட்டு காட்டுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் சகஜமாக தங்களை மற்றவர்களோடு அய்க்கியப்படுத்திக் கொள்ள முடியாத சூழலையும் அவர்களால் ஆதாயப்படுகிறவர்கள் எப்படி தங்களது வாழ்வியலையும் சூழலையும் மாற்றியமைத்துக் கொள்கின்றனர் என்பதனையும் கண்ணுற முடிகிறது.குழப்பமான மனநிலையோடு தான் இச்சிறுகதையை அணுக முடிகிறது.ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்ற எண்ணமும் எழுவது மறுக்கமுடியாதது.’நீங்க நல்லவரா கெட்டவரா’? என்ற கேள்வியை கேட்கும் நிலைக்கு நம்மை தள்ளிவிடும் படைப்பு.
‘மீட்டும் நினைவுகள்’ உண்மையிலேயே பழைய காதல் நினைவுகளை கிளறிவிடும் படைப்பு.இதே மனநிலை இரு பாலருக்குள்ளும் எழும் என்பதையும் நிலை நாட்டியிருக்கலாம்.
‘வெளுப்பு’ சலவைத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் எற்படும் நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது.சந்தேகக் கண் கொண்டு கண்ணுறுவதும் பின்பு அதையே அவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதும் பதிலடியாய் காஞ்சொறி பூசின புடவைகளை கொண்டு ஆறுதலடைவதும் நல்ல சிரிப்பை வரவழைக்கும்.ஆனால் ’காஞ்சொறி’யை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
‘புகை’மண்டிக்கிடக்கும் பாட்டாளிகளின் வாழ்வியலின் இன்னுமொரு முகத்தை படம் பிடிக்கும் முயற்சி.பழையன கழிதலும் புதியன புகுதலும் போலும் சுற்றமும் புறமும் மாறுதல் கொள்வதற்கு ஏற்றாற் போல் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க விழையும் விழைவாய் பதியப்பட்டிருக்கிறது.
‘தோப்பு’ வீறு கொண்டெழும் பாட்டாளி ஒடுக்கப்பட்டவர் போன்றோரின் கனவாய் போன வாழ்க்கையை மாற்றமுறச் செய்யும் எத்தனிப்பாய் பாடம் போதிக்கிறது.பொருளாதாரத்தில் மேம்பட்டாலொழிய சாதியம் ஒழிய வழியில்லை என்பதாய் கருத இடமுள்ளது.ஆண்டைகளின் அடக்கு முறைகளும் அவர்களது ஆணவப் போக்கும் காலம் மாறி நிலைமை தலைகீழாக மாற்றமடைவதையும் பதிக்கிறார்.முன்பொரு சிறுகதையில் ரெட்டியார் என்ற கதாபாத்திரம் ஏவலாளின் கண்ணை குடைக்கம்பியினால் குத்தி கண் பார்வையை இழக்கச்செய்ய, அவனது மகன் வளர்ந்து பின் ஒரு ஆய்வுப்பயணக்குழுவோடு அதே ஊருக்கு வர அவனுக்கு கிடைக்கும் வரவேற்பும் மரியாதையும் மற்றொரு கோணத்தில் இச்சிறுகதையில் அலசப்பட்டிருப்பது போல் படுகிறது.
‘முள் காடு’ சிறுகதை வாழ்விடம் வாழ்வாதாரம் மற்றும் தலித் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகிறது.சிதிலமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் .தொகுப்பு வீடுகளில் சிதைந்துப்போயிருக்கும் கழிப்பறைகள். மழைக்காலங்களில் சேரிவாழ் மக்கள் படும் அவதிகள். மற்றும் முள் காடு அழிந்தால் உருவாகும் நிலைமை இவையெல்லாம் ஒரு இளைஞனை வீறு கொண்டெழச் செய்வதை பிரதி எடுத்திருக்கிறது.தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்களை படம் பிடித்து காட்டும் விதமான ‘குர்பானி’ பற்றின பழைய சிறுகதை ஒன்றில் இறைச்சியை விரும்பி உண்ணும் சிறுவன் பலியிடப்படும் ஒரு விலங்கின் அவல நிலையை கண்ணுற்ற பின்பு தான் விரும்பி உண்ணும் இறைச்சியை விடுத்தல் போல் தன் சமூக மேம்பாட்டுக்கான விடியலாய் முள் வெட்டும் தொழில் விடுத்து தனது எதிர்ப்பையும் எழுச்சியையும் காண்பிப்பதும் பொருத்தமான ஒன்று. சிலவற்றை விடுத்தல் எந்த அளவு பயனளிக்கும் என்று சிந்திக்க வல்ல வல்லாண்மை படைத்த படைப்பு.
காலத்திற்கேற்ப மாறுதலை தேடிச்செல்கிற மனித வாழ்வில் அடித்தட்டு மக்களின் துன்பங்களையும் துயரியல் வாழ்வையும் மாறுதலடையச் செய்ய எத்தனிக்கும் ஒரு முன்மாதிரியான விழைவு எனவும்,அடுத்த கட்ட ஏற்றத்திற்கு இட்டுச் செல்லும் வழிகாட்டியாகவும் இந்த தொகுப்பினை கொள்ளலாம்.வெகுசன பத்திரிக்கைகளில் ஏற்கனவே வெளிவந்துள்ள இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை ஒருங்கே கண்ணுறும் போது இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாய் நம்முள் இறங்கி பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது.அடித்தட்டு பாட்டாளி வர்க்க மக்களின் வாழ்வியல் முறையை,வலிகளை உணர்த்தும் விதத்தில் பதிந்தமை பாராட்டுக்குரியது.
மேம்போக்கான வாசிப்பிற்கும் ஆழ்ந்து உள் வாங்கி உணர்ந்து வாசித்தலுக்கும் நிறைய வித்தியாசமுள்ளது.இன்னும் அதிகதிகமான வாசிப்புக்கு உட்படுத்தப்படும் படைப்பிலிருந்து இன்னும் அரிய தகவல்களையும் அதீத உணர்வுகளையும் நாம் பெறலாம்.இதை எழுதி முடிக்கும் போது இன்னும் நான் பக்குவப்பட வேண்டுமென்று எண்ணிகொண்டேன்.

– சு.மு.அகமது.

Series Navigationகாய்க்காத மரம்….ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்
author

சு.மு.அகமது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *