ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘

This entry is part 4 of 36 in the series 18 மார்ச் 2012

தெருவோர ஜூஸ் கடைகளில், நெல்லைப் பழரசம் என்று ஒன்று தருவார்கள். சிகப்பு கலரில், கொழகொழவென்று, பெரிய கண்ணாடி டம்ளரில் இருக்கும் அது. பாயசத்துக்கு முந்திரி போல், நடுவில் ஒரு சில பைன்னாப்பிள் துண்டுகள் பல்லில் சிக்கும். சாப்பிட்டால் கொஞ்ச நேரத்துக்கு ‘ திம் ‘என்று இருக்கும். அப்புறம் கலக்கும். அப்படி இருக்கிறது படம்.

‘ காக்க காக்க ‘ வெற்றிக்குப் பிறகு, போலீஸ் என்கவுண்டர் கதைகள், புற்றீசல் போல் வரத் தொடங்கி விட்டன. கௌதம் மேனனே மீண்டும் அப்படி ஒரு படம் ‘வேட்டையாடு விளையாடு ‘ எடுத்தார். பெரிய வெற்றி இல்லையென்றாலும், கமலால் அது தப்பித்தது.

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு இது 149வது படம். இதில் ஆக்ஷன் ரொம்ப கம்மி. ஒன்லி ரியாக்ஷன். சிறு கடை வைத்திருப்பவன் கூட, வியாபாரம் படுத்து விட்ட பிறகும், பேருக்காவது கடையைத் திறந்து வைத்து, உட்கார்ந்திருப்பதைப் போல, வருடத்திற்கு ஒரு படம் தனி ஹீரோவாக நடிக்க வேண்டிய கட்டாயம் அர்ஜுனுக்கு. அஜீத்தின் ஸ்கிரீன் மேஜிக்கால், ‘மங்காத்தா’ ஓரளவு பேசப்பட்டது அர்ஜுனுக்கு விபரீத ஆசையைக் கிளப்பிவிட்டதன் பலன் தான், இந்தப் படம்.

மாசி என்கிற காவல் துறை அதிகாரியின் மனைவி, ரவுடிகள் சண்டையில் சுடப்பட்டு இறந்ததால், ரவுடிகளை ஒழிக்க புறப்படுகிறார் அவர். நந்தா என்று ஒரு தாதா சென்னையில், நாகா என்று ஒரு தாதா மும்பையில். காவல் துறை கமிஷ்னர் சந்தான பாரதி, இன்ஸ்பெக்டர் பாலாசிங் உட்பட எல்லோரும், இரு தாதாக்களின் கவனிப்பில். பதவி நீக்கம் செய்யப்பட்டு, சிறைக்குப் போகும் மாசி, மும்பை தாதாவுடன் கைகோர்த்து, விடுதலையாகி, மீண்டும் பதவி பெற்று இருவரையும் ஒழிக்கும் இறுதி முடிவு. இது நடுவில் மனைவி இறந்த சோகம் கொஞ்சம் கூட இல்லாமல், ஒரு கல்லூரி மாணவியுடன், அவ்வப்போது வரும் அய்யாவின் அறிக்கை போல, டூயட் வேறு.

மாசியாக அர்ஜுன் கொடுத்த பாத்திரத்தை சரியாகத்தான் செய்திருக்கிறார். கதையும் திரைக்கதையும்தான் காலை வாரி விட்டுவிட்டது. மாசியின் அசிஸ்டெண்டாக வரும் மேஜரின் மகன் கவுதம், அர்ஜுனைவிட வயதானவராகத் தெரிகிறார். ஒழுக்கத்துக்கும் ஒழுங்கீனத்துக்கும் கிடைத்த பரிசுகள். வழக்கம்போல, வட இந்திய பெண்கள், கதை நாயகிகளாக வந்து, வலிக்க தமிழ் பேசுகிறார்கள். தமிழ் திரைப்படத்தின் சமீபத்திய கோட்பாடுகளின் படி, இந்தி வில்லன் நடிகர்கள் தமிழ் பெயர்களில் உலா வந்து கழுத்தறுக்கிறார்கள். இரண்டு காட்சிகளில் மயில்சாமி, ஒரு காட்சியில் பாண்டு, அர்ஜுனுக்கு அம்மாவாக கலைராணி என்று முந்திரி மாதிரி, தெரிந்த முகங்கள்.

தீனா எப்போதுமே முணியாண்டி விலாஸ்தான். அதனால் ரகத்துக்கு ஒண்ணு என்று பாடல்கள் போட்டிருக்கிறார். எல்லாம் கேட்கும்போதே மறந்து போகும் ரகம். என்கவுண்டர் என்ற உடனேயே ‘ பர பர தக தக ‘ மெட்டில் ஒரு பாட்டு பேக்கிரவுண்டில் ஒலிப்பது கட்டாயாமாகி விடுகிறது. இதிலும் அதே. சில பாடல்களை கிச்சாவே எழுதியிருக்கிறார். எப்படியிருக்கும் என்பது ரசிகனின் கற்பனைக்கு.

அர்ஜுன் இனிமேல், மல்டி ஸ்டார் படங்களை மட்டுமே ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இன்னமும் கொஞ்ச நாள் நிலைத்திருக்க முடியும். ஒரு படத்தை தனியனாக தூக்கி சுமக்கும் திறமை, இப்போது அவரிடம் இல்லை.

கிச்சா மோசடி வழக்கெல்லாம் முடிந்த பிறகு, கொஞ்ச நாட்கள் பாம்பை வைத்து மட்டும் படமெடுப்பது நல்லது.

#

கொசுறு

அரசு விதிப்படி, ஒவ்வொரு திரையரங்கிலும், பார்வையாளனுக்கு குடிதண்ணீர் வைக்க வேண்டியது உரிமையாளரின் கடமை. ஆனால் மல்டிப்ளெக்சில் மினரல் வாட்டர் பாட்டில் அல்லது பெப்சி தான் கிடைக்கும். தண்ணீர் வேண்டுமானால் கக்கூசுக்குத்தான் போக வேண்டும். விருகம்பாக்கம் தேவி கருமாரியில், படம் பார்க்கப் போகும்போது, வழியில் கிடக்கும் கூழாங்கற்களை, எடுத்துக் கொண்டு போவது உத்தமம். இடைவேளையில் தண்ணீர் வேண்டுமென்றால், குடத்தில் அவைகளைப் போட்டால்தான், நீர் மேலே வரும்.

#

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *