நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)

This entry is part 32 of 40 in the series 1 ஏப்ரல் 2012

உம் தேவைகளுக்கான கற்பகவிருட்சமாய் உம் நண்பன்
நேசமெனும் நல்வித்தை விதைத்து
பாசமெனும் அறுவடையைக் கண்டவன்.
உம்முடைய தீக்கரும்பும் அவன்தான்
உம் தீக்காய்தலுக்கான தளமும் அவ்னேதான்
அமைதியின் நாட்டம் கொண்டு அதன்
வேட்கையுடன் அவனை நாடுகிறீர் நீவிர்

மனம் திறக்கும் உம் தோழமையின்
குணம் அறிந்து அச்சம் கொள்ளாதே
எதிர்வினையோ, உடன்படுதலோ
போன்ற எண்ணத் தோற்றம்
ஏதும் இல்லாதிருக்கட்டும்
அவனுடைய மௌனத்தினூடே உம்
இதயத்தின் கவனம் உட்புகாதிருக்கட்டும்
வார்த்தைகளற்ற மௌனமான நேசம்
அனைத்து எணணங்கள், விருப்புகள்,
எதிர்பார்ப்புகளின் பிறப்பிடமாகவும்
வெற்றுப்புகழ்ச்சியற்ற, பூரிப்புடனும்
அமைதியாக பகிரப்படுகிறது.
நேசமுடைய நண்பனின் பிரிவாற்றாமை
எனும் துயர் உமக்கில்லாதிருக்கட்டும்.
மலை ஏறுபவருக்கு அம்மலை சமவெளியிலும் தெளிவாகக் காட்சியளிப்பது போன்று
உம் நண்பரின் இன்மையின் சூழல் மட்டுமே அவர்பால் நீவிர் அபரிமிதமாகக் கொண்டுள்ள ஏதோ ஓர் விருப்பை உமக்கு உணர்த்தும்.
எந்த நோக்கமும் இல்லாத உள்ளார்ந்த
ஆர்வம் காப்பதாக அமையட்டும்
உமது உன்னதமான நட்பு.
தொடர் தேட்டம்பால் நாட்டம் கொண்டு தம் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமே
நேசமாகாது.
அன்பினால் பின்னப்பட்ட இந்த நேசவலையில்
பிரதிபலன் எதிர்பாராதவை மட்டுமே பிடிபடும்.
உம்முடைய உன்னதங்கள் மட்டுமே உம்
நண்பனுக்கானதாகட்டும்.
உம் மன அலைகளின் நலிவுகளை அறியக்கூடிய அவன் அதன்
வெள்ளப்பெருக்கையும் அறிந்தவனாகட்டும்.
உம் நட்புறவின் தேட்டம் பொழுதுபோக்கிற்கானதாக மட்டும்
இருக்கப்போகிறதா என்ன?
என்றும் அதற்கான உம் தேட்டம் அவ்வினிய
பொழுதுகளுடன் நீர் வாழ்வதாக இருக்கட்டும்.
அவை உம் தேவைகளை நிரப்பட்டும் வெறுமையை அல்ல.
நட்புறவின் இனிமையில் நகைப்பும், இன்கணும்
பகிர்தல் மட்டுமே நிரந்தரமாகட்டும்.
பனித்துளியென நுண்பொருளிலும் உம் இதயம்
விடியலின் புத்துணர்வைப் பெறட்டும்!

Series Navigationசிலை உயிர்த்தெழும் ஓர் கணம்பாசாவின் கர்ண பாரம்
author

பவள சங்கரி

Similar Posts

Comments

 1. Avatar
  கவிநயா says:

  //உம்முடைய தீக்கரும்பும் அவன்தான்
  உம் தீக்காய்தலுக்கான தளமும் அவனேதான்//

  இந்த வரிகள் மிக அழகு.

  நட்பைப் பற்றிய தெளிவான புரிதல் இங்கே இருக்கிறது. மௌனங்களும் இங்கே அர்த்தமுள்ளவைதான். நண்பர்களிடையே மௌனங்கள் ‘comfortable silence’ என்பார்களே, அதனைச் சேர்ந்தது. எல்லோராலும் எல்லாரிடமும் மௌனமாக இருக்க முடியாது. பிரதிபலன் எதிர்பாராமல் அன்பு செய்வதே உண்மையான நட்பிற்கு அடையாளம் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்க்கிறது.

  //உம் மன அலைகளின் நலிவுகளை அறியக்கூடிய அவன் அதன்
  வெள்ளப்பெருக்கையும் அறிந்தவனாகட்டும்.//

  //பனித்துளியென நுண்பொருளிலும் உம் இதயம்
  விடியலின் புத்துணர்வைப் பெறட்டும்!//

  மிகவும் ரசிக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்கள், மொழி பெயர்ப்பில் :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *