ஒரு ஊரில் சாகரதத்தன் என்றாரு வியாபாரி இருந்தான். அவனுடைய மகன் ஒருசமயம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான். அதில் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று ஒரு வாக்கியம் காணப்பட்டது. அதை சாகரதத்தான் பார்த்துவிட்டு, ‘’மகனே, இந்தப் புத்தகத்தை என்ன விலைக்கு வாங்கினாய்?’’ என்று மகனைக் கேட்டான். ‘’நூறு ரூபாய் தந்தேன்’’ என்றான் மகன்.
‘’சீ, மடையா! இந்த ஒரு அடிச்செய்யுள் மட்டுமே உள்ள இந்தப் புத்தகத்துக்கா நூறு ரூபாய் கொடுத்தாய்? இந்தமட்டில் புத்தி இருந்தால், எப்படி நீ பணம் சம்பாதிக்கப் போகிறாய்? இன்று முதல் நீ என் வீட்டில் காலடி வைக்காதே, போ!’’ என்று சாகரதத்தன் திட்டிவிட்டு மகனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டான்.
துயருற்ற மகன் வேறு தேசம் சென்றான். ஏதோ ஒரு ஊருக்கு வந்து தங்கினான். சில நாட்கள் கழிந்தபிறகு, அவனைப் பார்த்து அந்த ஊர் வாசியான யாரோ ஒருவன், ‘’எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? உங்கள் பெயரென்ன?’’ என்று விசாரித்தான். அதைக் கேட்ட இந்த வாலிபன், ‘’விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதிலளித்தான். வேறொருவன் கேட்ட கேள்விக்கும் இதே பதிலைத் தந்தான். யார் கேள்வி கேட்டாலும், இதே பதிலைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தான். ஆகவே ‘’விதித்த பொருள்’’ என்று பெயர் பெற்றுப் பிரசித்தமடைந்தான் அவன்.
ஒருநாள் சந்திரமதி என்ற அரசகுமாரி தனது தோழியுடன் பட்டணத்தைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள். வாலிபத்தின் அழகுடன் அரசகுமாரி விளங்கினாள். அந்த நேரத்தில், அழகும், பொலிவும் நிறைந்த யாரோ ஒரு அரச குமாரன் அவள் கண்ணில் பட்டுவிட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்திலே அரசகுமாரி அவன் மேல் காதல் கொண்டாள். ‘’தோழி, எங்களிருவரையும் நீ எப்படியாவது இன்றே சேர்த்து வைக்க வேண்டும்’’ என்று தோழியிடம் கூறினாள்.
தோழி அரசகுமாரனை அணுகினாள். ‘’சந்திரமதி என்னை உன்னிடம் அனுப்பிவைத்தாள். உன்னைப் பார்த்ததிலிருந்து தான் காதலின் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டிருப்பதாகவும், எனவே நீ சீக்கிரம் தன்னருகில் வரவேண்டுமென்றும், வராவிட்டால் தான் சாவது நிச்சயம் என்றும் தெரிவிக்கச் சொன்னாள்’’ என்று அரசகுமாரனிடம் தோழி சொன்னாள்.
‘’நான் அவசியம் போய்த்தீர வேண்டுமென்றால், அரண்மனையில் நுழைவதற்கு எனக்கொரு வழி சொல்!’’ என்றான் அரசகுமாரன்.
‘’இரவானவுடன் அரண்மனையின் ஒரு உப்பரிகையிலிருந்து ஒரு பலமான கயிறு தொங்கவிடப்படும். அதைப் பிடித்து ஏறி நீ வந்து விடலாம்’’ என்று தோழி பதில் சொன்னாள். ‘’அதுவே உங்கள் முடிவு என்றால் நான் அப்படியே செய்கிறேன்’’ என்றான் அரசகுமாரன். இப்படி நிச்சயம் செய்தபிறகு தோழி சந்திரமதியிடம் திரும்பிப்போனாள்.
இரவு வந்தது. அரசகுமாரன் யோசிக்கத் தலைப்பட்டான்.
குருவின் மகளையும், நண்பனின் மனைவியையும், ராஜசேவகர்களின் மனைவியரையும் சேர்கிறவன் பிரம்மஹத்தி (பிராமணனைக் கொன்ற பாவி) ஆகிறான், என்று சொல்கிறார்கள்.
கெட்டபெயரும் கொடிய கதியும் உண்டாக்குகிற செய்கையை, நன்மையளிக்காத செய்கையை, செய்யாமல் விடுவதே சரி.
ஆகவே, அரசகுமாரியிடம் போகாமலே அரசகுமாரன் இருந்துவிட்டான். ஆனால் வியாபாரியின் மகன் (‘’விதித்த பொருள்’’ என்று பெயர் பெற்றவன்) மட்டும் இரவெல்லாம் ஊர் சுற்றித் திரிந்தபடியே வந்து, ஒரு வெள்ளை மாளிகையின் அருகில் ஒரு கயிறு தொங்குவதைக் கண்டு விட்டான். ஆவலும் துணிச்சலும் உந்தித்தள்ளவே, அவன் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஏறினான்.
எதிர்பார்த்த அரசகுமாரன் இவனே என்று அரசகுமாரி திடமாக நம்பினாள். உயர்வாக அவனை உபசரித்தாள், ஸ்நானம், உணவு, நீர், நல்ல உடைகள் எல்லாம் தந்து மரியாதை செய்தாள். அவனோடு சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவனுடைய அங்க ஸ்பரிசத்தால் அவள் உடலெல்லாம் புளகித்து, சந்தோஷமடைந்தவளாய், ‘’உங்களைக் கண்ட மாத்திரத்திலே காதல் கொண்டு என்னை உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். வேறொரு கணவனை மனத்தாலும் ஏற்க மாட்டேன். இதை அறிந்தும் ஏன் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டாள்.
அதற்கு அவன் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதிலளித்தான்.
இந்தச் சொற்களைக் கேட்டதும் அரசகுமாரியின் இதயம் ஸ்தம்பித்துவிட்டது. சீக்கிரம் சீக்கிரமாகக் கயிற்றின் வழியே அவனை வெளியேற்றி வைத்தாள். ஆதலால் அவன் ஒரு பாழடைந்த கோவிலை அடைந்து தூங்கினான். யாரோ ஒரு விபச்சாரியோடு சேரத் தீர்மானித்த ஒரு ராஜசேவகன் அங்கு வந்து அவன் தூங்குவதைக் கண்டான். தன் ரகசியத்தை மூடிமறைக்க விரும்பிய ராஜசேவகன், ‘’நீ யார்?’’ என்று வியாபாரியின் மகனைக் கேட்டான்.
அதற்கு அவன் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று சொன்னான்.
இதைக்கேட்ட ராஜசேவகன், ‘’இந்தக் கோயிலில் யாரும் இல்லை. எனவே, நீ போய் என் படுக்கையில் படுத்துத் தூங்கு!’’ என்று சொன்னான். அதற்கு ஒப்புக்கொண்டு வியாபாரியின் மகன்போய் வேறொரு படுக்கையில் தவறுதலாகப் படுத்துவிட்டான். அந்தப் படுக்கை ராஜசேவகனின் மூத்த மகளாகிய அவினயவதி என்பவளுடையது. அவள் வாலிபமும் அழகும் உள்ளவள். யாரோ ஒருவன்மீது அவள் காதல் கொண்டு அடையாளம் சொல்லிவிட்டு வந்து அவனை எதிர்பார்த்தபடியே அந்தப் படுக்கையில் அவள் படுத்திருந்தாள். வியாபாரியின் மகன் வருவதை அவள் பார்த்துவிட்டு ‘என் காதலனே இவன்’ என்று எண்ணிவிட்டாள். அது மையிருட்டு, எனவே தவறு நடந்துவிட்டது. அவள் எழுந்து சென்று காந்தர்வ முறைப்படி அவனை மணந்துகொண்டு, அவனோடு படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவளது தாமரைக் கண்களும் வதனமும் மலர்ச்சியுற்றன. ‘’பேசாமலே இருக்கிறீர்களே, இப்போதாவது நீங்கள் பேசக்கூடாதா?’’ என்று அவள் கேட்டாள்.
‘
அதற்கு அவன், ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதில் சொன்னான்.
இந்தச் சொற்களைக் கேட்டதும் அவள் யோசித்தாள். ‘’கவனமின்றிக் காரியம் செய்தால் இப்படித்தான் பலன் கிடைக்கும்’ என்று நினைத்தவளாய், துயரத்தோடு அவனைத் திட்டி வெளியனுப்பி விட்டாள்.
வியாபாரியின் மகன் கடைத்தெரு வழியே நடந்தான். அந்த நேரத்தில், அந்தத் தெரு வழியே, வேறு ஊரைச்சேர்ந்த வரகீர்த்தி என்ற ஒரு மணமகன் பலத்த வாத்திய கோஷங்களுடன் வந்து கொண்டிருந்தான். அந்த ஊர்வலத்தில் வியாபாரியின் மகனும் கலந்து கொண்டான். கல்யாண முகூர்த்தவேளை நெருங்கிவிட்டதால் வணிகனின் மகளான மணமகள் ராஜவீதியினருகே தன் தகப்பனார் வீட்டு வாசலிலே நின்று கொண்டிருந்தாள். வாசலில் அலங்கரித்திருந்த உயர்ந்த மண்டபத்தில் அவள் மணக்கோலத்தில் உடையுடுத்தித் தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
அந்தச் சமயத்தில் மதயானை ஒன்று அந்த இடத்துக்கு வந்துவிட்டது. அது பாகனைக் கொன்றுவிட்டு யார் கட்டுக்கும் அடங்காமல் அங்கு வந்து சேர்ந்தது. ஜனங்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அறிவைக் கிலி பறக்கடித்துவிட்டது. மணமகனின் ஊர்வலக் கோஷ்டி யானையைக் கண்டது. மணமகன் உள்ளிட்டு எல்லோரும் திசைக்கோடிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நெருக்கடியான சமயத்தில் மணமகளை வியாபாரியின் மகன் பார்த்துவிட்டான். அவள் தனியே நின்றிருந்தாள். பயத்தால் அவளுடைய கண்கள் துடித்துக்கொண்டிருந்தன. ‘’நீ பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்!’’ என்று அவன் அவளைத் தேற்றி, அவளுடைய வலது கையைப் பற்றியபடியே மிகுந்த துணிவுடன் யானையைக் கடுமையாகத் திட்டி அதட்டினான். விதியின் செயல் அப்படி, நிஜமாகவே யானை திரும்பிப் போய்விட்டது.
முகூர்த்த வேளை கடந்தபிறகு மணமகனும் அவனுடைய நண்பர்களும் உறவினர்கள் அங்கு திரும்பி வந்தனர். வேறொருவனுடைய கையை மணப்பெண் பிடித்துக்கொண்டிருப்பதை மணமகன் பார்த்துவிட்டான். ‘’மாமா, நீ செய்தது தவறு. எனக்குக் கொடுக்க வேண்டிய பெண்ணை வேறொருவனுக்குக் கொடுத்து விட்டிருக்கிறாய்’’ என்று மணமகன் சொன்னான். அதற்கு அவன் மாமனார், ‘’பெரியோர்களே! நானும் யானைக்குப் பயந்து ஓடிப்போய், உங்களோடு கூடவே திரும்பி வந்திருக்கிறேன். என்னை நடந்தது என்று எனக்கும் தெரியாது’’ என்று சொன்னார். பிறகு தன் பெண்ணைப் பார்த்து, ‘’குழந்தாய், நீ செய்தது அழகல்ல. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’’ என்று கேட்டார்.
‘’பெரிய விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றியவர் இவர்தான். எனவே இந்த ஜன்மத்தில் இவரைத்தவிர வேறு யாரும் என்னை மணக்கக்கூடாது’’ என்றாள் அவள்.
இந்தச் செய்தி ஊரெங்கும் பரவுவதற்கும் பொழுது விடிவதற்கும் சரியாயிருந்தது. காலையில் பெரிய ஜனத்திரள் திரண்டுவிட்டது. அந்தச் செய்தியைக் கேட்ட அரசகுமாரி அங்கு வந்தாள். வாய் மூலமாகப் பரவிய வதந்தியைக் கேட்டு ராஜசேவகனின் மகளும் அந்த இடத்துக்கு வந்தாள். ஜனங்கள் திரண்டு நிற்பதைக் கேள்வியுற்ற அரசனும் அங்கு நேரில் விஜயம் செய்தான். வியாபாரியின் மகனைப் பார்த்து, ‘’பயமில்லாமல் சொல். என்ன நடந்தது?’’ என்று அரசன் கேட்டான்.
அதற்கு வியாபாரியின் மகன், ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று பதில் தெரிவித்தான்.
இந்தச் சொற்கள் தன் ஞாபகத்துக்கு வரவே அரசகுமாரி, ‘’தேவர்களாலும் அதைத் தடுக்க முடியாது’’ என்று சொன்னாள்.
பிறகு ராஜசேவகனின் மகள், ‘’அதைக் கண்டு நான் வியப்படையவுமில்லை, வருந்தவுமில்லை’’ என்று கூறினாள்.
இவை யாவற்றையும் கேட்ட வியாபாரியின் மகள் (மணமகள்), ‘’எனக்குரிய பொருளை வேறொருவன் எடுத்துச் செல்ல முடியாது’’ என்று கூறினாள்.
அவர்கள் எல்லோருக்கும் அரசன் அபயம் அளித்து, ஒவ்வொருவரையும் தனியே விசாரித்து விவரமறிந்துகொண்டான். விஷயம் தெரிந்தவுடனே அரசன் தன் மகளை மரியாதைகளுடன் அவனுக்கு மணமுடித்தான். ஆயிரம் கிராமங்களையும் தந்தான். தனக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் அவளையே யுவராஜாவாக அபிஷேகம் செய்வித்தான். வியாபாரியின் மகன் குடும்ப சகிதமாகப் பல சுகபோகங்களோடு வாழ்ந்து வந்தான்.
அதனால்தான் ‘விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்…’ என்றெல்லாம் சொன்னேன்’’ என்றது ஹிரண்யன். மேலும் ஹிரண்யன் தொடர்ந்து பேசியது: ‘’இவ்வாறு யோசித்துபிறகு, பணத்தின்மேல் நான் கொண்ட மோகத்தை விட்டொழித்தேன்.
பார்ப்பது ஞானமே தவிர, கண்களல்ல. நற்குடியைக் குறிப்பது குணமே தவிர, பிறப்பு அல்ல. மனத்திருப்திதான் உண்மைச் செல்வமே தவிர, பணம் அல்ல. தீய செயல்களிலிருந்து விலகுவதே உண்மை அறிவாகும்.
மகிழ்ச்சி நிறைந்த மனத்தையுடையவன்தான் சகல செல்வங்களும் உடையவன். தோல் செருப்பு அணிந்த கால்களை உடையவனுக்குப் பூமி பூராவும் தோல் போர்த்திக் கொண்டிருப்பதுபோலத் தெரியும்.
பேராசை என்ற வாகனத்தில் சவாரி செய்பவனுக்கு நூறு யோசனைகள்கூட ஒரு தூரமாகத் தெரிவதில்லை. திருப்தி நிறைந்த மனம் படைத்தவன் கைக்குப் பணம் வந்தாலும் அதை அவன் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மனிதனைத் துணிவுறச் செய்யும் பேராசைத் தேவியே, உன்னை வணங்குகிறோம்! மூவுலகிற்கும் தலைவனான மகாவிஷ்ணுவையே நீ வாமனனாகச் செய்துவிட்டாய் அல்லவா?
அவமானத்தின் மனைவியாகிய பேராசையே! உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. கருணையுள்ளம் படைத்தவனாயிருந்தும் ஒருவன் பேராசை கொண்டானேயானால் அவனையும் அவமானத்துக்குள்ளாக்குகிறாய் நீ!
சகிக்க முடியாததையெல்லாம் சகித்துக் கொண்டேன். விரும்பாததையெல்லாம் பேசினேன். பிறர் வீட்டு வாயிற்படி ஏறிக் காத்துக் கிடந்தேன். பேராசையே! உனக்கு திருப்திதானே?
நாற்றமடிக்கும் நீரைக் குடித்தேன். ஒடிந்த முற்களின் குவியல்மேல் படுத்து உறங்கினேன். மனைவியின் பிரிவைச் சகித்துக்கொண்டேன். பிழைப்பைக் கருதி பிறரிடம் இரந்தேன். காலால் வழி நடந்தேன். கடலையும் கடந்து சென்றேன். உடைந்த ஜாடியையும் பொக்கிஷமாகப் பாதுகாத்தேன். பேராசை என்னும் பாவியே! இன்னும் வேறு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறதா? இருந்தால் உடனே கட்டளை இடு!
காரணத்தையும் சொல்லி, அத்தாட்சியையும் காட்டிப் பேசினாலும் ஏழையின் சொல் அம்பலம் ஏறுவதில்லை. தோஷம் நிறைந்த, உருட்டல் மிரட்டலோடு கூடிய கொடிய சொற்களைப் பணக்காரன் பிதற்றினாலும் அவை ஏற்கப்படுகின்றன.
பணக்காரன் கீழ்க்குடியில் பிறந்தவனாக இருந்தாலும் உலகம் அவனுக்கு மரியாதை செய்கிறது. துல்லியமான சந்திரன்போல் ஒளிர்கின்ற உயர்குடியில் ஏழை பிறந்திருந்தாலும் அவனை உலகம் இகழ்கிறது.
ஒருவன் கிழடுதட்டி இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால்போதும். அவன் வாலிபன் ஆகிவிடுகிறான். பணமில்லாதவன் உண்மையிலே வாலிபனாக இருந்தபோதிலும் அவன் கிழவனாகிவிடுகிறான்.
பணம் போய்விட்டால் அண்ணன், தம்பி, மனைவி மக்கள், நண்பர்கள் எல்லோரும் போய்விடுகின்றனர். பணம் வந்து சேர்ந்தால் அவர்களும் வந்து சேருகிறார்கள். உலகில் மனிதனுக்கு நட்பும் சுற்றமும் பணம் ஒன்றுதான்.
இப்படிப்பட்ட சிந்தனைகளிலே நான் மூழ்கி என் ஜாகைக்குப் போயிருந்த தருணத்தில் நம் நண்பன் லகுபதனகன் என்னிடம் வந்தான். இங்கே போய்விடலாம் என்று என்னிடம் தெரிவித்தான். எனவே நான் அங்கு வந்துவிடடேன். உன்னைக் கண்டு போகலாம் என்றுதான் அவனோடு வந்தேன். என் மனோவிரக்திக்குக் காரணத்தைச் சொல்லிவிட்டேன்.
மான், பாம்பு, யானை, தேவர்கள், அசுரர்கள், மனிதன், ஏன் மூவுலகமுமே நடுப்பகல் கழிவதற்கு முன்பு சாப்பாட்டை முடித்துக் கொள்கின்றன.
உரிய வேளையும், நல்ல பசியும் வந்துவிட்டால், உலகை வெல்லும் வீரனுக்கும் சரி கஷ்ட தசையிலிருப்பவனுக்கும் சரி ஒரு பிடி சோறு இருந்தால் போதும்.
இந்த ஒரு பிடி சோற்றுக்காக யார்தான் மோசமான நிலையிலிருந்து மேலும் படுமோசமான நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிற தீச்செய்கைகளைச் செய்வார்கள்?
என்று முடித்தது ஹிரண்யன்
இந்தச் சொற்களைக் கேட்ட மந்தரகன் ஹரண்யனைத் தேற்றத் தொடங்கியது. ‘’நண்பனே, நீ உன் நாட்டைவிட்டு வந்துவிட்டாய் என்பதற்காக அதைரியப்படக்கூடாது. நீ புத்திசாலியாக இருந்ததும் காரணமின்றி கவலைப் படுவானேன்?
இந்தச் சொற்களைக் கேட்ட மந்தரகன் ஹரண்யனைத் தேற்றத் தொடங்கியது. ‘’நண்பனே, நீ உன் நாட்டைவிட்டு வந்துவிட்டாய் என்பதற்காக அதைரியப்படக்கூடாது. நீ புத்திசாலியாக இருந்ததும் காரணமின்றி கவலைப் படுவானேன்?
அறநூல்களைப் படித்தவன்கூட முட்டாளாக இருக்கிறான். யார் செய்கை செய்கிறானோ அவனே அறிவாளி. நல்ல மருந்தை நினைத்துக் கொண்டால் மட்டும் போதுமா, நோயாளியின் நோய் குணமாகி விடுமா?
தைரியமிக்க அறிவாளிக்குச் சொந்த நாடு அன்னியநாடு என்று ஏதாவது உண்டா? எந்த நாட்டுக்குச் செல்கிறானோ அந்த நாட்டைத்தன் புஜபலத்தால் தனதாக்கிக் கொள்கிறான். சிங்கம் தனது பல், நகம், வால் பலத்தின் உபயோகத்தால் காடுபூராவிலும் ஆட்சி செலுத்துகிறது. உணவுக்காகக் காட்டில் யானையைக் கொல்கிறது. யானையின் ரத்தத்தைக் கொண்டு சிங்கம் தன் வேலையாட்களின் தாகத்தைத் தணிக்கிறது.
எனவே நீ எப்பொழுதும் முயற்சியுடையவனாக இருக்க வேண்டும். பணமும் சுகமும் எங்கு வந்து தங்கும் என்று எண்ணுகிறாய்?
தவளைகள் நீர் குடிக்கும் இடத்துக்கு வந்து சேர்வது போல், பறவைகள் நீர் நிறைந்த குளத்தை வந்தடைவதுபோல், நட்பும் பணமும் இடைவிடாத முயற்சியுள்ளவனிடம் வந்து சேர்கின்றன.
இன்னொரு விதமாகவும் அதைச் சொல்லலாம்:
தைரியம், திட நட்பு, நன்றியறிதல், அறவழிகளைப் பற்றி நிற்கும் ஒருவன், கஷ்ட காலத்திலும் துயரப்படாமல் உற்சாகத்தோடு ஒரு திடமான வாழ்க்கை நடத்தி வந்தால் சீதேவி தானாகவே அவன் விட்டைத் தேடி அடைகிறாள்.
கருமியாகவும், மூடனாகவும், சபல புத்தியுள்ளவனாகவும் இல்லாமல் திடச்சித்தமும், அறிவும், வீரமும், கவலையற்ற மனமும் உள்ள மனிதனை சீதேவி அடையாவிட்டால் சீதேவி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறாள்
.
முயற்சியில்லாதவன், சோம்பேறி, திடச்சித்தமற்றவன், வெளிப் படையாகப் பேசாதவன் இவர்களைச் சீதேவி முத்தமிட விரும்புவதில்லை, கிழபுருஷனைக் குமரி முத்தமிட விரும்பாதது போல்!
செயலிலிறங்கப் பயப்படுகிறவனுக்கு ஆழ்ந்த கல்வி ஞானமும் பிரயோஜனமளிப்பதில்லை. தொலைந்துவிட்ட பொருளைத் தேடுவதற்குக் கையில் விளக்கு இருந்த போதிலும் கண் குருடாக இருந்தால் என்ன பிரயோஜனம்?
விதிச்சக்கரம் சுழன்று வரும்போது கொடையாளி பிச்சைக்காரனாகி விடுகிறான். கொலையாளியைப் பலவீனன் கொல்கிறான், பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பதில்லை அல்லவா?
பல்லும், நகமும், மனிதனும், ரோமமும் வேண்டாத இடத்தில் இடம்பெற்றால் சோபிக்கிறதில்லை
என்ற பழமொழியை நீ கேட்டுவிட்டு, பிறந்த ஊரைவிட்டு வெளியேறக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. ஆற்றலுள்ளவனுக்குச் சொந்த நாடு, அன்னிய நாடு என்ற வித்தியாசம் கிடையாது.
வீரனும், அறிவாளியும், அழகிய பெண்ணும் செல்கிற இடமெல்லாம் சொந்த வீட்டிலிருப்பதேபோல் சகஜமாகவும் சிறப்பாகவும் நடத்தப்படுகிறார்கள்.
விவேகமுள்ள வீரன் எப்போதும் பணத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறான். பிருகஸ்பதிபோல் ஒருவனுக்கு அறிவு இருந்தாலும் செயலில் துணிவு இல்லாதவனுக்கு அது சாத்தியமில்லை.
தற்சமயம் உன்னிடம் பணம் ஒன்றும் இல்லைதான். இருந்தபோதிலும் உன்னிடம் அறிவும் ஆர்வமும் நிறைய இருக்கின்றன. எனவே நீ ஒரு சாமானிய மனிதன் போலில்லை. ஒரு பழமொழி சொல்வது போல்:
ஏழையாக இருந்தபோதிலும் செயலில் திடச்சித்தமுள்ளவன் உன்னதமான மதிப்பைப் பெறுகிறான். பணம் நிறைய இருந்தபோதிலும் சிறுமதி படைத்தவர்கள் தாழ்வு அடைகின்றனர். இயல்பாகவே மாட்சிமையுள்ள சிங்கம் நற்செய்கைகளைச் செய்வதால்தான் செல்வம் சேர்க்கிறது. தங்கத்தால் செய்த கழுத்துப்பட்டை அணிந்திருந்தாலும் நாய் அந்தச் சிங்கத்துக்கு ஈடாகுமா?
உற்சாகம், முயற்சி, தைரியம் உள்ள பலசாலிக்குச் சமுத்திரம் ஒரு சிறு குட்டைபோல, இமயமலையே ஒரு எறும்புப் புற்றுபோல! சீதேவி அவனைத்தான் வந்தடைகிறானே தவிர கோழைகளை அணுகுவதில்லை.
முயற்சியுடையவனுக்கு மேருமலையும் ஒரு உயரமில்லை, பாதாளமும் ஒரு பள்ளமில்லை, சமுத்திரமும் கரையற்றதில்லை.
பணமிருக்கிறது என்று ஏன் கர்வப்படுகிறாய்? பணம் இல்லை என்று ஏன் கவலைப்படுகிறாய்? அடிக்கப்பட்ட பந்துபோல் அதிர்ஷடம் எழும், விழும்.
எனவே, வாலிபமும், செல்வமும், நீர்க்குமிழிபோல் நிலையற்றவை.
ஒரு பழமொழி கூறுவதுபோல்.
மேகத்தின் நிழலும், துஷ்டனின் நட்பும் புதிய தானியமும், பெண்ணும், வாலிபமும், செல்வமும் சிறிது காலத்துக்குத்தான் இன்பமளிக்கின்றன.
எனவே இந்த நிலையற்ற செல்வத்தை அறிவாளிகள் அடைந்தால் அதைத் தானம் செய்வதிலும் அனுபவிப்பதிலும் பலன் காண வேண்டும்.
ஒரு பழமொழி கூறுவதுபோல்,
நூறுவித முயற்சிகள் செய்து, உயிரைவிட மேலாக மதித்து, மனிதன் சம்பாதிக்கிற பணத்துக்கு ஒரே கதிதான் உண்டு. ஒன்று, தானமாக தருவது; அல்லது, அது நாசமடைவது. பணத்தை தானம் செய்ய வேண்டும். அல்லது அனுபவிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவனிடம் பணம் தங்கி இருப்பது, பிறருக்கு வாழ்க்கைப்படவேண்டிய பெண்மணி வீட்டில் அடைபட்டிருப்பது போலத்தான்.
ஒரு கஞ்சன் கஷ்டப்பட்டுச் சேர்க்கிற பணம் எல்லாம் பிறர் அனுபவிப்பதற்குத் தான். தேனீக்கள் கஷ்டப்பட்டுத் தேன் திரட்டுகின்றன என்றாலும், அதை வேறு யாராவது குடிக்கிறார்கள் அல்லவா?
இவையெல்லாம் விதிப்படிதான் நடக்கும். ஒரு பழமொழி கூறுகூதுபோல,
ஆயுதங்கொண்டு நடக்கிற சண்டையாகட்டும், வீடாகட்டும், எரிகின்ற நெருப்பு ஆகட்டும், மலைக்குகை சமுத்திரம் ஆகட்டும், படமெடுத்துச் சீறும் பாம்பு ஆகட்டும், எங்கு நீ இருந்தாலும் சரி. விதிப்படி நடக்கவேண்டியது நடந்து தீரும், நடக்கக்கூடாதது நடக்காது.
நீ ஆரோக்யமாக இருக்கிறாய். மனச் சாந்தியும் பெற்றிருக்கிறாய். அவையே சிறந்த செல்வம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
ஏழு கண்டங்களுக்கு அதிபதியானாலும் பேராசை யாரைக் கவ்வுகிறதோ அவன் தரித்திரன்தான் என்று தெரிந்துகொள். திருப்தியோடு இருப்பவனே செல்வந்தன்.
தானத்துக்குச் சமமான செல்வம் வேறில்லை. திருப்திக்கு ஒப்பான தனமும் வேறுண்டா? குணத்துக்கு ஈடான நகை வேறு ஒன்று உண்டா? ஆரோக்யத்துக்கு ஒப்பான செல்வமும் வேறுண்டா?
இன்னொன்று, ‘’சொத்தெல்லாம் இழந்துவிட்டேனே, இனி எப்படிப் பிழைப்பது?’’ என்று எண்ணாதே. ஏனென்றால், பணம் போய்க் கொண்டேயிருக்கும். குணம் ஒன்றே தங்கும், நிற்கும்.
ஒரு பழமொழி கூறுவதுபோல்,
குணசாலி வீழ்ச்சியடைந்தாலும் தரையைத் தொட்ட பந்துபோல் மீண்டும் எழுந்துவிடுவான். கோழை வீழ்ச்சியடைந்தால் மண்கட்டி விழுந்து தரையோடு ஒட்டிக்கொள்வதுபோல் கிடப்பான்.
அதிகம் பேசுவானேன்? கடமையின் தத்துவத்தைக் கேள். இந்த உலகத்தில் ஒரு சிலர் பணத்தை அனுபவிப்பதற்கும், ஒரு சிலர் அதைப் பத்திரப் படுத்துவதற்கும் இருக்கிறார்கள். இதற்குப் பொருத்தமான கதை யொன்று இருக்கிறது.
சோமிலகன் என்ற மூடன் காட்டை அடைந்த கதை போல், பாக்கியமில்லாதவன் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தபோதிலும் அதை அனுபவிப்பதில்லை.
என்றது மந்தரகன் (ஆமை). ‘’அது எப்படி?’’ என்று ஹிரண்யன் கேட்டது.
ஆமை சொல்லத் தொடங்கியது:
- கம்பனின் சகோதரத்துவம்
- பெண்மனம்
- விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘
- ‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி
- பழமொழிகளில் ‘வழி’
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19
- பதின்பருவம் உறைந்த இடம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4
- விமோசனம்
- தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு
- ஒரு மலர் உதிர்ந்த கதை
- அக்கரை…. இச்சை….!
- பர்த் டே
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
- மனனம்
- முகங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
- அரியாசனங்கள்!
- மெங்பெய்யிலிருந்து வந்த பெண்
- முள்வெளி – அத்தியாயம் -2
- அணையா விளக்கு
- பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)
- ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ
- காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)
- பாரதி 2.0 +
- ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘
- ஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்
- சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
- நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)
- பாசாவின் கர்ண பாரம்
- இறக்கும்போதும் சிரி
- நீலம்
- நெய்தல் பாடல்
- முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .
- ”பின் புத்தி”
- ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்
- பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்