விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்

This entry is part 30 of 40 in the series 1 ஏப்ரல் 2012

1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு

பிரம்மாண்டமான பறவை சாவகாசமாக ஜலப் பிரவாகத்தில் மிதந்து கொண்டு அசைந்து ஆடுகிறதுபோல் அந்தக் கப்பல் நின்றது.

புத்தம் புதுசு. கம்பமும், படியும், கொடியும், உருளைக் கம்பிகளும், இரும்புச் சங்கிலிகளும் பளபள என்று புதுக்கருக்கோடு சூரிய வெளிச்சத்தில் ஜ்வலித்தன. இவ்வளவு நீளமும் அகலமும் விஸ்தீரணமும் கொண்ட கப்பலை நான் என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை.

தோணியிலோ கட்டு மரத்திலோ ஏறி நின்றபடிக்கு இந்த சுந்தர ஸ்வரூபமான சமுத்திர வாகனத்தை நாலு தடவை பிரதட்சணம் பண்ணினாலும் சரிதான்.

இல்லையோ, இதன் கட்டுமானம் இன்ன படிக்குத் தான் இருக்கணும் என்று தீர்மானம் செய்து அதேபடிக்கு பாளம் பாளமாக செதுக்கி, வார்த்து, நிமிர்த்தி, வளைத்து இதைச் செய்து கடலில் மிதக்க விட்டானே அந்த துரையின் அற்ப சங்கை ஜலத்தை தாராளமாக தலையில் புரோட்சணம் பண்ணிக் கொள்ளலாம்.

செய்தால். இதுக்கான புத்தியில் கால்வீசம், அரைவீசமாவது எனக்கும் மட்டுப் படும். ஆமா, சப்த நாடியும் ஒடுங்கற காலத்திலே கப்பல் கட்டுகிறதுக்கான புத்தி எல்லாம் புதுசாக வாய்த்து நான் என்ன பண்ணப் போறேன்?

ப்ஹஹஹம் ப்ஹஹஹம் என்று கப்பல் நாலு தடவை சங்கு அடித்தது. இங்கே இருந்து நாலு பத்து மைல்கல் தூரம் ஸ்பஷ்டமாகக் கேட்கக் கூடிய நூதனமும், கம்பீரமும் நிறைந்த ஓசை அது. வாடா பொச கெட்ட மகாலிங்கய்யனே, வந்து ஏறிக்கோ, ஊரைப் பார்க்கப் போய்ச் சேருவோம் என்கிறது போல பரிகாசமான சத்தம்.

அந்த மகராசி மரியாவும் அவளுக்கு ரெண்டாம் புருஷனாக வாய்த்த டேவிட்டும் இகத்தில் சகல சுகங்களும் மேன்மைகளும் அனுபவித்து பரத்திலும் சாயுஜ்ய பதவி கிடைத்து சவுக்கியமாக இருக்கட்டும். அந்த ரெண்டு நல்ல ஆத்மாக்கள் மட்டும் இல்லையென்றால் நான் யார்க்ஷையர் பக்கம் தலை வைத்துக்கூடப் படுத்திருக்க மாட்டேன். மிடில்ஸ்பரோ துறைமுகம் எனக்கு மற்ற எத்தனையோ உலக விஷயம் போல் அந்நியமாகவே விலகிப் போயிருக்கும்.

இந்தியாவுக்கு நான் போகணும் என்று சொன்னபோது டேவிட் கேட்டான்.

நீ மொரிஷியஸ், பிஜி இப்படி ஏதோ தீவுப் பிரதேசத்து மனுஷனாச்சே. பிரான்ஸில் வேறே குப்பை கொட்டி இருக்கே. இந்தியாவில் போய் என்ன பண்ணப் போறே.

தெவசம் பண்ணப் போறேன். அங்கே என் மூதாதையர் எல்லாம் இருந்திருக்கா. நானும் போற கதிக்கு புண்ணியம் கிட்டணுமே.

அவன் வெள்ளைக்காரன். அதுக்கு மேலே வேறெதும் கேட்கவில்லை. நம்மூர் நிரட்சரகுட்சிகள் என்றால், கரும்புத் தோட்டத்திலே இருக்கறபோது கல்யாணம் பண்ணிண்டியா, வாரம் எத்தனை தடவை சுகிச்சே, எத்தனை தடவை எண்ணெய் ஸ்நானம் செஞ்சுண்டே, கோமணமா லங்கோடா உடுத்திக் களைந்தது, எத்தனை சுபுத்ரன், எத்தனை சுபுத்ரி, என்ன வயசு, ஆத்துக்காரி என்ன ஜாதி, என்ன உயரம், நிறம் இத்யாதி விஷயம் எல்லாத்தையும் தூண்டித் துருவிக் கேட்டு வாயைப் பிடுங்கி இருப்பான். வெள்ளைக்காரன் நாய் மாதிரி கறுப்பனை மதிச்சாலும் அடுத்தவன் விவகாரத்திலே தலையிடறதுங்கற பேச்சே இல்லை.

நீர் இப்போ மெட்றாஸ் போகணும். அவ்வளவு தானே. கவலையை விடும். புதுசா ஒரு கப்பல், ரஜூலான்னு நாமதேயம் பண்ணி இப்பத்தான் க்ளாஸ்கோவிலே கட்டி முடிச்சு வந்துருக்கு. அதை மெட்றாஸுக்கும் அங்கே இருந்து சிங்கப்பூருக்கும் வழியிலே பினாங்குக்கும் வெள்ளோட்டம் விட்டுப் பார்த்து கம்பெனி உத்யோகஸ்தர்கள் கிட்டே ஒப்படைச்சுட்டு வரணும்.

அதெல்லாம் பெரிய மனுஷாளுக்கு விதிக்கப்பட்ட காரியமாச்சே. நாலு எழுத்து சரிவரத் தெரியாத ஏழைக் கருப்பனுக்கு என்னத்துக்காக இந்த கவுரதை?

ஓய், நீரே கப்பலை ஓட்டிப் போய் ஒப்படைச்சுட்டு வரணும்னு சொல்லலே. அந்தக் கப்பல் அடுத்த வாரம் கிளம்பறது. டெக்கையும், மேலேயும் துடைச்சு மெழுகி வைக்கற வேலை தரச் சொல்றேன். உமக்கும் நாலு காசு கையிலே. பிரயாணத்துக்கு ஒரு சல்லி துட்டும் செலவழிக்க வேணாம். என்ன சொல்றீர்?

பருத்தி புடவையாக் காய்ச்சு சாயம் ஏத்திண்டு உடம்பிலேயும் பாந்தமா சுத்திண்ட மாதிரி இருக்கே இந்த ஏற்பாடு? மகாலிங்கய்யனே, உனக்கும் அதிர்ஷ்டம்னு ஒண்ணு எப்போவாவது அடிக்கணும்னு ஜாதகத்திலே இருக்கு போலடா.

சரி அப்படீன்னு உடனே ஒத்துக் கொண்டேன். கப்பல்லே போகும்போது கர்ப்ப ஸ்திரி மாதிரி குமட்டலும் வாந்தியும் ஜூரமும் காணும். அதை எல்லாம் பொறுத்து வேலையும் பார்க்கணும். என்ன சாப்பிடக் கொடுத்தாலும் முகம் சுளிக்காம சாப்பிடணும். வெய்யில் நேரத்திலே கப்பல் தளத்திலே வேலை செய்யும்போது கண்ணே மங்கிப் போற மாதிரி கடல்லே நாலாபக்கமும் இருந்து வெளிச்சம் இருக்கும். அது பழகிக்கணும்.

டேவிட் அடுக்கிக் கொண்டே போனான். அதெல்லாம் எனக்கு ஏற்கனவே அனுபவமான விஷயங்களாச்சே, நான் யுத்த காலத்திலே கப்பல் சேவகம் தானே செய்தேன் என்று ஜாஸ்தி புனைசுருட்டும் இக்கிணியூண்டு நிஜமும் கலந்து கட்டியாக அடித்துவிட வெள்ளைக்காரனுக்குப் பரம திருப்தியாகப் போனது.

ஆனாலும் வேலை சம்பந்தமாக முடிவு எடுக்க வேண்டியது அவனுக்கும் எஜமான் துரைகள் ஆச்சே. அவர்கள் என்னை வேலைக்கு எடுக்க தீர்மானித்தாலும், நான் இன்னார் என்று ருஜுப்பிக்கிற தஸ்தாவேஜு கைவசம் கொண்டு வந்து காண்பிக்க வேணும் என்று எதிர்பார்ப்பார்களே. என்னண்டை ஒரு துண்டு கடுதாசியும் இல்லை. வெள்ளைக்கார தேசத்துக்கு யுத்தம் முடிந்து வந்து சேர்ந்ததுமே அதெல்லாம் காணாமல் போக்கி விட்டேன். இதை டேவிட்டிடம் சொன்னேன்.

எதெல்லாம் என்று அவன் கேட்க, நான் வார் ஆபீஸ் அனுமதிச் சீட்டைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். டேவிட் முகம் பிரகாசமானது.

கவலையை விடும். ஒரு இருபது பவுண்ட் ஆகும். பரவாயில்லையா. உமக்கு தஸ்தாவேஜு தயாரித்து விடலாம்.

அட்டியில்லாது உடனே தோள் சஞ்சியில் இருந்து எடுத்து நீட்டினேன். காகிதத்தில் கோணல் மாணலாக ராயங்கல வரதராஜ ரெட்டி, வயசு அறுபத்து மூணு, அபிசீனியாவிலும், இத்தாலி தேசத்தில் பெயர் வாயில் வராத ஏதோ பிரதேசத்திலும் யுத்த சேவையாக, பட்டாள சமையல்கட்டில் மீன் கழுவிக் கொடுத்துக்கொண்டிருந்தேன் இப்படி சகல தகவலும் எழுதிக் கொடுத்தேன்.

வார் ஆபீசில் யாரைப் பிடித்தானோ நாலு நாளில் ராயங்கல வரதராஜ ரெட்டியை ஆயுசு முழுக்க மாட்சிமை தாங்கிய வெள்ளைக்காரச் சக்கரவர்த்திகளின் கவர்மெண்டுக்கு ரொம்ப நெருக்கமாகத் தெரியும் என்று உலகத்துக்கு அறிவிக்கிற தஸ்தாவேஜு ஒன்றுக்கு ரெண்டாகக் கிடைத்தது.

மரியா தான் அதை எடுத்து வந்து கொடுத்தது. கூடவே நான் கொடுத்த இருபது பவுண்ட் பணத்தையும் அவள் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டாள். அது நான் யார்க்ஷயர் புறப்பட்ட காலை நேரத்தில்.

ரெட்டி, நீ என் குடும்பத்தாலே பட்ட கஷ்டத்துக்கு, ஜேம்ஸ் இப்போ என் புருஷன் இல்லேன்னா என்ன, அவனோட மோதிரம் மாத்திண்டு பத்து வருஷம் இங்கே சேர்ந்து இருந்தேனே அதைக்கொண்டு சொல்றேன். நான் உனக்கு இன்னும் எவ்வளவோ செய்யணும். அவன் செஞ்ச படுகொலைக்கு நீ ஜெயில்லே இத்தனை வருஷம் அடஞ்சு கிடந்தே. அவனானால் பேடி போல் ஓடி ஒளிஞ்சுட்டான். அவன் வகையிலே உனக்குத் தன நாசம்னு ஓரளவுக்கு எனக்கும் தெரியும். தெரிஞ்சும், நான் உனக்கு செய்யக் கூடிய குறைஞ்ச பட்ச பிரதியுபகாரம் இது மட்டும்தான்.

இங்கிலீஷ்காரிகள் அழுது பார்த்ததில்லை. அழும்போது எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி அனாதைத் தனமும் நிர்க்கதியுமாக பார்க்க கண் கூடுகிறதில்லை. இவளுக்கு என்ன மாதிரி அனுசரணையான வார்த்தை சொல்லி மனசைத் தேற்றலாம் என்று யோசித்தபடி இருக்க, அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். முதுகில் துணிச் சாக்கோடு வந்த டேவிட் போகலாமா என்றான்.

ரயிலிலும் சாரட் வண்டியிலும் கொஞ்சம் அங்கே இங்கே நடந்துமாக வந்து சேர்ந்தாச்சு.

கடலில் அலை அதிகமாக இருந்த காரணத்தால் கப்பல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் படகு ஒன்று கப்பலோடு சம்போகத்தில் ஈடுபட்ட மாதிரி அதுக்கு ஏத்தபடி முன்னும் பின்னுமாக அசைந்து கொடுத்துக் கொண்டிருந்தது.

அட ராபணா. இந்த வயசிலும் நாய் தேங்காய் உருட்டின மாதிரி, பல் இல்லாதவன் கவிச்சி திங்க ஆசைப்பட்டு எச்சில் வடித்த மாதிரி காமம் தான் மனசு முழுக்க.

போகிற வழிக்குப் புண்ணியமாக ஒரு சிராங்காய் அளவாவது சேர்த்துக் கொண்டு போக இந்த சிருங்காரம் பாராட்டுகிறதில் ஈடுபடுகிற புத்தி என்னை அனுமதிக்காது போலிருக்கே. என்ன செய்ய. அது இல்லாவிட்டால் நானும் கூட இல்லாமல் போயிருக்கலாம்.

மகாலிங்கய்யனுக்கு உசிர் போகும்போது ஜீவன் முக்தர்கள் மாதிரி கண் வழியே போகாது. ஏனைய தூர்த்தர்கள் போல் ஆசனவாய் வழியிலும் போகாது. லிங்கம் வழியாகத்தான் வெளியேறும். பிரம்மதேவன் தலையில் எழுதி வச்சிருக்கான்.

சாமி, பேப்பரைக் காட்டு.

முதுகில் ஒரு சஞ்சியும் கையில் பிடித்த தோல்பையுமாக நான் படகைப் பார்க்க போட் ஜெட்டியில் நடந்தபோது ஒரு துரை என்னை வழி மறித்துக் கேட்டான்.

அதை தீர்க்கமாகப் படித்து விட்டு திருப்பிக் கொடுத்தபடி வைசூரிக்கு குத்தி வச்சியா என்று கேட்டான்.

குசினி உத்தியோகம் கப்பலில். கூடவே துப்புரவு ஜோலி. ஊழியம் பண்றவாளுக்கும் அதெல்லாம் உண்டா பிரபுவே?

எதுக்கும் உள்ளே டாக்டர் உக்கார்ந்திருக்கார். பாத்துட்டுப் போ என்றான்.

டாக்டர் என்னை நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்து, பிருஷ்டத்தை, பீஜத்தை எல்லாம் அடுத்தபடி காட்டச் சொல்லி அதனாலும் திருப்தி அடையாமல் பக்கத்தில் இருந்த ஒரு தடியனிடம் கண்ணாடிக் குப்பியை எடு என்றான். நான் விதிர்விதிர்த்துப் போனேன். யானைக்குப் போடுகிற தோதில் இம்புட்டுப் பெரிய ஊசியை என் பிருஷ்டத்தில் ஏத்தினால் நான் கப்பலில் படுத்தபடி தான் போக வேண்டி இருக்கும். வேலை வெட்டி இல்லாமலா நான் பிரயாணம் வைத்தது?

டாக்டர் துரை காலில் விழுந்து தீனமாக மன்றாடினேன். போடா புழுத்த பன்னிச் சேயே என்று காலை இழுத்துக் கொண்டு அவனுடைய குறியைச் சும்பனம் செய்யச் சொன்னால் செய்வியா என்று கேட்டான். அதுக்கும் தயார் என்றேன் சளைக்காமல். எத்தனையோ மான நஷ்டத்தை, இழிவை பார்த்தாகி விட்டது. இன்னொன்று கூடினால் என்ன போச்சு?

பிழைச்சுப் போ என்று என் காகிதத்தில் முத்திரை குத்தி விட்டெறிந்தான். பொறுக்கிக் கொண்டு வெளியே படகுக்கு ஓடினேன்.

சாமி, நில்லு.

இன்னொரு வெள்ளைக்காரன். கூலிக்காரன் என்பதால் கரிசனமும் இருந்தது குரலில். படகில் நின்றபடிக்கு அதோடு அசைந்து ஆடிக் கொண்டிருந்தான்.

குசினி உத்யோகம் என்று திரும்ப உத்யோக லட்சணம் சொன்னேன். திருப்தியடைந்தவனாக, மூட்டையை முதுகில் இருந்து எடுக்கச் சொன்னான்.

அதை நான் கொண்டு போகாவிட்டால் குளிச்சு விட்டுத் தரிக்க மாற்று உடுதுணி இல்லையடா என்றதும் முட்டாளே, நீ எதுக்கு சகலமானதையும் தூக்கிச் சுமந்து கஷ்டப் படவேணும்? இதை எல்லாம் ஏற்றி இறக்க யந்திரம் ஸ்தாபிச்சிருப்பதைப் பார்க்கலியா என்று பக்கத்தில் கையைக் காட்டிக் கேட்டான். பார்த்தேன்.

ராட்சச இரும்புக் கை மாதிரி ரெண்டு தூக்குத் தூக்கிகள் கப்பல் தளத்தில் இருந்து புறப்பட்டு குனிந்து படகு பக்கம் வந்து மேலே வைத்த சுமையை அலட்சியமாகச் சுமந்து கப்பல் தளத்தில் போட்டு விட்டு மறுபடி குனிந்தபடி இருந்தன. மனுஷனாக இருந்தால் ரெண்டு மணி நேரம் இப்படி குண்டி வணங்கி வேலை செஞ்சா, அப்புறம் மூத்திரம் போகவும், பொடி போடவும், அக்குளில் துண்டால் துடைத்துக் கொண்டு மோரைக் கொண்டா, கள்ளைக் கொண்டா என்று தேடவுமாக ஆகியிருக்கும். யந்திரத்துக்கு இதெல்லாம் வேணாம். என்னைப் பாடாய்ப் படுத்துகிற, வயசானாலும் வதைக்கிற இன்னொண்ணும் கூட வேணாம்.

கைப்பையையும், முதுகு சஞ்சியையும் தூக்குத் தூக்கி நுனியில் கோர்த்த பெரிய இரும்புக் கூடையில் வைத்து விட்டு கப்பல் ஏணியைப் பிடித்து உள்ளே ஏறலானேன். படகிலே ரெண்டு பேர் என் பிருஷ்டத்தைத் தாங்கிப் பிடிக்க, கப்பலில் இருந்து வழிந்து கொண்டிருந்த ஏணியோடு அதனடியில் விரிந்த தளத்தில் இன்னும் ரெண்டு தடியன்கள் தயாராக இருந்தான்கள்.

வந்த அலை ஏனோ என்னைக் கண்ட கோபத்தில் பலமாக வீச, அப்படியே குண்டுக் கட்டாக படகுக் காரன் என்னை ஏணிக்காரனிடம் புளிமூட்டை மாதிரி தூக்கிப் போட அவர்களும் அதே படிக்கு ஏற்று வாங்கி ஏணியில் திணித்தார்கள்.

ஊருக்குத் திரும்புகிற உற்சாகத்தோடு குழந்தை மாதிரி குதூகலத்தோடு ஏணி ஏறி கப்பலுக்குள் வந்தேன். மொறிச்சென்று போன நிமிஷம் தான் கழுவித் துடைத்து அலம்பி விட்ட மாதிரி லட்சுமிகரமாக இருந்தது அந்தக் கப்பல். என் அழுக்குக் காலால் உள்ளே அடி எடுத்து வைத்து நடக்கக் கூட எனக்கு அருகதை இல்லை என்று மனசில் பட்டது.

கப்பல் முழுக்க ஏதோ அப்பளம் பொறிக்க சுட்டெண்ணெயைக் காய்ச்சுகிறது போல பலமாக நெடி அடித்தது. குசினி பக்கத்தில் எங்கேயாவது இருக்க வேணும்.

நுழைகிற திட்டி வாசலில் நின்ற இன்னொரு கிழங்கன் பேப்பர் இருக்கா என்று கேட்டான். நல்ல வேளையாக அதை மூட்டை முடிச்சோடு தூக்குத் தூக்கியில் போடாமல் மடியில் இடுப்புவார் தோல் சஞ்சிக்குள் திணித்து வச்சிருந்தேன்.

மூக்கைச் சுளித்துக் கொண்டே அந்தக் கசங்கின காகிதத்தை வாங்கிப் பார்த்தான். நான் என்ன மர்ம ஸ்தானத்தில் வச்சா எடுத்துக் கொடுக்கறேன்?

சாமி, நேரே கீழே இறங்கி வலது பக்கமா போ. குசினி வரும். உனக்கு உடுப்பு கொடுப்பான். அதைத் தான் போட்டுண்டு நடமாடணும், இப்படி அழுக்கு கால் சராயும், பாதரட்சையுமா உன்னை கப்பல்லே பார்த்தேன், கடல்லே தூக்கி வீசிடுவேன். ஜாக்கிரதை.

அவன் யாரோ, என்ன பிரதாபம் உள்ளவனோ. கால் பிடிக்கக் குனிந்தேன். சும்பிக்கச் சொன்னாலும் சரிதான். அவன் காலை இழுத்துக் கொண்டான். கீழே போ என்று இன்னொரு தடவை உரக்கச் சொன்னபடி அந்தாண்டை போனான்.

குசினியில் ஹிந்துஸ்தானி பேசுகிற ரெண்டு சமையல்காரர்களும், ஒரு வெள்ளைக்கார பட்லரும், சுற்றுக் காரியம் ஆப்பிரிக்கக் கறுப்பன்மார் நாலைந்து பேரும் என்னை பிரியத்தோடு வரவேற்றார்கள்.

சின்ன வயசு வெள்ளைக்காரப் பிள்ளை ஒருத்தன், இருபது வயசுக்கு மேலே ஒருநாள் கூடத் தேற மாட்டான். அவன் தான் பிரதம சமையல்காரனாம். மிஸ்டர் ஹென்றி என்று பேர் சொன்னான்.

நான் கப்பல் தளத்திலே பாதம் பணிந்தது இந்தக் கப்பலின் கேப்டன் என்ற உன்னதமான தலைமைப் பதவியில் இருக்கப்பட்ட மிஸ்டர் ஒயிட் துரையையாம். ஜன்மம் கடைத்தேறினதே அய்யா என்று நெக்குருகினேன்.

மிஸ்டர் ஹென்றி எனக்கு ரெண்டு ஜதை நீல நிற உடுதுணியும், சவுக்காரம், புகையிலை, கொய்னா மாத்திரை, இன்னும் கொண்டித் தோப்பு வைத்தியன் தைலம் மாதிரி அசுர வாடை அடிக்கிற ஏதோ தோல் அரிப்பு நிவாரணக் களிம்பு இப்படியான சமாசாரங்களையும் எடுத்துத் தர பக்கத்தில் இருந்த ஸ்டோர் குமஸ்தனிடம் சித்தம் பண்ணினான்.

எனக்கென்று டெக்கில் தேவைப்பட்ட விஸ்தீரணத்தில் இடம் எடுத்துக்கொள்ளும்படி ஹிந்துஸ்தானி சமையல்காரன் சொன்னான். அங்கே மெத்தை போட்டுக் கொள்ளலாமாம். பிரப்பம்பாய் குசினியில் வாங்கி விரித்துக் கொண்டு உருளலாமாம்.

அது இல்லாவிட்டாலும் கவலை இல்லை. புதுசாகக் கட்டி முடிஞ்ச கப்பலை ஒப்படைக்கத்தான் இந்தப் பிரயாணம் என்பதாலே எந்தக் குப்பச்சியும் ஏறலை. உனக்கு தோணின இடத்தில் இருந்துக்கோ. அதுக்காக பர்ஸ்ட் கிளாசிலோ, அதுக்கும் மேம்பட்ட சொகுசு சூத்திலோ புகுந்திடாதே என்றான். கடைசியாகச் சொன்னது தமிழ் பாஷையில் சொல்லும் தரமில்லாத வார்த்தையாகக் காதில் விழுந்து நான் மலைக்க, லக்ஷரி ஸ்வீட் என்று அவனைத் திருத்தினான் பட்லர்.

கெட்டும் திரும்பப் பட்டிணம் போய்ச் சேர குதம் என்ன, மலப்புழுவாகக் கூட மாற உமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையே?

உத்தியோக உடுப்பும் தலையில் நீளத் தொப்பியுமாக கப்பல் டெக்கிலே நின்று கடல் காற்று வாங்கியபடி யோசிக்க அந்த விஸ்தாரமான டெக்கில் ஒரு மூலையில் சந்தியாவந்தனம் செய்தபடி உட்கார்ந்திருந்த பிராமணன் நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.

திருக்கழுக்குன்றத்தில் இருந்து என் கூடவே வருகிற மலையாளத்துக்காரன்.

பஹ்ஹ்ஹ்ஹ்ம்.

கப்பல் கரையை விட்டுக் கிளம்பியது.

(தொடரும்)

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *