பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்

This entry is part 19 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து வந்தது.

அந்தக் காட்டில் பிரலோபிகன் என்றொரு நரி இருந்தது. அது தன் மனைவியோடு ஒருநாள் நதிக்கரையில் இன்பமாய் உட்கார்ந்திருந்தது. அந்த நேரத்தில் காளை நீர் குடிப்பதற்காக அந்த மணற்பரப்பிற்கு வந்து சேர்ந்தது. காளையின் இரண்டு விரைகளும் தொங்கியாடுவதைப் பெண் நரி பார்த்து விட்டது. ஆண் நரியைப் பார்த்து, ‘’நாதா, அந்தக் காளையின் மடியில் இரண்டு மாம்ச பிண்டங்கள் தொங்குகின்றனவே, பார்த்தீர்களா? அனை இப்பொழுதோ அல்லது இன்னும் கொஞ்ச நேரத்திலோ விழப்போகின்றன. ஆகவே நீங்கள் அதன் பின்னாலேயே போங்கள்’’ என்றது.

‘’அன்பே, அவை எப்போதாவது விழலாம் அல்லது விழாமலே இருக்கலாம்! யார் கண்டது? ஏன் என்னை இந்த வீண்வேலையைச் செய்யச் சொல்கிறாய்? அதைச் செய்வதைவிட உன்னோடு இங்கிருந்து கொண்டு நீர் குடிக்க வருகிற எலிகளைப் பிடித்துச் சாப்பிடுவேனா! எலிகள் வரும்வழி இதுதான். காளையின் பின்னால் நான் போய்விட்டால், வேறு யாராவது வந்து இந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார்கள். நான் போகாமலிருப்பதே சரி.

நிச்சயமாகக் கிடைக்கக் கூடியதைவிட்டு நிச்சயமற்றதைத் தேடிச் சென்றால், கிடைக்கக்கூடியதும் தவறிவிடும். நிச்சயமற்றது முன்போலவே நிச்சயமற்றிருக்கும்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்றது ஆண் நரி.

‘’நீங்கள் ஒரு கோழை. கொஞ்சத்தைக்கொண்டு திருப்தியடைகிறீர்கள். அது சுத்தத் தவறு. நாமெல்லோரும், முக்கியமாக ஆண்கள் எல்லோரும் எப்போதும் முயற்சியுடையவர்களாக இருக்க வேண்டும்.

சோம்பல் இல்லாமல் உற்சாகம் காணப்படுகிற இடத்தில் திறமையும் வலிமையும் இருக்கும். அங்குதான் லட்சுமி நிச்சயமாகத் தங்குவான்.

எல்லாம் விதி என்று எண்ணி முயற்சியைக் கைவிடலாகாது. முயற்சி இல்லாவிட்டால் நமக்கு எள்ளிலிருந்து எண்ணெய் கூட கிடைக்காது.

விழுந்தாலும் விழலாம், விழாமலும் போகலாம்’ என்று சொன்னீர்களே, அப்படி சொல்வதும் தப்பு. ஒரு பழமொழியை ஞாபகத்தில் வையுங்கள்.

திடச் சித்தமுடையவனே வணங்கத்தக்கவன். உயர் பதவியிலிருந்தால் மட்டும் போதாது. சாதகப் பறவைக்கு இந்திரன் நீர் தருகிறான் என்றால், அது ஏழைப்பறவை என்று யாராவது இரக்கப்படுவார்களா?

மேலும், எலிமாம்சம் சாப்பிட்டு எனக்கு அலுத்துவிட்டது. அந்த இரண்டு மாம்சபிண்டங்களும் எந்த நேரத்திலும் விழலாம்போல் தெரிகின்றன. என் பேச்சைத் தட்டாதீர்கள்’’ என்றது பெண் நரி.

இதைக் கேட்ட ஆண் நரி, எலிகள் கிடைக்கும் அந்த இடத்தைவிட்டு அகன்று, காளையின் பின்னே போயிற்று. என்ன செய்யலாம்?

பெண்பிள்ளையின் பேச்சு என்ற அங்குசம் ஆணின் காதைத் துளைத்துத் தூண்டாதிருக்கும்வரை ஆண்பிள்ளை எல்லாக் காரியங் களுக்கும் தானே எஜமானனாயிருக்கிறான்.
என்று சொல்லில் நிறைய விவேகம் இருக்கிறது. மேலும்,

பெண் பேச்சால் தூண்டப்பெற்றவனுக்குச் செய்ய முடியாதவை யெல்லாம் செய்யத்தக்கவை போலவும், அடைய முடியாதவை யெல்லாம் அடையக் கூடியவை போலவும், சாப்பிட முடியாதவையெல்லாம் சாப்பிடக் கூடியவை போலவும் தோன்றும்.

காளையின் பின்னே தன் மனைவியோடு ஆண் நரி சென்றது. வெகுகாலம் இப்படியே கழிந்தது. என்றாலும் காளையின் விரைகள் விழவில்லை. கடைசியில் பதினைந்து வருஷங்கள் சென்றபிறகு, ஆண்நரி விரக்தியடைந்துவிட்டது. தன் மனைவியைப் பார்த்து,

‘’அன்பே! நானும் பதினைந்து வருஷங்களாகப் பார்த்து வருகிறேன். அவை தொளதொளவென்று காணப்பட்டாலும் இறுக்கமாகவே உள்ளன. விழப்போகிறவை போல் காணப்பட்டாலும் அவை விழவில்லை.

ஆகவே இனிமேலும் அவை விழப்போவதில்லை என்ற முடிவுக்கு வருவோம். எலிகள் வருகிற அந்தப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போவோம்’’ என்று சொல்லிற்று.

அதனால்தான், ‘’அவை தொளதொளவென்று காணபட்டாலும்…’’ என்ற செய்யுளைச் சொன்னேன். சம்பத்துள்ளவனை எல்லோரும் விரும்புகிறார்கள். எனவே நீ எனக்குப் பணம் கொடு’’ என்றான் சோமிலகன்.

‘’அப்படியானால் வர்த்தமானபுரத்துக்குத் திரும்பிப் போ. அங்கே வியாபாரிகளின் புத்திரர்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் தனகுப்தன், புக்ததனன் என்பது. அவர்களின் நடத்தையை நன்கு தெரிந்து கொண்ட பிறகு, இருவரில் யாராவது ஒருவனுடைய குணத்தைக் கேட்டு வாங்கிக்கொள்’’ என்று அவன் மறுமொழி தந்து மறைந்து போனான். சோமிலகன் ஆச்சரியத்தில் மூழ்கியவனாய் மீண்டும் வர்த்தமானபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.

சாயங்காலத்தில், களைப்படைந்துபோய், தனகுப்தனின் வீட்டை விசாரித்துக்கொண்டே போனான். மிகவும் கஷ்டப்பட்டு அவன் வீட்டைக் கடைசியில் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தான். தனகுப்தனின் மனைவியும், பிள்ளைகளும் மற்றவர்களும் அவனைத் திட்டிய போதிலும் அதைப் பொருட் படுத்தாமல் வீட்டின் தாழ்வாரத்திற்கு வந்து உட்கார்ந்தான். சாப்பாட்டு வேளை வந்தது. அவனுக்குச் சோறு போட்டார்கள். ஆனால் அன்பு வார்த்தை ஒன்று பேசவில்லை. அங்கேயே அவன் படுத்துத் தூங்கினான்.

தூக்கத்தில் பழைய நபர்கள் இருவரும் தோன்றி ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்வதை அவன் மறுபடியும் கேட்டான். ஒருவன், ‘’ஏ செய்வோனே, எதற்காக நீ தனக்குப்தனுக்கு அதிக செலவு வைக்கிறாய்? சோமிலகனுக்கு அவன் அன்னமளித்தானே! நீ செய்வது சரியல்ல’’ என்றான்.

அதற்கு மற்றவன், ‘’ஏ செய்கையே. அது என் குற்றமல்ல. வரவும் செலவும் பார்த்துக்கொள்ள வேண்டியவனே நான். அவற்றின் முடிவு என்னவோ உன் பொறுப்புத்தான்’’ என்று பதிலளித்தான். சோமிலகன் விழித்துக்கொண்டான். தனகுப்தன் காலராவில் படுத்து அது இரண்டாவது நாள். எனவே சோமிலகன் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று.

சோமிலகன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி, புக்ததனனின் வீட்டுக்கு வந்தான். அவன் இவனுக்கு நல்வரவு கூறி, உணவும் உடையும் தந்து கௌரவித்தான். அந்த வீட்டில் சுகமான படுக்கையில் படுத்து, சோமிகலகன் தூங்கினான். கனவில் மீண்டும் அந்த இரு நபர்களைக் கண்டான். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் மற்றவனைப் பார்த்து, ‘’ஏ செய்வோனே, புக்ததனன் சோமிலகனுக்கு உபசாரங்கள் செய்திருக்கிறான். புக்ததனனுக்கு அதிகச் செலவு வைத்துவிட்டாய் நீ. லேவாதேவிக் கடையிலிருந்துதான் எல்லா பணத்தையும் அவன் எடுத்துவந்து செலவழித்திருக்கிறான். அதை எப்படி அவன் திருப்பிக் கொடுக்கப் போகிறான்!’’ என்றான்.

‘’ஏ செய்கையே, அப்படித்தான் செய்து தீர வேண்டியிருந்தது எனக்கு. அதன் முடிவு உன்னைப் பொறுத்து’’ என்று பதிலளித்தான். பொழுது விடிந்ததும், யாரோ ஒரு ராஜசேவகன் அரசன் சந்தோஷப்பட்டுத் தந்த பணத்தை எடுத்துவந்து புக்ததனனிடம் கொடுத்தான்.

அதைக் கண்ணுற்ற சோமிலகன், ‘’இந்தப் புக்ததனனிடம் பணம் இல்லா விட்டாலும் அந்தக் கஞ்சன் தனகுப்தனைவிட எவ்வளவோ மேலானவன்.

வேதம் தரும் பயன் வீட்டில் ஹோமம் வளர்த்தல்; கல்வி தரும் பயன் நன்னடத்தை; மனைவி தரும் பயன் சுகமும், புத்திர சந்தானமும்; செல்வம் தரும் பயன் தானமும், போகமும்.

என்னொரு பழமொழி கூறுகூது சரி. சர்வவல்லமை படைத்த இறைவனே, கொடையளிக்கும் புக்ததனனைப்போல என்னைச் செய்வீர்களாக! நான் தனகுப்தன் போல் இருப்பதில் பயனில்லை’’ என்று எண்ணினான்.

அவன் வார்த்தைப்படியே, கடவுள் அவனைப் புக்ததனனைப்போல் ஆக்கிவிட்டார்.

அதனால்தான் ‘செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தாலும்…. என்றபடி சொல்கிறேன். எனவே, ஹிரண்யனே, நீ இவற்றை அறிந்து, பண விஷயத்தில் கவலைப்படாமலிருக்க வேண்டும். ஒரு பழமொழி உண்டு.

சுபீட்சமான காலத்தில் மேன்மக்களின் உள்ளம் தாமரை மலர்போல் மிருதுவாயிருக்கும், ஆபத்துக்காலத்தில் இமயமலைக் கற்பாறைகள்போல் கடினமாயிருக்கும்.

பணம் கஷ்டப்பட்டுத் தேடியடைய வேண்டியதாக இருக்கலாம் என்றாலும், விதிமட்டும் இருந்தால் முயற்சி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறவனிடம் அது வந்து சேருகிறது. மக்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் விதிப்படி நடக்கிறது நடக்கும், நடக்காதது நடக்காது.

எண்ணி எண்ணிப் பயனென்ன? மனத்தை வருத்திப் பயனென்ன? நெற்றியில் விதி எழுதிவைத்தபடி நடப்பது நடந்தே தீரும்.

தொலைவில் உள்ள தீவிலிருந்தாலும், சமுத்திரத்தின் மத்தியில் இ¢ருந்தாலும், உலகத்தின் ஒரு கோடியிலிருந்தாலும், தான் மனம் வைத்தவனிடம் விதி அதை ஒரு நொடிப்பொழுதில் கொண்டு வந்து தருகிறது.

சம்பந்தமில்லாதவர்களை விதி சேர்த்துவைக்கிறது; சம்பந்தமுள்ளவர் களைப் பிரிக்கிறது; மனிதன் எதிர் பார்க்காததையெல்லாம் விதி ஒன்றாய்ச் சேர்த்து வைக்கிறது.

நீ விரும்பாவிட்டாலும், வருகிற துக்கம் வந்து தீருகிறது. அது நிம்மதியளிப்பதில்லைதான். இருந்தாலும் அதைச் சுகம் என்றே நினைத்து நட! மனத்தை அலட்டிக்கொள்வதால் என்ன பயன்?

சாஸ்திரம் கற்ற அறிஞர்கள் விதியின் செயலை ஆராய்ந்து அதைச் சிறிது மாற்ற விரும்புகின்றனர். ஆனால் விதி வேறு விதமாகச் செல்கிறது.

அன்னப்பறவைக்கு வெண்மையும், கிளிக்குப் பச்சையும், மயிலுக்குப் பல வர்ணணங்களும் தந்த அதே கடவுள்தான் நம்மையும் படைத்து நடத்துகிறான்.

இந்தக் கதையில் நியாயம் இருக்கிறது:

மனம் உடைந்து, பசியால் வாடிப்போய், ஒரு பாம்பு கூடையில் அடைப்பட்டுக் கிடக்கிறது. எலி தானாகவே வந்து அந்தக் கூடையில் மகிழ்ச்சியோடு ஓட்டைபோட்டுச் சென்று பாம்பின் வாயில் விழுகிறது. திருப்தியடைந்த அந்தப் பாம்பு ஓட்டை வழியே வேகமாக வெளியேறி விடுகிறது. ஆகவே நீ மனநிம்மதியோடு இரு! மனிதனின் நன்மைக்காயினும் தீமைக்காயினும் வேலை செய்வது விதியே.

இதை மனத்தில் நிறுத்தி, நல்லதையே நினை!

தூய மனத்தோடு விரதம், நியமம், உபவாசம் முதலிய தர்மங்களைச் சிறிதாவது தினந்தோறும் செய்ய வேண்டும். மனித முயற்சி எவ்வளவுதான் இருந்தாலும், விதி அவன் ஆயுளை நாளுக்குப்பின் நாளாகக் குறைத்துக் கொண்டே போகிறது.

என்று அதைப்பற்றியும் ஒரு செய்யுள் உண்டு. ஆகவே, திருப்தி இருப்பதே விவேகம்.

திருப்தி என்ற அமுதத்தைப் பருகுவதால் நிம்மதியுள்ள மனதுக்கு இன்பம் ஏற்படுகிறது. பணத்தாசை பிடித்து ஓடி அலைகிறவனுக்கு எப்படி அந்த இன்பம் கிடைக்கும்? சகிப்புத்தன்மைக்கு ஒப்பான தவம் வேறில்லை. திருப்திக்கு ஒப்பான இன்பம் வேறில்லை. நட்புக்கு ஈடான தானம் வேறில்லை. தயைக்கு ஈடான தர்மமும் வேறில்லை.

அதிகமாகச் சொல்வதில் பிரயோஜனமென்ன? இதை உன் வீடுபோல் நினைத்துக்கொள். கலக்கம் தரும் கவலையை விட்டுவிடு. என்னோடு நட்புப் பூண்டு இங்கேயே இருந்துவா!’’ என்றது மந்தரகன்.
மந்தரகனின் உபதேசத்தில் பல சாஸ்திரங்களின் சாரம் அடங்கியிருந்தது. அதைக்கேட்டு லகுபதனகனின் முகம் மலர்ந்தது. அது மகிழ்ச்சியோடு, ‘’நண்பா, மந்தரகனே, நீ மிகவும் நல்லவன், மற்றவர்கள் பார்த்து அனுசரிக்கத்தக்க குணங்கள் உன்னிடம் உள்ளன. காரணம், ஹிரண்யனைத் தேற்றுவதின் வழியாக என் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஊட்டியிருக்கிறாய் நீ.

இன்பத்தின் சாரத்தை அனுபவித்துவரும் நல்லோர்கள், நண்பர்களால் தாமும் மகிழ்ச்சியடைந்து நண்பர்களையும் மகிழ்வித்து, அவர்களோடு அன்பைப் பேணுகின்றனர்.

நட்பு என்னும் அணிகலனை அணியாதவன் செல்வந்தனாயிருந்த போதிலும் அவன் வாழ்வு வெறும் வாழ்வுதான். பேராசையால் பீடிக்கப் பட்ட மனமும், வீண் சிரமமும் நிறைந்தது அந்த வாழ்வு.

துயரக்கடலில் மூழ்கியிருந்த நமது நண்பனான ஹிரண்யனை நீ உன் நல்லுபதேசத்தால் கரையேற்றியிருக்கிறாய்.

நல்லவர்களை ஆபத்திலிருந்து நல்லவர்கள்தான் காப்பாற்றத் தகுந்தவர்கள். சேற்றில் இறங்கிய யானைகளை யானைகள்தான் தூக்கிவிட முடியும்.

தன்னிடம் யாசித்தவர்களும், அடைக்கலம் புகுந்தவர்களும் ஆசாபங்கம் அடைந்து முகம்திருப்பிச் செல்லாதபடி யார் நடந்து கொள்கிறானோ அவனே உலக மக்களால் புகழத்தக்கவன். அவன்தான் நற்குண விரதங்களைக் கரைகண்டவன்.

துயருற்றவர்களைக் காக்காத வீரம் என்ன வீரம்? யாசித்தவர் களுக்குத் தராத தனம் என்ன தனம்? நன்மை அளிக்காத செய்கை என்ன செய்கை? புகழைக் கெடுக்கும் வாழ்வு என்ன வாழ்வு?

இப்படி இவர்கள் பேசிக்கொண்டேயிருந்த சமயத்தில் சித்ராங்கன் என்ற மான் அங்கு வந்தது. அந்த மான் தாகம் கொண்டிருந்தது. வேடனின் அம்புகள் தன்மேல் பாயுமோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அது வருவதைக் கண்டு லகுபதனகன் மரக்கிளைக்குப் பறந்துபோயிற்று. ஹிரண்யன் புல்புதருக்குள் புகுந்துகொண்டது. மந்தரகன் நீருக்குள் சென்றுவிட்டது. உயிருக்கு பயந்தபடியே அந்த மான் குளக்கரையில் நின்றது. பிறகு லகுபதனகன் உயரக் கிளம்பி ஒரு யோஜனை தூரம் நாலாபுறமும் பறந்து சென்று சுற்றிப் பார்த்தது. மீண்டும் மரக்கிளைக்குத் திரும்பிவந்து உட்கார்ந்து, மந்தரகனைக் கூப்பிட்டது. ‘’நண்பா, மந்தரகனே, வெளியே வா! உனக்கு இங்கே ஒரு ஆபத்துமில்லை. இந்தக் காட்டைநன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன், பாவம் இந்த மான்தான் நீர் குடிக்க இந்தக் குளக்கரைக்கு வந்திருக்கிறது’’ என்றது லகுபதனகன். உடனே அவை மூன்றும் முன்போல் கூடிவிட்டன.

வந்த விருந்தாளி மேல் அன்பு ஏற்பட்டு மந்தரகன் அந்த மானிடம், ‘’நண்பனே, நீ தண்ணீரைக் குடி. ஸ்னாநம் செய். இந்த நீர் சுத்தமானது. குளுமையானது’’ என்று சொல்லியது. இந்த நல்வரவைக் கண்ட சித்ராங்கன் யோசிக்கத் தொடங்கியது.

’இவர்களால் எனக்கு ஒரு ஆபத்தும் இல்லை. காரணம், நீரிலிருந்தால் தான் ஆமைக்குப் பலம். எலியும் காக்கையும் செத்ததைத்தான் சாப்பிடும். ஆகவே இவர்களோடு சேர்ந்து பழகலாம்’’ என்று சிந்தித்து விட்டு அவற்றுடன் சேர்ந்துகொண்டது.

பிறகு ஆமை மானை வரவேற்று உபசரித்துக் கௌரவித்தது.

‘’நீ சௌக்கியந்தானே? இந்த அடர்ந்த காட்டுக்குள் நீ எப்படி வந்தாய் என்று சொல்!’’ என்று விசாரித்தது.

‘’அன்பு இல்லாத இந்த வாழ்வைக் கண்டு நான் அலுத்துவிட்டேன். குதிரைமேல் வருகிறவர்கள் நாய்கள், வேடர்கள் என்னை இங்கும் அங்கும் துரத்தியடித்தார்கள். பயத்தால் அதிவேகமாக ஓடி, அவர்கள் எல்லோரையும் பின்னே விட்டுவிட்டு இங்கு நீர் குடிக்க வந்தேன். இப்போது உங்கள் நட்பை நான் விரும்புகிறேன்’’ என்று மான் பதில் சொல்லிற்று.

‘’நாங்கள் சிறிய உடல் உள்ளவர்கள். ஆகவே எங்களுடைய நண்பனாக நீ இருக்க முடியாது. ஏனெனில், உதவிக்குப் பதில் உதவி செய்யத் தக்கவர்களுடன் நட்புகொள்ளத்தகும்” என்றது மந்தரகன்.

சித்ராங்கன் பதில் சொல்லிற்று:

நீசர்களோடு இந்திரனின் அரண்மனையில் வாழ்வதைவிட அறிவாளிகளோடு நரகத்தில் வாழ்வதே மேல்.

உடல் சிறியதோ, இல்லையோ, ஏன் இப்படி தன்னைத்தானே இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள்? சரிதான்; எப்படியிருந்தாலும், இப்படிப் பேசுவதும் உத்தமர்களுக்கு தகுந்ததுதான். எனவே, நீங்கள் இன்றைக்கு என்னோடு கட்டாயம் நட்பு கொள்ளவேண்டும்.

பலசாலியாயிருந்தாலும் சரி, பலவீனனாயிருந்தாலும் சரி, அவனைச் சிநேகிதனாகக் கொள்! காட்டில் கட்டுண்ட யானைக் கூட்டத்தை எலிகள் விடுவித்தன அல்லவா?

என்ற முதுமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்களே!’’ என்றது மான்.

‘’அது எப்படி?’’ என்று மந்தரகன் கேட்க, மான் சொல்லத் தொடங்கியது:

Series Navigationநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000காலப் பயணம்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *