கண்ணால் காண்பதும்…

This entry is part 32 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சிவா கிருஷ்ணமூர்த்தி.

ஆச்சு, இதோ ஐஆர்டிடி, வாசவி கல்லூரிகளை எல்லாம் தாண்டி டிவிஎஸ்ஸில் பறந்துகொண்டிருந்தேன். இந்த இடங்கள் செழிப்பான பூமிதான்,  ஆனாலும் இப்போது அதீத பச்சையாக இருக்கிறது, என்னவோ தெரியவில்லை. பயங்கரமாக குளிரவும் செய்தது… தூரத்தில் பவானி செக்போஸ்ட் நெருங்க, நெருங்க போர்ட்…என்னது…”செம்ஸ்போர்டிற்கு நல்வரவு, ரேடியோ பிறந்த இடம்”  குழப்பத்துடன் தாண்டினேன். அந்த வளைவில் திரும்பினால் காளிங்கராயன் பாளையம் வந்துவிடும். மறுபடியும் போர்டு “என்பீல்ட் நகரத்திற்கு நல்வரவு”.

சட்டென்று கனவுப்புள்ளியாய் கரைந்து வேறு உலகத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன்…எங்கிருக்கிறேன்? இங்கிலாந்தா, ஊரா…ஏசியின் சீரான ஹம் ஓசை சேலத்துவீடுதான் என்றது. கோதைக்குட்டி என் கழுத்தைக் கட்டிகொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.  நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ்ஸில் வீட்டிற்குவந்தவுடன் அம்மா “நல்லா வளர்ந்திட்டாளே” என்றபடி அணைத்துக்கொண்டது நினைவிற்கு வந்தது. ஒன்பது வயதிற்கு வளர்த்தி அதிகம்தான். பக்கத்தில் மீரா சற்றே வாய் திறந்து மேல் பற்கள் தெரிய சீரான மூச்சில் தூங்கிக்கொண்டிருந்தாள்.  சட்டென்று பல வருடங்களுக்கு முன்னால் இருந்த பள்ளி மாணவி முகம் புலப்பட்டது. அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்ததை சொல்லப் போவதில்லை. என்றுதான் சொல்லியிருக்கிறேன்…

இருவருடங்களுக்கு பின் மறுபடியும் தாய்நாடு, வீடு… மெல்ல மெல்ல கண்ணயர்ந்தேன்.

மெல்ல எழுந்து பல் துலக்கி, முகம் கழுவி வராண்டாவிற்கு வந்த போது காலை எட்டு மணி வெயில் கண் கூசியது. தெருவில் அந்த நாளின் ஆரம்பம் பரபரப்பாக தெரிந்தது. எதிர் வீட்டு முதலியார்  வாசலில் ஆட்டோ பள்ளிக்குழந்தைகள் நிறைய, நிறைய வந்து நின்றது. இது சதீஷிற்கு, அவர்களின் இரண்டாவது பையனுக்கு. மூத்தவனை பள்ளி வேன் கூட்டிப் போயிருக்கும்.

கேட் அருகே போய் நின்றேன். சின்னப் பொட்டு, பெரிய பொட்டு, சில குட்டித்தலைகளுக்கு ஏற்ற பூ, பவுடர் தீற்றல்கள், ஆட்டோவே ஒரு பொக்கே போலிருந்தது..

“வாங்கண்ணா, எப்ப வந்திங்க, நல்லா இருக்கிங்களா, ” என்றான் அந்த ஆட்டோப் பையன்.

“நேற்றுதான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“இப்பல்லாம் மெதுவாய் போறியா?”

“ஆமங்கண்ணா…”பளீரென்று சிரித்தான்.

இரு வருடங்களுக்கு முன்னர் வந்திருந்த போது இவனுடன் சண்டைப் போட்டிருக்கிறேன். முடி வெட்ட கைனடிக் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அசோகபுரம் சந்தில் போய் கொண்டிருந்தபோது பின்னால் படுவேகமாய் வந்து ஹாரன் அடித்தான். வழி விடுவதற்காகத்தான் அந்த அதிரடி ஹாரன். சின்ன சந்து, என்னால் விட முடியவில்லை. திரும்பிப் பார்ததால் ஆட்டோ நிறைய இந்த மாதிரி பூங்கொத்துக்கள். அப்புறம் மெயின் ரோட்டில் முட்டிவிடுவது போல் வந்து கண்டபடி கத்த ஆரம்பித்தான்.

கோபமாகி நிறுத்தச் சொல்லி சைகை செய்தேன். அவன் நிறுத்தாமல் போய்விட்டான். அந்த கெட்ட வார்த்தைகளை அத்தனை குழந்தைகளும் கேட்டிருக்குமே என்று எனக்குதான் கஷ்டமாக இருந்தது. ஒரு வேளை அடிக்கடி கேட்டு பழக்கமாகி இருந்திருக்கலாம். அப்புறம் அடுத்த நாள் காலையில் பார்த்தால் முதலியார் வீட்டு வாசலில் அதே ஆட்டோ!

வீட்டில் வீரம் அதிகமாகிவிடுகிறது. என் அளவில் கொஞ்சம் அதிகம் சத்தம் போட்டுவிட்டேன்.

அவன் பிரச்சனை – குறைந்த நேரத்தில் அத்தனைக் குழந்தைகளையும் கவர் செய்ய வேண்டும், இன்னும் ஓரிரு ட்ரிப்புகள் இருக்கின்றன…அதற்காக இவ்வளவு வேகம் வேண்டுமா என்று கேட்டால் “நீ வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறாய், அங்கிருப்பதுபோல் இங்கு எதிர்பார்க்ககூடாது; இதெல்லாம் புரியாது,” என்ற ரீதியில் போனது பேச்சு.

அப்புறம்  இரு நாட்களுக்குப் பின் பையன் தயங்கி படியேறி வந்து இங்கிலாந்தில் நர்ஸ் வேலைப் பார்க்கும் அவனது பெரியம்மா பெண்ணிற்காக ஏதோ பார்சல் கொடுக்க முடியுமா என்று கேட்டு ராசியாகிவிட்டான்.

நேற்றிரவு வீட்டிற்கு வந்து நானும் அப்பா அம்மாவும் நெகிழ்ந்த நிலைகள் எல்லாம் சரியாக சற்று நேரம் ஆனது. லண்டன் – சென்னை மொத்த விமான பயண நேரம் பதினோரு மணி நேரம்தான் எனினும் வழியில் துபாய் ஏர்போர்டில் ஐந்து மணி நேரம் காக்கவேண்டியதாகிவிட்டது.  அங்கு ரொம்ப நாட்களுக்குப் பின் நிறைய செருப்புக் கால்களைப் பார்த்தேன். பின் சென்னையில் இறங்கி தம்பி வீட்டில் குளித்து சாப்பிட்டு தூங்கியும் தூங்காமலும் சில மணி நேரங்களுக்கு பின் இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் பிடித்து இதோ வீடு. அந்தக் களைப்பிலும் மீரா கொண்டுவந்திருந்த சாக்லெட் டப்பாக்கள், பொட்டலங்கள் எல்லாவற்றையும் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு படுத்தாள். அப்படியும் பாதிக்கு மேல் உருகிவிட்டிருந்தன.

படுக்கும்போதுதான் கவனித்தேன்; என் கண்ணாடி ப்ரேமின் ஒரு பக்கம் லூசாக இருந்தது.  விமானத்திலோ, இரயிலிலோ தூக்க கலக்கத்தில் போட்டுக்கொண்டே தூங்கினதால் ஸ்க்ரூ காணாமல் போய் ப்ரேம் கோணல்மாணலாக வளைந்திருந்தது காலை முதல் வேலையாக ஆப்டிக்கல்ஸ் போகவேண்டும். என்னுடையது, கோதையோடது இருவரின் ஸ்பேரும் இங்கிலாந்திலேயே விட்டு வந்தாச்சு…

ஒரு பத்து மணி போல “அப்பா, வெளிய இருக்கிற வேலைகளை சொல்லுங்க, நான் ஆப்டிக்கல்ஸ் போறேன், அப்படியே முடிச்சிட்டு வரன்” என்று சொன்னபோது அப்பா மெலிதாய் சிரித்தார். அர்த்தம் எனக்கு தெரியும்- “ஒரு வருடம், இரு வருடங்கள் கழித்து வருகிறாய், இருக்கும் கொஞ்ச் நாட்களுக்கு வெளி வேலைகள் எல்லாம் செய்வாய், நீ போன பிறகு?”

“இளங்கோ நேத்துதான் வந்தான்; அண்ணபூரணாவில லிஸ்ட் கொடுத்தாச்சு; ரெண்டு பேருக்கும் இந்த மாசத்துக்கான மெடிசின்ஸ் எல்லாம் கொண்டாந்துட்டான்” என்றார் அப்பா.

இந்த இளங்கோ என் தம்பியின் பள்ளி, கல்லூரி நண்பன். எதிலும் இருவரும் சேர்ந்தேதான் – பள்ளி, கல்லூரி, சினிமா, கணியக்காரர் தெருவில் இருந்த ஒரு ராஜஸ்தானி பெண்ணிற்கு கடிதம் கொடுப்பு…

அப்போதெல்லாம் அப்பா இருக்கும் போது வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டான். வீட்டு வாசல் ஏறினால் எலும்பை முறித்துவிட அப்பா தயாராக இருந்தார். அப்பா என்றால் டெரர். எங்கள் எல்லாருக்குமேதான்.இப்போது எல்லாம் மாறிவிட்டது. அப்பா தளர்ந்து, தடுமாற்றம் வந்து, தோல் நிறம் மாறி…மூன்று வருடங்களுக்கு முன் அப்பா விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டபோது இவன்தான் தூக்கி கொண்டு ஓடினான். நாங்களெல்லாம் வரும்வரை மருத்துவமனையில் இருந்தான். வீட்டிற்கு பக்கத்திலேயே மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறான். அவனும் அவன் மனைவியும் (ராஜஸ்தானி பெண்ணல்ல, திண்டல் மாமன் மகள்தான்) மாறி மாறி கடையைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

“சரி, ஏடிம்ல பணம் எடுத்துட்டு வா” என்று சொல்லிக் கொண்டே அவரது டைரியை எடுத்தார், கடவுச் சொல்லிற்காக.

“அப்டியே சிந்தாமணியில் இன்சுலின் ஊசியும் வாங்கிட்டு வா. வரும்போது அண்ணபூரணியில் மளிகை இன்னும் வரலைன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு” இதையெல்லாம் போனிலேயே சொல்லலாம், என்னுடைய திருப்திக்காகதான் இந்த வேலைகள் என்று எனக்கும் தெரியும்.

“மெதுவாய் போப்பா, ஹெல்மட் மறக்காதே” பயம் அம்மாவிற்கு மட்டுமல்ல, எனக்கும் மீராவிற்கும் கொஞ்சமாகவாவது இருக்கும்.

எதிர்பார்த்த மாதிரியே கைனடிக் பட்டன் ஸ்டார்ட் ஆகவில்லை. தம்பியால் மாதம் ஒருமுறைதான் அப்பா அம்மாவைப் பார்க்க வர முடிகிறது. பல  உதைகளுக்கு பின் கிளப்பி மெதுவே வந்தேன். தெருவிற்கு இப்போது வேறு காட்சி. காலை பள்ளி, வேலை பரபரப்பிற்கு பின் வரும் கொஞ்சம் மந்தக் காட்சி. ஒரே பூமி என்றாலும் இது வேறு உலகம். முந்தா நாள் வரை பார்த்த உலகம் ஏதோ ஸ்கீரின் சேவர், எத்தனை வருடங்கள் இருந்தாலும்.இப்போது இதோ இந்த தாயகக் காட்சி அந்த ஸ்கீரின் மவுஸ் அசைத்ததில் கலைந்து நிஜத் திரை…

அந்தக் காலத்திலிருந்தே டைமன் ஆப்டிக்கல்ஸ் இரண்டாவது அக்ரஹாரம் தெருவில்தான் இருக்கிறது. ஆப்டிக்ல்ஸில் “வாங்க தம்பி, எப்ப வந்திங்க?” என்றார் அப்துல்லா. இருவரும் பரஸ்பர தந்தைகளின் நலன்களை விசாரித்துக் கொண்டோம். ஊருக்கு வரும்போதெல்லாம் விலைவாசி உயர்ந்திருப்பதை பெரும்பாலும் காட்டிக் கொள்ள மாட்டேன். மனதிற்குள்ளாகவே அதிர்ந்துகொள்வேன். என் பத்து வயதில் முதல் முறையாக படியேறியபோது இதன் பெயர் பாம்பே ஆப்டிக்கல்ஸ் ஆக இருந்தது. ஐந்தாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் அப்பா எல்லாரையும் – நெய்வேலியிருந்து வந்திருந்த பெரியப்பா பசங்கள் உட்பட எல்லாரையும் –  சேர்த்துக்கொண்டு சர்க்கஸ்ஸிற்கு கூட்டிப்போனார். முதல் வரிசையில் உட்கார்ந்தது பெருமையாக இருந்தாலும் பாரஸீகக் கிளிகள் வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து வந்ததவை ஒரே பச்சைப்படலமாக மட்டுமே தெரிந்தது. அதை நான் வாய்விட்டு சொன்னது அப்பாவை துணுக்குற செய்திருக்க வேண்டும்.

அடுத்த நாள் காலை அப்பா தினமணியை தூரமாக பிடித்துக் கொண்டு என்னை சமையலறையில் நிற்கச் சொல்லி தலைப்புச் செய்தியைப் படிக்க சொன்னார். அது தெரியாது என்று  எனக்கு நன்றாக தெரியும். பக்கத்தில் அம்மி அரைத்துக் கொண்டிருந்த சுசீலாக்கா ‘சென்னைக்கு பிரதர் வரு…’என்று திக்க, நான் சட்டென்று பிடித்துக் கொண்டு ‘சென்னைக்கு பிரதமர் வருகை’ என்று சொல்லிவிட்டேன்.

அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ, சரியாக ஞாபகமில்லை, ஒரு விடுமுறை நாள் என்று மட்டும் நினைவிருக்கிறது, கோபாலன் கண் மருத்துவமனைக்கு போனோம். இப்போது நினைவில் அது ஒரு கல்யாண மண்டப உள் கூடம் மாதிரிதான் இருக்கிறது. அதில் நிறைந்திருந்த நீள பெஞ்சில் நானும் உட்கார வைக்கப்பட்டு சொட்டு மருந்து விடப்பட்டேன். தலையை தூக்கலாய் வைத்துக்கொள்ள சொல்லிவிட்டுப் போன நர்ஸ் தாழ்த்தினால் தொண்டையில் மருந்து கசக்கும் என்பதைச் சொல்லவேயில்லை. உண்மையிலேயே ரொம்ப நேரமோ என்னவோ அந்த வயதில் பல மணிநேரங்கள் காக்கவைக்கப்பட்டது மாதிரிதான் தோன்றியது. அப்புறம் தான் மருத்துவர் அறைக்கு கூட்டிச் செல்லப்பட்டேன். அவர் முகமோ மற்ற எதுவுமோ நினைவில்லை; மேஜையில் இருந்த உலக உருண்டை கண்ணாடி பேப்பர் வெயிட் மட்டும்தான் நினைவிருக்கிறது.

சுவரை நோக்கி கை காட்டி படிக்கச் சொன்னபோது சுத்தமாய் ஒன்றுமே தெரியவில்லை. ஆரம்பத்தில் கனமான சோதனை. காந்திக் கண்ணாடி மாட்டிவிடப்படும்போது சுவாரசியமாக இருந்தது. அப்புறம் திருப்பித் திருப்பி லென்ஸை மாற்றி “இப்ப படி”, “இப்ப படி” என்று ஆரம்பித்த டாக்டரின் குரல் பின் “ம்”, “இப்ப”  என்று குறைந்து எனக்கு சலித்துவிட்டது…பின் அடுத்தக் கண்ணிற்கு. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து…அடுத்த முறை வரும்முன் அத்தனை ஆங்கில எழுத்துக்களையும் மனனம் செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்!

“என்னது, மைனஸ் 5.5 ஆ?!” எப்படி ஸார் கவனிக்காம வுட்டிங்க? தம்பி, ஸ்கூல்ல எப்படி போர்டை பார்த்து எழுதின?” என்று கேட்டார் பாம்பே ஆப்டிகல்ஸ்காரர்.

“பக்கத்திலிருப்பவன் நோட்டைப் பார்த்துதான்,” என்ற என் ரகசியத்தை தயங்கிக் கொண்டே சொன்னேன். அப்பாவிற்கு  குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்புறம் அம்மாவிடம் கூட சத்தம் போட்டிருக்கலாம்.

கொஞ்ச நாட்களுக்கு பின் ஒரு மாலையில் தடித்த கருப்பு ப்ரேம் போட்ட கண்ணாடியுடன் வெளி உலகத்தைப் பார்த்தபோதுதான் உலகம் இவ்வளவு துல்லியமாக, நுணுக்கமாக இருக்கும் என தெரிந்தது. அதுவரை எனக்கு தெரிந்த மாதிரிதான் எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பாவுடன் அவரது பழைய ஆம்பர் சைக்கிளின் முன்னால் உட்கார்ந்து வரும்போது சுவர் விளம்பரங்களை வாய் விட்டு படித்துக்கொண்டு வந்தேன். “ரெ”“ளடி ராக்கம்மா” என்று படித்தபோது தலைக்கு மேல் அப்பாவின் சிரிப்பு மூச்சுப் பட்டது.  அன்று ராஜ கணபதி கோவில் எதிரில் இருக்கும் தேர்முட்டி கடையில் ஒன்றுமே சொல்லாமல் பாலமித்ராவோ, ரத்னபாலாவோ வாங்கிக் கொடுத்தார்.

எனது செக்ஷனில் மட்டுமல்ல, ஆறாம் வகுப்பின் அனைத்து செக்ஷன்களிலும் நான் ஒருத்தன் மட்டும்தான் கண்ணாடி அணிந்திருந்தேன் என்பதில் எனக்கு ஒரு மாதிரியான பெருமை. பின் வரும் வகுப்புகளில் கண்ணாடிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்லூரியில் பாதி பேருக்கு மேல் கண்ணாடிதான்.

எத்தனை தடவைகள் உடைத்திருப்பேன்…கிரிக்கெட் பந்து பட்டு; இதோ இப்போது மாதிரி கழட்ட மறந்து உட்கார்ந்தபடியே தூக்கத்தில் இடித்துக் கொண்டு; அல்லது ஒற்றைக் கையில் கழற்றிச் கழற்றிப் பின் ஒரு பக்க ப்ரேம் கையோடு வந்து;  சண்டையில் தம்பி துரத்தும்போது விழுந்து; அப்பாவிற்கு மாற்றலாகி தாராபுரத்தில் இருந்தபோது அந்த ஊரின் எதிர்காற்றில் சைக்கிள் மிதிக்க முடியாமல் விழுந்து…அப்போது அந்த ஊரில் ஆப்டிக்கல்ஸ் கிடையாது. அப்பா அலுவலக ப்யூன் பக்கத்தில் கோவையிலோ, ஈரோட்டிற்குப் போய்தான் ஆர்டர் கொடுத்து நாலைந்து நாட்கள் கழித்து வாங்கி வர வேண்டும். அதுவரை படுசிரமம்தான். தூரத்தில் ஆள் நடமாட்டம் எல்லாம் தெரியும், முகங்கள் தெளிவாயிராது. தெரிவதை வைத்து என்னை அறியாமலேயே ஊகிக்க கற்றுகொண்டுவிட்டேன், பைண்டு புத்தகங்களை படிக்கும்போது வரி ஓரங்கள் மறைந்தாலும் ஊகிப்பது போல.

அந்த பட்டை ப்ரேம்கள் அழுத்தி, அழுத்தி காதுகளிலிருந்து கண்கள் வரை தலைப் பக்கவாட்டுகளிலும் மூக்கின் மேலும் பெரும் தடம் பதிந்திருக்கும். வியர்வை பட்டு, ப்ரேம்களின் ஸ்க்குருக்கள், மூக்கின் உட்காரும்பகுதி எல்லாம் நாளாக, நாளாக பச்சைப்படும். தாராபுரப் பள்ளித் தோழன் செல்வராஜ் கையில் இருந்த மூகாம்பிகை காப்புக் கறையும் கூட இந்த மாதிரி பச்சைதான். அந்தக் காப்பைத் திருகிக் கொண்டேதான் பேசுவான்.

விதவிதமான ப்ரேம்கள்: மெல்லிய ப்ரேம்கள் அப்போதெல்லாம் சரிவரவில்லை, என்னுடைய ‘பவரு’க்கு. கருப்பு, வெள்ளி, வெள்ளை, பழுப்பு…

கல்லூரி முதல் வகுப்பில் கான்டாக்ட் லென்ஸ் ஒரு முறை முயற்சி செய்தேன். ட்ரையல் லென்ஸுகளைப் போட்டு வெளியே வந்தபோது வாழ்க்கையில் முதல்தடவையாக கண்ணாடி இல்லாமல் உலகம் தெளிவாக, துல்லியமாக தெரிந்தது. ஆனால் என்னவோ இடது கண்ணிற்கு ஒவ்வாதமாதிரி இருந்தது. உறுத்தல் அல்லது அது மாதிரி ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் லென்ஸின் விலையும் அதிகம். எனவே தொடரவில்லை. அப்புறம் ஆப்ரேஷனெல்லாம் வந்துவிட்டது, நிரந்தரமாய் சரிசெய்துவிடலாம் என்று டாக்டர் சுந்தரம் அத்தான் சொன்னபோதும் ஈர்க்கவில்லை. கண்ணாடியே சவுகரியம் என்று இருந்துவிட்டேன். என்ன, கடல் பார்க்கபோகும்போது கொஞ்ச நேரத்திற்குப் பின் புகை மாதிரி படியும். கண்ணாடி உடலின் ஒரு உறுப்பாக மாறிவிட்டது. இரவு படுக்கப்போகும்போதுதான் கண்களின் ‘ஒரிஜினல் சக்தி’ உறைக்கும்…

பின்னாளில் கோதையின் பள்ளியிலிருந்து அவளைக் கண் பரிசோதனைக்கு கூட்டிச் செல்லச் சொல்லி கடிதம் வந்தபோது மிக வருத்தமாய் உணர்ந்தேன். சின்ன வயதில் கண்ணாடி எவ்வளவு சிரமம் என்பதை எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை…

நடுப்பகல் வெயிலில் வியர்த்து வீட்டிற்கு திரும்பி வந்தேன். அதற்குள் அப்பா ஆப்டிகல்ஸிற்கும் அன்னபூரணி மளிகைக்கும் நான் வந்துபோயாச்சா என்று போன் செய்திருந்தார். வழக்கம்போல அம்மா கைச் சமையல், அவரது மன எக்சல் ஷீட்டிலிருந்து எனக்குப் பிடித்தவை இனி ஊருக்கு போகும்வரை ஒவ்வொன்றாக வரிசைப்படி வந்து கொண்டிருக்கும். இன்றைய மதிய உணவு நெய்யில் வறுத்த முருங்கைகீரையிலிருந்து ஆரம்பித்திருந்தார். பாதிச் சாப்பாட்டில் அப்பாவின் குறை ஆரம்பித்தது – வெண்டைப் பொறியலில் கடலைப் பருப்பு – பற்களில் சிக்கிவிட்டது.

அப்பாவின் சாப்பாட்டுக் குற்றத்தை என் வாழ்நாளில் எத்தனை ஆயிரம் தடவைக் கேட்டிருப்பேன்! ஒன்று இல்லையென்றால் இன்னொன்று. மதியத்தில் குறை இல்லையென்றால் இரவு உணவில். அப்படியே தப்பித்தாலும் கண்டிப்பாய் மறுநாள் காலை டிபனில் உண்டு! உடலில் எல்லா பாகங்களும் தளர்ந்து, தேய்ந்துவிட்டன. ஆனால் நாக்கும் பொசுக்கோபமும் மட்டும் அப்படியே இளமையாகவே இருக்கின்றன. வெல், இந்த ட்ரிப்பிலும் எதுவும் மாறவில்லை.

வழக்கம்போல் என் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்தேன். மீரா பின்னாலயே வந்து குசுகுசு குரலில்  “வயசான காலத்தில் நீங்களும் இப்படித்தான் இருப்பிங்களா..”என்று தோளால் இடித்துவிட்டு போனாள்.

மாலை பக்கத்திலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு கிளம்பினோம். அம்மா கோதை குட்டிக்கு பட்டுப் பாவாடை அணிவித்து, இரட்டைச் சடை பின்னி, கோபிப் பொட்டு வைத்து…தேவதை…கண்ணாடி அணிந்த ஒன்பது வயது தேவதை. என் பிரமிப்பை நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பெண் குழந்தை இல்லாதவர்கள் அபாக்கியவான்கள்.
கோவில் சித்திர சுவர்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டே வந்தேன்.

யானை காலை முதலை கவ்வும் சித்திரத்திற்கு விளக்கம் சொல்லும்போது பக்கத்தில் ஒரு பெரியவர் “கோவில்ல வந்தும் இங்கிலீஷ்…என்னவோ லண்டனிலிருந்து வந்தமாதிரி” என்று முணுமுணுத்ததை கேட்டு புன்னகைத்தேன்.
அம்மாவும் மீராவும் சென்னையில் பிறந்து வாழும் தமிழ் எழுத, படிக்க தெரியாத உறவினர்களின் குழந்தைகளைப் பற்றிப் பேசி சமாதானப்பட்டுக் கொண்டார்கள்.
இன்னொரு சித்திரத்தில் ஆஞ்சிநேயர் ரத்தம் சொட்ட சொட்ட கிழிந்த நெஞ்சை காட்டிக்கொண்டிருக்க உள்ளே ராமர் தெரிந்தார். “அதும்மா, ஆஞ்சிநேயர் மனதில் ராமர் எப்போதும் இருக்கிறார் என்று காட்டுவதற்காக”

“Understand, but why literally?!”

அந்த வாரக்கடைசியில் காலை வீட்டில் உள்ள பழைய பீரோ ஒன்றைக் குடைந்துக்கொண்டிருந்தேன். தம்பியின் தபால் துறை சேமிப்புப் பத்திரங்களுக்காகவோ, வேறு எதற்காகவோ. ஒரு அடுக்கு முழுக்க புகைப்பட ஆல்பங்கள், அந்தக்கால கருப்பு, வெள்ளை புகைப்படங்கள், நெகடிவ்கள். எங்களது திருமண ஆல்பத்தைப் பார்த்ததும் கோதைக்கு காட்டலாமே என்று பட்டது. உடனே உற்சாகமாக அவளைக் கூப்பிட்டேன். இருவரும் தரையில் உட்கார்ந்து புரட்ட ஆரம்பித்தோம். அப்பா, அம்மா ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்து சிரித்து விட்டுப் போனார்கள். பத்து வருடங்களுக்கு முன் அம்மா, அப்பா எவ்வளவு இளமையாக இருந்திருக்கிறார்கள்…அதுவும் அம்மா முகத்தில் அசதி அப்பட்டமாக தெரிந்தது.

கோதை சற்று நேரம் மீராவின் ரிசப்ஷன் படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். நான் கேட்க விரும்பியது/- ” அம்மாதான் எவ்வளவு அழகு”. அவள் சொன்னது- “அதிக மேக்கப்”

“அப்பா நீ ஏன் எல்லா போட்டாக்களிலும் உம்மென்று இருக்கிறாய்?”

“அப்பா எப்போதுமே அப்படித்தானேம்மா?”

“இல்லையே, நீ நிறைய சிரிக்கும் போட்டாக்கள் பார்த்திருக்கிறனே…”

இந்த பத்து வருடத்தில் உயிரோடு இல்லாதவர்களின் எண்ணிக்கை, சாத்தூர் சித்தியில் ஆரம்பித்து ஆல்பம் முடியும் போது பதினைந்திற்கும் மேல் போயிருந்தது. ஆல்பம் பாதியிலேயே கோதைக்கு போரடித்து வெளியில் ஓடிவிட்டாள்.

நான் எழுந்து வேஷ்டியை இறுக்கிக் கொண்டு ஆல்பத்தை பழைய இடத்தில் வைத்துவிட்டு ஒரு சில பள்ளி ஆல்பங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். பள்ளி குரூப் போட்டாக்களில் முகத்தின் பெரும்பான்மையை கண்ணாடிதான் மூடியிருந்தது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாரதி வித்யாலயா புகைப்படத்தில் கிட்டத்தட்ட ஆழ்கடல் மூழ்குபவர் போடும் கண்ணாடி!
அதை எல்லாம் அடுக்கி வைக்கும்போது ஒரு கசங்கிய வெள்ளைக் கவர் கண்ணில் பட்டது. அனிச்சையாக திறந்துப் பார்த்தேன்.

ஒரு இளம்பெண்ணின் புகைப்படம். ஸ்டுடியோவில் இல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே பின்னால் திரை விரித்து எடுக்கப்பட்டிருக்கவேண்டும். பட்டு சேலையில், எளிமையான “அடுத்த வீட்டுப் பெண்” களையான முகம். பழைய படம்தான்.

“இது யாரும்மா?” என்றவாறே ஹாலுக்கு வந்தேன். அம்மா ஏதோ அருவாள் மணையில் நறுக்கிக் கொண்டிருக்க மீரா கைவளையல்களைக் காட்டிக்கொண்டிருந்தாள். அப்பாவின் கவனம் அன்றைய முதல் சீரியலுக்குள் போக ஆரம்பித்திருந்தது.

“அட, இந்த போட்டோ இங்கயா இருக்கு, எங்கயிருந்து எடுத்த?”

“ஸ்கூல் ஆல்பத்து பின்னாடி இருந்ததும்மா”

“உனக்கு நியாபகம் இல்லயா? இந்தப் பொண்ணு கண்ணாடி போட்டிருக்குன்னு ரிஜெக்ட் செஞ்சியே, நம்ம புளியங்குடி வேணி மைனிப் பொண்ணு”

“எங்க, காட்டுங்க, பார்க்கலாம்?” மீரா ஆர்வமாக கையிலிருந்து பறித்தாள்.

எனக்கு ஒரு மாதிரி நியாபகம் வந்தமாதிரி இருந்தது.

“போட்டாவில் ஒன்னும் கண்ணாடி போடலையே?”

“அதனால்தான் பேச்செல்லாம்  ஆரம்பித்து நிச்சயம் எப்ப வச்சிக்கலாம்கற அளவிற்கு போயாச்சு.. ஒரு தடவை பொண்ணோட அத்தையோ அண்ணியோ பேச்சுவாக்கில பொண்ணு மதுரைக்கு கான்டாக்ட் லென்ஸ் விஷயமாக போயிருப்பதாக சொன்னாங்க. கேட்டவுடன அப்படியே ஒத்தைக் கால்ல வேணான்னுட்டான்” என்றார் அம்மா.

அப்பா டிவியிருந்து கண் எடுக்காமலேயே “இதுக்கு முன்னாடி ஒரு அஞ்சாறு வரன்களையாவது கண்ணாடி காரணம் காட்டி வேணான்னுருப்பான்.”

அம்மா மெல்லிய குரலில் “அப்புறம் வாரிசிற்கும் போட வேண்டியிருக்கும்னு சொல்லி எங்க வாயை அடைச்சிட்டான்”

“போடறதற்கான சான்ஸ் அதிகம்னுதான் சொன்னேன்மா..ஏய் மீரா, உன் கிட்டதான் எல்லாம் சொல்லியிருக்கேனே, ஒன்னுமே தெரியாதது மாதிரி பாக்கற?!”

அப்பா மீரா இருப்பதைப்பற்றி யோசிக்காமல் “ஜாதகமெல்லாம் ரொம்ப நல்லா பொருந்தியிருந்தது. இவன்தான் நொட்டை சொல்லிட்டான்”

அம்மா “எல்லாரையும் போட்டாவிலேயே நிராகரிச்சுட்டான். உன் ஒருத்தியைதான் நேரில் பார்த்தான்” என்றார் சமாதானக்குரலில்.

போட்டாவையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீரா “நல்லாத்தான் இருக்காங்க, மிஸ் பண்ணிட்டிங்க” கண்களும் குரலும் சிமிட்டின.

லேசாக சிரித்து வைத்தேன்.

மீரா விடவில்லை. “இந்த பொண்ணு பத்தி அப்புறம் தகவல் தெரியுமா அத்தை?”

“ம், அவளுக்கென்ன நல்லா இருக்கா. உங்க கல்யாணம் முடியறதுக்குள்ளயே அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது. மாப்பிள்ளைக்கு புனேவோ, பம்பாயிலோ வேலை. அவ்வளவு தூரம் பொண்ணைக் கொடுக்கறதிற்கு அவங்க வீட்டில இஷ்டமில்லைதான்…இப்போ ரெண்டு பசங்க, போன வருஷம் மதுரையில ஒரு வளைகாப்பில் பார்த்தேன்”

“என்ன, இப்ப இருக்குற சைஸ் இந்த போட்டாவைவிட்டு வெளியில் வந்தாச்சு” என்றார் அப்பா விளம்பர இடைவேளையில் சானலை மாற்றிக்கொண்டே.

கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு, “பொண்ணு கண்ணாடி போட்டிருக்கு, குழந்தையும் போடும்ன்னு சொல்லி சொல்லியே எத்தனை பேரை வேணான்னான். இப்போ, இவன் பொண்ணும் கண்ணாடி, நானும் கண்ணாடி, இவன் அம்மாவும் கண்ணாடி, வீட்டில் எல்லாரும் கண்ணாடி, மருமகளைத்தவிர” அப்பா இப்போதும் டிவிலிருந்து கண்ணெடுக்காமல் மெலிதாய் புன்னகைத்துக்கொண்டேதான் சொன்னார்.

நான் அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன காரணம் இது? அர்த்தமே இல்லாத காரணம்…ஆனால் அப்போது தேவையாக இருந்தது…இந்தச் சாக்கு…

Series Navigationகடவுள் மனிதன்.தூரிகை
author

சிவா கிருஷ்ணமூர்த்தி.

Similar Posts

4 Comments

  1. Avatar
    Muthu says:

    மிக அருமை. எனக்கும் இது போல் நிறைய அனுபவங்கள் உள்ளன. ஆனால் அதை உன்னைப்போல் கோர்வையாக எனக்கு சொல்ல தெரியாது. ரொம்ப நல்ல இருந்தது.

  2. Avatar
    ஆனந் கிருஷ்ணமூர்த்தி says:

    மிகமிக அருமை !நன்றாக இருந்தது .மீரா மைனிய கேட்டதாக சொல்லவும் ,கோதையும் சேர்த்து !(அக்காலகட்டத்தில் ராதை பிறக்கவில்லையோ ?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *