மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன.
இப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது என்று யானை அரசன் கேள்விப்பட்டது. அது நீர் குடிக்க விரும்பி, ஆயிரம் யானைகள் புடைசூழ, ஏரியை நோக்கிச் செல்லத தொடங்கியது. அது எலிகள் வாழும் இடத்துக்கு வந்தவுடனே எதிரே வந்த பல எலிகளின் முகமும், கண்ணும், தலையும், கழுத்தும், அதன் காலடியில் நசுக்குண்டன. உயிர் தப்பித்த மற்ற எலிகள் எல்லாம் ஒரு கூட்டமாய்க் கூடின. ‘’இந்த வழியே செல்கிற கெட்ட யானைகள் நம்மைக் கொன்று வருகின்றன. மறுபடியும் அவை இந்தப் பக்கம் வந்தால், நாம் ஒரு குஞ்சுக்குக்கூட மிஞ்ச மாட்டோம். மேலும்,
யானை தொட்டாலும் சாவு, பாம்பு மூச்சு விட்டாலும் சாவு. அரசன் சிரித்தாலும் சாவு. துஷ்டன் கௌரவித்தாலும் சாவுதான்.
ஆகவே, இதற்குத் தகுந்த உபாயம் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று பேசின. அவ்விதமே உபாயம் கண்டுபிடித்த பிறகு, சில எலிகள் ஏரிக்கரைக்குச் சென்றன. யானை அரசனை வணங்கி மரியாதையோடு, ‘’அரசே! இதன் அருகாமையிலிருப்பதுதான் எங்கள் பரம்பரை ஜாகை. பேரன்பேத்திகளோடு தலைமுறை தலைமுறையாக நாங்கள் அங்கு வாழ்ந்து வம்ச விருத்தி அடைந்தோம். அப்படியிருக்கையில், நீர் குடிக்க இங்கு வந்த நீங்கள் எங்கள் ஆயிரக்கணக்கிலே கொன்று விட்டீர்கள். மறுபடியும் அதே வழியாக நீங்கள் போனால் ஒரு குஞ்சுக்குக்கூட நாங்கள் மிஞ்சமாட்டோம். எங்கள் மேல் உங்களுக்குக் கருணை இருந்தால் நீங்கள் வேறு வழியே செல்லுங்கள். ஏனென்றால், எங்களைப் போன்றவர்களும் எப்போதாவது கட்டாயம் உதவிகரமாக இருப்போம்’’ என்று அவை சொல்லின.
‘இந்த எலிகள் சொல்வதும் சரிதான்’ என்று யானை அரசன் எண்ணியது. எலிகளின் விருப்பத்துக்கு இணங்கியது.
பல நாட்கள் சென்றன. யாரோ ஒரு அரசன் யானைகளைப் பிடிக்குபடி யானை பிடிப்பவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் ஒரு பொய் நீர் நிலையைச் சிருஷ்டித்தனர். அதில் யானைத் தலைவனையும் அதன் பரிவாரங்களையும் சிறைப்பிடித்தனர். மூன்று நாட்கள் சென்ற பிறகு, கயிறு முதலியவற்றால் செய்த கட்டுகளைக் கொண்டு அந்தக் காட்டில் பெரிய மரங்களோடு சேர்த்து யானைகளைக் கட்டிப் போட்டார்கள்.
யானை பிடிப்பவர்கள் போன பிறகு யானை அரசன் யோசிக்கத் தொடங்கியது. ‘எப்படி நாம் தப்பிப்பது? யார் உதவியைக் கொண்டு தப்பிப்பது?’ என்று சிந்தித்தது. ‘எலிகளை விட்டால் நம்மை விடுவிக்கக் கூடியவர்கள் வேறு யாருமில்லை’ என்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே ஒரு பெண் யானை சிக்காமல் தப்பித்துக்கொண்டிருந்தது. அதற்கு எலிகளை ஏற்கனவே தெரியும். அதன்மூலம் தான் கட்டுண்ட விஷயத்தை கடந்தபடி யானைத் தலைவன் எலிகளுக்குத் தெரிவித்தது.
அந்த விஷயத்தைக் கேட்ட எலிகள் ஆயிரக்கணக்கிலே ஒன்று திரண்டன. அவை பதில் உதவி செய்ய விரும்பி யானைக் கூட்டத்திடம் போயின. யானை அரசனும் அதன் பரிவாரமும் கட்டுண்டு கிடப்பதைக் கண்டன. அவை நின்ற இடத்திலிருந்த கட்டுகளைக் கடித்து அறுத்தன. பிறகு மரங்களில் ஏறி கட்டியிருந்த கயிறுகளையும் அறுத்தன. யானைகளைக் கட்டுகளிலிருந்து விடுதலை செய்து விட்டன.
அதனால்தான் ‘பலசாலியாயிருந்தாலும் சரி, பலவீனனாயிருந்தாலும் சரி, அவனைச் சிநேகம் செய்துகொள்….’ என்றெல்லாம் சொல்லுகிறேன்’’ என்றது மான்.
அதைக்கேட்ட ஆமை, நண்பனே, அப்படியே ஆகட்டும். நீ பயப்படாதே. இது உன் வீடுமாதிரியே. கவலையில்லாமல் உன் இஷ்டம்போல் இங்கே இருந்து வா’’ என்றது.
பிறகு இஷ்டப்பட்ட வேளையில் அவை சாப்பாட்டையும் விளையாட்டையும் முடித்துக்கொண்டன. பிற்பகலில், அகலமான ஏரிக்கரையில் ஒரு மரக் கூட்டத்தின் நிழலில் அவை ஒன்று கூடின. அறம், பொருள் முதலிய பலவித சாஸ்திர விசாரணையில் ஈடுபட்டன. ஒன்றன் மேல் மற்றொன்று அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தன.
நல்ல கவிதையையும், அறநூல்களையும் கொண்டு அறிவாளிகள் பொழுதைக் கழிக்கின்றனர். மூடர்கள் துயரத்திலும், தூக்கத்திலும், கலகங்களிலும் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.
பெண்களின் சேர்க்கை இல்லாமலே, நல்லுரைகளின் ரசத்தைப் பருகிய விவேகிகளின் நெஞ்சில் புனகமும் சுகமும் உண்டாகிறது.
பிறகு ஒருநாள் சித்ராங்கன் குறித்தவேளையில் வரவில்லை, அது வராமற்போனதையும் அந்தச் சமயத்தில் ஒரு கெட்ட சகுனம் ஏற்பட்டதையும் கண்டுவிட்ட அவை பயந்துபோயின. சித்ராங்கனுக்கு ஏதோ தீங்கு நேர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணின. மிகுந்த மனக்கலக்கம் அடைந்தன. மந்தரகனும் ஹிரண்யனும் லகுபதனகளைப் பார்த்து, ‘’நண்பனே, நாங்கள் இருவரும் மெள்ள நடப்பவர்கள். எங்களால் மானைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. நீதான் அதைத் தேடவேண்டும். அதைச் சிங்கம் ஏதாவது கொன்று தின்று விட்டதா, அல்லது காட்டுத்தீயில் அகப்பட்டுக் கொண்டு விட்டதா, அல்லது வேடர்கள் முதலியவர்களிடம் பிடிபட்டுவிட்டதா, என்று அறிந்து வா.
நமது அன்புக்குரியவர்கள் கேளிக்கை மண்டபங்களில் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று நாம் பயப்படுகிறோமே! பயங்கரமான ஆபத்துக்கள் நிறைந்த இந்தக் காட்டின் நடுவே அவர்கள் இருந்தால் பிறகு கேட்க வேண்டுமா?
என்றொரு பழமொழி உண்டு. ஆகவே நீ போய் எப்படியாவது மானைப்பற்றி உண்மையான விவரங்களைத் தெரிந்துகொண்டு வா, சீக்கிரமாக வா!’’ என்று சொல்லின.
அதைக் கேட்ட லகுபதனகன் பறந்து போயிற்று. கொஞ்ச தூரம் பறந்ததும், ஒரு சதுப்புக்குழியின் அருகில் வேலங்குச்சிகளால் கட்டப்பட்ட கூட்டில் மான் விழுந்திருப்பதைக் காக்கை கண்டது. அதற்குத் துக்கம் வந்து விட்டது. ‘’நண்பனே, உனக்கு எப்படி இந்த ஆபத்து உண்டாயிற்று?’’ என்று மானைக் கேட்டது.
‘’நண்பனே, தாமதிக்க இது நேரமில்லை, நான் சொல்வதைக் கேள்.
உயிர்போகும் தருணத்தில் உயிர்த்தோழனின் தரிசனம் கிடைத்தால், அது இறந்து கொண்டிருப்பவனுக்கும் உயிரோடிருப்பவனுக்கும் ஒருங்கே இன்பம் தருகிறது.
நமது கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கையில் நான் ஏதாவது கோபத்தில் சொல்லியிருந்தால் அதை மன்னித்துவிடு. அப்படியே ஹிரண்யனையும் மந்தரகனையும் மன்னிப்பு கேட்டதாகச் சொல்.
தெரிந்தோ தெரியாமலோ கெட்ட வார்த்தை ஏதாவது பேசியிருந்தால், அதை நீங்கள் அன்புகனிந்த மனத்துடன் மன்னித்துவிட வேண்டும்.” என்றது மான்.
‘’நண்பனே, எங்களைப்போன்ற நண்பர்கள் இருக்கும்வரை நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் உடனே போய் ஹிரண்யனைக் கூட்டி வருகிறேன். அது உன் கட்டுகளை அறுத்துவிடும்’’ என்று லகுபதனகன் பதிலளித்தது. பிறகு நெஞ்சம் படபடக்க லகுபதனகன் பறந்து மந்தரகனையும் ஹிரண்யனையும் அடைந்து, சித்ராங்கன் சிக்கிக்கொண்டிருக்கும் நிலைமையை தெரிவித்தது. ஹிரண்யனை அலகால் தூக்கிக்கொண்டு மான் இருக்கும் இடத்துக்குத் திரும்பிப் போயிற்று.
மான் அவஸ்தைப் படுவதைப் பார்த்து ஹிரண்யனும் துக்கப்பட்டது. ‘’நண்பனே, உனக்கு எப்போதுமே பயந்த சுபாவமும் கூரிய பார்வையும் உண்டே, எப்படி இந்த ஆபத்தில் சிக்கிக்கொண்டாய்?’’ என்று மானைக் கேட்டது.
’அதை ஏன் கேட்கிறாய்! விதி வலிமை படைத்தாயிற்றே!
யமனே துக்கக் கடலாகக் குமுறியெழும்போது கூர்மதி படைத்தவர்களால் என்ன செய்யமுடியும்? பகலிலோ இரவிலோ விதி அடித்துவிடுகிறது.
மறைவிலிருந்து தாக்கும் விரோதியுடன் எப்படிச் சண்டையிடுவது? என் சாது நண்பனே, உனக்குத்தான் விதியின் நியமம் தெரியுமே! அந்தக் கொடி வேடன் இங்கு வருவதற்குள் வேகமாகக் கட்டை அறுத்துவிடு’’ என்றது மான்.
‘’நான் உன்னருகில் இருக்கும்போது நீ எதற்கும் பயப்பட வேண்டாம். மேலும் என் மனதில் ஒரு பெரிய துயரம் இருக்கிறது. உன் வரலாற்றைச் சொல்லி என் துயரத்தை விலக்கு. புத்தியுள்ள உனக்கு எப்படி இந்தக் கஷ்டம் வந்தது?’ என்று ஹிரண்யன் கேட்டது.
கட்டாயம் தெரிய வேண்டுமா? சரி, ஏற்கனவே இந்தக் கட்டின் வேதனையை அனுபவித்திருந்த நான் மறுபடியும் விதிவசத்தால் எப்படி சிக்கிக்கொண்டேன் என்பதைச் சொல்கிறேன், கேள்’’ என்றது மான்.
ஏற்கனவே எப்படி இந்தக் கட்டின் வேதனையை அனுபவித்தாய்? எல்லாவற்றையும் விவரமாகச் சொல், நான் கேட்க விரும்புகிறேன்’’ என்றது ஹிரண்யன். சித்ராங்கன் சொல்லத் தொடங்கியது.
சித்ராங்கனின் அனுபவம்
ரொம்ப காலத்துக்கு முன்னால் நடந்த சங்கதி. அப்போது எனக்கு வயது ஆறு மாதம்தான் ஆகியிருக்கும். எல்லோர் முன்னிலையில் நான் குழந்தைபோல் விளையாடிக்கொண்டிருப்பேன். உற்சாகத் துடிப்பால் நான் வெகுதூரம் ஓடிப்போய் மான் கூட்டம் வருவதை எதிர்பார்த்து நின்று கொள்வேன். எங்களுக்கு இரண்டுவிதமான நடையுண்டு. ஒன்று துள்ளித் தாவுவது, மற்றொன்று நேராக ஓடுவது. இவற்றில், நேராக ஓடுவதைத்தான் நான் அறிந்திருந்தேன். துள்ளித் தாவ எனக்குத் தெரியாது.
ஒருநாள் நான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். மான் கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விட்டது உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட மனக் கலவரம் இவ்வளவு அவ்வளவு அல்ல. ‘அவை எங்கே போயிருக்கும்?’ என்று எல்லாத் திக்குகளிலும் பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் அவை இருப்பதைப் பார்த்தேன். அவற்றிற்குத் துள்ளித் தாவியோடத் தெரியும். ஆகவே ஒரு வலையில் சிக்காமல் துள்ளித் தாவி எனக்கு முன்னேபோய் ஒரே கூட்டமாய் நின்று கொண்டு என்னைப் பார்த்தபடி இருந்தன. எனக்குத் துள்ளித்தாவத் தெரியாததல்லவா? வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன்.
இதை இழுத்துக்கொண்டு மான் கூட்டத்திடன் நான் போக முயற்சித்தேன். அப்போது வேடன் வந்து என்னைக் கட்டிப்போட்டான். தலை குப்புற தரையில் விழுந்துவிட்டேன். நான் தப்பிக்க முடியாது என்று நம்பிக்கை இழந்து மான் கூட்டம் மறைந்து விட்டது.
அந்த வேடன் என்னைக் கொல்லவில்லை. ‘’இது ஒரு குட்டி, வளர்ந்து விளையாடுவதற்குத்தான் தகுந்தது’’ என்று நினைத்து அவன் மனம் இளகி விட்டது. எனவே என்னைக் கொல்வதற்குப் பதிலாக என்னைப் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டு போனான். பிறகு விளையாடிக் கொண்டிருப்பதற்காக ஒரு அரசகுமாரனுக்கு என்னைக் கொடுத்துவிட்டான். என்னைப் பெறுவதில் மகிழ்ச்சியடைந்த அரசகுமாரன் வேடனுக்கு நிறையப் பரிசு கொடுத்தான்.
அரசகுமாரன் என்னை அன்பாக நடத்தினான். மெழுகுப்பூச்சு, ஸ்னாநம், உணவு, சந்தனப்பூச்சு எல்லாம் செய்வித்தான். எனக்குத் தந்த உணவு எனக்குத் தகுந்ததாயும், சுவையுள்ளதாயும் இருந்தது. அப்படியிருந்தபோதிலும், அந்த அந்தப்புரத்திலிருந்தவர்களில் குழந்தைகள் ஆவலோடு என்னைப்பற்றி, கைக்குக் கை மாற்றி, ஒவ்வொருவரும் என் கைகளையும், கால்களையும், கண்களையும், காதுகளையும் தொட்டு நீவினார்கள். நான் மிகுந்த வேதனையடைந்தேன்.
பிறகு ஒருநாள், அப்போது மழைக்காலம். அரசகுமாரனின் படுக்கைக்குக் கீழே நான் படுத்திருந்தேன். மின்னல் மின்னுவதைக் கண்டேன். இடியோசையைக் கேட்டேன். எனக்கு என் மான் கூட்டத்தை ஞாபகம் வந்து விட்டது.
காற்றைக் கிழித்துக்கொண்டு தாவியோடும் மான்கூட்டத்தின் பின்னே இனி நான் எப்போது போகப் போகிறேன்? ஐயோ, இனி எப்போது போகப் போகிறேன்?
என்ற பாட்டைப் பாடினேன்.
‘’அப்படிப் பாடியது யார்?’’ என்று அரசகுமாரன் பயந்து போய் கேட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் என்னைப் பார்த்து விட்டான். ‘’இதைப் பாடியது மான், மனிதனல்ல. எனவே, இதனால் எனக்கு நாசம்தான் விளையும்’’ என்று எண்ணினான். ஆடை குலைந்தபடியே பேய் பிடித்தவன் போல் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டான்.
தன்னைப் பேய் பிடித்திருக்கிறது என்று அவன் எண்ணிவிட்டான். மந்திரவாதிகளையும் தந்திரவாதிகளையும் பணம் கொடுத்து வரவழைத்தான். ‘’என் துயரத்தை யார் விலக்குகிறார்களோ அவனுக்கு நிறைய பணம் கொடுப்பேன்’’ என்று தெரிவித்தான்.
அதிகமாக அவசரப்பட்ட சில பேர் கல்லும் கட்டை மட்டைகளும் கொண்டு வந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். எனக்கு ஆயுள் பாக்கி இருந்திருக்க வேண்டும். யாரோ ஒரு சந்நியாசி அப்போது அங்கு வந்தார். ‘’பாவம், இந்தச் சாதுவான பிராணியை ஏன் கொல்லுகிறீர்கள்?’’ என்று சொல்லி என்னைக் காப்பாற்றினார்.
அந்தச் சந்தியாசி என் மனவருத்தத்தையும் புரிந்துகொண்டார். அரசகுமாரனிடம், ‘’ஐயனே, இந்த மான்குட்டி, மழைக்காலம் வந்ததும் உற்சாகம் கொண்டு, தன் மான் கூட்டத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டுதான் பின்வருமாறு சொல்லிற்று:
காற்றைக் கிழித்துக்கொண்டு தாவியோடும் மான் கூட்டத்தின் பின்னே இனி நான் எப்போது போகப்போகிறேன்! ஐயோ, இனி எப்போது போகப் போகிறேன்?
ஆகவே உங்களுடைய காய்ச்சலுக்குக் காரணமேயில்லை’’ என்று சொன்னார்.
அரசகுமாரனுடைய காய்ச்சல் ஒழிந்தது. பழையபடி உடல்நிலை குணமாகி விட்டது. தன் வேலையாட்களைப் பார்த்து, ‘’தண்ணீரை நிறைய தலையில் கொட்டி இந்த மான்குட்டியை அதன் காட்டில் கொண்டுபோய் விட்டு விடுங்கள்’’ என்று அரசகுமாரன் சொன்னான். அப்படியே வேலையாட்கள் என்னைக் கொண்டு வந்து காட்டில் விட்டார்கள். இப்படித் தான் ஏற்கனவே நான் சிக்கி வேதனைப் பட்டேன். இருந்த போதிலும் மறுபடியும் சிக்கிக்கொண்டிருக்கிறேன்’’ என்றது மான்.
அந்தச் சமயத்தில் ஆமையும் அங்கு வந்து சேர்ந்தது. தன் சிநேகிதனின் மேலிருந்த பாசத்தால், ஆமை புல்புதர்களையும் தர்ப்பைப் புல்லையும் வழிநெடுகிலும் நசுக்கிவிட்டு, ஏங்கிய உள்ளத்துடன் வந்து சேர்ந்துவிட்டது. அதைக் கண்டதும் அவற்றின் துயரம் இன்னும் அதிகமாயிற்று. ஆமையைப் பார்த்து ஹிரண்யன், ‘’நண்பனே, உன் கோட்டையை விட்டு இங்கு நீ வந்தது சரியல்ல. காரணத்தைக் கேள். கட்டுகளை அறுத்தவுடன் வேடன் வந்தால் மான் ஓடித் தப்பித்துக்கொள்ளும். என் உடல் சிறியது. எங்காவது ஒரு துளையில் போய்ப் புகுந்துகொள்வேன். நீ அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வாய்?’’ என்று கேட்டது. ஹிரண்யன் சொன்னதைக் கேட்டு ஆமை ‘’அப்படியெல்லாம் என்னை நிந்திக்காதே. ஏனென்றால்,
நண்பர்களின் சேர்க்கைதான் அருமருந்து போலிருந்து உடம்பைப் தேற்றுகிறது. அது இல்லாமற்போனால் நண்பர்களின் பிரிவையும் சொத்து நாசத்தையும் எப்படித் தாங்க முடியும்?
உயிர் நண்பர்களான நல்லவர்களை தங்கு தடையின்றி சந்தித்துப் பழகும் ஒவ்வொரு நாளும், வாழ்க்கை என்னும் காட்டில் அழகிய சாலைகளை அமைத்துக் கொள்வதுபோல!
ஆழ்ந்த அன்புசெலுத்தும் நண்பர்கள், குணமுள்ள மனைவி, அனுதாபமுள்ள எஜமான்-இவர்களிடம் துயரத்தை வெளியிட்டால் மனச் சாந்தி ஏற்படுகிறது.
அதனால் நண்பனே!
ஆழ்ந்த அன்பும் சீரிய குணமும் படைத்த நண்பனின் பிரிவால் கண்கள் ஏக்கங்கொண்டு எங்கெங்கோ செல்கின்றன. துயருற்ற மனம் எங்கெங்கோ தாவித் தவிக்கிறது.
உங்களைப்போன்ற நண்பர்களைப் பிரிவிதைவிட உயிர் பிரிவதே மேல். மறுபிறப்பிலாவது உயிர் திரும்பி வரும். உங்களைப் போன்றவர்கள் மறுபடியும் கிடைக்கமாட்டார்கள். என்றது ஆமை.
இந்தச் சந்தர்ப்பத்தில் வேடன் வில்லும் அம்பும் கையுமாக அங்கே வந்துவிட்டான். அவனைக் கண்டதும் ஹிரண்யன் கட்டுகளை அறுத்து முன் குறிப்பிட்ட துளைக்குள் புகுந்து கொண்டது. காக்கை ஆகாயத்தில் பறந்து போயிற்று. மான் ஓடிவிட்டது.
மானைக் கட்டியிருந்த கட்டுகள் அறுபட்டிருப்பதைக் கண்டு வேடன் ஆச்சரியமடைந்தான். ‘’மான்கள் கயிற்றை என்றும் அறுத்தது கிடையாது. இது அறுந்திருப்பதால் இது ஒரு தெய்வீக மான்தான்’’ என்று சொன்னான். இருக்கத்தகாத இடத்தில் ஆமை ஒன்று இருப்பதை வேடன் கண்டான். சற்றும் மனநிம்மதி அடையாதவனாய், ‘’விதிவசமாக மான் கயிற்றை அறுத்துக்கொண்டு தப்பி விட்டது. ஏன்றாலும் இந்த ஆமை கிடைத்திருக்கிறது.
தரையில் நடக்கும் ஜந்துக்கள், ஊர்ந்து செல்லும் ஐந்துக்கள், ஆகாயத்தில் பறக்கும் ஜந்துக்கள்- எதுவானாலும், கொடுத்து வைத்திருந்தாலொழிய கிடைக்காது.
என்று யோசித்தான்.
பிறகு கத்தியால் தர்ப்பைப்புல்லை அறுத்து, திடமான கயிறாக அதைத் திரித்தான். அந்தக் கயிற்றால் ஆமையின் இரு கால்களையும் வெளியே இழுத்துப் பலமாகக் கட்டிவிட்டான். அந்தக் கயிற்றை வில் நுனியில் கட்டிப் போட்டான். வந்த வழியே செல்லத் தொடங்கினான்.
ஆமையை வேடன் கொண்டு செல்வதை ஹிரண்யன் பார்த்தது. மிகுந்த துயரத்துடன், ‘’என்ன கஷ்டம்! என்ன துயரம்?’’
சமுத்திரத்தின் கரையை எட்டியதுபோல் ஒரு துயரத்தின் முடிவை எட்டியதும், இன்னொரு துயரம் என்னை வந்தடைந்திக்கிறது. எளியாரைத் தான் துயரங்கள் அதிகமாக மொய்க்கின்றன.
பட்ட இடத்தில்தான் மீண்டும் அடிபடுகிறது: சோறில்லாத போதுதான் பசி அதிகமாகிறது. ஆபத்துக்காலத்தில்தான் பகைமைகள் அதிகமாகின்றன. எளியாரைத்தான் துயரங்கள் அதிகமாக மொய்க்கின்றன.
கால் தடுக்காதவரை ஒருவன் சமதரையில் நன்றாகத்தான் நடந்துபோகிறான். கால் தடுக்க ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு அடிக்கும் தடுக்கி விழுகிறான்.
ஆபத்தில் உதவுகிற நண்பன், வலிமையும், லாகவமும் பொருந்திய வில், குணமும் குலமுமுள்ள பெண் — வாழ்வில் இவர்களைக் காண்பது அபூர்வம்.
போலி நண்பர்களைப் பெறுவது சர்வசாதாரணம். குணம் சிறந்த நண்பர்களை அப்படிப் பெறமுடியாது. அதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
நண்பனிடம் பெறும் நிம்மதியைப்போல், தாயிடமோ, மனைவியிடமோ, மகனிடமோ, சகோதரனிடமோ காணமுடியாது.
நண்பர்களைப் பிணைக்கும் அன்பு அனுபவிக்க அனுபவிக்கக் குறைவதில்லை. அதைப் புல்லியர்கள் பறித்துச் செல்ல முடியாது. மரணம் ஒன்றுதான் அதற்கு முடிவு கட்டுகிறது.
இது என்ன விதி, விடாமல் என்னைத் தாக்கி வருகிறதே! முதலில் பணம் நாசமாயிற்று; பிறகு, ஏழ்மையால் உறவினர்களிடமிருந்து நிந்தனைகள் வந்து சேர்ந்தன; அதன் வேதனையால் நாடு விட்டு வர நேரிட்டது. இப்போது ஒரு நண்பனையும் விட்டுப் பிரியும்படி விதி செய்திருக்கிறது.
உண்மையில் பணம் போனதில் எனக்கு வருத்தமில்லை. அதிருஷ்டமிருந்தால் அது மறுபடியும் திரும்பிவரும். பண நஷ்டமானதோடு, நட்பு நஷ்டமும் எனக்கு ஏற்பட்டதுதான் என்னைச் சுட்டெரிக்கிறது.
நான் செய்த செய்கைகளின் நற்பயனையோ, தீயபயனையோ மறுபிறப்பில் அனுபவிப்பதற்குப் பதிலாக இந்தப் பிறப்பிலேயே அனுபவிப்பதற்குப் பதிலாக இந்தப் பிறப்பிலேயே அனுபவிக்கிறேன்.
பிறவியெடுத்த உடலைப் பல ஆபத்துக்கள் சூழ்கின்றன; சம்பத்து எப்பொழுதும் விபத்து உண்டாக்கும்; பாசங்கள் எல்லாம் பிரிவில் முடிகின்றன; உலகமே பொடித்துப் போகிற ஒரு பொருள்தான்.
ஐயோ, நண்பனை இழந்தேன், உயிர் இழந்தேன், எனது உற்றாருக்காகவும் நான் இவ்வளவு வருந்தவில்லை.
துன்பத்தையும் துயரத்தையும் பயத்தையும் போக்கி, நம்பிக்கைக்கும் அன்புக்கும் உறைவிடமாயிருக்கும் இந்த ரத்தினம் யார் படைத்ததோ?
மி-த்ரஹ (மித்திரன்) என்று இரண்டே எழுத்துக்களாலான இந்த ரத்தினம் யார் படைத்ததோ?
நல்லோர்களின் சேர்க்கையில் வளர்வது நட்பு; ஒவ்வொரு மூச்சிழையிலும் அது அன்பு பொழிகிறது; அன்புக்கயிற்றால் பிணைக்கப்பட்ட சாதனம் அது. சகிக்கொணாத சாவுதான் அதை அறுக்கிறது.
நன்கு பழகிப் பிணைந்த நட்பையும், இன்பமளிக்கும் செல்வத்தையும் தீரர்களின் பகைமையையும் மரணம் ஒரே வெட்டில் அறுத்து விடுகின்றது.
வாழ்க்கையில் மூப்பும் நரையும் வந்திடாவிட்டால், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவு ஏற்படாவிட்டால், யாவும் சாகும் என்ற நிலை இல்லாவிட்டால், இந்த வாழ்வில் யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்?
இவ்வாறு ஹிரண்யன் துயரம் நிறைந்த சொற்களைப் பேசிக் கொண்டிருக்கையில் சித்ராங்கனும் லகுபதனகனும் அங்கு வந்து சேர்ந்தன. அவையும் புலம்பத் தொடங்கின. பிறகு ஹிரண்யன் அவற்றைப் பார்த்து, ‘’மந்தரகன் நம் கண்ணிலிருந்து மறையாதிருக்கும் வரை அதைக் காக்க நமக்கு வழி இருக்கிறது. ஆகவே சித்ராங்கனே, நீ போ! வேடன் உன்னைப் பார்க்காதபடி அவனுக்கு முன்னே போய் எங்காவது நீர் உள்ள இடத்தின் அருகில் இறந்துவிட்டதுபோல் தரையில்கிட! லகுபதனகனே, நீ சித்ராங்கனின் கூடுபோன்ற கொம்புகளில் கால் வைத்து உட்கார்ந்துகொண்டு கண்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்! அப்போது அந்தக் கெட்ட வேடன், ‘மான் செத்துக் கிடக்கிறது, எடுத்துக்கொண்டு போகலாம்’ என்று பேராசைக் கொள்வான். ஆமையைத் தரையில் போடடுவிட்டு மான் இருக்கும் இடத்துக்குப் போவான். அவன் போனதும் நான் போய் ஒரு நொடியில் ஆமையின் கட்டுகளை அறுத்துவிடுகிறேன். பக்கத்திலுள்ள நீர் ஆமைக்கு கோட்டை போன்றது. அதில் போய் அது பதுங்கிக்கொள்ளும். நான் போய் புல் புதர்களிடையே புகுந்துகொள்கிறேன். நீ ஓட்டமெடுத்து மறுபடியும் தப்பித்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லியது.
இந்தத் திட்டப்படியே அவை செய்தன. ஒரு நீர்நிலைக்கருகில் செத்ததுபோல் கிடக்கிற மானை வேடன் கண்டான். அவனுக்கு ஒரே சந்தோஷம். ஆமையை தரையில் எறிந்துவிட்டு ஒரு தடி எடுக்க ஓடினான். அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்ட மான், வேடன் அருகில் வந்துவிட்டான் என்று தெரிந்துகொண்டு ஒரே வேகமாக ஓடி அடர்ந்த காட்டில் மறைந்து விட்டது. லகுபதனகன் பறந்துபோய் ஒரு மரத்தில் உட்கார்ந்துகொண்டது. ஹிரண்யன் ஆமையின் கட்டுகளை அறுக்கவே அது போய்த் தண்ணீரில் புகுந்து கொண்டது. ஹிரண்யனும் புல்களுக்கிடையே மறைந்து கொண்டது.
இது இந்திரஜாலமே என்று வேடன் எண்ணிக்கொண்டான். ‘’என்ன இது, இப்படியாயிற்றே!’’ என்று ஏமாற்றத்தோடு கேட்டுக்கொண்டான்.ஆமையைப் போட்ட இடத்திற்குத் திரும்பிப் போனான். அங்கே விரலவுகூட நீளமில்லாதபடி நூற்றுக்கணக்கான துண்டுகளாக அமையைக் கட்டிபோட்டிருந்த கயிறு அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். யோகி மறைவதுபோல் ஆமை மறைந்து விட்டிருப்பதையும் கண்டான். தன் உயிருக்கே ஆபத்து ஏற்படுமோ என்று பயந்துபோனான். கலங்கிய மனத்துடன் திக்குகளைப் பார்த்துக் கொண்டே காட்டிலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றான்.
அதன்பிறகு அவை நான்கும் உடம்பில் ஒரு காயமும் இல்லாமல் பத்திரமாகத் திரும்பி ஒன்றுகூடின. ஒன்றோடொன்று நேசம் பாராட்டிக்கொண்டன. மறுபிறப்பு அடைந்து ஒன்றாய்ச் சேர்ந்தவை போல் இன்பமாக வாழ்ந்த வந்தன. ஆகவே,
உலகம் ஏற்கும் இப்படிப்பட்ட நட்பு மிருகங்களிடத்தில் கூட இருக்கும் என்றால் விவேகமுள்ள மனிதர்களிடத்தில் அது இருப்பது ஆச்சரியமில்லையல்லவா?
இத்துடன் நட்பு அடைதல் என்ற இரண்டாவது தந்திரம் முடிவு பெறுகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு:
சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும், காக்கை, எலி, மான், ஆமை செய்ததுபோல் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர்.
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை