பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “

This entry is part 41 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சரத்குமார் நடித்த சூப்பர் படம் ஒன்று ‘சூரியன்.’ அதில் சரத் முதன் முறையாக மொட்டை போட்டிருப்பார். அதோடு பிரபுதேவா பிரபலமாகாத போது சுகன்யாவுடன் ஆடிய ‘ கட்டெறும்பு என்னைக் கடிக்குது ‘ என்ற பாடலும் அதில் தான். ஆனால் அதன் இயக்குனர் யார் தெரியுமா? பவித்திரன்!

பல ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் முடித்து, இப்போது பவித்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாட்டுத்தாவணி. சம்பந்தப்பட்ட மாடு படத்தைப் பார்த்திருந்தால் முக்காடே போட்டிருக்கும்!

அவலை நினைத்து உரலை இடிப்பது என்பார்கள். சூரியனை நினைத்து மா.தாவணியைப் பார்த்தால் அவ்வளவுதான். நட்டு கெழண்டு லாவணி பாட வேண்டியது தான்.

‘பசங்க’ படம் வெளிவந்த உடனே ஒப்புக்கொண்ட படம் போலிருக்கு களவாணி விமலுக்கு. அதற்கப்புறம் அவர் தனி நாயகனாகி, சில படங்கள் ஓடவும் செய்தன. இதில் விமல் கதை நாயகனின் நண்பர்களில் நான்கு பேரில் ஒருவராக வருகிறார். அடிக்கடி காணாமல் போகிறார். எடுத்த காட்சிகளை ஒட்ட வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. வாங்கிய வினியோகர், அடிமாட்டு (தாவணி) விலைக்குத்தான் வாங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் அதிலும் காசு பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில், விமலை பெரிதாகப் போட்டு, பேனர் வைத்திருக்கிறார். அதைப் பார்த்து ஏமாந்த ரசிகன், “விமல் காணம்டா! எங்கே அந்தக் களவாணிப்பய? “ என்று தேடுகிறான். அவன் தேடுவது நிச்சயமாக விமல் இல்லை என்பது உத்தரவாதம்.

இசை தேனிசைத்தென்றல் (!) தேவா. ஆசை படத்தில் அருமையாக, இளையராஜாவை ஒற்றியெடுத்தது போல அமைந்த பாடல்கள் எங்கே? நோட்ஸ் காணாமல் போய் விட்டதா? இல்லை, கையைக்கட்டி விட்டார்களா? கண்ணை மூடிக் கொண்டால் எல் ஆர் ஈசுவரி குரலில் பாடிய, அம்மன் திருவிழா மெட்டுக்கள். அதோடு பாடல் வரிகள் ஆபாசத்தின் உச்சக்கட்டம். அசைவுகள் அதை விட மட்டம்.

பாடலாசிரியர் சினேகன் போல் ஒரு பையன் கதை நாயகன். ஒருவேளை அது சினேகன் தானோ என்னவோ? படம் பெட்டிக்குள் இருந்த காலகட்டத்தில் வளர்ந்திருக்கலாம்.

எல்லாம் சரி, கதை? இருந்தால், சாரி சாரி புரிந்தால் சொல்லியிருக்கமாட்டேனா? பன்னீர்செல்வம், அவனது நான்கு நண்பர்கள் ( விமல், பரோட்டா சூரி, இன்னும் இரண்டு பேர்.. ஏற்கனவே படங்களில் தலை காட்டியவர்கள் ), ஒரு இலக்கியப் பத்திரிக்கை நடத்தும் சித்தப்பா (வடிவேலு வழக்கில் அடிபட்டவர் ) ஊடாக பாவும் கதை. நடுவில் தறிகெட்டுப்போய், பிரமிணைச்சுருணையாக மாறுவது படம். பணக்காரப்பெண் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பன்னீர், அவளை நேசிக்கத் தொடங்கும்போது, அமெரிக்க மாப்பிள்ளைக்கு செட் ஆகி, கொலையாகி, பழியோடு பன்னீர் பைத்தியமாகும் திரைக்கதை. நடு நடுவே சரக்கடிப்பது, குத்துப்பாட்டுக்கு ஆடுவது என்று ஏகத்துக்கு மசாலா பிட்ஸ்.

கடைசியில் கட்டம் கட்டி, நம்பிக்கை துரோகம், ஒழுக்கமற்ற காதல், உயர்வற்ற நட்பு என்று ஏதேதோ போடுகிறார்கள். பார்த்த பத்து பேரும் அதற்குள் எஸ்கேப்! செண்டிமெண்டாக யாருக்காவது மொட்டை போட்டிருக்கலாம், படம் ஓட.. தயாரிப்பாளர் புகைப்படத்தைப் போடவில்லை என்பதால், அவராக இருக்கும் என்கிற அனுமானம் எனக்கு.

சேரன் தயாரிப்பில் பாலுமகேந்திரா ஒரு படம் எடுக்கப் போகிறாராம். இப்போதே பகிரென்கிறது எனக்கு.

#

கொசுறு

போரூர் கோபாலகிருஷ்ணா எதிரில் அஞ்சப்பர் உணவுவிடுதி திறந்திருக்கிறார்கள். இப்படியே படங்கள், அரங்கில் வெளியானால் அஞ்சப்பரில், இடைவேளைக்கே கூட்டம் அள்ளும்.

அஞ்சப்பர் வாசலில் ஒரு நகைக்கடைக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் அடகுக்கடையையே ஜுவெல்லரி என்றுதான் போட்டுக் கொள்கிறார்கள். சாப்பிட்ட உணவு கையைக் கடித்தால், தங்கச்செய்னை வைத்து தண்டூரி சிக்கன் சாப்பிட வசதியாயிருக்கும்.

#

Series Navigationஆர்ய பட்டா மண்அம்மா
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  Gopi says:

  பிரபுதேவா பிரபலமாகாத போது சுகன்யாவுடன் ஆடிய ‘ கட்டெறும்பு என்னைக் கடிக்குது ‘ என்ற பாடலும்
  This is Vaalter Vetrivel film, not suriyan.

 2. Avatar
  punai peyaril says:

  இதில் வேடிக்கையென்னவென்றால் சூரியனில் நடித்தவர் ரோஜா என்பது கூட தெரியாமல் ஒரு வெகு ஜன வகையறா விமர்சனம். க்ருத்தில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால், தகவல்களில் பிழை என்பது பொறுப்பற்றது. லாலாக்கு டோல் டப்பிமா என்பது அந்த பாட்டு. சேரன் தயாரிப்பில் பாலு மகேந்திரா என்பது இவருக்கு ஏன் பகீர் என்கிறது என்ற கொசுக்கடி கொசுறும் புரியவில்லை. தேசியகீதம் என்ற அருமையா சிந்தனை படத்தை கொடுத்த சேரன், பாலுமேகேந்திராவிற்காக செய்யும் உதவியாகக் கூட இருக்கலாம். பாராட்ட மனம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *