மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22

This entry is part 29 of 44 in the series 22 ஏப்ரல் 2012

“வருகின்றவனையெல்லாம் தம்பி அண்ணன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான். எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது. இனி விற்பதற்கு என்ன இருக்கிறது. போதாக்குறைக்கு திண்ணையில் ஒரு பைத்தியத்தை சேர்த்துவைத்திருக்கிறாய். அதை என்றைக்கு துரத்துகிறாயோ அன்றைக்குத்தான் உனக்கு விமோசனம்”

24. கிணற்றுநீர் பாசிபோல அரையிருட்டு மிதக்கிறது. துரிஞ்சலொன்று ஒவ்வொரு அறையாய் நுழைவதும், யாரோ துரத்தி அடித்ததுபோல பின்னர் வெளியேறுவதுமாய் இருக்கிறது. தெருக்கோடியில் மேளசத்தமும் தொடர்ந்து நாதஸ்வர சத்தமும் கேட்கிறது. மேளச்சத்தத்தின் அதிர்வினைத் தாங்கிகொள்ள இயலாமல் வீட்டின் சுவரிலிருந்து பெயர்ந்து விழுந்த காரை வீட்டின் அமைதியை குலைத்துவிட்டு அடங்கிப்போனது. மூஞ்செலி ஒன்று அவள் விரல்களை கடித்தபடி நிற்பதை இருட்டில்கண்டு காலை உதறினாள். கையைத் தலைக்குக்கொடுத்திருந்து படுத்தவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். வயிற்றில் ஓர் அரக்கன் வாய் திறந்தபடி ஏதாவது போடேன் என்கிறான். எழுந்து சற்று முன்னர் குடித்ததுபோல இரண்டு தம்ளர் குளிர்ந்த தண்ணீரை வயிற்றிலிட்டு நிரப்பினால் இதமாக இருக்கும். வயிற்றைக் காட்டிலும் நெஞ்சிலிருக்கும் கங்குகளைத்தான் நீர்விட்டு அணைக்கவேண்டும். நேற்றிலிருந்து சாப்பிடாமல் இருக்கிறாள். எழுந்திருக்க முடியுமாவென யோசித்தாள். முடியும் போலவிருந்தது. உடல் இன்னமும் தெம்புடன் இருக்கிறது.  வெளிச்சத்தில் கிடந்த வீடும், விதவிதமான பட்டாடைகளும், சுமக்க முடியாமல் சுமந்த நகைகளும், அடுப்பில் எந்நேரமும் ஏதேனும் சுடச்சுட, வயிற்றுக்கு வேண்டாமென்கிறபோதும் வாய்க்கு ருசியாக ஏதாவது தயாராகிக்கொண்டிருக்கும். தின்பண்டங்களும், வீட்டுவாசலில் தீட்சதர் கொடுத்துவிட்டாரென்று வந்திறங்கும் பலாபழமும்.மாம்பழமும். கண்ணெதிரே ஒவ்வொன்றாய் தோன்றி மறைந்து கண்னாமூச்சி ஆடின. ஆவேசம் வந்தவள்போல எதுவும்வேண்டாமென அவற்றைத் துரத்துகிறாள். தூணைச் சுற்றிவந்து அவை கெக்கலிகொட்டுகின்றன. மீண்டும் கோபமுற்றவளாய்:

– யாரிடம் உங்கள் வேலையைக்காட்டுகிறீர்கள்? எனக் கூச்சலிட்டபடி அவற்றின் பின்னால் ஓடுகிறாள். அங்கிருந்த தூண்களை அவை மீண்டும் சுற்ற ஆயாசபட்டு சோர்ந்து உட்காருகிறாள்.

அம்மா முடிவெடுத்ததுபோல தஞ்சாவூருக்குப் போயிருக்கலாமோ? கிருஷ்ணபுரம் வந்தது மகா தவறு. இந்நகரம் சுழல் நீர்போல தாயும் மகளையும் சேர்ந்தாற்போல உள்ளே இழுத்துக்கொண்டது.. உடலுக்காக வாழ்ந்ததுபோதும் கொஞ்சநாட்கள் மனதுக்காக வாழ்கிறேனே என மீனாம்பாளிடம் கூறியபோது, மகளின் வார்த்தைகளுக்குள்ளிருந்த ஏக்கத்தையும் சூன்யத்தையும் புரிந்துகொள்ளாமல் அவள் குழம்பி நின்றாள்.

நடைவாசலுக்கருகிலிருந்த அறையில் இருமல் சத்தம் வெகுநேரம் தொடர்ந்து கேட்டது. அதற்கு பதிலளிக்க நினைத்தவள்போல இருமுறை இருமினாள். முன்பக்க அறைநோக்கி நடந்தாள் இப்போது இருமல் பலமாகக்கேட்டது, இடைக்கிடை முனகல்கள். நிலைவாயிற்படியில் ஓரிரு நொடிகள் நின்றிருந்தவள் பாயில் கிடந்த மீனாம்பாளின் இறுமல் முடிவுக்குவந்ததும்:

– அம்மா ஏதாச்சும் வேணுமா?

– நிஜமாகத்தான் கேட்கறியா?  தட்டுநிறைய சோறுவேணும், இல்லை நல்ல வைத்தியரை அழைத்துவந்து என் இருமலை நிறுத்தணும் இந்த இரண்டுலே உன்னால எது முடியுமோ அதை செய்யேன்.

– என்னம்மா? நீயே இப்படி கேட்டால் நான் என்ன பதில் சொல்ல?

– தெரிஞ்சிருந்தும், எதற்காக அப்படியொருகேள்வி?

– இல்லைம்மா, தப்பு தப்பு தாடையிலே போட்டுக்கொள்கிறேன். இனிமே அப்படி கேட்கவில்லைபோதுமா? ஏம்மா ஊர் உலகமெல்லாம் கமலக்கண்ணியென்ற பெண்ணைத் தேடி கிருஷ்ணபுரம் வருகிறதே? இவ்வளவு பக்கத்திலிருக்கிறோம் நாம் போய் பார்த்துவந்தாலென்ன. சிங்கபுரம் ரங்கநாதரில் ஆரம்பித்து கிருஷ்ணகிரி ரங்கநாதர் வரை எல்லோரிடமும் முறையிட்டாயிற்று இன்னும் அந்தப்பெண்தான் பாக்கி அவளிடமும் ஒரு முறை நம்முடைய குறைகளைச் சொல்லி அழுதுவிட்டு வந்தாலென்ன

-ம்.. போகலாம் எனக்கு எழுந்து நடக்க முடியாது. யாரிடமாவது வண்டி இரவல் கேட்டுப்பாரேன்.

– வண்டியா? நானா?

-ம். கேளேன் கேட்டால் என்ன தப்பு?  எல்லாம் உன்னால் வந்த வினைதானே?

– நான் என்ன செய்தேன்.

– தஞ்சைக்குப் போகலாமென்று சொன்னேன். வேசி தொழில் இல்லையென்றாலும் நாலுபேருக்கு பரதம் கற்றுக்கொடுத்து அங்கே வயிற்றைக் கழுவலாம். நீ என்னடாவென்றால் தீட்சதர் மருமகன் கிருஷ்ணபுரம் புறப்பட்டுபோனதாக யார் சொன்னதையோ கேட்டு, கட்டு வண்டியை! என்றாய். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தோம். இப்போது என்ன ஆயிற்று?

– கூடாதென்றால் தடுக்கவேண்டியதுதானே? எதற்காக நீயும் குதிகுதியென்று குதித்துக்கொண்டு கிளம்பிவிட்டு இங்கே வந்து மூக்கைச் சிந்துகிறாய். தீட்சதர் போனாலென்ன நமக்கு மலைபோல நாயக்கர் இருக்கிறார் என்று சொன்னதெல்லாம் மறந்துபோனதா?

– மறக்கவில்லை. ஆனால் என்ன நடந்தது? கொள்ளிடக்கிழவன் மகன் போனால் போகிறதென்று இரக்கபட்டு மன்னனிடம் அழைத்துபோனான். நீ ஒழுங்காய் மன்னரின் காலில் விழிந்து நம்முடைய நிலமையை சொல்லியிருக்கும் பட்சத்தில் நமக்கேன் இந்த கதி? உனக்குக் கொழுப்பு வாய்வரை இருக்கிறது. அன்று சாமர்த்தியமாக நடந்துகொண்டிருந்தால் இன்று கிருஷ்ணபுரத்தில் நீ பட்டத்து ராணி

–  திரும்பத் திரும்ப நான் தான் எல்லாவற்றிர்க்கும் காரணமென்பது போல இப்படிக்குத்திக்காட்டாதே.

–  இப்போதும் ஒன்றும் குடி முழுகிபோகவில்லை. கொஞ்சம் அனுசரித்துபோனால் நான்கு நாட்களுக்குமுன்பு வந்து போனானே கூலவாணிகன் மகன் அவனை வளைத்துப்போட்டிருக்கலாம். அவனுக்கு என்ன குறைச்சல்? ஆள் இலட்சணமாக இருந்தான். நிலபுலமும் ஏராளமென்று கேள்விபட்டேன். அவன் வீட்டை பார்த்தாயில்லையா?

– பார்த்தேன். பார்த்தேன் பார்க்க என தம்பிபோல இருக்கிறான்.

– வருகின்றவனையெல்லாம் தம்பி அண்ணன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான். எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது. இனி விற்பதற்கு என்ன இருக்கிறது. போதாக்குறைக்கு திண்ணையில் ஒரு பைத்தியத்தை சேர்த்துவைத்திருக்கிறாய். அதை என்றைக்கு துரத்துகிறாயோ அன்றைக்குத்தான் உனக்கு விமோசனம்.

மீனாம்பாள் சொன்னபோதுதான் திண்ணையில் இருக்கின்ற மனிதனின் ஞாபகம் சித்ராங்கிக்கு வந்தது. இப்போதாவது அவர் இன்னாரென்று அம்மாவிடம் சொல்லிவிடலாமா? என நினைத்தாள். பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டவளைபோல அவசரமாய் மீனாம்பாள் படுத்திருந்த அறைக்கதவை இழுத்து மூடினாள். நடையைக் கடந்து தெரு திண்ணைக்கு வந்தாள். சுவற்றில் கூன்போட்டு சாய்ந்து காலை நீட்டிப்படுத்திருந்தான். ஒருவாரத்திற்கு முன்பு கொடுத்த தலையணை வயிறுகிழிந்து இலவம் பஞ்சு பிதுங்கிகொண்டு கிடந்தது. முகத்தில் மீசையும் தாடியும் புதர்போல மண்டிக்கிடந்தன. அவற்றில் புதைந்திருந்த சிவந்த அதரங்கள். தடித்த இரப்பைகளிரண்டும் திறப்பதும் மூடுவதுமாக இருந்தன. இவளைப்பார்த்ததும் நேராய் நிமிர்ந்து உட்கார்ந்தான். பசிக்கு ஏதேனும் வேண்டுமா எனக்கேட்க தயங்கினாள். கேட்டால் கொடுப்பதற்கு குடத்தில் நீராவது மிஞ்சியிருக்குமா என்ற சந்தேகம்.

போன வாரத்தில் மீனாம்பாள் தெரிந்தவர்கள் யாருடனோ சிங்கபுரம் ரங்கநாதரை தரிசித்துவிட்டுவருகிறேன் என்று புறப்பட்டு போனாள். சித்ராங்கி அவளுடன் போகவில்லை, வீட்டில் தங்கிவிட்டாள். கோவிலிலிருந்து திரும்பும் வழியில் இடிந்துக் கிடந்த கோவில் வாசலில் கால்மேல்கால் போட்டுக்கொண்டு படுத்துக்கிடந்தவனை மீனாம்பாள் பார்த்தாள். பரிதாபப்பட்டு கையிலிருந்த பிரசாதத்தைக் கொடுத்திருக்கிறாள். கிருஷ்ணபுரம் புறப்பட்டபோது, வண்டியைத் தொடர்ந்து ஓடி வந்திருக்கிறான். வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த சித்ராங்கி மூர்ச்சையாகி விழாதகுறை. அவரா இது?

– அம்மா இவர்…

– இவனென்று சொல். கோவிலிலிருந்து திரும்பும் வழியில் பார்த்தேன். பரிதாபப்பட்டு கொஞ்சம் பிரசாதம் கொடுத்தேன். நாய் போல வண்டியைத் தொடர்ந்து ஓடிவந்திருக்கிறான்.ம்.. இன்றிரவு திண்ணையில் ஒரு மூலையில் கிடக்கட்டும். கழுதையை நாளைக்கு விரட்டி அடிக்கலாம் பயப்படாதே.

சித்ராங்கிக்கு அழுகை முட்டிக்கொண்டது. எந்த ஜெகதீசனுக்காக காலமெல்லாம் ஏங்கினாளோ, செண்பகத்தை தூதுவிட்டு சோர்ந்துபோனாளோ, அம்மாவின் தஞ்சாவூர்பயனத்தை தந்திரமாக கிருஷ்ணபுரமென்று ஏமாற்றி புறப்பட்டுவந்தாளோ அவனை கடைசியில் கண்டுவிட்டாள். ஆனால் எப்படி? செம்பட்டை தலை. சிரைக்காத மீசையும்தாடியும் பாதிமுகத்தை தின்றிருந்தது, கிழிந்த வேட்டியைச்சுற்றிக்கொண்டு, விளக்கெண்ணெயில் கிடந்த உடல்போல ஒருவித துர்க்கந்தம் வீச நிற்கிறான். அம்மாவுக்கு இவன் யாரென்று தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாதவள்போல நடிக்கிறாளா? தேடியலைந்த ஜெகதீசன் இவனில்லை என்றது மனம். அம்மாவின் கட்டளைப்படி நாளை துரத்திவிடலாம்.என்றெண்ணியவளாய் கதவைச் தாளிட்டாள்.

அயர்ந்து தூங்கியவள் இடிச்சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள்.வாசலில் மழை சோவென்றுகொட்டிக்கொண்டிருந்தது.   திண்னையில் ஜெகதீசன் எப்படி தூங்குவானோ என்று மனம் பதைத்தது. ஒரு போர்வையைக் கையிலெடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள். கதவைத் திறக்கவும் அடிவானத்தில் பளபளப்பான கூர்வாளை வீசுவதுபோல இறங்கிய மின்னல் திண்னையில் வந்து விழுந்தது.. எல்லைசாமிபோல மீசையை நீவிவிட்டபடி அமர்ந்திருந்தான். கண்களிரண்டும் பசித்த புலியின் கண்கள்போல ஈரமினுமினுப்பிலிருந்தன. போர்வையை கையில் பிடித்தபடி, தனது உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு திண்ணையில் ஏறியவள் அவனை நெருங்கியதும் போர்வை கைநழுவி விழ நின்றாள். முழங்காலிட்டு உட்கார்ந்தவள், குனிந்து அவனது அதரங்களில் இவளது அதரங்களை பொருத்தி  ஒரு நாழிகைநேரம் போதையிற்கிடந்தாள். இரவு வெள்ளி முளைக்க எழுந்துவந்துவிட்டாள். அன்றிரவு வெகுநாட்களுக்குப் பிறகு நன்கு உறங்கினாள்.இப்போதெல்லாம் அவள் மனம் தடுத்தாலுங்கூட நள்ளிரவைக்கடந்ததும் சரீரம் அவனைத் தேடி வந்துவிடுகிறது.

(தொடரும்)

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *