முள்வெளி அத்தியாயம் -5

This entry is part 15 of 44 in the series 22 ஏப்ரல் 2012

இரவு மணி இரண்டு.

“எனக்கு டீ வேண்டாம்” என்றாள் செல்வராணி, “மேக் அப்” பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி. இந்தப் பனியிலும் துளிர் விடும் வியர்வை.இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த “ஷூட்டிங்க்” இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக அழகியாயிருந்து இப்போது நடிகையானவரின் பாடல் காட்சி. அவரது “கால் ஷீட்” முடிவதற்குள் “ஷூட்டிங்க்” முடிந்தாக வேண்டும். எத்தனை டீ குடிப்பது? உமட்டல் வந்தது. கால்களும் கழுத்தும் இடுப்பும் இற்று விட்டன. பக்கத்து வீட்டு ஆயாவைக் கெஞ்சி குழந்தைகளோடு படுக்க வைத்தாள். மாதவிலக்குத் தொல்லை. கழிப்பறைக்கு 60 பேருக்கும் சேர்த்து ஒரு வேன் வந்திருந்தது. அதே சமயம் கதாநாயகி உபயோகத்துக்கு என மட்டுமே தனியே ஒரு “காரவன்” வந்திருந்தது.

உடனே உடனே கம்ப்யூட்டரில் ‘ரஷ்” பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘டேக்’ ‘ஓகே’ ஆகி விட்டால் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விடலாம்.கம்பெனி பஸ்ஸில் ஏறி வீடு போய்ச் சேரலாம். ஆடை மாற்றவும் அதே பஸ் தான். வயிறை அழுத்தித் தொப்பையை மறைக்க வைத்த ‘பெல்ட்’டைக் கழற்றலாம். வீட்டுக்குப் போய்தான் “மேக்கப்”பைக் கலைக்க வேண்டும்

“உம் புருஷனுக்கு இப்பக் காலு எப்படி இருக்கு?” என்றாள் புஷ்பா.
“தேவலாம்.ஃபைபர் காலு வந்திடுச்சு. இப்பம் பழையபடி நடமாட முடியுது”
“பாவம்ப்பா. அந்த ஷூட்டிங்குக்கு நானும் போயிருந்தேன். பைக்குலே காரைத் தாண்டி ஜம்ப் அடிச்சாரு ரவி. ஆனா இறங்கும் போது “பைக்” சறுக்கிக்கினே போயி ரொம்ப தூரம் இழுத்துக்கிட்டுப் போயிடுச்சு”

அன்று இரவு முழுவதும் ஆஸ்பத்திரியில் மயக்கமாக இருந்த போது மட்டுந்தான் அவன் மௌனமாக இருந்தான். அந்த சிறிய மருத்துவமனை அவனுக்கு ஏதோ ஒரு சிகிச்சையைக் கோட்டை விட்டு விட்டது. இரண்டு நாள் கழித்து வேறு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை கிடைத்தும் பயனில்லை. காலை எடுக்க வேண்டியதாகி விட்டது.

கடந்த ஆறு மாதங்களாக அவன் காட்டும் எரிச்சலும் போட்ட கூப்பாடும் ஒரு வழியாக ஓய்ந்தது. ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ அவன் செயற்கைக் கால்களுடன் நடமாடுவதை அறிந்து ‘சிலம்பம் பழகி வா’ என்றவுடன் ஊருக்குக் கிளம்பி விட்டான். அங்கே சிலம்பம் பழகி வந்து மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்லும் முடிவால் அவனிடம் மாற்றம் இருந்தது.

“கதையைப் படிச்சீங்களா?” உங்க ஃபோன் நம்பரைக் கொடுத்துட்டுப் போங்க. கூப்பிடுவோம்” என்றாள் லதாவின் உதவியாளர்.

நீர் துளிர்த்த கண்களுடன் “என்னைப் போல எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட்டுக்கு ஸீரியல்லே ரோல் கொடுத்த லதாம்மா தெய்வம் மாதிரி” என்று கைகூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினாள் ஒரு பெண்.

“மஞ்சுளா.. உன் புருஷன் ராஜேந்திரன் சின்ன வயசுலே ஸ்கூலிலேயிருந்து காணாப் போயிட்டான். அப்பவெல்லாம் டெலிபோன் தெருவுக்கு ஒருத்தரு கிட்டே இருந்தாலே அதிசயம். தவிச்சுப் போயிட்டோம். போலீஸுக்கும் சொல்லியாச்சு. நாலு நாளு நானும் அவங்கப்பாவும் சரியா சாப்பிடலே.. தூங்கலே. நாலாவது நாளு அவனோட ஸ்கூலுக்குப் பக்கத்து ஸ்கூலு வாத்தியாரு போன் பண்ணினாரு. பக்கத்து ஸ்கூலு ஸ்னேகிதப்பசங்களோட சேந்துக்கிட்டு அவுனும் பஸ்ஸுல ஏறி அவங்களோட டூருல போயிட்டான். பணத்தை எப்படித் தேத்தினானின்னு தெரியலே. வீட்டுலே சொல்லிட்டேனின்னு அந்த வாத்தியாரு கிட்டே சொல்லியிருக்கான். பிற்பாடு அவனே மனசு மாறி கொஞ்சம் வீட்டுக்குச் சொல்லிடுங்கன்னு வாத்தியாருக்கிட்டே உண்மையை ஒப்புக்கிட்டான்.” என்றார் பொன்னம்மாள்.

“அத்தை. எனக்கு அவரோட பிரெண்ட்ஸ், பிஸினெஸ் பார்ட்னர்ஸ்ன்னு பதில் சொல்லி மாளலே. சொந்தக் காரங்களுக்கு வேணுமின்னா கொஞ்ச நாளைக்கித் தெரியாம வெக்கலாம்”

“நாம ரெண்டு பேரும் யாருக்கும் சொல்ல வேண்டாம்மா. சீக்கிரமே வந்திடுவான். அவங்க அப்பா அந்தக் காலத்திலே ஜோஸியருக்கிட்டே அவனோட ஜாதகத்தைக் காட்டினப்போ அவுனுக்கு ஆயிஸு கெட்டின்னுதான் சொன்னாரு. ஏதேனும் உங்களுக்குள்ளே மனஸ்தாபமா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை. எல்லார் வீட்டிலேயும் இருக்கற மாதிரி சிறு சிறு சச்சரவு தான்”
“ஏழு மலையான் கிட்டே வேண்டிக்கிட்டிருக்கேம்மா… கவலைப் படாதே”
வாயில் அழைப்பு மணி ஒலித்தது. வேலைக்காரி கதவைத் திறக்க அண்ணனைப் பார்த்ததும் மஞ்சுளாவின் முகம் மலர்ந்தது.
“வா மோகன்”
“எதாவது தகவல் தெரிஞ்சிச்சா?” அவனை வினவினார் பொன்னம்மாள்.
“நான் உங்களைக் கேக்கலாமின்னிருந்தேன் ஆன்டி”
“உங்க செல்வாக்கை வெச்சு கண்டுபிடிச்சிருவீங்களே தம்பீ”
“எப்படிம்மா? எல்லார் கிட்டேயும் போயி என் தங்கச்சி புருஷனைக் காணுமின்னா சொல்ல முடியும்?”
பொன்னம்மாள் மௌனமானார்.
“ஸாரிம்மா. இன்னிக்கித்தான் நேரிலே வர்றேன். ராஜேந்திரன் வீட்டிலே ஏதும் தகவல் இல்லே போல.. ஆக்ட்சுவலா அவங்க வீட்டிலே எதாவது தகறாரு பண்ணினா என் கிட்டே சொல்லும்மா” பொன்னம்மா விடை பெற்ற பின் மோகன் ஆறுதலாகப் பேசினான்.
“அப்படி ஏதும் இல்லை மோகன்”
“சரி. நீ என்னோட பிஸினஸ் பார்ட்னராக இருக்கறது பத்தி முன்னாடி தகறாரு இருந்துது இல்லே?”
“அது ஓவர். இப்போ பியூட்டி பார்லரோட யோகா சென்டர், பிஸியோ தெராபின்னு ஆட் பண்ணினதுலே அவருக்கு அவ்வளவு இஷ்டமில்லை”
“சமையலுக்கு ஆளு வெக்காம உன்னைப் படுத்தினானே?”
“அவுருக்கு மனுஷ வாடையே ஆவாது.வேலைக்காரி அவுரு ரூமுக்குள்ளே போனா அவுரு வீட்டை விட்டு வெளியே போயி நின்னுக்குவாரு”

“ஆனை எப்பப்பா தூங்கும்?”
“ராத்திரி தாம்மா”
“எங்கே தூங்கும்”
“இங்கேயே தான் கோயிலுக்குள்ளேதான் எப்பமும் இருக்கும்”
“அது படுத்துக்கும் போது சங்கிலியை அவுப்பாங்களா?”
அது படுத்துக் கொண்டு தூங்குமா நின்று கொண்டு தூங்குமா என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“ஆமாம்மா. அவுத்து உட்டுடுவாங்க”
“அவுத்து உட்டா டிவியிலே பாத்தோமே அந்த மாதிரி எல்லாரையும் விரட்டி அடிக்காது?”
“அடிக்காதும்மா… அது சாது”
“அப்புறம் ஏன் டிவி நியூஸுல அப்படிக் காட்டினாங்க?”
“அதுக்கு மதம் பிடிக்கும் போது மட்டுந்தான் அப்படி நடந்துக்கும்”
“எப்ப மதம் பிடிக்கும்?”
“தெரியலே. கம்ப்யூட்டர்ல பாத்து சொல்லட்டுமா?”
“போப்பா. நீ பாதிக் கேள்விக்கி கம்ப்யூட்டர்லதான் பாக்கறேங்கற”
“என்னாங்க.. அந்த ஆளு நம்பளையே பாக்குறாரு”
குடும்பம் நகர்ந்தது.
ராஜேந்திரன் தொடர்ந்து யானையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

காதில் மாட்டியிருந்த ஒலி வாங்கியைக் கழற்றி “குட் மார்னிங்க்” என்று பக்கத்து ‘டிரெட் மில்’லில் நடை பயின்று கொண்டிருந்த சாரதாவின் வந்தனத்துக்குப் பதிலளித்தாள் லதா. “உங்க கிட்டே பேசணும்”
“ஷ்யூர்” என்றாள் சாரதா.’ஜிம்’மின் உபகரணங்கள் அனைத்தின் மீதும் சந்தனமிட்டு அதன் மீது குங்குமம். காகிதத் தோரணங்கள். பலூன்கள் காற்றை இழந்து ஊசலாடிக் கொண்டிருந்தன.

களைப்பாறும் சிறு இடைவெளியில் ஒரு கை பேசி உரையாடலை முடித்தவுடன் சாரதா தன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டாள் லதா. “சாரதா.. ஆயுத பூஜையப்போ நீங்க பாடின் ‘ஸ்ரீநிவாஸ திருவேங்கடமுடையாய்” பாட்டை எல்லோருமே ரசிச்சோம். ‘ஜகன்நாதா’ன்னு மேல் ஸ்தாயிக்கிப் போயி பிசிறில்லாம பாடினப்போ நீங்க ஒரு ப்ரொஃபெஃஷனலின்னு தோணிச்சு”

“தாங்க்ஸ்.. நான் ப்ரொஃபெஃஷனலலெல்லாம் கிடையாது. அம்மா என்னைச் சின்னவயசில கட்டாயப் படுத்தி முறையாப் பாட்டுக் கத்துக்க வெச்சா. அவ்வளவு தான்.”

“நைஸ்.. இதை ஒரு ஸீரியல்லே நீங்க ஓபனிங்க் ஸாங்காப் பாடணும். முடியுமா?”

“ஷ்யூர். இட் வில் பீ அ க்ரேட் ப்ளஷர் லதா”

Series Navigationபழமொழிகளில் தெய்வங்கள்ஒப்பனை …
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *