வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்

This entry is part 26 of 44 in the series 22 ஏப்ரல் 2012

நீ வாழும் உலகம் என்பது என்ன?
அவ்வுலகில் வாழும் போது, நீ எதிர்கொள்ளும் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் யாவை. அவற்றைப் புரிந்து கொள்வதும் அவற்றிற்கேற்ப வினயாற்றலுமே வெற்றியை நோக்கி இட்டு செல்லும்.
தன்னை அறிவதும்,தன்னைச் சுற்றியுள்ளவர்களை அறிவதும், சூழலை அறிவதும், சுற்றத்தை அறிவதும், காடு, மலை, கழனி, மேடு, பள்ளம், வயல், வரப்பு, மாடு, மயில், மான், புலி, சிங்கம், கரடி, புல், பூண்டு, பூச்சி, புழு மற்றும் இந்த மண் என எல்லாவற்றிற்குமான அறிதல் தான் வாழ்வை முழுமையாக்கும். அறிதல் என்பது அறிவியல் செய்திகளையல்ல. உணர்வையும் உண்மையையும் உள்ளத்தில் நிறுத்துவது.
வடிவுடையானின் ‘நீ வாழும் உலகம்’ வாழ்தலில் உணர வேண்டிய பல செய்திகளைப் பதிவு செய்கிறது.
இதை எழுதுவதற்கான காரணத்தைப் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
‘உன் ஆற்றல் மிகுந்த மனத்தின் ஏதோ ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, உன்னை முழுவதுமாக ஆக்ரமித்து, முன் செல்ல விடாமல் இழுத்து நிறுத்தும் உன் தாழ்வான எண்ணத்தை, அடித்து விரட்டுவதே என் தலையாயப் பணியென எழுத வந்திருக்கிறேன்’.
நூலில் உள்ள செய்திகளுக்குள் செல்வதற்கு முன் ஆசிரியரின் குறிக்கோள் நமக்கு மிகுந்த திட்த்தையும், நம்பிக்கையையும் நல்குகிறது.
மனித குலத்தின் தோல்விக்கு முழு முதற்காரணமான தாழ்வு மனப்பான்மையை போக்குவதன் பொருட்டு எழுத முனைவதற்காக முதலில் வடிவுடையானைப் பாராட்ட வேண்டும். அதுவும் எப்படி?தாழ்வு மனப்பான்மையை அடித்து விரட்டுவாராம். அதில் இருக்கும் தன்னம்பிக்கை தான் இத்தலைப்பில் எழுதத் தகுதியானவர் என வடிவுடையானை ஏற்க வைக்கிறது.
சரி. வாழும் உலகில் வாழ சில.
வடிவுடையான் சொல்லிச் செல்லும் கருத்துகளை சிறுதலைப்புகளாக்கி எழுதுவது எளிதில் விளங்கிக் கொள்ள ஏதுவாகும்.
இறுகிய மண்:
வேளாண்மையில் முக்கியம் மண். ஆம். எந்த மண்ணில் என்ன விளையும் என்பதை அறிந்து பயிரிடாவிட்டால் பலன் கிட்டாது.
செம்மண்ணில் சில பயிர் விளையும்.
கரிசலில் சில செழிக்கும்.
வண்டலில் சில பயிர்கள் வளம் கொழிக்கும்.
ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு பயிருக்கு ஏதுவான தன்மை உண்டு.வேளாண்மையின் நியதியிது.
ஆனால், எந்த மண்ணிலும் இறுகியிருக்கும் போது விளையாது என்பது தான் பொது நியதி.
நடந்து நடந்து இறுகிய பாதையில் வீழ்ந்த விதைகள் முளைப்பதில்லை என யேசுபிரான் சொன்னதைக் குறிப்பிட்டு, அது போல இறுகிய மனத்தில் எந்த கருத்தும் நுழைவதில்லை.
இந்த இறுக்கம் பல்வேறு சூழ்நிலைகளால் உருவாகி விடுகிறது. முன் முடிவுகள் முக்கியக்காரணம்.
உன்னால் முடியாது என தீர்மானமாக நினைத்த பின்பு அக்காரியம் எப்படி முடியும்?
என்ன செய்ய வேண்டும்?
முடியாது என்னும் இறுகிய எண்ணத்தைத் தளர்த்த வேண்டும். மனத்தைத் தளர்த்தினால் தான், ’முடியும் என்னும் நம்பிக்கை’, உள் நுழையும் சத்தியம் ஏற்படும்.
ஆம். இறுக மூடிய கதவுகளுள் எதுவும் நுழைவது கடினம் தானே.
யோகா செய்வதற்கு முன்னும், தியானம் செய்வதற்கு முன்னும் உடம்பையும் மனத்தையும் தளர்த்த வேண்டியதன் அவசியம் இதனால் தான் என்கிறார், வடிவுடையான்.
இறக்கையை உணர்தல்:
தன்னை உணரமுடியாதவனால் பிறரை உணர முடியாது. பின் இவ்வுலகை உணரமுடியாது. எதையும் உணரமுடியாது போனால் உலகில் வாழ முடியாது.
எத்தகைய அறிவு மிக்கோருக்கும் அறிவதற்கான தருணங்கள் வாழ்வு நெடுகவும் உள்ளன. ஆம். பாரதிக்கும் நேர்ந்தது,நிவேதிதாவால் என பதிவு செய்கிறார்.இவ்வுதாரணம் மற்றவர்க்கு தன் இறக்கையை அறிந்து கொள்வதற்கான தருணத்தை கண்டுபிடிக்கவும், காரணத்தை அறிந்துணரவும் துணைபுரியும்.
இறக்கையை உணர்ந்தால் பறப்பது எளிது. பறப்பது எளிதெனில் உயர்வது எளிது. உயர்வது எளிதெனில் உலகில் வெற்றியும் எளிது தானே.
இலக்கு:
வாழ்வில் இலக்கின் அவசியம் யாவரும் அறிந்ததே.ஆனால் சரியான இலக்கை அறிந்திருக்கிறோமா?
அல்லது அறிந்திருக்கும் இலக்கு சரியானதா?
இலக்கைத் தீர்மானித்தால் பயணித்தல் சற்று எளிது.சற்று என்றதன் காரணம், இலக்கை அடைவது பல தருணங்களில் எளிதாக இருப்பதில்லை என்பது தான்- யதார்த்தம்.
எத்தனை கடினம் என்பதைக்கூட அறிந்து கொள்ள, இலக்கை அறிவது அவசியம்.இலக்கின் அவசியம் மற்றும் அடைதற்கான வழிமுறைகளை வடிவுடையான் எடுத்துரைக்கிறார்.
தூண்டுதல்:
விளக்கு தொடர்ந்து எரிய எண்ணையும் திரியும் போதாது. தூண்ட வேண்டும் என்னும் எளிய உதாரணம் ஈர்ப்புடையது மட்டுமல்ல, ஏற்புடையதும் கூட.
எதற்குமே ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது. சிறுகுழந்தை கூட எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட்ட தூண்டுகோல் தேவைப்படுகிறது.
வேதியியலில், இரு மூலக்கூறுகள் இணைந்து புதிய மூலக்கூறு உருவாக கிரியா ஊக்கி என ஒன்று உண்டு. வாழ்க்கையிலும் ஒரு காரியத்தை செவ்வனே முடிக்க கிரியா ஊக்கியாக தூண்டுகோல் தேவை என்கிறார் ,வடிவுடையான்.அது அகத்தூண்டலாகவும் இருக்கலாம். புறத்தூண்டலாகவும் இருக்கலாம்.
விழிப்பு:
தூண்டல் என்பது பிறிதொன்றுமில்லை, விழிப்பு.
விழிப்புணர்வே வெற்றியின் வழியாம். விழித்திருப்பது என்பது கண்களைத் திறந்து வைத்திருக்கும் பௌதீகத் தன்மையன்று. அது மன விழிப்பு. கவனம். ஆற்றல் சார்ந்தது என விளக்குகிறார்.
‘விழித்திரு.விழித்திருப்பே உன்னை உயிரோட்டம் உள்ளவனாக்குகிறது. நடந்து கொண்டு இருப்பவன் எல்லாம் விழித்திருப்பவன் என நினைத்து விடாதே. ஏனெனில் கண்கள் திறந்திருப்பதாலேயே விழித்திருப்பதாக பொருள் இல்லை. உண்மையில் விழித்திருத்தல் என்றால் ஒவ்வொரு கணமும் நீ எதைச் செய்து கொண்டிருந்தாலும் அதை மட்டும் முழு கவனத்தோடு செய்து கொண்டிருப்பது தான்.’, என்கிறார்.
எனவே, விழித்திருத்தலின் விளைவு நமக்கு விளங்கும்.
சேமிப்பு:
எல்லாம் தான் இந்த பூமியில் இருக்கிறது.
எல்லாம் தான் இந்த பூமியில் கிடைக்கிறது.
ஆனால் உன்னிடம் இருப்பது உனதாகும் எனில் எது உன்னுடையது?
உன்னுடையதாக மாற்றிக் கொள்ள என்ன வழி?
உனதாக சேமிப்பது ஒன்றேயாம். சரி. எதைச் சேமிப்பது. கிடைப்பது எல்லாவற்றையுமா எனும் கேள்வி எழுகிறது.
இல்லை. கிடைப்பவற்றையெல்லாம் சேமிக்கத் தொடங்கினால் குப்பைகள் தான் சேரும். ஆமாம் பல சமயங்களில் குப்பைகள் தான் சேர்கிறது. அப்படிச் சேரும் குப்பைகளால் பல பிரச்சனைகள் உண்டாகுமே தவிரப் பயன் ஏதும் இருப்பதில்லை. எனவே, தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும். நல்லவற்றைச் சேமிக்க வேண்டும். அல்லவற்றை ஒதுக்க வேண்டும். அதுவே நம் சொத்துமதிப்பைக் கூட்ட வல்லது. இங்கே சொத்து என்பதை மனத்தில் உள்ள எண்ணங்கள் என்னும் அர்த்தத்தில் சொல்கிறேன்.
எதிர்மறையான எண்ணங்களை சேமிப்பதால் எதிர்மறையான பலன்களே கிட்டும். நேர்மறையான எண்ணங்களே நல்ல பலன்களைத்தரும் என்கிறார், வடிவுடையான்.
எனவே, ’நீவாழும் உலகம்’, உனதாக வேண்டுமெனில் எவ்விதம் வாழ வேண்டும் என அழகாக, எளிதாக, நுட்பமாக, நுணுக்கமாகப் பேசும் இந்த நூலின் ஆசிரியர் வடிவுடையான் பாராட்டுக்குரியவர்.
படித்துப் பாருங்கள்.
நிச்சயம் நீங்களும் பாராட்டுவீர்கள்

வெளியீடு:
கற்பகம் புத்தகாலயம்
4/2,சுந்தரம் தெரு,
தி.நகர்
சென்னை-6000 017
பதிப்பாளர்:
திரு நல்லதம்பி
தொலை பேசி: 24314347
அலை பேசி: 9600063554
=======தமிழ்மணவாளன்

Series Navigationசாதிகளின் அவசியம்ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *