அன்புடையீர்,
ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர்.
நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம்.
இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது:
எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது.
இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது.
எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.
அவர்களும் தேர்விற்கும்: சில தகுதிகளை நிர்ணயித்திருக்கிறார்கள்:
– பிற நாடுகளைபோலன்றி மொழிபெயர்ப்பாளர்கள் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
– அப்படியே இருந்தாலும், உலகின் பிற பகுதிகளைப்போலவே மொழி பெயர்ப்பு தேர்வுக்குழுவினரின் எதிர்பார்ப்புக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.
இவ்வ்வளவு சிக்கல்கள் இருக்கிறபொழுது எதற்காக செய்கிறேனென நீங்கள் முனுமுனுப்பதும் காதில் விழுகிறது.
வாழ்க்கைப்பயணத்தை உழைப்பும் நம்பிக்கையுமென்ற இருகால்களைக்கொண்டே தொடங்கியவன். பாவண்ணன் சிறுகதை மரம் வளர்ப்பதை பற்றி பேசுகிறது. மரம் நட்டவர்களெல்லாம் நடுமுன் யோசித்திருந்தால் நிழல் என்ற சொல்லே இல்லாதொழிந்திருக்கும். ஒன்றிரண்டாவது துளிர்க்குமென நம்பியே நடுவோம். எனது வாடா நம்பிக்கையேகூட ‘உலகமே நம்பிக்கைகொண்டோரால் உயிர்த்திருக்கிறது’ என்பதுதான்.
மீண்டும் தங்கள் கவனத்திற்காக: http://franceindechassecroise.
நா.கிருஷ்ணா