மலர்மன்னன்
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களில் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முக்கியமானவர். சென்னையில் திருவல்லிக்கேணி-திருவட்டீஸ்வரன்பேட்டையிலிருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் எல்லிஸ் சாலை நமக்கு நினைவுறுத்து வது இவரைத்தான்
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக 1798-ல் இந்தியா வந்த எல்லிஸ், பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிறகு 1810-ல் சென்னை மாவட்டக் கலெக்டர் பதவியை ஏற்றார். தென்னிந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த எல்லிஸ், தென்னிந்தியப் பகுதிகளில் பணியாற்ற வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் இம்மொழிகளை அறிந்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தி, 1812-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் தென் மொழிகளில் முக்கியமாகத் தமிழும் தெலுங்கும் கன்னடமும் பயில்வதற்கான கல்லூரி ஒன்றை முன்னின்று தொடங்கி வைத்தார். அதுவரை இந்தியா என்றாலே சமஸ்க்ருதம், ஹிந்துஸ்தானி, உருது, பாரசீகம் ஆகிய மொழிகளில் பரிச்சயம் இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் இருந்த ஆங்கிலேய துரைத்தனத்தின் போக்கை அவர் மாற்றியமைத்தார்.
மொழிகளைக் கற்பதில் எல்லிஸுக்கு இருந்த ஆர்வமும் ஆற்றலும் அபாரமானவை. ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்ற எல்லிஸ் வெகு விரைலேயே செய்யுள் இயற்றும் அளவுக்குத் தமிழில் புலமை பெற்றுவிட்டார். திருக்குறளின் மீது அவருக்கு இருந்த அளவு கடந்த ஈடுபாடு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தது.
தமிழ் மொழியின் மீது எல்லிஸுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காலப் போக்கில் தமிழர் பண்பாடு, தமிழர்களின் சமய நம்பிக்கை ஆகியவற்றிலுங்கூட அவரை ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளச் செய்துவிட்டது. ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயவைத் துதித்து எழுத்துக்கு ஒன்றாக ஐந்து செய்யுள்களை இயற்றும் அளவுக்கு ஹிந்து சமயக் கோட்பாட்டிலும் தத்துவச் செறிவிலும் அவரது உள்ளம் தோய்ந்து போனது. தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு எல்லீஸ் எழுதிய ஒரு செய்யுளும் காணப்படுகிறது.
மொழி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் அவர் கவனம் செலுத்தத் தவறவில்லை. சென்னையில் நிலவிய தண்ணீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண இருபத்தேழு கிணறுகளை ஆங்காங்கே வெட்டச் செய்தார், எல்லிஸ். ஹிந்து சமயச் சடங்குகளின் பிரகாரம் அவற்றைத் தொடங்கியும் வைத்தார்!
இந்தக் கிணறுகள் தோண்டப்பட்டதையொட்டித் தமிழில் தாம் இயற்றிய கல்வெட்டு சாசனத்தில்தான் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று அவர் தம்மை அறிவித்துக் கொள்கிறார். அத்துடன், ‘வார, திதி நட்சத்திர யோக கரணம் பார்த்து சுப தினத்தில் இதனோடு இருபத்தேழு துரவு கண்டு புண்ணியாஹவாசனம் பண்ணுவித்தேன்’ என்றும் அந்த சாசனத்தில் அறிவிக்கிறார். இந்தக் கல்வெட்டு தற்சமயம் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தொல்லியல் துறை அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஹிந்து சமயத்தில் எல்லிஸுக்கு இருந்த ஈடுபாடு பற்றி அவருடைய நண்பரும் மொழியியல் ஆய்வாளருமான வில்லியம் எர்ஸ்கின் பதிவு செய்துள்ள கருத்துகள் கவனிக்கத் தக்கவை.
தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தேர்வதிலும் ஹிந்துக்களின் வாழ்க்கை முறை, இலக்கியம் ஆகியவற்றை அறிவதிலும் எல்லிஸ் குறிப்பிடத் தக்கவராக இருந்தார் என்கிறார், எர்ஸ்கின். தமிழில் அதற்கே உரித்தான நயங்களுடன் எழுதக் கூடியவராக எல்லிஸ் இருந்தார் என்று கூறும் எர்ஸ்கின், தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கிறார். தமிழர்களின் செயலாற்றலில் மதிப்பு வைத்திருந்த எல்லிஸ், தமிழர்களுள் ஒருவராகவே வாழ்ந்தார் என்றும் தமிழர்களின் மனப் போக்கை நன்கு அறிந்திருந்தார் என்றும் எர்ஸ்கின் பதிவு செய்துள்ளார்.
துரதிருஷ்ட வசமாக எல்லிஸ் 1819 ஆம் ஆண்டு தமது 41 ஆவது வயதிலேயே வயிற்று வலி மருந்து என்று நினைத்து தவறுதலாக நச்சுப் பொருள் எதையோ உட்கொண்டு உயிரிழக்க நேரிட்டுவிட்டது. அந்தச் சமயத்தில் அவர் மதுரையில் மதுரை மாவட்ட கலெக்டருடன் தங்கியிருந்தார். அவரது உடல் ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறையிலும் உள்ளூர் மக்களுடன் அவர் கலந்துறவாடி வந்தது சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மறைவையொட்டி அவரைப் போற்றியும் இரங்கல் தெரிவித்தும் தமிழில் ஒரு நீண்ட செய்யுள் கல்வெட்டாகக் காணப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளின் தனித்தன்மையை ஐரோப்பாவுக்கு முதலில் எடுத்துக் கூறியவர் சென்னை மாவட்டக் கலெக்டர் எல்லிஸ். அதற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1856-ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்ட பிஷப் கால்டுவெல் தமது முன்னோடி எல்லிஸ் என்று அறிந்திருந்தும் அதனைத் தமது முன்னுரையில் உரிய முறையில் பதிவு செய்வதற்கு பதிலாக மிகவும் அலட்சிய தொனியில் மேட்டிமைப் போக்குடன் போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பது வியப்பூட்டுகிறது. அடுத்து வந்த பதிப்புகளில் அந்தச் சிறு குறிப்பும்கூட இல்லாமற் போனது விசித்திரம்.
தென்னிந்திய மொழிகளின் தனித் தன்மையைத் தமக்கு முன் அடையாளங் காட்டியவர் எல்லிஸ் என்பதை கால்டுவெல் தெரிவித்தபோதிலும் எல்லிஸின் பார்வை இலக்கண அமைப்பு சாராமல் வெறும் சொற்களுடன் நின்று விடுவதாகக் குறை கூறுகிறார். மேலும், ’எல்லிஸ் என்னும் சென்னை அரசு ஊழியர்’ என்று ஒரு பெரிய மனுஷ தோரணையுடன் எல்லிஸை அவர் குறிப்பிடுவது ஏன் என்று தெரியவில்லை. எல்லிஸின் பணியை கால்டுவெல் குறைத்துக் கூறுவதற்கும் அடுத்து அவரை ஒரேயடியாகப் புறக்கணித்து விடுவதற்கும் என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.
எல்லிஸ் சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றியபோது கம்பெனியின் சார்பில் நாணயம் வெளியிடும் அதிகாரமும் பெற்றிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் நாணயத்தை வெளியிட்டார். அன்றைக்கு இரட்டை வராகன்தான் அதிகப் பெறுமானம் உள்ள நாணயமாக இருந்தது. திருவள்ளுவரின் உருவத்தை இருப்பதிலேயே அதிக மதிப்புள்ள நாணயத்தில் பொறித்ததன் மூலம் திருவள்ளுவர் மீது தமக்குள்ள மரியாதையை எல்லிஸ் தெரிவித்துக்கொண்டார் போலும்!
[இக்கட்டுரையில் இடம் பெறும் பல தகவல்கள் நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட தாமஸ் டிரவுட்மன் எழுதிய நூலின் தமிழாக்கமான திராவிடச் சான்று என்ற நூலிலிருந்து திரட்டப்பட்டவை. திருவள்ளுவர் நாணயம் பற்றிய விவரம் ஐராவதம் மகாதேவன் எழுதிய திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு என்ற கட்டுரையிலிருந்து பெறப்பட்டது (தினமணி சுடர், மார்ச் 04, 1995)]
நன்றி: நம்ம சென்னை மே 01, 2012
+++
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்