வசந்தமே வருக!

This entry is part 17 of 41 in the series 13 மே 2012

சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய முடியும். இது போன்ற பெயரை முன்பின் கேட்டதும் இல்லை, உச்சரிப்பதும் எளிதும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி, எஸ் ஃபார் சேம்ஸ் (s for sams, u for umbrella, r for red u for umbrellaa, ‘m’ as in maddy ) இப்படி ஒவ்வொரு எழுத்தையும் சொல்லி அதற்கு ஒரு உதாரணமும் சொல்லி, முழு பெயரையும் விளங்க வைப்பதற்குள் அவள் படும்பாடு சொல்லி முடியாது. சரி அவள் பிறந்த குடும்பம் சாமான்யமான குடும்பமா, தாத்தாவோ பெரும் தமிழ் ஆர்வலர், அப்பா சைவ சமய பேச்சாளி, அத்தை சிறந்த தமிழ் அறிஞர், இப்படி குடும்பமே தமிழ் ஆர்வலராக இருக்கும் போது அம்மாவே இவர்களிடம் மாட்டிக் கொண்டு படும் பாடு சொல்லி முடியாது. அவர்கள் வைக்கும் பெயர் மட்டும் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்…..

இன்று எப்படியும் அம்மாவிற்கு ஒரு முடிவு சொல்லியாக வேண்டும். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து, அவளுடைய சம்மதம் வேண்டிக் காத்திருக்கும் பெற்றோரிடம் தெளிவாக தன் முடிவைச் சொல்ல வேண்டும். மாப்பிள்ளை இந்தியாவில் இருப்பதால் இந்தத் தயக்கம் இல்லை. மாப்பிள்ளையுடன் மனம்விட்டு பேசவேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள், ஸ்கைப்பில் ஒரு சிலமுறை பேசிப்பழக வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான அவள் தாய், இதை வீட்டில் யாரிடமும் சொல்வதற்க்குக்கூட தயங்கி, குழலியிடம் அதெல்லாம் வேண்டாம் என்று மாப்பிள்ளையின் போட்டோ மட்டும் கொடுத்து அவளுடைய சம்மதம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் குழலிக்கு அதில் உடன்பாடு இல்லை. மாப்பிள்ளையுடன் பேசாமல் தன்னால் முடிவு சொல்ல முடியாது என்பதில் உறுதியாக இருந்தாள். திருமணம் என்ற பேச்சைக் கேட்டாலே, வெறுப்பின் எல்லையில் இருந்தவளுக்கு இந்த அளவிற்கு ஒப்புக் கொண்டதே பெரிய விசயம்தான் என்றாலும், மிகப்பழமையான பழக்கவழக்கங்களில் ஊறிப்போன தம் குடும்பத்தில் நாடு விட்டு நாடு வந்த்தே எத்துனை பெரிய விசயம் என்பதை புரிந்துதான் வைத்திருந்தாள்.. திரும்பவும் மணமேடை, வாழ்த்து , தாலி கட்டும் வைபவம், இத்யாதி… இத்யாதி… நினைக்கவே சலிப்பாகத்தான் இருந்தது…….

குழலி இன்று அமெரிக்காவின் ஒரு தலை சிறந்த நிறுவனத்தின், முதல் வரிசை விஞ்ஞானி. அவளுக்குக் கீழ் , அவள் கண் அசைவிற்காக காத்துக் கிடக்கும் ஜீனியர்கள் பலர். ஆனால் இந்த நிலைக்கு அவள் வருவதற்கு முன் அவள் வாழ்க்கையில் பட்டதெல்லாம் ஒரு பெரும் கதை. பெண்ணிற்கு கல்வி என்பது ஆபத்து காலங்களில் அத்தியாவசியமானது, உலக ஞானம் கொள்ளும் கருவி என்பதற்காக மட்டுமே படிக்க வைக்கக் கூடிய ஒரு கட்டுப்பாடான குடும்பத்தின் மூத்த வாரிசு! இளநிலை பட்டம் பெற்று முடித்தவுடன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாலும், அழுது அடம் பிடித்து முதுநிலை பட்டம் பெருமளவிற்கு படிக்க முடிந்த அவளால் , வேலைக்குச் செல்லும் தன்னுடைய தீராத ஆவலை நிறைவேற்றிக் கொள்ளும் வல்லமை போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு,, பூம் பூம் மாடு போல தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

முதுநிலை பட்டம் பெற்றிருந்தாலும், மகளிர் கல்லூரியில் தந்தை அல்லது தமயனின் துணையுடன் மட்டுமே வெளியில் சென்று வர அனுமதி பெற்று வளர்ந்தவளுக்கு, திருமண வாழ்க்கை தன் தனி மனித சுதந்திரத்திற்கு பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்ததும் உண்மைதான். பல கற்பனைகள், திட்டங்களுடன் தான் மண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாள். பெங்களூரு நகர வாழ்க்கை, கை நிறைய சம்பாதிக்கும் கணினித் துறை மாப்பிள்ளை, நன்கு படித்த குடும்பம், அதுவே , இந்த கற்பனையை பெரிதாக வளர்க்கவும் காரணமானது. திருமணம் உறுதியாகி 10 நாட்களில் திருமண நாளும் வந்து விட்டதால் , மாப்பிள்ளையைப் பற்றி அதிகம் , பேசியோ,பழகியோ அறிந்து கொள்ள இயலவில்லை. குடும்பத்தார் நன்கு விசாரித்து முடிவு செய்திருப்பதால் அவளுக்கு எள்ளளவு ஐயமும் வரவும் இல்லை! அந்த வயதிற்கேயுரிய ஆவலும், மகிழ்ச்சியும் தொத்திக் கொள்ள திருமண நாளை எண்ணிக் கொண்டிருந்ததும் நிசம்!

திருமண நாளும் வந்தது. வழக்கம் போல நண்பர்களும், உறவினரும் உடனிருந்து , கோலாகலமாக திருமணத்தை நடத்தி வைத்ததோடு, ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்ற வசனமும் பல முறை பலர் வாயிலும் இருந்து கேட்டு சலித்துப் போனாலும், உள்ளுக்குள் ஒரே பெருமைதான் அவளுக்கு. ஆனால் கணவனுக்கு அதே அளவு பெருமை இருந்திருக்குமா என்று அவளால் யூகிக்க முடியவில்லை. காரணம் அவன் முகத்தில் பெரிதாக எந்த உணர்வும் இல்லை. பெற்றோரும் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. விருந்தாளிகளை கவனிக்கவும்,மற்ற பெருமைகளைப்பேசவுமே சரியாக இருந்தது அவர்களுக்கு.

திருமணம் முடிந்த அலுப்பு இருந்தாலும், அந்த பெண்மைக்கே உரிய நாணமும், எதிர்ப்பார்ப்பும் முகத்தில் மேலும் மெருகூட்ட, அவளுடைய செந்நிற முகத்தில் பளபளப்பும், மினுமினுப்பும் கூடித்தான் போனது. மல்லிகையின் மணமும், அறை தெளிப்பானின் மணமும் இணைந்து புதிதாக, கிறக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு வித்தியாசமான சுகந்தம் வீசத் தொடங்கியிருந்தது. அறையினுள் நுழைந்தவள் பெரியவர்களின் சொல்படி பால் செம்பை எடுத்து , டம்ளரில் ஊற்றி ,கணவனின் கைகளில் கொடுத்துவிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க குனியும் போது, அவன் இதெல்லாம் எதற்கு, பெரியவர்கள் ஏதோ சொல்லிவிட்டுப் போகிறார்கள், காலில் எல்லாம் விழ வேண்டாம் என அப்படியே அணைத்துத் தூக்கி, நாணத்தால் சிவந்து, கவிழ்ந்து கிடக்கும் முகத்தைத் தூக்கி கண்களை நேராக ஊடுறுவிப் பார்க்க மேலும் நாணத்தால் முகம் சிவக்க…… அறையில் ஏதோ சலசலப்பு கேட்க, ‘ ஓ, என்ன இது கற்பனையில் மூழ்கி விட்டேனோ’ என்று பரபரவென எழுந்து நிற்க அங்கு அவள் கண்ட காட்சி தூக்கி வாரிப்போட்டது அவளை.

ஆம், மணமான முதல் இரவு, அழகு தேவதையாக அலங்காரப் பதுமையாக மனைவி அருகிலிருக்க எதையுமே உணராதவனாக மது புட்டியைத் திறந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி , அதில் சோடாவை நிதானமாக ஊற்றி, அருகில் ஒருத்தி தன்னையே அதிர்ச்சியுடன் உற்று பார்ப்பதைக் கூட சட்டை செய்யாமல் குடிக்க ஆரம்பிக்கும் கணவனைப் பார்த்தவுடன், தன் கற்பனைக் கோட்டை முழுவதும் இடிந்து சுக்கு நூறாக உடைவதை உணர முடிந்தது அவளால். ஆனால் அவனோ எதுவுமே நடவாதது போல் நிறைய குடித்து விட்டு அவளிருக்கும் திசையைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் படுத்து விட்டான். வானம் இடிந்து தலையில் வீழ்ந்தது போன்று அதிர்ச்சியும், வேதனையும் துரத்த, அவமானமும் சேர்ந்து கொண்டு, நரகமாகக் கழிந்தது இரவு…

மறுநாள் ஒன்றுமே நடவாதது போல் அவன் எழுந்து வெளியே சென்றுவிட செய்வதறியாது திகைத்த குழலியோ, மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒரு வழியாக குளித்து முடித்து தலையை ஈரப்பின்னலாக முடிந்து கொண்டு, வெளியே வந்தாள். பெற்றோரும், உறவினரும், மகளின் முகத்தை ஆவலுடன் பார்க்க, அவளும் ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டுச் சென்றாள். அவர்களும் மகளின் நாணப் புன்னகை என்று தவறாக கணக்கும் போட்டுக் கொண்டு ஊர் திரும்பி விட்டனர். ஆனால் அவர்கள் கிளம்பும் போதுதான் தன் நிலை புரிய ஆரம்பிக்க ‘ஓ’வென அழ ஆரம்பிக்க, பெற்றோரும் மகள் தங்களைப் பிரியும் துக்கத்தில் அழுவதாக நினைத்துக் கொண்டு, அடிக்கடி வந்து பார்ப்பதாக உறுதி கொடுத்து அவளை சமாதானப்படுத்திவிட்டுக் கிளம்பி விட்டார்கள். தன்னந்தனியாக ஓர் காட்டில் தனித்து விடப்பட்டது போன்ற அச்சமும், கணவனின் பாராமுக கொடுமையும் எதையும் வெளியில் சொல்லவும் முடியாமல் , உள்ளேயே வைத்துப் புழுங்கிக் கொள்ள வேண்டிய நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் இப்படியே கடந்தது. ஏதோ கடனுக்கு உண்டு, உறங்கி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில்தான் ஒரு நாள் தலையில் இடியாக இறங்கிய செய்தி ஒன்று வந்தது. ஆம், அவள் மாடியறையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தபோது கீழே எதோ ஒரே சத்தமாக இருக்கவும்,அதுவும் தன் கணவனின் உரத்த குரல் கேட்கவும், மெதுவாக எழுந்து சென்று படியிறங்கிச் சென்றாள். அங்கு கணவன் என்ற அந்தஸ்து மட்டுமே பெற்ற அவன் தன் பெற்றோரிடம் துளியும் மரியாதை இல்லாமல் கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் மிக அழகான, நவநாகரீகமான பெண் ஒருத்தி நின்றிருந்தாள். கழுத்தில் அழகான சிலுவை வெள்ளைக்கல் வைத்து மினுக்கிக் கொண்டிருந்தது.. ஒருவேளை கிறித்துவப் பெண்ணாக இருப்பாளோ.? ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விவரம் புரிந்தது, அவர்களின் வாக்குவாதம் மூலமாக. வீட்டில் கட்டாயப்படுத்தியதற்காக திருமணம் என்ற பெயரில் தன் கழுத்தில் சுருக்கு மாட்டிவிட்டான் என்பது..

கண்கள் இருண்டு, தலை சுழன்று, கால்கள் நிலத்தில் பாவாமல், தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவும் இல்லாமல்…. என்ன உணர்வு இது… திருமணம் என்றவுடன் எத்த்னை கற்பனைக் கோட்டைகள் கட்டியிருப்பாள்… இப்படி அனைத்தும் நொடியில் சுக்கு நூறாகிவிட்டதே.. என்ன மனிதர்கள் இவர்கள். தங்கள் சுயநலத்திற்காகவும், ஈகோவிற்காகவும் ஈவு இரக்கமே இல்லாமல் ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைத்துவிட்டார்களே…. ச்சே..இனி என்ன ஆகப்போகிறது வாழ்க்கை. பெற்றவர்களின் முகத்தைப் பார்க்கக்கூட திராணி இல்லையே.. அவர்களால் இந்த அதிர்ச்சியை எப்படி தாங்கிக் கொள்ள இயலும். குடும்பத்தில் முதல் திருமணம் என்று எத்துனை ஆடம்பரமாக குதூகலமாக நடத்தினார்கள்.. இப்போது இதெல்லாம் ஏமாத்து வேலை, மாப்பிள்ளை ஏற்கனவே அப்பா ஆகிவிட்டார், பெற்றவர்களை சமாதானம் செய்வதற்காக என் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டிருக்கிறார் என்று எப்படி சொல்வது. சொன்னால் தாங்குவார்களா. காலங்காலமாக கட்டுப்பாடாக வாழ்ந்த குடும்பம் இப்படி ஒரு நிலை இதுவரை வ்ந்ததில்லை. ஊரில் பெரிய மனிதர் என்ற போர்வையில் இவ்வளவு தரக்குறைவாக நடந்து கொண்டார்களே என்று எண்ணி நொந்து போனாள். வெகு எளிதாக தன்னைப்பார்த்து சாரி என்று ஒத்தை வார்த்தையில் அவ்வளவு பாவத்தையும் துடைத்துவிட்டு, ஊரைவிட்டே செல்கிறானே.. என்ன செய்வது என்று புரியாமல் கவிழ்ந்து கிடந்தாள்.. தாலி கட்டியவன் ஒதுக்கிவிட்டு சென்றவுடன் இனிமேலும் இந்த வீட்டில் இருப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றாலும் அப்பா,அம்மாவிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாதே என்று தயங்கினாலும்.. தன்னுடைய கைபேசி சிணுங்க எடுக்கப் போனவள், தன் பிறந்த வீட்டு எண்ணைப்பார்த்து ஒரு கனம் என்ன சொல்வது என்று தயங்கி பின் தாயின் குரலைக் கேட்ட மறுநொடி தன்னையறியாமல் அம்மா…. என்று பிரிந்திருந்த கன்றுக்குட்டியின் சோகம் கலந்த பாசமான அழைப்பைக் கேட்ட தாயும்,

‘என்னடா……. சாமி.. எப்படிம்மா இருக்கே..?” என்றதுதான் தாமதம், அவள் அழுகை வெடித்து சிதறியது..

“அம்மா….. அம்மா…” அதற்குமேல் வார்த்தைகள் வராமல் விசும்பல் சத்தம் மட்டும் சங்கடப்படுத்த குழலியின் தாய் பதறிப்போய் ’என்னம்மா..’ என்று கேட்டவுடன் நடந்ததைச் சொல்ல திணறித்தான் போனாள் குழலி. ஆனாலும், விசும்பலின் இடையே அவள் பேசியது அரைகுறையாகத்தான் புரிந்தாலும், அடுத்து மளமளவென மற்ற காரியங்கள் அனைத்தும் நடந்து முடிந்தேவிட்டது. புது மஞ்சள் கூட கலையாத நிலையில் எல்லாம் முடிந்து, கன்னி கழியாத பழைய மகளாகவே திரும்ப கூட்டிச் செல்லும் போது அந்த பெற்றவர்கள் பட்ட வேதனை சொல்லி மாளாது.

அதிர்ச்சியில் உறைந்துதான் போனது அப்பூங்கொடியின் பரிதாப வாழ்க்கை… அறையை விட்டு வெளியில் வரக்கூடத் தயக்கம்.. ஏதோ தானே தவறு செய்தது போல குற்ற உணர்ச்சியில் நொந்து போயிருந்தாள் அவள். அம்மா அப்பாவும் எவ்வளவோ சொல்லியும் அவள் மனம் தேறவில்லை. இதற்கிடையில் விசயம் அறிந்து துக்கவீடு போல உறவினர்கள் எல்லாம் வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அத்துனை வெறுப்பாக இருந்தது, ஒவ்வொருவரும் கேட்ட அத்துனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி மாளவில்லை. மேலும் மன அழுத்தத்தில் களையிழந்து போனாள். மகளின் வேதனையைப் பார்த்து பெற்றவரும், உற்றவரும் கதிகலங்கிப் போனதால் வீட்டில் மகிழ்ச்சி என்பதே துளியும் இல்லாமல் ஏதோ துக்கம் நடந்த வீடு போல கிடந்தது. தன் அழகும் திறமையும் பற்றி மிக உயர்ந்த் எண்ணம் கொண்டிருந்தது அனைத்தும் வீண் கற்பனை என்ற உணர்வு வந்து, தன் மீதே ஒரு வெருப்பும் விரக்தியும் வந்து சரியான உறக்கமும், உணவும் இல்லாமல் தன்னையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருந்தாள்.

இந்த நேரத்தில்தான் குழலியின் அன்னையின் தூரத்து உறவில் ஒன்றுவிட்ட அத்தை முறையில் உறவினர் ஒருவர் வந்தபோது, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஒருவரும் இல்லை அங்கு.. அவர் ஏதோ தன் சொந்த வேலையாக வந்திருப்பதாகவும் சில நாட்கள் தங்கப்போவதாகவும் சொன்னார். அவருடன் அவருடைய மகளும் வந்திருந்தார். குழலியின் வயதுதான் இருக்கும் அந்தப் பெண்ணிற்கு. அத்துனை சூட்டிப்பு.. மது, சிட்டியில் படித்து வளர்ந்ததனால் மாடர்ன் உடையும், நுனிநாக்கு ஆங்கிலமும், அலட்டலும் சொல்லவே வேண்டாம். குட்டை முடியும், ஜீன்ஸ் பேண்ட்டும், அவளுடைய ஒல்லியான உடம்பிற்கு பாந்தமாகவே இருந்தது. பி.இ முடித்துவிட்டு தற்போது எம்.பி,ஏ. தபால் மூலம் படித்துக் கொண்டிருப்பதாகக் கூறினாள். கலகலவென பேச்சும், துறுதுறுவென பார்வையும் வெகு விரைவிலேயே அனைவரையும் கவர்ந்துவிட்டாள்..

மது அதிக நேரம் தன்னுடனேயே செலவிட்டுக் கொண்டிருப்பதாகப்பட்டது குழலிக்கு. இவள் வந்த வேலை என்னவாக இருக்கும் என்றுகூட தெரியவில்லை. தைரியம் சொல்லவும், தன் நண்பர்களின் குடும்பத்தில் நடந்த பல விசயங்கள் பற்றியும், சில நண்பர்களின் காதல் தோல்விகள் எப்படி அவர்களை பாதித்தது என்றும் அவர்கள் மீண்டுவந்து வேறு வாழ்க்கைக்குத் தயாரானதும் மிக வெளிப்படையாகப் பேசி அவளை உற்சாகமூட்டிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை தன்னை உற்சாகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்காகவே அம்மா இவர்களை வரவழைத்திருப்பார்களோ என்றுகூட நினைத்தாள். எது எப்படியோ தன்னால் ஓரளவிற்கு உள்ளம் தெளிவாக்கிக் கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. யாரோ ஒருவர் செய்த தவறுக்கு தான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மெல்ல வரவழைத்த புண்ணியம் மதுவையே சாரும். குழலியை மறுமணம் செய்துகொள்ளச் சொன்னதை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணம் என்ற பேச்சே எட்டிக்காயாய் கசந்தது..

இந்த நேரத்தில்தான் குழலியின் ஒன்றுவிட்ட சகோதரன் வருண், அடிக்கடி வீட்டிற்கு வந்துபோய்க் கொண்டிருந்தவன், ஒருநாள் தன் முன்னிலையிலேயே மதுவிடம், அவளை திருமணம் செய்து கொள்ளும் தம் விருப்பத்தைத் தெரிவித்தான். இதை முன்பே அவள் எதிர்பார்த்ததுதான்.. அவர்களின் சந்திப்பின் போது இருவர் கண்களிலும் தெரியும் அந்த வித்தியாசமான ஒளி அவர்களின் எண்ணங்களை படம் பிடித்துக் காட்டியதும் உண்மை. ஆனால் இன்றோ வருண் தம் விருப்பத்தைக் கூறியது மதுவை மகிழ்ச்சிப்படுத்தவில்லை என்பது அவள் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. அவன் அவளுக்கு நிகராக படிப்பிலும், அழகிலும், அந்தஸ்திலும் எதிலும் குறைந்தவனில்லை.. இருந்தும் அவளுக்கு ஏனோ தயக்கம்.

அடுத்து வந்த நாட்கள் அவள்தம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் எல்லையில்லாதது. வருண் மிக ஏமாற்றமடைந்திருந்தான். மதுவோ பிடி கொடுத்தே பேச மறுத்தாள். மதுவின் அம்மாவோ இருதலைக்கொள்ளி எறும்பாக எதையோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.

குழலியால் இதைப்பார்த்துக் கொண்டு மெத்தனமாக இருக்க முடியவில்லை. தன் மனக்காயத்திற்கு களிம்பாய் இருந்த அந்த நல்ல மனதிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பரபரத்தது. மதுவிடம் போய் மனம்விட்டுப் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு அவள் அறைக்குச் சென்றாள். அங்கு அவள் தன் துணிகளை மடித்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். குழலி அவளருகில் சென்று அமர்ந்து ஆதரவாக அவளை அணைத்து, மெதுவாக பேச்சுக் கொடுத்தாள். முதலில் பிடி கொடுக்காமல் பேசியவள் குழலியின் அன்பிற்குக் கட்டுப்பட்டவளாக தான் மறுத்த காரணத்தைச் சொன்னபோது குழலி அதிர்ச்சியில் உறைந்தே போனாள்… இந்தப்பென்ணால் இந்த நிலையிலும் எப்படி இவ்வளவு உற்சாகமாக இருக்க முடிகிறது என்று ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனதும் உண்மைதான்.

ஆம், அழகே உருவாக, நாகரீகமாக இருக்கும் மதுவின் வாழ்வில், தம் பெண்மையையே இழந்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தக்கூடிய அந்த புயல் வீசி அடங்கி சொற்ப காலங்கள்தான் ஆனது என்று புரிந்தபோது அவளுடைய தன்னம்பிக்கையையும், பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மதுவிற்கு பெண்மைக்கே இலக்கணமான, தாய்மையின் வரமான, இரண்டு மார்பகங்களின் ஒன்றை இழந்து தற்போது செயற்கை மார்பகம் பொறுத்தி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று விவரமாகக் கூறினாள். வாயடைத்து நின்ற குழலியைப் பார்த்து மேலும், அவள்,

“ மார்பகப் புற்றுநோய் காரணமாக இடதுபுற மார்பகத்தை இழக்க வேண்டி வந்தது. மறு உருவாக்க அறுவை சிகிச்சை மூலம், புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்திற்கு இயற்கையான மார்பகத்தைவிட வடிவிலும், உணர்விலும் பல மாற்றங்கள் உண்டு. அந்த செயற்கை மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது” என்று சர்வ சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தாள். இதைக்கேட்ட குழலிக்கு அந்த ஆண்டவன் மீதே கோபமாக வந்தது. இந்த வயதில் இப்படி ஒரு கொடுமையை இந்தப்பெண் எப்படி தாங்கிக் கொள்கிறாள் என்று ஆச்சரியமாக இருந்தாலும், அவள்மீது இருந்த மதிப்பு பன்மடங்காகக் கூடிப்போனது.

“இதனால்தான் குழலி வருணிடம் என்னால் ஒப்புதல் சொல்ல முடியவில்லை. நீதான் அவனுக்கு என் நிலையைச் சொல்லிப் புரியவைத்து அவனை வேறு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளச் சொல்ல வேண்டும். அவன் நல்ல மனதிற்கு நன்றாக வாழ வேண்டும்” என்றாள் கண் கலங்க.

அடுத்து நடந்ததெல்லாம் மனிதாபிமானத்தின் உச்ச நிலைகள். சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் ஒரு மனிதனின் உண்மையான மனநிலையை உணர்த்துகிறது. இத்துனை வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் வருணிற்கு இந்த அளவிற்கு மனிதாபிமானமும் இரக்க குணமும் இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை அவள். ஆம் வருண் மதுவை திருமணம் செய்துகொள்ள மனதார சம்மதம் தெரிவித்தான். மது எவ்வளவோ மறுத்தும் அவளை சமாதானம் செய்து எப்படியோ சம்மதிக்கவும் வைத்துவிட்டான். நல்ல மனிதர்களுடன் வாழும் தருணங்கள் வாழ்வின் உன்னதமான தருணங்கள் என்பதை முழுவதுமாக உணர்ந்தவள் அடுத்து வெகு எளிதாக தம் பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்ததும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

ஆனாலும் அவள் மாப்பிள்ளையுடன் கலந்து பேசி தெளிவாக முடிவெடுத்த பின்புதான் தம் திருமண வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று உறுதியாக இருப்பதும் நியாயம்தானே?

Series Navigationவைதீஸ்வரன் வலைப்பூநியாப் படுத்தாத தண்டனைகள் ….2..
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

  1. Avatar
    ganesan says:

    நியாயம்தான் பவள சங்கரி…the society need more varuns… excellent narration !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *